முரசொலி தலையங்கம்

“கொரோனா தடுப்பில் முனைப்போடு 4 நாட்களுக்கு முன்பே முதல்வராக செயல்பட தொடங்கிய மு.க.ஸ்டாலின்” : முரசொலி

தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்பே மக்கள் நலனுக்காக முதல்வராக செயல்படத் தொடங்கியவர் மு.க.ஸ்டாலின் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

“கொரோனா தடுப்பில் முனைப்போடு 4 நாட்களுக்கு முன்பே முதல்வராக செயல்பட தொடங்கிய மு.க.ஸ்டாலின்” : முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சராக; பதவியேற்பதற்கு முன்பாகவே - கொரோனா தடுப்புப் பணியில் முனைப்புடன் இறங்கிவிட்டார் ‘முதல்வர்' மு.க.ஸ்டாலின்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கப் போகிறது என்பதை அறிந்ததும் தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்கள். அடுத்த நாளே, தலைமைச் செயலாளர் - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரை வைத்து கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார் தலைவர். இரண்டு நாட்களாகத் தொடர்ந்து அவர் அதிகாரிகளை அழைத்துப் பேசியதும் கொரோனா தடுப்பு குறித்துதான்.

இரண்டு நாட்களில் அவர் வெளியிட்ட மூன்று அறிக்கைகளும் கொரோனா தடுப்பு குறித்தவையே! இதன் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அரசு அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் ஐம்பது சதவிகித பணியாளர்களுடன் செயல்படும். பயணிகள் போக்குவரத்தும் ஐம்பது சதவிகித பயணிகளுடன் இயங்கும். மளிகை, காய்கறிக் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் இயங்கலாம். மருந்தகம், பால் போன்ற அவசியப் பொருள் வழங்கல் இதனுள் வராது.

உணவகங்களில் வாங்கிச் செல்லுதல் சேவை மட்டும் இருக்கிறது - என்ற கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதையொட்டி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "மக்கள் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்ல; அதிகப்படியான எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்கள் நன்மைக்காக போடப்படுபவைதான் என்பதை மக்களே உணர்ந்து கொள்வார்கள்.

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை துண்டிக்காமல் கொரோனாவை ஒழிக்க முடியாது. அத்தகைய சங்கிலியை துண்டிக்கவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் இருப்பது என்பது, கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துவிடும். அதனால் அரசின் கட்டுப்பாடுகளை, அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளாக இல்லாமல் மக்கள் தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டார். நோய் பரவாமல் தடுத்தல் - நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரண்டு குறிக்கோள்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல் என்பது அரசின் பணி என்றால், நோய் பரவாமல் தடுத்தல் என்பது அரசுடன் மக்களும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணியாகும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து அவர் உருவாக்கி வரும் அவசர கட்டளை மையம் ( war room) மிக மிக முக்கியமானது. முன்னோட்டம் ஆனது. மக்களுக்கு இப்போது இருக்கும் குழப்பமே, எந்த மருத்துவமனைக்குச் செல்வது, நமக்குத் தேவையான சிகிச்சை எங்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை. இந்த காலதாமதம் காரணமாகத் தான் சில உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இந்த குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகத்தான் அவசர கட்டளை மையத்தை அமைக்க தலைமைச் செயலாளருக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். ஆக்ஸிஜன் தேவை, அதன் இருப்பு, படுக்கைகளின் தேவை, மற்றும் தடுப்பூசி இருப்பு தேவை ஆகியவற்றை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் தெரிந்து ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக இருக்கும் என்றும் எந்த இடத்தில் இருப்பு உள்ளது எந்த இடத்துக்கு அதிகமாக தேவை என்ற இரண்டு தகவல்களையும் ஒருங்கிணைக்கும் மையமாக இது இருக்கும் என்றும் ஆக்சிஜன் இருப்பு தகவல்கள் தான் இதில் முக்கியமானதாக இருக்கும்.

இந்தத் தகவல்கள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்றும் மாவட்ட அளவிலும் மாநில அளவிலுமான மையமாக இவை இருந்து செயல்படும். போர்க்காலத்தில் செயல்படுவதைப் போல நம்முடைய மருத்துவர்கள் செயல்பட்டு மக்கள் சேவையாற்றுவார்கள் என்றும் - அவர் அறிவுறுத்தி உள்ள தகவல்கள் மருத்துவர்கள் வட்டாரத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளுக்கும் அவர்களது கடமையை உணர்த்தும் விதமான அறிவுரை ஒன்றை தலைவர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகள், 50 சதவிகித படுக்கைகளைத் தாண்டியும் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், கட்டணத்திலும் முடிந்தளவு சலுகை காட்டுங்கள் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். ஏழை - எளிய மக்களுக்கு மிகுந்த கருணைகாட்டி, அவர்கள் உயிரைச் செலவில்லாமல் மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க சென்னைக்கு வரத் தேவையில்லை, மாவட்டங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று உத்தரவு!

ஒன்பது மண்டலங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்! இவர்கள் அனைவரும் அந்தப் பகுதியில் தங்கி பணியாற்ற வேண்டும்.பதவியேற்ற அன்று ( 7 ஆம் தேதி) மாலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாக அறிவிப்பு. தனியார் மருத்துவமனைகள் கண்காணிப்பு.ஆக்ஸிஜன் தேவை குறித்து அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் ஒரு அதிகாரி நியமனம்.- ஆகிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை மறைக்க முயற்சிக்காமல் உண்மை நிலையை ஊருக்கு உணர்த்தி தடுக்க நினைக்கிறது தி.மு.க. அரசு. இன்றைய தினம் ‘முதல்வராய்'பொறுப்பேற்கும் தலைவர், நான்கு நாட்களாகவே மக்களின் முதல்வராகத் துரிதமாகச் செயல்படத் தொடங்கிவிட்டார் என்பதன் அடையாளம் இது!

banner

Related Stories

Related Stories