மு.க.ஸ்டாலின்

“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

“நான் அதிக முறை வந்த மாவட்டம் கோவை. கோவையோடு நான் ஒன்றிப் போயிருக்கிறேன்” என கோவை தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (02-04-2026) மாலை, கோயம்புத்தூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய உரையின் விவரம்:

2021-ஆம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து, நான் அதிக முறை வந்த மாவட்டம் எது தெரியுமா? இந்தக் கோவை மாவட்டம்தான். இன்னும் சொல்லப்போனால், ஆட்சிக்கு வந்தபோது கொரோனா என்ற கொடிய நோய் உச்சத்தில் இருந்தது.

முதலமைச்சரான அடுத்த மாதமே PPE கிட் அணிந்துகொண்டு, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தவன்தான் இந்த ஸ்டாலின் என்பது உங்களுக்குத் தெரியும்.

அதிலிருந்து, தொடர்ந்து பல முறை அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகள், கள ஆய்வில் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம், தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழா, உலக புத்தொழில் மாநாடு, பல்வேறு திறப்பு விழாக்கள், பல்வேறு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகள் என்று ஏதாவது ஒரு விழாவிற்கு வந்து கொண்டுதான் இருப்பேன்.

கோவையும் என்னுடைய ஊர்தான் என்று சொல்லத்தக்க அளவிற்கு, கோவையோடு நான் ஒன்றிப் போயிருக்கிறேன். அதனால்தான், இப்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பரப்புரையிலேயே கோவைக்கு வந்துவிட்டேன்.

இப்போது வேட்பாளர்களை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தப் போகிறேன்.

முதலில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி அவர்கள்! முன்னாள் அமைச்சர், கழத்தின் மேற்கு மண்டலப் பொறுப்பாளர். அவரைப் பற்றி உங்களுக்கு நான் அறிமுகம் செய்யத் தேவையில்லை. செந்தில்பாலாஜி என்றாலே செயல்வீரர். செயல்வீரர் என்றாலே செந்தில்பாலாஜி. நினைத்ததைச் சாதித்துக் காட்டுபவர் செந்தில்பாலாஜி. அதனால்தான் கோவையில் நிற்கிறார்.

எந்த வேலையை ஒப்படைத்தாலும் அதைச் சிறப்பாகவும், எதிர்பார்த்ததற்கு மேலேயும் செய்யக் கூடிய ஆற்றல் பெற்றவர்! அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் உங்களுடைய பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.

“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

அடுத்து, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் துரை செந்தமிழ்ச் செல்வன் அவர்கள். பாரம்பரிய திராவிட முன்னேற்றக் கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐ.டி. ஊழியராகப் பணியாற்றியிருக்கிறார். பகுதிக் கழகத்தின் செயலாளராக இருந்து, இப்போது கோவை மாநகரக் கழகத்தின் செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பவர். இவரது தந்தை துரை மேவராஜன் அடிமட்ட தொண்டராக இருந்து, கோவை மாநகர் பீளமேடு பகுதிக் கழகச் செயலாளராகப் பணியாற்றியவர். துரை. செந்தமிழ் செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.

அடுத்து, சூலூர் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் தளபதி முருகேசன் அவர்கள். விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டுள்ளவர், கண்ணம்பாளையம் பேரூராட்சித் தலைவராகவும் கடந்த 2011-16-இல் பணியாற்றி இருக்கிறார். சூலூர் – திருச்சி சாலை விரிவாக்க குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அனுபவமிக்கவர். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

அடுத்து, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் கே.வி.கே. சபரி கார்த்திகேயன். மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.கே. என்று அழைக்கப்படும் கே.வி. கந்தசாமி அவர்களின் பேரன். கே.வி.கே. அவர்கள் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அவரது பேரனான சபரி கார்த்திகேயன் அவர்கள், 1998 முதல் கழக உறுப்பினராகவும், பெரிய நெகமம் பேரூராட்சித் தலைவராகவும் பணியாற்றி, இப்போது, கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த வெல்லும் வேட்பாளர் திரு. நித்தியானந்தம் அவர்கள். இங்கு நம்முடைய மேடையில் இருக்கும் சகோதரர் ஈஸ்வரன் அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர். அவரால் அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், நமது வெற்றிச் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் அவர் நிற்கிறார். பொள்ளாச்சி கழக உடன்பிறப்புகள் கடுமையாக களப்பணி ஆற்றி, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும்.

