முரசொலி தலையங்கம்

“காலத்தின் தேவையை நிறைவேற்றி தாயுமாகி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - முரசொலி தலையங்கம் புகழாரம்!

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பே அறிவித்தபடி நிவாரண உதவித்தொகை வழங்கியதற்கு முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டி புகழ் பாடியுள்ளது.

“காலத்தின் தேவையை நிறைவேற்றி தாயுமாகி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேற்றைய தினம் கோட்டை பார்த்த காட்சி மலைக்க வைத்தது மட்டுமல்ல, மனதை நிறைய வைத்தது. மகிழ்ச்சியால் துள்ள வைத்தது. ஆதரவற்றோர், அபலைகள் என்று சொல்லப்பட்ட குழந்தைகளை தனது அறைக்கே அழைத்து வந்து அவர்களை அதிகாரம் பொருந்திய இடத்தில் அமர வைத்து அவர்களுக்கான மறுவாழ்வு நிதியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய காட்சி என்பது தலைவரானவர், முதல்வரானதும் தாயுமானார் என்று சொல்லத் தக்கதாக அமைந்திருந்தது! இந்த கொரோனா எத்தனையோ உறவுகளை பறித்துவிட்டது. அதில் கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள் பெற்றோர்கள். அதாவது தங்களது குழந்தைகளை விட்டுவிட்டு கொரோனாவுக்கு பலியான பெற்றோர்கள். தங்கள் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு யார் பாதுகாப்பு? இதோ நானிருக்கிறேன் என்று முன்வந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்த அவர், அதனை உடனடியாகக் கொடுத்துவிட்டார். அதுதான் நேற்றைய தினம் நடந்தது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைக்கு 3 லட்சம் ரூபாய் வைப்புநிதி வழங்கப்படுகிறது. இந்தக் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்கான மாதம்தோறும் 3 ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. இந்தக் குழந்தைகள் தங்குவதற்கு அரசு இல்லங்கள், விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இக்குழந்தைகள் பட்டப்படிப்பு படிக்கும் நிலையை அடையும்போது அவர்களுக்கு கல்விச் செலவை அரசே ஏற்க இருக்கிறது. இவை அனைத்தும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 5 லட்சம் ரூபாய், 3 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இதனைப் பெற்ற குழந்தைகள் 18 வயதை அடையும் போது அந்தத் தொகை அதற்கான வட்டியுடன் அந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கப் போகிறது. இப்போது தரப்பட்டுள்ள தொகையின் அருமை அப்போது தான் அந்தக் குழந்தைகளுக்குத் தெரியும். உயர் கல்வியை அடையும் போது - தங்களது வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது அந்தப் பிள்ளைகளின் கையில் பணம் இருக்கும். துணிச்சலாக முடிவுகளை எடுக்கும் நிலையை அவர்கள் அடைந்திருப்பார்கள். வறுமை மிகக் கொடியது. அதனினும் கொடுமையானது பெற்றோரும் இல்லாத நிலையில் வறுமையை அனுபவித்தல். பசியின் கொடுமையை விட, அந்த வறுமை ஏற்படுத்தும் அவமானங்கள் அதிகம். அதிலும் பெண் பிள்ளையாக இருந்தால் அவர் எதிர்கொள்ளும் அவமானமும் துன்ப துயரமும் அதனினும் கொடூரமானது. சமூகமே தினமும் வார்த்தைகளால் அவர்களைக் கொல்லும். பசியால் அல்ல, இந்த அவமானத்தால் அந்தக் குழந்தைகள் இறப்பார்கள்.

இச்சமூகச் சூழலை உணர்ந்த முதலமைச்சர் எடுத்த முடிவுதான் இந்த வைப்புத் தொகை! இந்த வைப்புத் தொகையே அந்தக் குழந்தைகளை உயிர்ப்பிக்கும். வாழவைக்கும். பேச்சற்ற குழந்தைகளுக்காக பேசி இருக்கிறார் முதல்வர். பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர் காலம் என்னவாக ஆகும் என்பது நமது கற்பனைகளை விடக் கோடூரமானதாகத் தான் இருக்கும். கடந்த 20 ஆண்டுகளில் இப்போது குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் கூறியுள்ளது. எல்லாம் கொரோனாவால் தான். 10 குழந்தைகளில் ஒரு குழந்தை, தொழிலாளராக இருப்பதாக இடியை இறக்குகிறது புள்ளி விவரம். 2016 ஆம் ஆண்டு 152 மில்லியனாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் இப்போது 160 மில்லியனாக அதிகரித்துள்ளனர். குறிப்பாக ஆப்ரிக்காவில் அதிகரிக்கும் மக்கள் தொகை, வறுமை போன்றவை அங்கு குழந்தை தொழிலாளர்களை அதிகம் உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் சரியான புள்ளி விபரங்கள் எடுக்கப்படுவது இல்லை.

"இயற்கை பேரிடருக்குப் பின்னரே பல குழந்தைத் தொழிலாளர்கள் உருவானார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இந்த மருத்துவ பேரிடருக்குப் பிறகு இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகமாகும். பெண் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்களை வீட்டு வேலைக்கு அனுப்பி விடுவார்கள். இவர்களே பெரும்பாலும் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள் என பல ஆய்வுகள் சொல்கின்றன. உலகில் பத்தில் ஒரு குழந்தை, குழந்தைத் தொழிலாளராகதான் இருக்கின்றனர்" என்று குழந்தையியல் ஆர்வலர்கள் எழுதுகின்றனர். இத்தகைய சூழல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளார். குழந்தைச் செயற்பாட்டாளரான தேவநேயன், தமிழ்நாடு அரசின் முயற்சிகளை முழுமையாக வரவேற்றுள்ளார். "காலத்தின் மிகப்பெரிய தேவையை முதல்வர் நிறைவேற்றி உள்ளார்" என்று பாராட்டி இருக்கிறார்.

கொரோனா அடுத்த அலை உருவானால், அது குழந்தைகளை அதிகம் தாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள், குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை. அவர்களுக்கான மருத்துவப் பயன்பாட்டு முறைகளை மத்திய சுகாதாரத் துறையும் அறிவித்துள்ளது. தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் அறிவித்துள்ளது. கொரோனாவின் மூன்றாவது அலையானது, குழந்தைகளைத் தாக்கினால் அதனை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டோம் என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது. அதாவது இன்றைய உடல் நலன் மட்டுமல்ல, எதிர்கால நலனையும் கவனிக்கும் அரசாக இன்றைய தமிழ்நாடு அரசு இயங்கி வருகிறது. குழந்தைகளின் வாழும் உரிமையையும், கல்வி உரிமையையும் முதல்வர் கொடுத்திருக்கிறார். குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற சூழலை உருவாக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்து அவர்களுக்கு கல்வி ஒளியேற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார். மொத்தத்தில் அவர் தாயுமாகி வருகிறார்!‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன்" என்கிறார் தாயுமானவர்!

banner

Related Stories

Related Stories