முரசொலி தலையங்கம்

“நீர் வளத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அணைகளை உருவாக்கிய தி.மு.க அரசு” : பட்டியலிட்ட முரசொலி !

மானுடத்தைக் காக்க தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முயற்சிகளைப் போல அனைத்து மாநில அரசுகளும் செயல்பட வேண்டும்.

“நீர் வளத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அணைகளை  உருவாக்கிய தி.மு.க அரசு” : பட்டியலிட்ட முரசொலி !
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (25-08-2021) தலையங்கம் வருமாறு:

சட்டமன்றத்தில் பொன்விழாக் கண்ட நாயகராம் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் அவர்கள் நேற்றைய தினம் செய்துள்ள அறிவிப்புகள் அவ்வையின் கனவை நிறைவேற்றுவதாக அமைந்துள்ளன. வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோன் உயர்வான் என்பது அவ்வையின் கனவு. அதனை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் துரைமுருகனின் அறிவிப்புகள் அமைந்துள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு என்பது எத்தகைய நோக்கம் கொண்ட அரசு என்பதற்கு முதல் உதாரணம், நீர் வளத்துக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம்தான். காலத்தின் வெள்ளத்தில் கவனிப்புப் பெறாத துறைகளில் ஒன்றாக நீர்வளம் என்பது தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. ‘தாயைப் பழிச்சாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது' என்பது பழமொழியாக இருந்தாலும், அரசு நிர்வாகத்தில் அடிப்படையான பிரச்சினையாக நீர்வளம் மதிக்கப்படுவது இல்லை. அதற்கு மாறாக நீர்வளத்தைப் பெருக்கினால்தான் வேளாண்மை வளரும், வேளாண்மை வளர்ந்தால்தான் நாடும் நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதைத் துல்லியமாகக் கணித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அந்த துறையை மிக முக்கியமான அமைச்சரான துரைமுருகன் அவர்களுக்கும் கொடுத்தார்கள். வேளாண்மைத் துறைக்கான தனிநிதி நிலை அறிக்கையை இந்த அரசு தாக்கல் செய்து விட்டது. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது மண்ணில் மகத்தான புரட்சி நடக்கும் காலம் உருவாகி இருப்பதாகவே கணிக்க வேண்டி உள்ளது.

காவிரி, தென்பெண்ணை, பாலாறு கடல் கண்டதோர் வைகை, பொருநை நதி மேவிய பல ஆறுகள் ஓட திருமேனி செழித்த தமிழ்நாடு - என்று பாடினார் மகாகவி பாரதியார். இதனைச்சீர்தூக்கிப் பார்த்து ஏராளமான அணைக்கட்டுத் திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியது கழக அரசு. கலைஞரின் அரசு. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியின் போது மட்டும் 43 அணைகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில்கட்டப்பட்டன.

* உப்பாறு - ஆழியாறு அணை

* உப்பாறு - சோலையாறு அணை

* சோலையாறு அணை

* ராமநதி அணை

* பொன்னியாறு அணை

* பில்லூர் அணை

* பரப்பனாறு அணை

* மஞ்சளாறு அணை

* மணிமுடிதாங்கி அணை

* கீழ் கொடையாறு அணை

* பிளவுக்கல் -பெரியாறு நீர்த்தேக்கம்

* பிளவுக்கல் - கோவிலாறு நீர்த்தேக்கம்

* கடானா நீர்த்தேக்கம்

* இராமநதி நீர்த்தேக்கம்

* கருப்பாநதி நீர்த்தேக்கம்

* சித்தாறு நீர்த்தேக்கம்

* மேல் நீராறு நீர்த்தேக்கம்

* கீழ் நீராறு நீர்த்தேக்கம்

* பெருவாரி பள்ளம் நீர்த்தேக்கம்

* சின்னாறு

* மருதாநதி நீர்த்தேக்கம்

* சின்னாறு நீர்த்தேக்கம்

* குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கம்

* வறட்டுப்பள்ளம் நீர்த்தேக்கம்

* பாலாறு பொரந்தலாறு நீர்த்தேக்கம்

* வரதமாநதி நீர்த்தேக்கம்

* பரப்பலாறு நீர்த்தேக்கம்

* மோர்தானா நீர்த்தேக்கம்

* ராஜாதோப்பு நீர்த்தேக்கம்

* பொய்கையாறு நீர்த்தேக்கம்

* இருக்கன்குடி அணை

* மாம்பகத்துடையாறு அணை

* நல்லதங்காள் அணை

* நாங்கியாறு அணை

* செண்பகத்தோப்பு அணை

* சோத்துப்பாறை அணை

- இப்படி ஏராளமான அணைகளை, நீர்த் தேக்கங்களை உருவாக்கிய அரசுதான் தி.மு.கழக அரசு.