அடுத்து, வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகர் அவர்கள்! இவரது தந்தை ஆரோக்கியம் அவர்கள் வால்பாறை நகர அவைத் தலைவராக இருந்தவர். சுதாகர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கழகத்தின் மாணவரணியில் இருந்தவர், கிளைச் செயலாளர், வார்டு செயலாளர், நகராட்சியில் 2 முறை நகராட்சித் தலைவராக இருந்திருக்கிறார். 2022-ஆம் ஆண்டிலிருந்து வால்பாறை நகர தி.மு.கழகத்தின் செயலாளராக இருக்கிறார். அவரை நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

அடுத்து, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, நமது வெல்லும் வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் அவர்கள். கழகத்தில் மாவட்டப் பிரதிநிதியாக இருக்கிறார். நரசிபுரம் ஊராட்சியின் தலைவராக பணியாற்றி இருக்கிறார், 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த ஊராட்சிக்கான உத்தமர் காந்தி விருது பெற்றவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் பொன்னான வாக்குகளை நீங்கள் வழங்கிட வேண்டும்.

அடுத்து, மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம். இவர் கோவையின் காவல்தெய்வமாக போற்றப்படும் அருள்மிகு கோணியம்மன் திருக்கோவிலின் அறங்காவல் குழு உறுப்பினராக இருந்தவர். இவரது கணவர் எஸ்.எம்.டி. கல்யாண சுந்தரம், காரமடை வடக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். கவிதா கல்யாணசுந்தரம் அவர்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருக்கும் மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்கி வெற்றி பெற வைக்க வேண்டும்.

அடுத்து, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி. இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். சகோதரர் ராகுல் காந்தி அவர்களால் அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களுக்கு கை சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அளிப்பீர்களா? உங்கள் வாக்கு உதயசூரியனுக்குதானே? உங்கள் வாக்கு நம்முடைய கூட்டணிக் கட்சிகளுக்குத்தானே? வெற்றி உறுதியா? உறுதி (மக்கள்). நன்றி! வேட்பாளர்கள் இப்போது அமரலாம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியை, கோவை மக்களான நீங்கள் தந்தீர்கள். அது 2026 தேர்தலிலும் முழு வெற்றியாக தொடர வேண்டும்! இதை அன்போடு மட்டுமல்ல, முழு உரிமையோடும் கேட்கிறேன்.

ஏன் தெரியுமா? திராவிட மாடல் ஆட்சியில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் அந்தளவிற்கு இந்த மேற்கு மண்டலத்திற்கு, குறிப்பாக கோவைக்கு பல்வேறு சாதனைத் திட்டங்களை நாங்கள் செய்திருக்கிறோம். உண்டா? இல்லையா? அந்த உரிமையில்தான் உங்களிடம் முழு வெற்றியை கொடுங்கள் என்று கேட்கிறேன். எல்லாவற்றையும் சொல்ல நேரமில்லை. அதனால், சில பெரிய திட்டங்களை மட்டும், ஹைலைட்ஸாக சொல்ல விரும்புகிறேன்.

“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

கோவையில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி மகிழும் செம்மொழி பூங்கா, தமிழ்நாட்டிலேயே நீளமான ஜி.டி. நாயுடு மேம்பாலம். இந்தப் பாலத்தை சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை இன்னும் 5 கிலோமீட்டருக்கு நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பின்னால் நீட்டிக்கப் போகிறோம்,

ஆர்.எஸ். புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உலகத்தரத்தில் ஹாக்கி மைதானம்,

இதேபோன்று, ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உயர்மட்ட மேம்பாலம்,

இருகூர் - பீளமேடு இரயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம்,

பில்லூர் 3-ஆம் குடிநீர் திட்டப் பணிகள்,

கோவை விளாங்குறிச்சியில் எல்காட் தகவல் தொழில்நுட்ப மையம்,

நவீனமயமாக்கபட்டுத் தகதகவென்று ஜொலிக்கும் உக்கடம் பேருந்து நிலையம்,

விசைத்தறி மற்றும் சிறு தொழில்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது,

விசைத்தறிக்கு ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது,

கோவை வெள்ளலூர் பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகள் நடக்க இருக்கிறது,

கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் தங்க நகைப் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது,

இது எல்லாவற்றிற்கும் மேல், கோவை காந்திபுரத்தில், 300 கோடி ரூபாயில் "பெரியார் அறிவுலகம்" கட்டுமானப் பணிகள் முடிந்து, தேர்தல் முடிவுகள் வந்ததற்குப் பிறகு உங்களால் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று விரைவில் திறந்து வைப்பேன். முதல் நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சிதான் இருக்கும் என்று பெருமையோடு தெரிவிக்க விரும்புகிறேன்.

