முரசொலி தலையங்கம்

“மோடி அரசின் சீர்திருத்தம் என்ற சீரழிவு - மைனஸில் சென்ற இந்தியப் பொருளாதாரம்”: ‘முரசொலி’ கடும் விமர்சனம்!

“ஒன்றிய அரசின் சீர்திருத்தம் என்ற சீரழிவுகளால் தான் மைனஸில் போய்க் கொண்டு இருக்கிறது இந்தியப் பொருளாதாரம்” என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

“மோடி அரசின் சீர்திருத்தம் என்ற சீரழிவு - மைனஸில் சென்ற இந்தியப் பொருளாதாரம்”: ‘முரசொலி’ கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பணமதிப்பு நீக்கம் - ஜி.எஸ்.டி - கார்ப்பரேட்க்கு ஆதரவாக நிதிக்குவியல் சீர்திருத்தத்தால் ஏன் பொருளாதாரம் மீட்சியை அடையவில்லை என ‘முரசொலி’ தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

“உங்கள் சீர்திருத்தங்களை நிறுத்தி வையுங்கள்” என்ற தலைப்பில் முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது. அவை பின்வருமாறு :-

இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதை ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளி விபரங்களே சொல்கின்றன. கொரோனாவைக் காரணம் காட்டி இதில் கண்ணை மூடிக்கொள்ள முடியாது பா.ஜ.க. அரசு!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அளவிட உதவுவது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆகும். இதுதான் ஜி.டி.பி என்று சொல்லப் படுகிறது. இதுகுறித்த தரவுகளை ஒன்றிய புள்ளியியல் அலுவலகம் கடந்த 1 ஆம் நாள் வெளியிட்டுள்ளது. இந்தத் தரவுகளைப் பார்த்தால், இந்தியா கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

2019-20ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 சதவிகிதமாக இருந்தது என்றால்; இந்த நிதியாண்டில் அதாவது 2020-21 நிதியாண்டில் மைனஸ் 7.3 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. இது அவர்கள் சொல்லும் தரவுகள்தான்.

‘நிதியாண்டு’ என்பதை காலாண்டாகக் கணக்கிடுவார்கள். அந்த அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டும் எவ்வளவு சரிவைச் சந்தித்துள்ளது என்ற தரவும் வெளியாகி உள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மைனஸ் 24.38 சதவிகிதம். ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மைனஸ் 7.5 சதவிகிதம். - இது இப்படியே மைனஸில் போய்க்கொண்டே இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மைனஸ் 7.3 சதவிகிதமாக கணக்கிடப்பட்டுள்ளது.

“மோடி அரசின் சீர்திருத்தம் என்ற சீரழிவு - மைனஸில் சென்ற இந்தியப் பொருளாதாரம்”: ‘முரசொலி’ கடும் விமர்சனம்!

இந்தியப் பொருளாதாரம் எத்தகைய சிரம திசையில் போய்க்கொண்டு இருக்கிறது என்பதைக் காட்ட இதைவிட வேறு புள்ளிவிவரம் தேவையில்லை. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைக் கொண்டு அளவிட வேண்டும் என்று எந்த அரசியல்பூர்வமான கேள்வி கேட்டாலும் பா.ஜ.க ஆட்கள் பதில் சொல்வார்கள். இதோ இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பே குறைந்தும் சிதைந்தும் போயுள்ளதற்கு உங்கள் பதில் என்ன? பொருளாதார மந்த கதியை அளவிடும் ஒரே ஒரு மதிப்பீட்டிலேயே மோடி அரசாங்கத்தின் பொருளாதாரச் செயலின்மை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

மைனஸை நோக்கிப் போகும்போதே இது எங்கே போய் நிற்கும் என்பதை மோடி அரசு உணர்ந்திருக்க வேண்டும். எங்கே போய் நிறுத்தி இருக்கிறது என்றால் நாற்பது ஆண்டுகள் பின்நோக்கி நிறுத்தி இருக்கிறது. இதற்கு கொரோனா பாதிப்புகளை மட்டும் காரணமாகச் சொல்லித் தப்பிக்க முடியாது.

கொரோனா பரவலுக்கு முன்னதாகவே மோடி அரசின் பொருளாதாரம் இப்படித்தான் ஆகிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு புள்ளிவிபரமும் வெளியாகி உள்ளது. அது என்ன என்றால், நிதிப்பற்றாக்குறை பற்றியதாகும். ஜி.டி.பி மைனஸ் 7.3 சதவிகிதமாக ஆகிய அதே நிதிக் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை என்பது இந்தியாவின் ஜி.டி.பி.யில் 9.3 சதவிகிதமாக ஆகி இருக்கிறது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது 18 லட்சத்து 21 ஆயிரத்து 461 கோடி என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தத் தொகை என்பது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்பார்த்த தொகையை விட 2.6 சதவிகிதம் கூடுதலாகும்.

