முரசொலி தலையங்கம்

“ஓ.பன்னீர்செல்வம் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பத் தேவையில்லை” : அ.தி.மு.கவிற்கு முரசொலி பதிலடி!

தங்களது கடந்த காலத் துரோகங்களை மறைக்கவே இது போன்றகுதர்க்க அறிக்கைகள் அ.தி.மு.க வட்டாரங்களில் இருந்து வெளிவருகின்றன என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

“ஓ.பன்னீர்செல்வம் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பத் தேவையில்லை” : அ.தி.மு.கவிற்கு முரசொலி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களின் நலனையும் காவிரிப்படுகையின் வளத்தையும் கண்ணை இமை காப்பது போல எங்கள் அரசு காக்கும்” - என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள அறிவிப்பு, காய்ந்த வயிறுகளுக்கு கஞ்சி வார்ப்பது போன்றது; பசிக்கு பால் வார்ப்பது போன்றது.

டெல்டா மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையிலுள்ள வடதெரு என்ற கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையினை ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 10.6.2021 அன்று வெளியிட்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

அக்கடிதத்தில் “தொன்றுதொட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும் காவிரிப் படுகைவிளங்கி வருகிறது. ‘சோழ நாடு சோறுடைத்து' என்ற சொல் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்று. இத்தனை பெருமை கொண்ட காவிரிப்படுகைப் பகுதியையும், அதனைச் சார்ந்திருக்கும் விவசாயப் பெருமக்களின் நலனையும் பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது”என்று அதில் குறிப்பிட்ட முதலமைச்சர், “ஹைட்ரோகார்பன் உற்பத்திக்காக ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தால், வளமான காவிரிப் படுகைப் பகுதியிலுள்ள விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், இந்தப்படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கையாகும்.

“ஓ.பன்னீர்செல்வம் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பத் தேவையில்லை” : அ.தி.மு.கவிற்கு முரசொலி பதிலடி!

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது. தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களின் நலனையும், காவிரிப் படுகைப் பகுதியின் வளத்தையும் ‘கண்ணை இமை காப்பது போல' எங்கள் அரசு காக்கும் என்றும் உறுதிபடக்கூறவிரும்புகிறேன்” என்று முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட ஏலத்திலிருந்து வடதெரு பகுதியை நீக்க வேண்டும் என்றும், எதிர்காலங்களில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்றும் அவர்வைத்துள்ள கோரிக்கை என்பது அரசியல் கோரிக்கை அல்ல, இந்தமண்ணைக் காக்கும் மகத்தான கோரிக்கை ஆகும்.

பதவியை விட்டு இறங்கிய பிறகுதான் அ.தி.மு.க தலைமைக்கு மக்களைப் பற்றிய நினைப்பே வந்துள்ளது என்பதன் அடையாளமாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “பிரதமரை 17-ந் தேதி சந்திக்கும்போது ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிக்கையை ரத்து செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறார்.

மே மாதத்துக்கு முன்பு வரை அ.தி.மு.க அரசு என்ன செய்தது? இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு பச்சைக் கம்பளம் விரித்த ஆட்சிதானே அவர்களது ஆட்சி? ‘அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை ஒரே ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் அனுமதி கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்' என்று சட்டமன்றத்தில் அன்றைய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னார். அவர் அறிவித்த அடுத்த மாதமே பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு. அப்போதும் வாய்மூடிக் கிடந்தார்கள்.

“ஓ.பன்னீர்செல்வம் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பத் தேவையில்லை” : அ.தி.மு.கவிற்கு முரசொலி பதிலடி!

இந்த டெல்டா மாவட்டத்தையே வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக அப்படி ஒரு அறிவிப்பைச் செய்து, அதற்கான விழாவையும் நடத்திக் கொண்டார் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. அனுமதி தந்த திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பார்த்துக் கொண்டார் பழனிசாமி. இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, ‘வேளாண் மண்டலம் தொடர்பாக எந்த விதியையும் தமிழக அரசு வகுக்கவில்லை' என்று அ.தி.மு.க. அரசின் வழக்கறிஞர் சொன்னார். அதாவது மக்களை ஒரு அறிவிப்பின் மூலமாக ஏமாற்றவே அன்றைய அ.தி.மு.க. அரசு நாடகம் ஆடியது. அத்தகைய ஆட்சியின் துணை முதலமைச்சராக இருந்தவர் தான், இன்று தி.மு.க. அரசுக்கு ஆலோசனை சொல்ல வந்திருக்கிறார்.

இனி வரும் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை செய்யவேண்டும் என்று முதல்வர் சொல்லி இருப்பதை விமர்சித்துள்ளார் பன்னீர்செல்வம். தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று சொன்னால், தான்தோன்றித்தனமாக இது போன்ற அறிவிப்புகளை ஒன்றிய அரசு விடக்கூடாது என்பதுதான் பொருளே தவிர, திட்டங்களை அனுமதிக்கிறோம் என்பதல்ல பொருள்.

காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கக் கூடாது - எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது - எந்தத் துறை ஏலம் விட்டாலும் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது - என்று உறுதியான நிலைப்பாடுகள் முதலமைச்சரின் கடிதத்தில் இருக்கிறது.

எனவே ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள், தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பத் தேவையில்லை. தங்களது கடந்த காலத் துரோகங்களை மறைக்கவே இது போன்றகுதர்க்க அறிக்கைகள் அ.தி.மு.க வட்டாரங்களில் இருந்து வெளிவருகின்றன என்பதை மக்கள் உணர்வார்கள்!

banner

Related Stories

Related Stories