கோவையில் திராவிட மாடலின் இந்தச் சாதனைச் சரித்திரம் தொடர, திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை நீங்கள் வழங்க வேண்டும்.

2021 தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மட்டுமல்ல, கொடுக்காத பல திட்டங்களையும் நிறைவேற்றிக் காட்டிவிட்டு உங்கள் முன்னால் இன்றைக்கு நான் கம்பீரமான நின்று கொண்டிருக்கிறேன்.

திரு. பழனிசாமி அவர்களின் ஆட்சியில் செய்த சாதனைகளை நான் சொன்னதுபோன்று பட்டியலிட்டுச் சொல்ல முடியுமா? பத்தாண்டு கால ஆட்சியில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? அதுவும் இல்லை. 2016 தேர்தல் அறிக்கையில் சொன்னது எதையும் அவர் செய்யவில்லை.

இந்த லட்சணத்தில் அ.தி.மு.க.வைப் பார்த்து நாம் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துவிட்டோம் என்று வாய்கூசாமல் சொல்கிறார் திரு. பழனிசாமி அவர்கள். தி.மு.க. செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், கட்டணமில்லா விடியல் பயணம் என்று பழனிசாமிதான் நம்முடைய திட்டங்களை ஒன்று விடாமல் காப்பி அடித்து அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.

பத்தாண்டு ஆட்சியில் இருந்தும், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், திட்டங்கள் என்று பட்டியல் போட அவரிடம் எதுவும் இல்லை. இந்தக் கஷ்டம் பழனிசாமியை விட, அவரது ஓனரான பிரதமர் மோடி அவர்களுக்கு இன்னும் அதிகம்! அவராலும் தமிழ்நாட்டிற்குச் செய்த சிறப்புத் திட்டம் என்று எதையும் சொல்ல முடியாது!

“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே வாழும் நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், தேர்தல் சீசன் காரணத்தினால் இப்போது அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். இப்போது கூட நான்காம் தேதி சென்னையில் ரோடு ஷோ பண்ணப் போகிறாராம். இதனால் யார் மகிழ்ச்சி அடைகிறார்களோ இல்லையோ, நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். தி.மு.க.காரர்களுக்கு மிகவும் குஷி!

ஏன் என்று கேட்கிறீர்களா? சென்ற முறை 2024 தேர்தலின்போது இப்படிதான் சென்னையில் அவர் ரோடு ஷோ பண்ணார்! நாம் நாற்பதுக்கு நாற்பது என்று முழுவெற்றி பெற்றோம்! இப்போதும் அடித்து சொல்கிறேன்... அவர் வந்தால் நம்முடைய 200 தொகுதி இலக்கை அடைவது உறுதியாகிவிடும். மோடி அவர்களும், அமித்ஷா அவர்களும் எத்தனை முறை இங்கு வருகிறார்களோ, நம்முடைய வெற்றியின் மார்ஜினும் கூடிக்கொண்டே போகும்!

நம்முடைய பிரசாரப் பீரங்கியாக இருந்த ஆளுநர் ரவி அவர்களை திடீரென்று வெளியே அனுப்பிவிட்டார்கள். இவர்களாவது வந்து நமக்கு உதவுகிறார்களே... அதுவரை நமக்கு மகிழ்ச்சி!

பா.ஜ.க.வைத் தமிழ்நாடு ஏன் இந்த அளவிற்கு எதிர்க்கிறது என்றால், தமிழை, தமிழரை, தமிழ்நாட்டை பா.ஜ.க. வஞ்சிக்கிறது, இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் அவமானப்படுத்துகிறது. தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் பாசத்தில் நம்மையே மிஞ்சுவது போன்று நடிக்கிறார்கள் இல்லையா?

