முரசொலி தலையங்கம்

“எடப்பாடி பழனிசாமியின் ஊழல் அரசின் ஊதாரிதனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்”: முரசொலி தலையங்கம் சூளுரை!

தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகிவிட்டனர் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

“எடப்பாடி பழனிசாமியின் ஊழல் அரசின் ஊதாரிதனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்”: முரசொலி தலையங்கம் சூளுரை!
 • Twitter
 • Facebook
 • WhatsApp
Prem Kumar
Updated on

முதல்வர் பழனிசாமி அரசின் மீது ஆளுநரிடம் 20.12.2020 அன்று ஒரு புகாரும் 19.02.2021 அன்று ஒரு புகாரும் கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு உள்ளன. இவை அத்தனையும் ஊழல் புகார்கள். முதல் ஊழல் பட்டியலைக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வழங்கப்பட்டது. இரண்டாவது ஊழல் பட்டியலைக் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் வழங்கப்பட்டு உள்ளது. இவை அத்தனையையும் விளம்பரத்திற்காக - நாளேடுகளில் இடம் பெறுவதற்காக அளிக்கப்படுகின்றன என்று ஓர் அமைச்சர் பேட்டித் தருகிறார்.

முதல்வரோ தி.மு.க.வின் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்று சொல்கிறார். முகாந்திரம் இல்லாமலேயா ஆளுநர் உள்துறைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்? கடந்த இரண்டு மாதங்களாகக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து அ.இ.அ.தி.மு.க. அரசின் ஊழல்களை - நிர்வாகச் சீர்கேடுகளை மக்களிடையே அம்பலப்படுத்தி வருகிறார்கள். தாம் அமைக்கப் போகும் ஆட்சியில் ‘இன்னதை’ செய்யப் போகிறோம் என்று அறிவிக்கிறார். உடனே முதல்வர் பழனிசாமி அதனை அறிவித்து வருகிறார்.

அதனால் மக்கள் பலன் அடைகிறார்கள் - பயன்பெறுகிறார்கள் என்பதில் நாம் மகிழ்ச்சி கொள்கின்றோம். அது தி.மு.க.வின் சாதனையே தவிர அ.இ.அ.தி.மு.க.வின் சாதனை அல்ல, அ.இ.அ.தி.மு.க. அரசு எவ்வளவு மோசமான ஊழல் அரசு என்பதைக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை மாநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் சிங்காநல்லூரில் பிப்.19ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் எடுத்துக்காட்டி இருக்கிறார். அமைச்சர் வேலுமணியைத் தோலுரித்துக்காயப்போட்டு இருக்கிறார்.

“எடப்பாடி பழனிசாமியின் ஊழல் அரசின் ஊதாரிதனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்”: முரசொலி தலையங்கம் சூளுரை!

சந்தையில் விற்கிற ஒரு பொருளை அரசாங்க பயன்பாட்டிற்கு வாங்கும்போது பல மடங்கு விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்; உள்ளாட்சித் துறையினர். “25 கிலோ கொண்ட சுண்ணாம்பு பவுடர் தனியார் கடைகளில் 170 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் 842 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். பினாயில் ஒருபாட்டில் ரூ.20க்குக் கடையில் கிடைக்கிறது. அதை 150 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள்.

சாக்கடையை சுத்தம் செய்யும் டிச்சு கொத்து 130 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஆனால் அதை 1010க்கு வாங்கி இருக்கிறார்கள். ரூ.1500 மதிப்புள்ள மோட்டாரை 25,465 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள்.” - இப்படி ஒவ்வொரு பொருளிலும் ஊராட்சி பயன்பாட்டிற்கு என்று வாங்கியதில் ஊழல் செய்து இருக்கிறார்கள். அரசின் பணம் ஊதாரித்தனமாக ஊழல் செய்வதற்கென்றே இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.

இது யார் துறையில் நடந்த ஊழல்? அமைச்சர் வேலுமணி துறையில் நடந்த ஊழல், பழனிசாமி அமைச்சரவையில் இருக்கும் ஓர் அமைச்சரின் சாதாரணமான ஊழல் இது! வேலுமணிதான் முதல் நபர் ஊழல் ஆசாமி; எல்லா அமைச்சர்களை விடவும் ஊழலில் முன்னணியில் இருப்பவர் வேலுமணி. இந்த ஊழல் - கிரிமினல் அமைச்சரவையின் தலைமை பொறுப்பு யாரிடம் இருக்கிறது; பழனிசாமியிடம்! அ.இ.அ.தி.மு.க.வின் மொத்த ஊழலுக்கும் தலைமை தாங்கும் பழனிசாமியை ஊழல் மன்னன் வேலுமணி ‘வாழும் காமராசர்’ என்று வேறு புகழ்ந்துரைக்கிறார்.

