முரசொலி தலையங்கம்

தமிழக உரிமையை அடகு வைத்து 13,000 கோடி வட்டி கட்டும் அவலம்: தங்கமணி காலம் எப்படி இருந்தது? - முரசொலி

அதிமுக ஆட்சியின் போது மின் வாரியத்துறையில் மட்டுமே 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் உள்ளது குறித்து கடுமையாக சாடி தலையங்கம் தீட்டியுள்ளது முரசொலி நாளேடு.

தமிழக உரிமையை அடகு வைத்து 13,000 கோடி வட்டி கட்டும் அவலம்: தங்கமணி காலம் எப்படி இருந்தது? - முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பராமரிப்புப் பணிகளுக்காக மின் தடை ஏற்படுவதை அ.தி.மு.க.வினர் இன்று பெரிதாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் மின் வெட்டு அதிகமாகி விட்டதாக புரளிகளைக் கிளப்பி வருகிறார்கள். இவை அனைத்துக்கும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊடகங்களின் முன்னாலும், சட்டமன்றத்திலும் சரியான விளக்கத்தைக் கொடுத்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 9 மாத காலமாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை என்றும் அதனைத்தான் கடந்த பத்து நாட்களாகச் சரி செய்து வருவதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்.

கடந்த காலத்தில் தனியாரிடம் பணம் கொடுத்து மின்சாரம் வாங்குவதில் குறியாக இருந்தார்களே தவிர, மின்சார உற்பத்தியில் கவனம் செலுத்தவில்லை. இதனை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினரே பேட்டியாகக் கொடுத்துள்ளார்கள். "தற்போது நடப்பது மின்வெட்டு அல்ல, மின் தடைதான். போதிய அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லையென்றால் அது மின் வெட்டாக பார்க்கப்படும். கடந்த மூன்றாண்டுகளாக மின்வாரியத்தில் பராமரிப்புப் பணிகள் நடக்கவில்லை. அதேபோல், தளவாடங்களையும் போதிய அளவில் கொள்முதல் செய்யவில்லை. மின்சார உற்பத்தியையும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை. அவர்கள் ஆட்சிக் காலத்தில் உற்பத்தி செய்ததாகச் சொல்லப்படுகின்றவை எல்லாம் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள்தான்," என்று பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு.) தலைவர் ஜெய்சங்கர் சொல்லி இருக்கிறார்.

``தமிழ்நாட்டின் மின்சார தேவையை சமாளிப்பதற்காக 3,200 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்வது என அ.தி.மு.க அரசு முடிவெடுத்தது. இதனையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 2028 வரையில் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது தொடர்பாக ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளனர். அவ்வாறு தனியாரிடம் கொள்முதல் செய்துவிட்டு `மின் மிகை மாநிலம்' எனக் கூறி வந்தனர். தமிழ்நாட்டின் மொத்த தேவை என்பது 16,500 மெகா வாட் மின்சாரம் ஆகும். இதில், சென்னை மாநகருக்கு 3,600 மெகாவாட் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் 3 கோடியே 10 ஆயிரம் நுகர்வோர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஓர் ஆண்டுக்கு புதிதாக 750 மெகாவாட் மின்சாரத்தை நாம் கட்டாயமாக உற்பத்தி செய்தாக வேண்டும். 16,500 மெகாவாட்டுடன் 750 சேர்த்து 17,250 என்ற கணக்கில் ஆண்டுதோறும் புதிதாக உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். நகர்ப்புற விரிவாக்கம், தொழிற்சாலைகள் பெருக்கம், தொழில்நுட்ப பூங்கா, புதிய வீடுகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு இதனைச் செய்ய வேண்டும்" என்று அவர் சொல்லி இருக்கிறார்.

பத்தாண்டுகாலமாக அ.தி.மு.க. அரசில் என்ன செய்தார்கள்? புதிய மின் உற்பத்தி திட்டம் உண்டா? எதுவுமில்லை! தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட மின் திட்டங்களைத் தாண்டிய புதிய திட்டம் இல்லை.

* காற்றாலை மின்சார ஊழல்,

* தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் ஊழல்,

* தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஊழல்,

* மின் வாரியத்துக்கு உதிரி பாகங்கள் வாங்குவதில் ஊழல்

என்று பல்வேறு புகார்கள் அன்றைய அமைச்சர் தங்கமணி மீது குவிந்தது. ஆளுநரைச் சந்தித்து தி.மு.க. சார்பில் ஊழல் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதில் மின்வாரியத்துறை அமைச்சர் பி. தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி, தர மற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் புகார் தரப்பட்டது. அறப்போர் இயக்கம் சார்பில் மிகப்பெரிய ஊழல் புகார் அவர் மீது தரப்பட்டுள்ளது. தனியாரிடம் இருந்து 2013ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை 2,830 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட காலத்துக்கு கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களால் சந்தையில் கிடைக்கும் விலையைவிட 2 மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகின்றனர். இதனால், அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 15 ஆண்டுகளில் தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் இழப்பு மட்டும் ரூ. 1 லட்சம் கோடி என்று அறப்போர் இயக்கம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கு அப்போதே தங்கமணியால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், ‘தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறிவிட்டது' என்ற பொய்யை மட்டும் திரும்பத் திரும்ப தங்கமணி அப்போது சொல்லி வந்தார். அப்போதே தி.மு.க. தலைவர் அவர்கள் சரியான பதிலை அளித்தார். "தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் அரசு தான் அ.தி.மு.க. அரசு. பிறகு எப்படி அது மின் மிகை மாநிலம் ஆகும்? தனியாரிடம் வாங்கினால்தான் லாபம் கிடைக்கிறது. அதனால் வாங்குகிறார்கள்" என்று பதில் அளித்தார்கள். தங்கமணி தமிழகத்துக்குச் செய்த மிக முக்கியமான துரோகம் - உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டது ஆகும். 2015 ஆம் ஆண்டு உதய் மின்திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் இணைய முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது டெல்லி சென்று அந்த திட்டத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர்தான் அன்றைய அமைச்சர் தங்கமணி.

தமிழகத்தின் உரிமையை மத்திய அரசிடம் அடகு வைத்தார்! மின் வாரியத்தின் கடன் 1,58,000 கோடி ஆகிவிட்டது. வட்டி மட்டும் 13,000 கோடி கட்டுகிறார்கள். எந்த லட்சணத்தில் மின்வாரியத்தை வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் இது. இப்படித்தான் பல்வேறு துறைகளை நாசமாக்கி வைத்துள்ளார்கள். இதனைப் பழுது பார்ப்பதுதான் தி.மு.க. அரசின் முக்கியப் பணியாக இருக்கிறது. 9 மாதமாக பராமரிப்புப் பணிகள் நடக்கவில்லை என்கிறார் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. பத்து ஆண்டுகளாகவே எந்தத் துறையிலும் எதுவும் நடக்கவில்லை என்பதுதான் மாபெரும் உண்மை!

banner

Related Stories

Related Stories