இதுவே பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்தபோது பிரதமர் மோடி என்ன பேசினார்? ''தமிழ்நாட்டில் பீகார் மக்களைத் தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள்” என்று பொய்யைப் பேசினார். அவர் வகிக்கும் உயர்ந்த பதவிக்குத் தகுதியான பேச்சா இது? இப்போது தமிழ்நாட்டிற்கு நீங்கள் வாக்கு கேட்டு வரப்போகிறீர்கள். பீகாரில் பேசிய அந்த வார்த்தையை தமிழ்நாட்டில் தைரியம் இருந்தால் பிரதமர் மோடி அவர்கள் சொல்வாரா? இதைத்தான் நான் கேட்கிறேன்.

தமிழ்நாட்டில் பல்வேறு இனம், மொழி, மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிம்மதியாக இருக்கிறார்கள். இப்படி வந்தாரை வாழ வைக்கும் நம்மைப் பார்த்து அபாண்டமாகப் பழி போட்டவர்தான் பிரதமர் மோடி அவர்கள்!

ஒன்றியத்தில் ஒரு கல்வி அமைச்சர் இருக்கிறார்! யார்? மிஸ்டர் தர்மேந்திர பிரதான் அவர்கள்! அவர் இதைவிட மோசம்! நாடாளுமன்றத்திலேயே பேசினார். ‘தமிழர்கள் நாகரிகமற்றவர்கள்' என்று பேசினார். நாம் எதிர்த்து குரல் கொடுத்த பிறகுதான், பணிந்து மன்னிப்பு கேட்டார். ஒடிசா மாநிலத்திலும் தமிழர்களை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தினார்கள்! மறக்க முடியுமா? நம்மை கேவலப்படுத்தி விளம்பரங்கள் எல்லாம் எடுத்து வெளியிட்டார்கள்.

அதைவிட கொடுமை என்ன தெரியுமா? “பூரி ஜெகந்நாதர் கோயிலில் இருக்க வேண்டிய கருவூலச் சாவி தமிழ்நாட்டிற்குப் போய்விட்டது’’ என்று சொல்லி தமிழர்களைத் திருடர்களாகச் சித்தரித்துப் பேசினார். குடியரசு தின அணிவகுப்பில் மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு இடமில்லை என்று மறுத்தார்கள். இதனால்தான் தமிழ்நாட்டிலும் உங்களுக்கு இடமில்லை என்று எங்கள் மக்கள் சொல்கிறார்கள்.

இன்னும் இருக்கிறது... கர்நாடகத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஷோபா அவர்கள், “தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கிறார்கள்” என்று பேசி, பிரச்சினை ஆனபிறகு மன்னிப்பு கேட்டாரா, இல்லையா? இதெல்லாம்தான் பா.ஜ.க.வின் உண்மையான குணம்! தமிழ் வெறுப்பில் ஊறிப் போன குணம்!

“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

கோவை, மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களைக் கூட நிராகரித்திருக்கும் அரசுதான், இன்றைய ஒன்றிய பாஜக அரசு! 20 இலட்சம் மக்கள் தொகை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வைத்து, அப்படி சொல்கிறார்கள். இப்போது நடப்பது 2026. மக்கள் தொகை இப்போது வெகுவாக கூடி இருக்கும். இன்னும் சொன்னால், இந்தத் திட்டத்திற்குப் பணம் ஒதுக்கி, அதை நிறைவேற்றி முடிக்கும்போது 2035-ஆம் ஆண்டே ஆகியிருக்கும்.

அப்போது கோவை, மதுரையின் மக்கள் தொகை இவர்கள் சொல்லும் 20 இலட்சத்தை எல்லாம் தாண்டி இருக்கும். இதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது என்று நினைக்காதீர்கள். நன்றாகத் தெரியும்! தெரிந்தேதான் கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் கிடையாது என்று பா.ஜ.க. மறுக்கிறது. ஆளே இல்லாத கடையில் ’டீ’ ஆற்றுவது மாதிரி ஆக்ராவில் மெட்ரோ விட்டிருக்கிறது பா.ஜ.க.! ஆக்ரா மக்கள் தொகை 16 இலட்சம்தான்.

ஆனால், அங்கு மெட்ரோவுக்கு அனுமதிக்கிறார்கள். இதேபோன்றுதான் பாட்னா, போபால் ஆகிய நகரங்களிலும் அனுமதி தந்திருக்கிறார்கள். ஆனால், கோவைக்கும், மதுரைக்கும் மறுக்க வேண்டிய அவசியம் என்ன? காரணம் என்ன? இந்த இரண்டு நகரமும் தமிழ்நாட்டில் இருக்கிற காரணத்தினால்தான்!

