முரசொலி தலையங்கம்

“மக்களைக் காக்க முன்வராத ஒன்றிய அரசு, மக்களிடம் இருந்து நிதிகளை மட்டும் பெறுவதா?” : ‘முரசொலி’ கேள்வி!

ஒன்றிய அரசிற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவின் நம்பிக்கையில் சீர்குலைவு ஏற்பட்டு விட்டதைத்தான் தமிழக நிதி அமைச்சரின் உரை இந்தியாவுக்கு உணர்த்தி இருக்கிறார் என்பதனை ஒன்றிய அரசு உணரவேண்டும்.

“மக்களைக் காக்க முன்வராத ஒன்றிய அரசு, மக்களிடம் இருந்து நிதிகளை மட்டும் பெறுவதா?” : ‘முரசொலி’ கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஏழு ஆண்டுகள் ஆன நிலையிலும் மக்களுக்கு ஆக்கபூர்வமான எதையும் செய்யாத பா.ஜ.க அரசு, இந்தக் கொரோனா காலத்திலும் மக்களை மொத்தமாகக் கைகழுவி விட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்துக்கும் தடுப்பூசியைத் தேவையான அளவுக்கு ஒன்றிய அரசு தரவும் இல்லை. அதைப் பற்றிய கவலையும் ஒன்றிய அரசுக்கு இல்லை.

உச்சநீதிமன்றம் எத்தனை முறை ஒன்றிய அரசின் உச்சந் லையில் கொட்டி இருக்கிறது? ஆனாலும் அவர்களுக்கு வலிக்கவில்லை. நேற்றைய தினம் கூட உச்சநீதிமன்றம் தனது சாட்டையைச் சுழற்றி இருக்கிறது. “கொரோனா தடுப்பூசிக்கான விலை நிர்ணயத்திலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறைந்த விலைக்கு தடுப்பூசியைக் கொள்முதல் செய்கிறது மத்திய அரசு.

ஆனால் மாநிலங்களுக்கு வழங்குவதற்கான விலையை தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி வழங்கி உள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். கொரோனா அலையைத் தடுப்பது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறதா இல்லையா?” என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

“மக்களைக் காக்க முன்வராத ஒன்றிய அரசு, மக்களிடம் இருந்து நிதிகளை மட்டும் பெறுவதா?” : ‘முரசொலி’ கேள்வி!

மாநிலங்களிடம் இருந்து நிதிகளைச் சுரண்டிச் செல்லும் ஒன்றிய அரசு, மாநிலங்களை மேலும் வறுமையில் தள்ளவே ஜி.எஸ்.டி.வரி விகிதத்தைக் கொண்டு வந்தது. அனைத்து நிதியையும் ஒன்றிய அரசுக்குக் கொடுத்துவிட்டு, மாநிலங்களால் மக்களை எப்படிக் காப்பாற்ற முடியும்? மக்களைக் காக்க முன்வராத ஒன்றிய அரசு, மக்களிடம் இருந்து நிதிகளை மட்டும் பெறுவது எதற்காக?

இந்த உரிமைக் குரலைத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எழுப்பி வருகிறது. சில நாட்களுக்கு முன்னால் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்திலும் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் எழுப்பினார். உடனே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கிகளுக்கு அடிவயிறு எரிகிறது. ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் கேட்ட கேள்விகளுக்கு ஒன்றிய நிதி அமைச்சரால் பதில் தரமுடியவில்லை. மாறாக கோவா அமைச்சரையும், சில அல்லக்கைகளையும் வைத்து அவருக்குப் பதில் சொல்ல வைக்கிறார்கள். “ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மாநில நிதி நிர்வாகம் இருக்கும் வரை, மாநிலங்கள் நிச்சயம் தனித்து முன்னேற முடியாது. எங்கள் நிதி நிர்வாகத்தை ஒன்றியக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவியுங்கள்” என்று கேட்டு இருக்கிறார், தமிழக நிதி அமைச்சர்.

ஒன்றிய அரசுக்கு அதிக அளவில் வரி வருவாய் செலுத்தும் மாநிலம் தமிழகம். புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழகம். அந்த உரிமையில்தான் அமைச்சர் பேசினார். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. “கம்யூனிஸ்ட் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிக்கும் சீனாவிலிருந்து, முதலாளித்துவத்தை வலியுறுத்தும் அமெரிக்கா வரை அனைத்து நாடுகளில், மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள் அல்லது மாநகரங்களுக்கு, நிதி அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதில், இந்தியா கிட்டத்தட்ட எல்லாவற்றையும் விடப் பின்தங்கியிருப்பதை நாங்கள் கவனிக்கிறோம்.

