முரசொலி தலையங்கம்

“வன்கொடுமை குற்றங்களும்.. ஆணாதிக்க மனப்பான்மையும்” : நீதிமன்றங்களை தோலுரித்த பெண்கள் அமைப்பு - முரசொலி!

இந்த இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றங்களிலும் பெண்ணுக்கான நீதி வழங்கப்படவில்லை; ஆண்கள் எந்த வகையிலாவது காப்பாற்றப்படுகிறார்கள் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

“வன்கொடுமை குற்றங்களும்.. ஆணாதிக்க மனப்பான்மையும்” : நீதிமன்றங்களை தோலுரித்த பெண்கள் அமைப்பு - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாட்டில் நடந்த இரண்டு குற்றங்கள் இந்தியச் சமூகத்தின் மனங்களில் ஒளிந்து கொண்டுள்ள வன்மத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. குற்றம் செய்பவர்கள் மட்டுமல்ல; குற்றத்துக்கான தண்டனை வழங்குபவர்களும் எத்தகைய மனோபாவத்தில் இருக்கிறார்கள் என்பதை உணரும்போது அதிர்ச்சியாக இருக்கிறது!

குற்றம் 1

பள்ளிச்சிறுமி மீது பாலியல் வன்முறை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவரிடம் “அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளமுடியுமா?” என்று நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது பலருக்கு அதிர்ச்சி அளித்தது. கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தை காப்பாற்றுவாயா என்று கொலையாளியிடம் இனிமேல் நீதிமன்றங்கள் கேட்குமோ என்ற அச்சத்தைத் தருகிறது.

கொள்ளையடித்த பணத்தை திருப்பி அதே இடத்தில் வைத்துவிட்டு வந்தால் போதும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விடும் காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறதோ என்பதை சிந்திக்கவே பயமாக இருக்கிறது. மோஹித் சுபாஷ் சவான் என்ற ஒருவர் பள்ளிச் சிறுமியை தொடர்ந்து செல்கிறார். அவரை இழுத்து வந்து கட்டி வைக்கிறார். கேலி செய்கிறார், தனது ஆசைக்கு இணங்கச் சொல்கிறார். பாலியல் வன்முறை செய்கிறார். பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவேன் என்று மிரட்டுகிறார். அந்தப் பெண்ணின் சகோதரனையும் மிரட்டுகிறார், கொலை செய்து விடுவேன் என்று அச்சுறுத்துகிறார்.

“வன்கொடுமை குற்றங்களும்.. ஆணாதிக்க மனப்பான்மையும்” : நீதிமன்றங்களை தோலுரித்த பெண்கள் அமைப்பு - முரசொலி!

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகிய அனைத்து சட்டங்களின்படி பார்த்தால் பல பத்து செக்ஷன்கள் இதற்கு போடலாம். இத்தகைய நபர் தன்னை கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வருகிறார். சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்முறை செய்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அவர் நினைத்துப் பார்த்தாரா என்று நீதிமன்றம் கேள்வி கேட்கிறது.

இதன் உச்சமாக, “பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளத் தயாரா?” என்று நீதிமன்றம் கேட்கிறது. இந்தக் கேள்வி பலர் மனதில் அச்சம் எழுப்புவதாக அமைந்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனைத்துப் பெண்கள் இயக்கங்கள் சார்பில் ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு - உயிர் பிழைத்திருப்பவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்வதன் மூலமாக தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண்ணைத் துன்புறுத்தியவரின் கைகளிலேயே ஒப்படைத்து வாழ்நாள் முழுவதும், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை உறுதி செய்ய நீதிமன்றம் முயன்றிருக்கிறது. பாலியல் பலாத்காரத்திற்கான சமரசத் தீர்வுகளை முன் வைக்கின்ற ஆணாதிக்க மனப்பான் மையை இந்தியப் பெண்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்றத்தின் வார்த்தைகள் சிறுமிகளை, பெண்களை மேலும் மௌனமாக்கிடவே வழிவகுத்துக் கொடுக்கும். அவர்களுடைய மௌனத்தை உடைக்க பல ஆண்டு காலம் ஆகும். உங்களுடைய வார்த்தைகள் திருமணம் என்பது பாலியல் பலாத்காரத்திற்கான உரிமம் என்ற செய்தியையே பாலியல் பலாத்கார கயவர்களுக்கு அனுப்பி வைக்கிறது.

“வன்கொடுமை குற்றங்களும்.. ஆணாதிக்க மனப்பான்மையும்” : நீதிமன்றங்களை தோலுரித்த பெண்கள் அமைப்பு - முரசொலி!

அத்தகைய உரிமத்தை பெறுவதன் மூலம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய செயலை நியாயப்படுத்தவும் சட்டபூர்வமாக்கவும் முடியும்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுதான் இந்திய மனசாட்சியின் குரலாக இருக்கிறது! இதில் பாதிக்கப்பட்ட பெண் மிகமிகச் சாமானியமான சிறுமி. குற்றம் சாட்டப்பட்டவரும் அதிகாரமற்ற ஒரு சாதாரணன் தான்!

குற்றம் 2

இதில் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையின் உயர் அதிகாரி. குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையின் மிகமிக உயரதிகாரி. அதற்கு மேல் உயர்பதவி இல்லை என்று சொல்லத்தக்க அதிகாரி. இவர் பெயர் ராஜேஷ்தாஸ். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. அதுவும் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறார் அந்தப் பெண் அதிகாரி. அது தொடர்பான புகாரைத் தருவதற்காக அவர் சென்னை வருகிறார். வரும் ஊர்களில் எல்லாம் அவர் காவல்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படுகிறார். பரனூர் சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டு அவரது கார் சாவி பறிக்கப்படுகிறது. மிரட்டப்படுகிறார். அவரை மிரட்டியவர் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன். அதையும் மீறி பெண் அதிகாரி வந்து புகார் கொடுத்தார். வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோர் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். அப்பாவிகள் மீது ஒரு புகார் கொடுத்ததும் உடனே கைது செய்யப்படுவார்களே அப்படி கைது செய்யப்படவில்லை. ஜாலியாகத்தான்அவர்கள் இருவரும் வெளியில் இருக்கிறார்கள். உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளது. ஆனாலும் வழக்கு விசாரணை அதே நிலைமையில்தான் இருக்கிறது. இந்த இரண்டு குற்றங்களிலும் பெண்ணுக்கான நீதி வழங்கப்படவில்லை. ஆண்கள் எந்த வகையிலாவது காப்பாற்றப்படுகிறார்கள். இந்த சமூகம் பண்படுவதற்கு இன்னும் எத்தனை யுகங்கள் ஆகுமோ?!

banner

Related Stories

Related Stories