தமிழ்நாட்டைப் பார்த்தால் பா.ஜ.க.வுக்கு எப்படி தெரிகிறது? பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதது என்ன பாவச் செயலா? கோவையைக் கைப்பற்ற வேண்டும் என்று பா.ஜ.க. துடிக்கிறதே! கோவை மக்களுக்கு இப்படி அநீதி இழைத்துவிட்டு, எந்த முகத்தோடு நீங்கள் கோவைக்கு வருகிறீர்கள்?

தேர்தல் நேரத்தில் மட்டும் இவர்களுக்குத் தமிழ்நாடு நினைவிற்கு வரும். ஒன்றிய பட்ஜெட் தயாரிக்கும்போது தமிழ்நாட்டை மொத்தமாக மறந்துவிடுவார்கள். இயற்கைப் பேரிடருக்கு நிவாரண நிதி தரும்போது தமிழ்நாடு நினைவிற்கு வராது. இப்படியெல்லாம் நீங்கள் தமிழ்நாட்டைப் பழிவாங்கும் காரணத்தினால்தான் எங்கள் மக்களுக்கும் வாக்குச் சாவடிக்குச் போகும்போது, பா.ஜ.க. நினைவிற்கு வராது. இனியும் வரக் கூடாது! நீங்கள் என்னதான் திட்டம்போட்டு எங்கள் வளர்ச்சியைத் தடுத்தாலும், என் மக்களுக்கான திட்டங்களை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்று நம்முடைய திராவிட மாடல் சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது!

இவற்றின் தொடர்ச்சியாக, அடுத்த 5 ஆண்டுகளில், திராவிட மாடல் 2.0 ஆட்சியில் என்னென்ன செய்யப் போகிறோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். இந்தத் தேர்தலின் சூப்பர் ஸ்டார் தி.மு.க. தேர்தல் அறிக்கைதான்!

அந்த அறிவிப்புகளை நீங்கள் எல்லாம் பாத்தீர்களா? 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை மொத்தமாக எப்படி மாற்றியமைக்கப் போகிறோம் என்பதற்கான, தெளிவான செயல்திட்ட அறிக்கையாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. நாம் கவர் பண்ணாத செக்டாரே இல்லை! ஹைலைட்டாகப் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் சில வாக்குறுதிகளை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.

இந்தியாவிற்கே மாடலாக இருக்கும் மகளிர் உரிமைத்தொகை இனி மாதம் ஆயிரம் ரூபாய் இல்லை, மாதம் 2 ஆயிரம் ரூபாய்! எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே? அதற்கான டிரெயிலர்தான் கோடைக்கால சிறப்பு நிதி சேர்த்து, அண்மையில் கொடுத்த 5 ஆயிரம் ரூபாய்!

அதேபோன்று, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இப்போது மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். இனி அதை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப் போகிறோம்.

அதேபோன்று, காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப் போகிறோம்! ஏற்கெனவே 19 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள். இன்னும் கூடுதலாக, 15 இலட்சம் மாணவர்களுக்கு சூடான சுவையான உணவு பள்ளிக்கூடத்திலேயே கிடைக்கப் போகிறது.

எல்லாவற்றிற்கும் மேல், இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைவது போன்று ஒரு அல்டிமேட் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். அது என்ன? எட்டாயிரம் ரூபாய் கூப்பன்! எதற்கான கூப்பன்? இல்லத்தரசிகளான நீங்கள் உங்களுக்குத் தேவையான வீட்டு உபயோக பொருளை, உங்கள் ஊரில், உங்களுக்கு விருப்பமான கடையில், உங்களுக்கு பிடித்த மாதிரி வாங்கிக் கொள்வதற்கான கூப்பன்!

“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

புது பொருளா? பழைய பொருளை கொடுத்துவிட்டு எக்ஸ்சேஞ்சா? எல்லாமே உங்கள் சாய்ஸ்தான்! ஒரு புடவை கடைக்குச் சென்றால், கலர் நன்றாக இருக்கிறதா? இந்த கலர் நமக்கு செட் ஆகுமா? இது சாயம் போகுமா? இதன் கலர் மங்கிடுமா? இதெல்லாம் பார்ப்பீர்கள். ஏன், கடைக்காரர் போட்டு வைத்திருக்கும் மெர்குரி லைட் முன் பார்த்து, தொட்டுப் பார்த்து, தடவிப் பார்த்து, இது சில்க்-ஆ? நைலக்சா? என்று கேள்வியெல்லாம் கேட்டு வாங்குவீர்கள்.