“மக்களைக் காக்க முன்வராத ஒன்றிய அரசு, மக்களிடம் இருந்து நிதிகளை மட்டும் பெறுவதா?” : ‘முரசொலி’ கேள்வி!

நம் வரலாற்றைச் சார்ந்த காரணங்களால், மத்திய அரசாங்கத்துடன் நேரடி வரிவிதிப்புக்கான அனைத்து அதிகாரங்களும் குவியும்படியும், மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே மறைமுக வரிவிதிப்பு அதிகாரங்களைப் பிரித்து வழங்கிடவும் நம் மதிப்புமிக்க அரசியலமைப்பு வழிவகுத்தது. இது இந்தியாவுக்கு மிகவும் தனித்துவமானது. ஏனென்றால், பெரும்பாலான நாடுகள் நேரடி வரிவிதிப்பில் சில அதிகாரங்களையும், மறைமுக வரிவிதிப்பின் பெரும்பாலான அதிகாரங்களையும் மாநிலங்களுக்கு ஒப்படைத்துள்ளன. அத்தகைய சூழலை உருவாக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார், தமிழக நிதி அமைச்சர்.

மத்திய அரசாங்கத்திடம் அதிகாரங்கள் அதிக அளவில் குவிந்தது. உண்மையில், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபின், நம் அரசியலமைப்பில் ஒருபோதும் கற்பனை செய்யப்படாத அளவிற்கு, ஒன்றிய அரசாங்கத்திடம் அதிகாரங்கள் குவிந்துள்ளது என்பதை பல்வேறு ஆதாரங்கள் மூலமாக அவர் சுட்டிக்காட்டினார். “பிரதமர், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நீண்டகாலம் இருந்த பொழுது மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் கூட்டாட்சிக்காகவும் உறுதியாகப் போராடியது போல், பாரதப் பிரதமராகவும் அவ்வாறே தொடர்ந்து செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

“மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இயங்கும் ஒரு கணக்கில் நிதி திரட்டுவது மற்றும் திரட்டப்பட்ட நிதியில் மாநிலங்களின் பங்கினை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தின் காரணத்தால், மாநில அரசுகளுக்கு விரக்தியும் கோபமும் ஏற்படுகிறது. இதனால், மாநில அரசுகள், சட்டப்படியாக தங்களுக்குக் கிடைக்கவேண்டிய நிதிப் பங்கினைப் பெறுவதற்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன” என்ற தமிழக நிதி அமைச்சரின் கூற்று, தமிழகத்துக்கானது மட்டுமல்ல; ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்குமானது.

Modi - Amit shah
Modi - Amit shah

பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் கூட நிதி நிலைமையில் கவலைக்கிடமாகத்தான் இருக்கின்றன. ஒன்றிய அரசிற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவின் நம்பிக்கையில் சீர்குலைவு ஏற்பட்டு விட்டதைத்தான் தமிழக நிதி அமைச்சரின் உரை இந்தியாவுக்கு உணர்த்தி இருக்கிறது. இதனை ஒன்றிய அரசு உணரவேண்டிய நேரம் இது.

கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலத்தில் மக்களைக் காக்கும் பெரும் கடமை மாநிலங்களுக்கு மட்டுமே இருக்கிறது. ஒன்றிய அரசுக்கு இல்லை. வெறும் வசனங்களைப் பேசிவிட்டு, நீலிக் கண்ணீர் வடித்துவிட்டு அமைதியாகிவிடலாம். ஆனால் அப்படி மாநிலங்கள் இருக்க முடியாது. மக்களோடு நெருங்கியவை மாநில அரசுகளே கடமையும் பொறுப்பும் மாநில அரசுகளுக்கே இருக்கிறது. எனவே, மாநிலங்களின் நிதி வளத்தைச் சூறையாடும் ஜி.எஸ்.டி வசூல் முறையைக் கை விடுவதில் தொடங்கி, ஒன்றிய அரசு, நாங்கள் திருந்தி வருகிறோம் என்பதை உணர்த்த வேண்டும். அல்லது காலமே திருத்தும்.

banner

Related Stories

Related Stories