
தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான இடங்களை த.வெ.க வென்றும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவித்து வந்தது.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் ஆளுநர் வழி குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்து, தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்கொள்ள நேரிடும் என்ற அச்சுறுத்தலின் பேரில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கலந்துபேசிய பிறகு, வெளியில் இருந்து த.வெ.க.விற்கு ஆதரவு தருவதாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அறிவித்தன.
அதனையடுத்து, த.வெ.க தலைவர் என்கிற முறையில் மே 10 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், முதலமைச்சராக பதவியெற்றுக் கொண்டார் விஜய்.
தொடர்ச்சியாக, மே 11 அன்று 17ஆவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி, முறையே முதலமைச்சராக விஜய்யும், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலினும் உளமாற உறுதியேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது த.வெ.க அமைச்சரவையில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள வி.சி.க.வின் வன்னி அரசு மற்றும் ஐ.யு.எம்.எல் கட்சியின் ஷாஜஹான் ஆகியோருக்கு தி.மு.க தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது, “மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசு அவர்களுக்கும், ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.”






