முரசொலி தலையங்கம்

“குடும்பங்களின் ஆட்சியும், கம்பெனிகளின் ஆட்சியும்” - மோடி-அமித்ஷாவுக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!

திராவிட முன்னேற்றக் கழகத்தை மோடியும் அமித்ஷாவும் குடும்பங்களுக்கான ஆட்சி என விமர்சித்ததற்கு முரசொலி நாளேடு தலையங்கம் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

“குடும்பங்களின் ஆட்சியும், கம்பெனிகளின் ஆட்சியும்” - மோடி-அமித்ஷாவுக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"தி.மு.க. என்பது குடும்பத்துக்கான ஆட்சி" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவாய் மலர்ந்துள்ளார். அது ஓரளவு உண்மைதான்.

ஆனால் அதில் ஒரு திருத்தம், தனிப்பட்ட குடும்பத்துக்கான ஆட்சி அல்ல, அனைத்துக் குடும்பங்களுக்குமான ஆட்சி!

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோதுதான் ஒட்டு மொத்தமாக தமிழகம் வளர்ந்தது. அன்னைத் தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதி! மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உரிமை!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம்!

மகளிருக்கும் சொத்தில் பங்குண்டு என்ற சட்டம்!பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினமக்களுக்கான சமூகநீதி உரிமைகள்!

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடிக் கடன் ரத்து!

சென்னை தரமணியில் டைடல் பார்க் ! சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம்!

சிப்காட், சிட்கோ, தொழில் வளாகங்கள் உருவாக்கம்!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம்உருவாக்கியது!

நமக்கு நாமே திட்டம், அண்ணா மறு மலர்ச்சித் திட்டங்கள்!

அவசர ஆம்புலன்ஸ் 108 சேவை அறிமுகம்! இலவச மருத்துவக் காப்பீடுத் திட்டம்!

மினி பஸ்களை கொண்டு வந்தது!

உழவர் சந்தைகள் அமைத்தல்!

ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி, கைம்பெண் மறுமண நிதி உதவி, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி ஆகிய திட்டங்கள்! பல்லாயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள்!

அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவிகிதம் இடஒதுக்கீடு!

பெண்களுக்காக 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு! இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரி வாயு அடுப்புகள் வழங்குதல்!

மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல் ! அனைவரும் இணைந்து வாழ சமத்துவ புரங்கள்!

இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியது!

உருது பேசும் இஸ்லாமியர்களைப் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தது! நுழைவுத் தேர்வு ரத்து!

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியது!

சேலம் உருக்காலை, சேலம் புதிய ரயில்வே மண்டலம், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்த் திட்டம், ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகம் ஆகியவை உருவாக்கம்!

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வுவழங்குதல்! ஏராளமான பல்கலைக் கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள் உருவாக்கியது!

இதனால் பயன் பெற்றவர்கள், தனிப்பட்ட ஒரு குடும்பத்தினர் அல்ல. அனைத்துக் குடும்பங்களும்தான்!

எந்தத் திட்டம் தீட்டினாலும் அதை அதானிக்கு பயன் தருவதைப் போல, அம்பானிக்கு பயன் தருவதைப் போல திட்டம் தீட்டுபவர்கள்தான் மோடியும் அமித்ஷாவும்!

“குடும்பங்களின் ஆட்சியும், கம்பெனிகளின் ஆட்சியும்” - மோடி-அமித்ஷாவுக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!

இந்த அரசாங்கத்தை ராகுல் காந்தி ஒரே ஒரு வரியில் அடையாளம்காட்டினார். "இந்த அரசாங்கம் என்பது நாம் இருவர், நமக்கு இருவர் அரசாங்கம்" என்று சொன்னார். நாம் இருவர் என்று ராகுல் சொல்வது, மோடியும் அமித்ஷாவும்! நமக்கு இருவர் என்று சொல்வது அதானியும், அம்பானியும்! இந்த அமித்ஷாதான், தி.மு.க.வை குடும்பக் கட்சி என்று விமர்சிக்கிறார்.

இவர்கள் அனைவருமே குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அம்பானி குழுமம் வளர்ச்சியால் முந்தியது. ஆனால் அதானி குழும வளர்ச்சி என்பது மோடியால் வந்தது. அவர் குஜராத் முதல்வராக இருந்த போது வளர்ந்ததுதான் அதானி குழுமம்.

மோடி ஆட்சியில் கட்ச் வளைகுடா பகுதியில் 7,350 ஹெக்டேர் நிலம் ஒரு சதுர கிலோமீட்டர் ஒரு ரூபாய் என குத்தகைக்கு வழங்கப்பட்டதாக அப்போதே சர்ச்சை கிளம்பியது. நிலக்கரி சுரங்கம், துறைமுகங்கள், எரிவாயு என அனைத்து துறைகளிலும் திடீர் நம்பர் ஒன்னாக மாற மோடியின் ஒத்துழைப்பே முக்கியம் என்பதை ஆங்கில ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன.

விமான நிலையங்கள் சிலவும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குப் போய்விட்டன. எந்தத் துறையை மோடி ஊக்குவிக்க வேண்டும் என்று பேசுகிறாரோ அந்தத் துறைகளில் அதானி குழுமம் கோலோச்சத் தொடங்கும் என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் அவை எழுதி வருகின்றன. அம்பானியை அதானி வெகு சீக்கிரம் முந்திவிடுவார் என்றே அவை எழுதுகின்றன. இதை வைத்துத்தான், அதானிக்கும் அம்பானிக்கும்தான் மோடி சௌகிதாராகச் செயல்படுகிறார் என்று ராகுல் காந்தி தொடர்ந்து சொல்லி வருகிறார். இதுவரைக்கும் இதற்கு மோடியோ, அமித்ஷாவோ பதில் அளிக்கவில்லை.

தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அடைந்த பயன்கள் தனிப்பட்ட குடும்பத்துக்கா, ஒட்டு மொத்த குடும்பங்களுக்கா என்பதையும் பாருங்கள்! மோடியும் அமித்ஷாவும் சேர்ந்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் அதானி, அம்பானிக்காக மட்டுமே இருப்பதையும் கவனியுங்கள்.

100 ஆவது நாளைத் தொடப்போகும் விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி இத்தனை நாட்கள் கடந்தும் பிரதமர் மதிக்காமல் இருக்க என்ன காரணம்? மூன்று வேளாண் சட்டங்களும் அதானி குழுமத்துக்குச் சார்பானது. அரசாங்கம் வசம் இருக்கும் உணவுப்பொருள் கொள்முதல் முழுமையையும் அவர்கள் கைப்பற்ற திட்டமிட்டுள்ளார்கள்.

அதற்காகவே ‘குறைந்தபட்ச ஆதார விலையை' நிர்ணயிக்க மறுக்கிறார்கள். கோடிக் கணக்கான விவசாயிகளா, ஒரு அதானியா என்றால் அதானி பக்கம் நிற்கும் மோடியும் அமித்ஷாவும் இதற்கு பதில் அளிக்க வேண்டும். ஆமாம்! தி.மு.க. அரசு தமிழகக் குடும்பங்களுக்கான அரசுதான்! பா.ஜ.க. அரசைப் போல தனிப்பட்ட இரண்டு கம்பெனிகளின் அரசு அல்ல!

banner

Related Stories

Related Stories