முரசொலி தலையங்கம்

“முதல்வர் மு.க.ஸ்டாலினை போற்றி வாழ்த்துவோம்” - முரசொலி தலையங்கம் புகழாரம்!

தி.மு. கழகம் ஓர் அரசியல் கட்சி மட்டுமில்லை. அது ஓர் இயக்கம் என்பது தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். அந்த நம்பிக்கையை விடாமல் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ஊட்டினார்.

“முதல்வர் மு.க.ஸ்டாலினை போற்றி வாழ்த்துவோம்” - முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாளை மே 7 ஆம் நாள் ஆளுநர் மாளிகையில் நமது கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். திராவிட முன்னேற்றக் கழகம் 6-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. 1996 ஆம் ஆண்டிற்குப் பிறகு அறுதிப் பெரும்பான்மையோடு கூடிய ஆட்சி மீண்டும் தி.மு.கழகத்திற்கு இப்போது வாய்த்திருக்கிறது.

மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்கிறார். இந்த இடத்திற்கு அவர் வாளா இருந்து வந்துவிடவில்லை. மாநில, மத்திய அரசுகளின் வல்லாதிக்கத்தை எதிர்த்து - அதாவது அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளின் வலிமையை உடைத் தெறிந்து ஒரு கலாச்சாரப் போரை நிகழ்த்தி மு.க.ஸ்டாலின் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார். ஒன்றை மட்டும் இந்த நேரத்தில் சுட்டிக் காண்பிப்பது அவசியம் என்று நாம் நினைக்கின்றோம். தேர்தல் நேரத்தில் நாளேடுகளில் ‘வெற்றி நடைபோடும் தமிழகமே’ விளம்பரம் அரசின் பெருஞ் செலவில் கொடுக்கப்பட்டது.

செய்தியை வெளியிடுவது போல எங்கேயாவது விளம்பரத்தைக் கொடுத்தார்களா? இல்லை. தமிழ்நாட்டில்தான் அப்படிப்பட்ட விளம்பரத்தைக் கொடுத்தார்கள். ஆனால், இவை போன்ற எதையும் மு.க.ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் களத்தில் பணியாற்றிக் கொண்டே இருந்தார். மக்களை பல்வேறு பரிமாணங்களில் சந்தித்துக் கொண்டே இருந்தார். மக்களை மிகநெருக்கமாகச் சந்தித்தார். அவர்களோடு பேசினார். நடந்து கொண்டே பேசினார். நின்று உரையாடி னார். அமர்ந்து கொண்டும் மக்களின் குறைகளைக்கேட்டறிந்தார்.

இப்பணிகள் எல்லாம் ஸ்டாலின்பால் ஒரு நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தித் தந்தது. ஏற்கனவே இருந்த நம்பிக்கை கூடிற்று. தேர்தலில் வெற்றியை அடைய அவர் பல முனைகளில் கழகத்தை இயக்கினார். தி.மு. கழகம் ஓர் அரசியல் கட்சி மட்டுமில்லை. அது ஓர் இயக்கம் என்பது தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். அந்த நம்பிக்கையை விடாமல் மக்களுக்கு ஸ்டாலின் ஊட்டினார். அதற்காக நாட்டு மக்கள் முன் இரண்டு ஆவணங்களை முன்வைத்தார். ஒன்று தொலைநோக்குத் திட்டம்; இரண்டு தேர்தல் அறிக்கை. இவை இரண்டு ஆவணங்களும் மக்கள் கருத்தில் பதிந்தன. அவை அவரது உழைப்போடு கலந்து நின்றன. ஸ்டாலினின் இன்னொரு தனித்தன்மை என்னவென்று நாம் பார்க்க வேண்டும். இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி அல்லாத ஏழு மாநிலங்கள் இருந்து வருகின்றன.

“முதல்வர் மு.க.ஸ்டாலினை போற்றி வாழ்த்துவோம்” - முரசொலி தலையங்கம் புகழாரம்!

தமிழ்நாடும் அதில் ஒன்று. தமிழ்நாட்டில்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலின் போதும் 2021சட்டமன்றத் தேர்தலின் போதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைக்கப்பட்டது. இது இந்தியாவிற்கே எதிர்காலத்தில் அமையக் கூடுமானால் மாபெரும் மாற்றம் நிகழ இந்த உத்தி உதவக் கூடும். அப்படிப்பட்ட மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை அமைத்து சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை நாம் ஈட்டி இருக்கின்றோம். இதற்கு முழுமுதற் காரணமானவர் ஸ்டாலின்தான். - கட்சியை இயக்குவது ; - உத்தியை வகுப்பது ; - ஆவணங்களின் மூலம் நாட்டிற்குத் திட்டங்களைச் சொல்வது ;- மக்களிடம் நெருக்கம் காண்பது ; அவர்களிடம் உரையாடி குறையைக் கேட்பது; குறைகளுக்கு ஏற்ப முறைகளைச் சொல்லி அவற்றை நீக்கப் பார்ப்பது என மக்கள் பணிகளை ஸ்டாலின் அதிகமாக்கிக் கொண்டதனாலேயே இன்று முதல்வராக அவரால் பொறுப்பேற்க முடிந்தது.

முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொள்வது மக்களுக்குப் பணியாற்ற என்று இருந்தாலும் அதிலுள்ள பொறுப்புகளை முற்றிலும் அறிந்தவர் ஸ்டாலின் அவர்கள்! ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்கவுள்ள இந்த நேரத்தில் மாநில நிதி ஆதாரங்கள் ஆரோக்கியமாக இல்லை. நிதி ஆதாரங்களைப் பெருக்கியும், வளங்களை உருவாக்கியும் மக்கள் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தி.மு.க. 5 முறை இதற்கு முன்பு ஆட்சி செய்து இருக்கிறது. அவற்றுக்கும் தற்போது ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்கும் போது உள்ள பிரச்சினைகளுக்கும் மிகப் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. இப்போதைய பெருஞ்சிக்கல் என்பதே கொரோனாவை எதிர்கொண்டு போராடி ஒழிப்பதே ஆகும். இது உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கிற பிரச்சினையாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்டாலின் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்று இருக்கிறார். இருந்தாலும் அவர்பேட்டியின் போது, ஒரு கருத்தை எடுத்துக் கூறி இருக்கிறார். அந்தக் கருத்து முதல்வரின் ஆளுமை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதைஉறுதிப்படுத்துகிறது. "பத்தாண்டு காலமாகத் தமிழகம் ஒரு பாதாளத்திற்குப் போயிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்து, புரிந்து அதனைச் சரி செய்ய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்ற உணர்வோடு - ஆட்சிக்குவர வேண்டும் என்ற எண்ணத்தோடு மிகப் பெரிய ஆதரவை மிகப் பெரிய வெற்றியை எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள்.

எந்த எதிர்பார்ப்போடு அந்த வெற்றியைத் தந்து இருக்கிறார்களோ - எந்த நம்பிக்கையோடு எங்களிடத்தில் இந்தப் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்களோ, அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் அந்தப் பொறுப்பை உணர்ந்து எங்களுடைய ஆட்சி நிச்சயம் அதனை நிறைவேற்றும்". இப்படி ஸ்டாலின் அவர்கள் தமது பொறுப்பை உணர்ந்து பேட்டியின் போது எடுத்துரைத்து இருக்கிறார்கள். நாளை ஸ்டாலின் அவர்கள் முதல்வராகிறார். நாட்டின் சுமை அவர் தோளின் மீது ஏற்றப்பட்டு இருக்கிறது. நாட்டின் சுமை மட்டுமல்ல; அவரோடு சமூகநீதி, சுயமரியாதை, சகோதரத்துவம் பின்னிப் பிணைந்து இருக்கிறது. இது திராவிட இயக்கம் வழங்கிய கொடைகளாகும். ஸ்டாலின் தனிமனிதரல்லர். அவர்கள் இயக்கம் - திராவிட இயக்கம். அந்த இயக்கம் நூறாண்டைக் கடந்த இயக்கம். அதன் கொள்கைகள் ஒளிரவும், நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிகளை நிறைவேற்றவும் அவர் கவனங்கொள்ளத் தவற மாட்டார்.

இந்தத் தருணத்தில் நமது அணியில் இருக்கிற கூட்டணிக் கட்சிகளுக்கும் நாம் நன்றியையும், நமது பாராட்டையும் தெரிவிக்கின்றோம். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இந்திய நாட்டிற்கே வழிகாட்ட உதவக் கூடிய ஓர் அணியாக அது மாபெரும் உருவத்தை எடுக்கும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். அதற்கு ஸ்டாலின் வழிகாட்டியாக இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்றாவது முதல்வராகப் பொறுப்பேற்கும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் போற்றிப் பாராட்டி மகிழுகின்றோம். வாழ்க, வாழ்கவென அவரை வாழ்த்துகின்றோம். புகழ்மலை குவிய ஆட்சி சாதனைகள் நிகழ்த்த நாட்டு மக்கள் அனைவரும் தம் வாழ்த்துக்களை இதயப்பூர்வமாகக் குவிக்கிறார்கள். அதை முதல்வர் ஸ்டாலின் முன் நாம் கொண்டு குவிப்போம். வாழ்க, முதல்வர் ஸ்டாலின்!

banner

Related Stories

Related Stories