இது காமராசருக்குப் புகழ் சேர்க்கும் விவகாரம் ஆகுமா? கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதைப் போல இப்படிச் சொல்லுவது காமராசரை அவமதிப்பது போல் ஆகும்! நாடு இதனை ஏற்காது. நாட்டு மக்கள் இக்காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடைசி நேரத்து அ.இ.அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை தமிழ்நாட்டு மக்கள் சாதனை என்று ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

“எடப்பாடி பழனிசாமியின் ஊழல் அரசின் ஊதாரிதனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்”: முரசொலி தலையங்கம் சூளுரை!

இவ்வளவு அறிவிப்புகளும், பரப்புரை பொய்களும் ஏன் செய்யப்படுகிறது? தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கக்கூடாது என்பதற்காகவே செய்யப்படுகின்றன. அது நடக்கப்போவதில்லை. பழனிசாமிக்கு இன்னும் சில நாள்கள்தான் எளிதாகப் பரப்புரை செய்கிற வாய்ப்புகள் கிடைக்கும். வேட்பாளர்களை அ.இ.அ.தி.மு.க.வில் அறிவிக்கட்டும். அதற்குப் பின்னால் பரப்புரை எப்படி இருக்கப்போகிறது என்பதை நாம் பார்க்கத்தான் போகின்றோம்.

தி.மு.க.வுக்கும் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் எல்லாவற்றிலும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. அந்த வேறுபாட்டை எப்போதையும் விட இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் பெரிதும் உணர்ந்து இருக்கிறார்கள். அ.இ.அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவரான எம்.ஜி.ஆர். மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. கமிஷன்கள் அவர் மீது போடப்பட்டன. ஜெயலலிதா மீது ஊழல் வழக்கே பல ஆண்டு காலம் நடந்தது. இறுதியில் அவர் உட்பட ஊழலுக்காக நால்வர் தண்டனை பெற்றனர். அபராதத் தொகை செலுத்தினர். ஜெயலலிதா, தண்டனை அளிக்கிறபோது உயிருடன் இல்லை. இவர்களின் வழிவந்ததுதான் எடப்பாடி பழனிசாமி அரசு. இந்த அமைச்சரவையே ஊழல் அமைச்சரவைதான்!

“எடப்பாடி பழனிசாமியின் ஊழல் அரசின் ஊதாரிதனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்”: முரசொலி தலையங்கம் சூளுரை!

இவர்களுக்கு எதிர்காலம் தண்டனை வழங்கக் காத்து கொண்டு இருக்கிறது. ஆகவே தான் ஆளுநரிடம் இரண்டு கட்டங்களாக ஊழல் புகார்கள் மனுக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. அவை தேவைப்படும் போது நடவடிக்கை எடுக்க உதவும். இதுமட்டுமில்லை. இப்போது துணை முதல்வராக உள்ள பன்னீர்செல்வத்தையும் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் சிறப்பாகக் கவனிக்க இருக்கின்றோம்.

இதை நாட்டுக்குச் சொல்லி இருக்கிறோம். அ.இ.அ.தி.மு.க.வினர் எப்படி அரசின் பணத்தினைச் சுருட்டி ‘பெரிய’ மனிதர்கள் ஆகியிருக்கிறார்கள் என்பதை இப்போது முதல் கட்டமாகப் பரப்புரையின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றோம். பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்கிற உறுதியினை நாட்டு மக்களுக்கு இப்போதே தி.மு.க. தருகிறது.

தமிழ்நாட்டு மக்கள் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பார்த்து இருக்கிறார்கள். இப்போது உள்ள அமைச்சரவையையும் பார்த்து வருகிறார்கள். இந்த அமைச்சரவையினுடைய பதவிகாலம் வருகிற மே மாதம் 24 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. அதற்கு முன்னதாக ஏப்ரலில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழக மக்கள் இம்முறை அ.இ.அ.தி.மு.க.வினர் ஆட்டத்தைப் பார்த்து அவர்களின் ஊழல் அரசின் ஊதாரிதனத்திற்கு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைப்பார்கள். ஏன் தெரியுமா?

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களின் மேயராக இருந்தபோது, அமைச்சராக இருந்த போது, துணை முதல்வராக இருந்தபோது, அவராற்றிய மக்கள் தொண்டு அளப்பரியது. அவருடைய சாதனைகள் பதிவாகி இருக்கின்றன. அவர் முதல்வராகி சாதனை நிகழ்த்த இருப்பதை இம்முறை தமிழ்நாடு மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. அதற்காக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகிவிட்டனர்.

banner

Related Stories

Related Stories