முரசொலி தலையங்கம்

பஞ்சாப் பல்கலையில் 20 ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கும் தமிழ்த்துறை.. ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது? - முரசொலி

செம்மொழியான தமிழ் மொழிக்கென தனித்துறை ஒதுக்கப்பட்டும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருப்பது ஏன் என கேள்வி எழுப்பி முரசொலி நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது.

பஞ்சாப் பல்கலையில் 20 ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கும் தமிழ்த்துறை.. ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது? - முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று திராவிட இயக்கத்தின் பெருந்தலைவர்களுள் ஒருவரான டாக்டர் சி.நடேசனார் அவர்களின் 84-ஆவது நினைவு நாள்!

20ம் நூற்றாண்டு தொடக்க கால சென்னை இராஜதானியின் சட்டமன்றத்தில் தமிழின் இலக்கியப் பெருமை - பழம் பெருமையைப் பற்றி முதன் முதலாகப் பேசியவர் டாக்டர் சி.நடேசனார். ஆனால், இன்றோ ‘ஞாலமளந்த மேன்மைத்தமிழ்’ பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முடக்கப்பட்டு கிடக்கிறது. பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகளாகத் தமிழ்த் துறை மூடப்பட்டு இருப்பதாக நாளேடுகளில் செய்தி வெளியாகி இருக்கிறது.

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகர் சண்டிகர். இது யூனியன் பிரதேசமும் கூட! இங்கே 1,941ம் ஆண்டு முதல் பஞ்சாப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் கல்விக் குழுக்களில் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த இ.சி.சர்மா இருந்தார். இவருக்குத் தமிழ் மொழியின் மேல் ஆர்வம். அதனால் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய மொழிகளுக்கென்று ஒரு துறை தொடங்கப்பட்டது. முதலில் தமிழுக்கு மட்டுமே துறை காணப்பட்டது. 1,967 முதல் அது இயங்கி வந்ததாகத் தெரிகிறது. அத்துறைக்கென்று நியமிக்கப்பட்ட விரிவுரையாளர் 2001ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவருக்குப் பிறகு யாரும் நியமிக்கப்படவில்லை. தென்னிந்திய மொழிகள் துறை என்று பெயருக்குத் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. ஆனால், இத்துறைக்கென்று மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதி என்னாகிறது என்கிற வினா இயல்பாக எழக்கூடியதாக இருக்கிறது.

பஞ்சாப் பல்கலையில் 20 ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கும் தமிழ்த்துறை.. ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது? - முரசொலி

இப்பணத்தை மாற்றிச் செலவழிக்கக்கூடிய வாய்ப்புகள் நிரம்ப உண்டு. இது குறித்து முன்னர் அங்கே விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கு. இராமகிருஷ்ணன் ஒரு பேட்டி அளித்து இருந்தார். அப்பேட்டி 2019ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி வெளியாகி இருந்தது. இந்தச் செய்தியை அடுத்து தமிழகச் சட்டப்பேரவையில் முதல்வர் 110 விதியின் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி பல்கலைக் கழகத்திற்கு ரூ.12 லட்சம் நிதியளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் பல்கலைக்கழகத்திற்கும் தெரிவிக்கப்பட்டதாக நாளேட்டின் செய்தி கூறுகிறது. தமிழக அரசுக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இன்னொரு தகவலும் அந்தச் செய்தித்தாளில் காணப்படுகிறது. தமிழக அரசின் அறிவிப்புக்குப் பின் தமிழ் போதிக்க துணைவேந்தர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது என்றும் கூறப்படுவதோடு, அக்குழுவின் கூட்டமும் இதுவரை எதுவும் நடைபெறவில்லை.

இப்பிரச்சினை பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் இன்னும் முடிவுக்கு வரமுடியாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இந்தி, சமஸ்கிருதம் தவிர மற்ற இந்திய மொழிகளின் கல்வி அங்கே எதுவுமில்லை என்று பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நிலை இருந்து வருகிறது. இந்தச் செய்தியை நாம் நாளேடுகளில் படித்த போது நமக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பழைய நிலை நினைவுக்கு வந்தது. 1,857ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1,900ம் ஆண்டில்தான் உயர்கல்வியில் தமிழுக்குச் சிறப்பிடம் தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கையே எழுந்தது.

அந்த நாள்களில் தமிழ் ஒரு செம்மொழியாகக் கருதப்படாமல், இந்திய நாட்டு மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்டதால் தமிழ்மொழிக்கெனத் தனிப்பாடப்பிரிவு வழங்கப்படவில்லை. 1,923ல் பல்கலைக்கழகச் சட்டம் நீதிக்கட்சிக் காலத்தில் இயற்றப்பட்டு ஆட்சிக் குழுவுக்குள் நீதிக் கட்சியினர் இடம் பெற்றனர். இந்த உறுப்பினர்கள்தான் பல்கலைக்கழகத்தில் தாய்மொழிக் கல்வியின் தேவையையும், ஆராய்ச்சிகள் மேற்கொள்வதையும் வற்புறுத்தினார்கள். அதனால் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இடம் பெறலாயிற்று. இது நூறாண்டுகளுக்கு முந்தைய நிலை.

இன்றைய நிலையில் பஞ்சாபில் அதுவும் ஜனநாயக வழியில் ஏற்படுத்தப்பட்ட ஒரு தமிழ்த்துறை 20 ஆண்டுகளாகச் செயல்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய மனவேதனை அளிக்கத்தக்கச் செய்தியாகத்தான் நாம் இதனைப் பார்க்கின்றோம். தமிழக அரசு நிதி உதவி அளித்து இருப்பதைத் தொடர்ந்து பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் நிலை என்ன என்பதையும் அரசு கண்டறிந்து, நிலைமைகளுக்குத் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும். ஆனால், இதுவரை எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. தமிழக அரசு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் உதவித் தொகையை அறிவித்து என்ன பயன்? அறிவிப்பு பயன் மதிப்பைப் பெற்றதா? எந்தச் செயலுக்கு அறிவிப்பை செய்தோமோ அச்செயல் நிறைவேற்றப்பட்டுவிட்டதா என்பது ஓர் அரசின் பொறுப்பாகத்தானே இருக்க முடியும்?

2,019ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தொகையின் செயல்பாடு என்பது வெறும் அறிவிப்பு மட்டுமா? இதற்கு யார் பொறுப்பு? எனும் வினாக்கள் எல்லாம் எழுகின்றன. எது எப்படி இருப்பினும், தமிழக அரசு பஞ்சாப் அரசோடு தொடர்புகொண்டு 20 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் தமிழ்த்துறையை செயல்படுத்துமாறு செய்யவேண்டும். அதற்குரிய வகையில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில் தென்னிந்திய மொழிகளுக்கென ஒரு துறை தொடங்கப்பட்டு இருப்பது நல்ல செய்தியானாலும், அந்தத் துறை இயங்கவே இல்லை என்பதை அறிகிற போது அது நல்லதொரு முன்மாதிரியாக நமக்குத் தோன்றவில்லை. ஆக, தமிழோடு சேர்ந்து தென்னிந்திய மொழிகளின் துறையை மீண்டும் நல்ல முறையில் இயங்கச் செய்ய சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் இதற்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் மானியத் தொகைகள் வேறு பயன்பாட்டிற்குச் செலவழிக்கப்பட்டிருப்பதை அப்படி நிகழ்ந்திருந்தால் அதனை உடனடியாக நிறுத்தி உரிய தலைப்புக்குப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையைப் புதுப்பிக்கு மாறும் வலியுறுத்துகின்றோம்.

banner

Related Stories

Related Stories