முரசொலி தலையங்கம்

26-ல் கருப்பு தின போராட்டம் : டெல்லி போராட்டத்தை மறந்த மோடி அரசுக்கு பாடம் புகட்டும் விவசாயிகள் !

இந்தியாவின் அடிநாதமான விவசாயிகளின் போராட்டத்தை அப்பட்டமாக அப்படியே மறந்துவிட்டது பா.ஜ.க. அரசு என முரசொலி ஏடு தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.

26-ல் கருப்பு தின போராட்டம் :  டெல்லி போராட்டத்தை மறந்த மோடி அரசுக்கு பாடம் புகட்டும் விவசாயிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா எத்தனையோ நடப்புகளை மறக்கடித்து விட்டது. அதில் மிக முக்கியமானது விவசாயிகளின் மாபெரும் போராட்டம் ஆகும். இந்தியாவின் அடிநாதமான விவசாயிகளின் போராட்டத்தை அப்பட்டமாக அப்படியே மறந்துவிட்டது பா.ஜ.க. அரசு!

மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து வேளாண்மையையே நாசம் செய்யத் திட்டமிட்டது பா.ஜ.க அரசு. இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் வீறு கொண்டு போராட்டங்களை நடத்தினார்கள். அதிலும் குறிப்பாக வடமாநில விவசாயிகள் தலைநகர் டெல்லிக்கே வந்து போராட்டம் தொடங்கினார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் தலைநகர் டெல்லியை நோக்கி படையெடுத்து வந்தார்கள். டெல்லியிலேயே தங்கி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தார்கள். பல மாதங்களாக இப்போராட்டம் நீடித்து வருகிறது. மே 26 ஆம் தேதியுடன் இந்தப் போராட்டம் ஆறு மாதங்களை எட்டுகிறது.

அந்த நாளில் கருப்பு தினப் போராட்டத்தை கர்னாலில் தொடங்க விவசாயிகள் முடிவு செய்துள்ளார்கள். சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் இதற்கான அறிவிப்பைச் செய்துள்ளன. இந்த நாளை அவர்கள் தேர்வு செய்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. மே 26ஆம் நாள்தான் பிரதமராகப் பதவி ஏற்ற நாள். அவருக்கான தங்களின் எதிர்ப்பை காட்டுவதற்காகவும் அந்த நாளை தேர்வு செய்தார்கள். கர்னால் என்பது ஹரியானா மாநிலத்தில் உள்ளது. டெல்லிக்கு அருகில்தான் இருக்கிறது. அதாவது டெல்லி எல்லையான சிங்கு பகுதிக்கு அருகில் இருக்கிறது.

26-ல் கருப்பு தின போராட்டம் :  டெல்லி போராட்டத்தை மறந்த மோடி அரசுக்கு பாடம் புகட்டும் விவசாயிகள் !

இந்தப் போராட்டத்தை தி.மு.க., காங்கிரஸ், திரினாமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான 12 கட்சிகளின் தலைவர்கள் ஆதரித்துள்ளார்கள். இதுதொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூட்டறிக்கை விடுத்துள்ளார்கள். “மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற்றாக வேண்டும். இந்த மூன்று சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளை கொரோனா பாதிப்பில் இருந்து மீட்டாக வேண்டும்.

சுவாமிநாதன் ஆணையம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தது. அதனை பா.ஜ.க. அரசு பின்பற்ற வேண்டும். விவசாயிகளோடு பா.ஜ.க. அரசு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு எங்களது ஆதரவு தொடரும்'' என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிவித்துள்ளார்கள்.

ஹரியானாவில் ஹிசார் என்ற இடத்தில் கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மனோகர்லால் கட்டார் திறந்து வைப்பதாக இருந்தது. விவசாயிகள் போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த ஹிசார் என்ற இடம் முழுவதும் 3000 காவலர்கள் குவிக்கப்பட்டனர். இவை அனைத்தும் மீண்டும் விவசாயிகளின் போராட்டம் வீறு கொண்டு எழப் போகிறது என்பதைக் காட்டுகிறது.

26-ல் கருப்பு தின போராட்டம் :  டெல்லி போராட்டத்தை மறந்த மோடி அரசுக்கு பாடம் புகட்டும் விவசாயிகள் !

குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்காமல் விவசாயிகள் போராட்டக் களத்தில் இருந்து பின் வாங்கமாட்டார்கள். குறைந்த பட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய்துவிட்டால் அது கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபங்களைக் குறைத்துவிடும். அதனால்தான் மோடி அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க தயக்கம் காட்டுகிறது.

குறைந்த பட்ச ஆதார விலை இல்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்விக்கு மத்திய அரசு மற்றொரு மசோதாவைப் பதிலாக வைத்திருக்கிறது. அந்த மசோதாவின் பெயர் விவசாயிகள் (முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதியின் மீதான ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவை மசோதா என்பதாகும். இந்த மசோதாவின் படி விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்களுடன் முன்கூட்டியே விலையை நிர்ணயித்து விவசாயிகள் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்கிறார்கள்.

இதன் மூலம் விவசாயிகள் தான் விரும்பிய விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பதைப் போன்ற தோற்றத்தை இந்த மசோதா காட்டுகிறது. உண்மையில் விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அல்லது மெகாசில்லறை வியாபாரிகள் எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன சொல்கிறதோ அதுதான் விலையாக இருக்கப் போகிறது. இதில் விவசாயிகளே விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று சொல்வதெல்லாம் பம்மாத்து. உண்மையில் விவசாயம் சார்ந்த தொழிலில் மிகப்பெரிய மூலதனத்துடன் பன்னாட்டுக் கம்பெனிகள் இறங்குவதற்கு இந்த மசோதாக்கள் உதவுகின்றன. யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்பதற்குப் பின்னால் உள்ள உண்மை பகாசுரக் கம்பெனிகளுக்கு மட்டுமே நீங்கள் விற்கலாம் என்பதுதான்.

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயர குடி உயரும்

குடி உயர கோன் உயர்வான் - என்று நம்முடைய தமிழ் மூதாட்டி அவ்வை சொன்னாள். இந்தப் பாடலை பிரதமர் நரேந்திர மோடியும் சில மாதங்களுக்கு முன் பாடினார். அதன் உண்மையான பொருள் என்ன என்பதை அறிந்து மூன்று சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். பதவி ஏற்று ஏழு ஆண்டுகள் கழித்துச் செய்யும் உருப்படியான நல்ல காரியமாக அது அமையும்!

banner

Related Stories

Related Stories