முரசொலி தலையங்கம்

“தன்னை விவசாயி என்று பழனிசாமியால் எப்படி சொல்ல முடிகிறது ?” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!

இந்த மண்ணையும், மக்களையும் காவு கொடுக்கும் பச்சைத்துரோகிதான் இந்த பழனிசாமி!

“தன்னை விவசாயி என்று பழனிசாமியால் எப்படி சொல்ல முடிகிறது ?” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பொய்யில் பிறந்து பொய்யில் வாழும் பொய்மூட்டை பழனிசாமி, தினமும் நாளிதழில் பொய் - உண்மை என்ற விளம்பரத்தை கொடுத்து வருகிறார். அதன் உண்மைத் தன்மையை நாளிதழ்கள் பார்ப்பது இல்லை.

நேற்றைய தினம் வெளியான விளம்பரத்தில், ‘நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும்’ என்று 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். ஆனால் 2 ஏக்கர் நிலம் யாருக்கும் வழங்கப்படவில்லை’ - என்று அ.தி.மு.க. விளம்பரம் சொல்கிறது. இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிடுவதற்கு முன்னால் அரசாங்கத்தின் கோப்பை அவர்கள் பார்த்திருக்க வேண்டாமா? அதைப் பார்க்கவில்லை!

2006ம் ஆண்டு தேர்தலில் பல முக்கியமான வாக்குறுதிகளை தலைவர் கலைஞர் அவர்கள் கொடுத்தார்கள். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.7000 கோடி கடன் ரத்து என்பது முதலாவது. பதவி ஏற்பு விழா மேடையிலேயே ரூ.7000 கோடி கடனையும் ரத்து செய்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!

நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குவேன் என்று சொன்னார்கள். அந்த அடிப்படையில் நிலம் வழங்கப்பட்டது. 1 லட்சத்து 89 ஆயிரத்து, 719 ஏக்கர் நிலத்தை - 1 லட்சத்து 50 ஆயிரத்து 159 பேருக்கு வழங்கிய ஆட்சி தான் கழக ஆட்சி. 17.9.2006 அன்று திருவாரூரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அன்றைய தினம் 24 ஆயிரத்து 358 குடும்பங்களுக்கு நிலம் தரப்பட்டது.

17.12.2006 அன்று விழுப்புரத்தில் 26 ஆயிரத்து 749 பேருக்கும்- 17.3.2007 அன்று திருவண்ணாமலையில் 20 ஆயிரத்து 648 பேருக்கும்- 17.6.2007 அன்று நெல்லையில் 19 ஆயிரத்து 821 பேருக்கும்- 29.12.2007 அன்று ஈரோட்டில் 21 ஆயிரத்து 487 பேருக்கும்- 17.3.2008 அன்று 13 ஆயிரத்து 270 பேருக்கும் நிலம் வழங்கிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

இது மட்டுமல்ல; கழகம் எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்ததோ அப்போதெல்லாம் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்க்கு நிலம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. 1967 முதல் 76 வரையிலான தி.மு.க. ஆட்சியில் 3 லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு 7 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் நிலம் தரப்பட்டது. 1996- 2001 காலக்கட்டத்தில் 52 ஆயிரத்து 792 பேருக்கு 35 ஆயிரத்து 696 ஏக்கர் நிலம் தரப்பட்டது.

இது எதுவும் தெரியாமல், தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் வாய்க்கு வந்ததைச் சொல்லி வருகிறார் பழனிசாமி. 2011 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளையோ - 2016 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளையோ - நிறைவேற்றாத ஆட்சிதான் இந்த அ.தி.மு.க. ஆட்சி. இதை மறைப்பதற்காக தி.மு.க மீது குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த விவசாயி ஆட்சியில் அதிகமாக பாதிக்கப்பட்டது விவசாயிகள்தான்!

* டெல்டா மாவட்டங்களே கொந்தளித்துக் கிடக்கிறது.

* காவிரிக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.

* காவிரி உரிமை ஜல்சக்தி துறையின் தொங்கு சதையாக மாறிவிட்டது.

* மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியவில்லை.

* எரிவாயு குழாய்கள் அமைப்பதால் விவசாயிகள் பல மாவட்டங்களில் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

* ஹைட்ரோகார்பன் திட்டங்கள் விவசாயிகளை அச்சம் தர வைத்துள்ளது.

* கஜா புயல் தாக்கி மூன்று ஆண்டுகள் ஆனபிறகும் நிவாரணம் தரவில்லை.

* தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை.

* நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

* நெல் கொள்முதலை முழுமையாகச் செய்யவில்லை.

* கரும்புக்கு விலை இல்லை.

* கரும்பு நிலுவைத் தொகை பல ஆண்டுகளாக பாக்கி.

* கூட்டுறவுத்துறையில் தனிநபர் கடன் தருவது இல்லை.

* விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மீட்டர் பொருத்தி இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திட்டமிடுகிறார்கள்.

* நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள்.

* மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார்.

* போராடும் விவசாயிகளை புரோக்கர்கள் என்று கொச்சைப்படுத்துகிறார்.

- இந்தப் பழனிசாமிதான் நானும் விவசாயி என்கிறார். விவசாயிகளை பாதுகாப்பதில் தமிழகம் முதலிடம் என்கிறார். இதை மறைப்பதற்காக இதுபோன்ற பொய் விளம்பரங்களைக் கொடுத்து வருகிறார் பழனிசாமி!

இன்று ஆட்சியில் இருக்கும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை மறந்த அரசுகள். விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டத்தை மோடி கொண்டு வருகிறார். பழனிசாமி ஆதரிக்கிறார். இந்த ஒரே ஒரு விஷயத்துக்காகவே அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். விவசாயி எதிர்பார்க்கும் ஒரே வார்த்தை குறைந்தபட்ச ஆதார விலை. அது இந்தச் சட்டத்தில் இல்லை. இந்தச் சட்டம் அமலானால் ஒழுங்குமுறைக் கூடங்கள் மூடப்படும். உழவர் சந்தைகள் மூடப்படும்.

பண்ணை ஒப்பந்தம் என்ற பேரால் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயிகள் அடிமைகள் ஆக்கப்படுவார்கள். விளை பொருட்கள் பதுக்கப்படும். இதனால் விலைவாசி ஏறும். இதனை விவசாயி கேள்வி கேட்க முடியாது. இப்படி ஒரு சட்டத்தை எதற்காக கொண்டுவர வேண்டும்? விவசாயிகளே எதிர்க்கும் சட்டத்தை எதற்காக கொண்டுவரவேண்டும்? யாருடைய நன்மைக்காக இந்த சட்டத்தைக் கொண்டுவருகிறார்கள்? மத்திய அரசு தன்னை ஆதரிக்கும் சில தொழில் அதிபர்களுக்காக இந்த சட்டத்தைக் கொண்டு வருகிறது. மாநில அரசு, தனது பதவியைக் காப்பாற்றுவதற்காக இதனை ஆதரிக்கிறது.

மத்திய அரசின் எந்த சட்டத்துக்கு ஆதரவாகவும் இந்த அளவுக்கு ஊர் ஊராகப் போய் பழனிசாமி பேசவில்லை. மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்துத்தான் அதிகமாகப் பேசினார். பேட்டி கொடுத்தார். இது விவசாயிகளுக்கு நன்மை செய்யும் சட்டம் என்றார். டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, தரகர்கள் என்றார்.

தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் பழனிசாமியால் எப்படி இப்படிச் சொல்ல முடிகிறது? தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விவசாயிகளையும், இந்த மண்ணையும், மக்களையும் காவு கொடுக்கும் பச்சைத்துரோகிதான் இந்த பழனிசாமி!

இரண்டு ஏக்கர் கொடுக்கவில்லை என்று தி.மு.க.வை பொய்க்குற்றம் சாட்டும் பழனிசாமி, விவசாயி கையில் இருக்கும் நிலத்தையே பறிக்கத் திட்டம் போடுபவர். இவரை நம்பலாமா?

banner

Related Stories

Related Stories