முரசொலி தலையங்கம்

“திராவிடம் என்றால் எரிகிறதா?” : எச்.ராஜா வகையறாக்களுக்கு குட்டு வைத்த முரசொலி!

‘திராவிடம்’ என்ற சொல் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்றால் குருமூர்த்தி முதல் மாலன் வரை, எச்.ராஜாக்கள் முதல் பத்ரிகள்வரை எந்தச்சொல்லைச் சொன்னால் அவர்களுக்கு எரிச்சல் வருகிறதோ அந்தச் சொல் என்பதற்காகவே.

“திராவிடம் என்றால் எரிகிறதா?” : எச்.ராஜா வகையறாக்களுக்கு குட்டு வைத்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (02-09-2021) தலையங்கம் வருமாறு:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று சொல்வதைப் பார்த்து, ‘திராவிடத்துக்குள் வர முடியாதவர்கள்’ காய்ச்சல் அடைவதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் மற்ற சிலருக்கும் அதைப் பார்த்து கோபம் வருவது அர்த்தம் அற்றது.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் என்ற அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை என்பது தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றைமட்டுமல்ல; மொழிப்புலமை அறியாத தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மைக்காலமாக தமிழ் - தமிழர் - தமிழ்நாடு என்ற இயற்கையான சொற்களுக்கு மாற்றாக “திராவிட” என்ற வடசொல்லைப் புகுத்தி வருகிறார். தமிழ்நாட்டு வளர்ச்சியைக் குறிப்பதற்குக் கூட அவர் “திராவிட மாடல்” என்று பெயர் சூட்டினார். அண்மையில் நடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் பரப்புரையில் “திராவிடம்”, “திராவிடர்” என்ற சொற்களை அதிகம் பயன்படுத்தாமல், தமிழர் என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்தினார் ஸ்டாலின். ஆனால், முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் “நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்” (I belong to Dravidian Stock) என்று அறிவித்துக் கொண்டார். தமிழர்களிடம் வாக்கு வாங்கும் வரை அவர்களின் அசல் இனப்பெயரைச் சொல்லுவது, வாக்கு வாங்கி வெற்றி பெற்றபின் “திராவிடத்தை”த் திணிப்பது என்ற தந்திரமாகத்தானே இதைப் பார்க்க முடிகிறது!” என்று சொல்லி இருக்கிறார் பெ.மணியரசன்.

‘திராவிட’ என்பதை வடசொல் என்பது வேர்ச்சொல் அறியாதவர் கூற்றாகத்தான் இருக்க முடியும். ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’ தேவநேயப் பாவாணர் அவர்கள், ‘திராவிடம்’ என்பது தமிழ்ச் சொல்லே என்று தான் நிறுவி உள்ளார். திரவிடம் என்பது தென் சொல்லே என்று அவர் நிறுவி உள்ளார்.

“பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும், மொழிப் பெயர்களும் பெரும்பாலும் ‘அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. ஈழம், கடாரம், சீனம், யவனம் தமிழம் -த்ரமிள (ம்) - த்ரமிடன் (ம்) - த்ரவிட (ம்) - திராவிட (ம்) - என்னும் முறையில் தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும்.

தமிழம் என்பது - தவிள - தவிட - என்று பிராகிருதத்தில் திரிந்த பின்பு, தமிலி தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரவிட, த்ரவிட என்று வடமொழியிற் திரிந்ததாக, பண்டிதர் கிரையர்கள் கூறுவர். எங்கனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை” என்று எழுதி இருக்கிறார் பாவாணர்.

“தமிழ், திராவிடம், தென்மொழி என்னும் முப்பெயரும் ஒரு பொருட் சொற்களில் தமிழையே குறித்து வந்திருப்பினும் இன்றைய நிலைக்கேற்ப தமிழின் மூவேறு நிலைகளை உணர்த்தற்குரியனவாய் உள்ளன” என்றும் சொன்னவர் அவரே.

“திரவிட மொழிகளெல்லாம், முதற்காலத்தில் வேறுபாடின்றி அல்லது வேறுபடுக்கப்படாது தமிழம் அல்லது திரவிடம் என ஒரே பெயரால் அழைக்கப் பெற்றமை” என்ற அவர், தமிழம் என்னும் பெயரே (த்ரமிளம் - த்ரமிடம் - த்ரவிடம்) திரவிடம் எனத் திரிந்தமை என்கிறார். தமிழ் - தமிழன் - தமிழ்நாடு - திராவிட மாடல் - நான் திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன் என்று முதலமைச்சர் ஒலித்து வருவது இரண்டும் ஒரே பொருளைத் தருவதால்தான். இதில் குற்றம் காண எதுவும் இல்லை. வேறு குற்றம் காண முடியாதவர் வேண்டுமானால் ‘திராவிடக் குற்றம்’ கண்டு வருகிறார்கள்.

இதுதான் புரட்சிக் கவிஞர் - தமிழியக்கம் கண்ட பாவேந்தர் - பாரதிதாசன் அவர்களின் கூற்றுமாகும். “நான் ‘மூவேந்தர் நாடென’ நவில்வதும் தென்மறவர் நாடென்று செப்பலும் பழந்தமிழ் நாடெனப் பகர்வதும், இந்நாள் வழங்கு ‘திராவிடர் நாடென’ வரைவதும் ஒன்றே! அது தான் தொன்று தொட்டு வென்ரு புகழோங்கு நம் அன்னைநாடு!

திராவிடம் தமிழ் மொழி:

திராவிடம் என்று செப்பிய தேன் எனில் ‘திருத்தமிழம்’ எனும் செந்தமிழ்ப் பெயரை வடவர் திரமிளம் என்று வழங்கினர். திரமிளம், பிறகு திராவிடம் ஆனது.

வேட்டியை வடவர் வேஷ்டி எனினும் அவ்வேட்டி திரிந்த வேஷ்டியும் தமிழே!

அதுபோல் திருத்தமிழகத்தைத் திராவிடம் என்றால் இரண்டும் தமிழே என்பதில் ஐயமேன்!...

உறுதி ஒன்று திராவிட மறவர் நாட்டை மீட்டு வாழ்வதே!” என்று எழுதினார் பாவேந்தர்!

திருத்தமிழகத்தை மீட்டு வாழ்வதை, ஆள்வதைத்தான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்கிறார் முதலமைச்சர். “திராவிட மாடல் என்பது, அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி! அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.

வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல; சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!” என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘திராவிடம்’ என்ற சொல் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்றால் குருமூர்த்தி முதல் மாலன் வரை - எச். ராஜாக்கள் முதல் பத்ரிகள் வரை எந்தச் சொல்லைச் சொன்னால் அவர்களுக்கு எரிச்சல் வருகிறதோ அந்தச் சொல் என்பதற்காகவே!

banner

Related Stories

Related Stories