இதனை ஒன்றிய அரசு உணர்ந்து செயல்படுவதாகத் தெரியவில்லை. இதனை உணர்த்துவதற்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் முயற்சித்தார். ஒரு பேட்டி கொடுத்தார். ‘பா.ஜ.க அரசு தனது தவறான பொருளாதாரக் கொள்கையைக் கைவிட்டு நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்க வேண்டும்' என்று சொன்னார். அந்த நல்லெண்ணத்தைக் கூட ஒன்றிய அரசு உணரவில்லை. “தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், வலிமையான கட்டமைப்பு ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரம் மீண்டெழும்” என்று ப.சிதம்பரத்துக்கு பதில் அளித்துள்ளார் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர்.

“மோடி அரசின் சீர்திருத்தம் என்ற சீரழிவு - மைனஸில் சென்ற இந்தியப் பொருளாதாரம்”: ‘முரசொலி’ கடும் விமர்சனம்!

‘கிளிப்பிள்ளையைப் போல பொருளாதாரப் புள்ளிவிபரங்களைக் கூறக்கூடாது' என்கிறார் அனுராக் தாக்கூர். அந்தப் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் என்பவை நாம் தயாரித்தது அல்ல. அதே பா.ஜ.க அரசால் வெளியிடக்கூடியவைதான். அதனைச் சொல்வதுகூட பாவமா? “இந்தியாவில் மட்டும்தான் பொருளாதாரம் மைனஸ் நிலையை அடைந்துள்ளதா? பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இப்படித்தான்” என்கிறார் அனுராக்.

இவர் இந்தியாவுக்கு மட்டும்தான் நிதித்துறையைக் கவனிக்கிறாரா- அல்லது உலகத்துக்கே நிதி அமைச்சரா எனத் தெரியவில்லை. அந்த நாட்டில், அந்த நாட்டுக் குடிமக்கள் கேள்வி எழுப்புவார்கள். இந்தியாவில் நாம் எழுப்புகிறோம். ‘நீ ஏன் தவறு செய்தாய் என்றால் அவனும்தான் செய்தான்' என்பது பதிலா?

எந்தக் கேள்விகளை எழுப்பினாலும், ‘சீர்திருத்தங்களால் பொருளாதாரம் மீண்டெழும்' என்கிறீர்களே? இதுவரை செய்த சீர்திருத்தங்களால் கண்ட பலன் என்ன?

கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்காமல் கூட்டிக் கொண்டே போகிறது மோடி அரசு. இந்த ‘சீர்திருத்தத்தால்' ஏன் பொருளாதாரம் மீட்சியை அடையவில்லை?

“மோடி அரசின் சீர்திருத்தம் என்ற சீரழிவு - மைனஸில் சென்ற இந்தியப் பொருளாதாரம்”: ‘முரசொலி’ கடும் விமர்சனம்!

2016 நவம்பர் 8 ஆம் நாள் ‘இந்தியாவுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்துவிட்டது' என்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம் என்ற சீர்திருத்தத்தால் ஏன் பொருளாதாரம் மீட்சியை அடையவில்லை?

2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மக்களையும் மாநிலங்களையும் சுரண்டிக் கொழுக்கும் ஜி.எஸ்.டி நிதிச் சீர்திருத்தம் மூலமாக ஏன் பொருளாதாரம் மீட்சியை அடையவில்லை?

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மட்டுமே எனது ஆட்சி செயல்படும் என்ற நிதிக்குவியல் சீர்திருத்தத்தால் ஏன் பொருளாதாரம் மீட்சியை அடையவில்லை?

எல்லா உரிமைகளும் ஒன்றிய அரசுக்கே என்று சொல்லி மாநில அரசுகளை கடைச்சரக்காக நினைத்து அனைத்து திட்டமிடுதல்களையும் டெல்லியிலேயே வைக்கத் துடிக்கும் சீர்திருத்தத்தால் ஏன் பொருளாதாரம் மீட்சியை அடையவில்லை?

இதைவிட என்ன சீர்திருத்தத்தை உங்களால் செய்ய முடியும்? உங்களுக்குத் தெரிந்த சீர் திருத்தம் இதுதானே? இந்தச் சீரழிவுகளால் தான் மைனஸில் போய்க் கொண்டு இருக்கிறது பொருளாதாரம். இன்னும் மைனஸ் ஆக்க உங்கள் சீர்திருத்தங்களை கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்!

banner

Related Stories

Related Stories