இருபதாம் நூற்றாண்டில் இத்தகைய மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய நவீன கரிகால் சோழன் தான் நம்முடைய கலைஞர் அவர்கள். அந்த வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்திருப்பதை அமைச்சர் துரைமுருகன் செய்துள்ள அறிவிப்பு நாட்டுக்கு உணர்த்துகிறது. இந்த மாநிலத்தின் குறைந்த நீர் ஆதாரங்களை முறைப்படுத்த தமிழக அரசு முடிவெடுத்திருப்பதை முதலில் அனைவரும் வரவேற்றாக வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மனம் குளிரும் அறிவிப்பாகும்.

இந்த ஆண்டு மட்டும் 190 தடுப்பணைகள், 4 தரைகீழ் தடுப்பணைகள், 6 கதவணைகள், 2 கடைமடை நீரொழுங்கிகள், 12 அணைக்கட்டுகள் கட்டப்பட இருக்கின்றன. நீர் நிலைகள் ஏராளமாக இருந்தாலும் அதன் முழுக் கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடிவது இல்லை. அவை தூர் வாரப்பட முடியாமல் இருப்பதால்தான் அவை முழுக் கொள்ளளவை எட்டாமல் இருக்கிறது. முழுக்கொள்ளளவை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் அரசு தனது சிந்தனையைச் செலுத்தி இருக்கிறது. இவற்றைப் போலவே 200 குளங்கள் புனரமைக்கப்பட இருக்கின்றன.

மழை நீரைச் சேமித்து வைக்க பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நீர்வளத்துறை நவீன மயமாக்கப்பட உள்ளது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தேர்தலுக்கு முன்னதாக திருச்சியில் கூடிய மாபெரும் பொதுக்கூட்டத்தில் தனது ஏழு உறுதிமொழிகளை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்தார்கள். அதில் மிக முக்கியமானது நீர்வளம். அந்த உறுதிமொழிதான், நீர் வளத்திட்டங்களை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.

‘காலநிலை மாற்றம் என்பதை இந்த மானுடத்தின் மாபெரும் பிரச்சினையாக இந்த அரசு பார்க்கிறது' என்று அண்மையில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறி இருந்தார்கள். காலநிலை மாற்றம் இன்று பூமியை அச்சுறுத்தும் ஒரு பிரச்சினையாக மாறி வருகிறது. அதனை பல்வேறு வழிகளில் எதிர்கொண்டாக வேண்டும். நீர் நிலைகள் பாதுகாப்பு, வேளாண்மை ஆகியவையும் காலநிலை மாற்றமும் தொடர்பு டையது ஆகும்.

அதிகப்படியான மழை பெய்தால் அதனைத் தேக்கி வைத்தாக வேண்டும். மிகமோசமான வறட்சி தொடருமானால் அதனை சமாளித்தாக வேண்டும். இதற்கு நீர்வளத்துறையும், வேளாண்துறையுமே முக்கியப் பங்காற்ற வேண்டும். கால நிலை மாற்றங்களுக்கான பன்னாட்டுக் குழு (ஐ.பி.சி.சி.) சமீபத்தில் தனது ஆறாவது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை, அச்சம் தருவதாக உள்ளது. அந்த அச்சத்தில் இருந்து மானுடத்தைக் காக்க தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முயற்சிகளைப் போல அனைத்து மாநில அரசுகளும் செயல்பட வேண்டும்.

இயற்கையுடன் இயைந்த வளர்ச்சியைத்தான் நம்முடைய தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன. தமிழர்களது வாழ்க்கையும் அப்படித்தான் காலம் காலமாக அமைந்துள்ளது. ‘நீரின்றி அமையாது உலகு' என்று வள்ளுவர் வாக்கும் அதையே சொல்கிறது. அந்தப் பாதையில் தான் தமிழ்நாடு அரசும் செல்கிறது!

banner

Related Stories

Related Stories