இதெல்லாம் எப்படி உனக்கு அனுபவம் என்று கேட்டுவிடாதீர்கள்! இயல்பைச் சொல்கிறேன். எனவே, அவ்வாறு ஒரு புடவை வாங்குவது போன்று இது உங்கள் சாய்ஸ்தான். வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், மின் அடுப்பு போன்ற எந்தப் பொருளையும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டத்தைப் பற்றிதான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் ஏற்கெனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்குப் பெயரை மட்டும் மாற்றி, இன்றைக்கு அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் கூட, “இன்னும் சில நாள் பொறுத்திருந்து பார்த்து அறிவித்திருக்கலாமே” என்று இப்போது புலம்பிக் கொண்டிருப்பார். அந்த அளவிற்கு நம்முடைய ‘இல்லத்தரசி’ திட்டம் அனைத்து இல்லத்திற்கும் சென்று சேர்ந்திருக்கிறது.

அதேபோன்று, உலகிற்கே உணவு அளிக்கும் உழவர்களை மகிழ்விக்க ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இலவச மின்சாரம் பெறும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, எந்த வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும். எல்லோரும் பழைய பம்பு செட்டு வைத்திருப்பீர்கள்.

அவை அடிக்கடி ரிப்பேர் ஆகும். அதனால் அவற்றை நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் அரசே இனி வாங்கித் தரும். இதனால் விவசாயிகள் மட்டுமல்ல, கோவையில் நலிந்திருக்கும் மோட்டார் பம்ப் தயாரிக்கும் தொழிலும் சிறக்கப் போகிறது. இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பே, இந்திய பம்பு உற்பத்தியாளர் சங்கத்திலிருந்து எனக்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை இனி மாதம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகள் நிறைய பேர் இங்கு வந்திருப்பீர்கள். உங்களை எல்லாம் பிசினஸ்-வுமனாக முன்னேற்றும் வகையில் ஷ்யூரிட்டி எதுவும் இல்லாமலேயே, 5 இலட்சம் ரூபாய் வரை மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும்.

உயர்கல்வி படிக்கும் 35 இலட்சம் மாணவர்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் லேப்டாப் வழங்கப்படும்.

அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்.

மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.

நான் முதல்வன் 2.0 திட்டத்தையும் அறிவித்திருக்கிறேன். இதன் மூலம், உயர்கல்வி முடித்த 5 இலட்சம் இளைஞர்களுக்கு, ஆயிரத்து 500 ரூபாய் மாத உதவித்தொகையும் கொடுத்து, வேலைவாய்ப்பிற்காக 6 மாதம் திறன் பயிற்சியும் கொடுக்கப் போகிறோம்.

அதேபோன்று, தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் வகையில், ஆயிரம் குழந்தைகள் காப்பகங்களை நாங்கள் உருவாக்கப் போகிறோம்.

தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் மேற்கு மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சி திட்டம் உருவாக்கப்படும். இதை மிகப்பெரிய புரட்சிகரத் திட்டமாக நான் பார்க்கிறேன். இது செயல்பாட்டு வரும்போது நீங்களும் அதை நன்றாக உணர்வீர்கள்.

அதேபோன்று, உங்க கனவ சொல்லுங்க திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சியில், ஒரு சகோதரி மேடை ஏறி வந்து என்னிடம் மிக உரிமையாக ஒரு கோரிக்கை வைத்தார்கள். “BC, MBC வகுப்புகளைச் சேர்ந்த மகளிருக்கு கடனுதவி வழங்கும் திட்டம் வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்கள்.

அதற்காக, TABCEDCO அமைப்பு ஏற்கனவே செயல்பட்டு வந்தாலும், திராவிட மாடல் 2.0-வில் அதை இன்னும் உயர்த்தி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர், தொழில் தொடங்க கடன் பெறும் உச்சவரம்பு 30 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி தந்திருக்கிறேன். TAMCO மூலம் சிறுபான்மையினருக்கும் இதே போன்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

பெண்களின் பாதுகாப்பிற்காக அனைத்து நகரங்களுக்கும் ‘பிங்க் பேட்ரால்’ வாகனங்கள் விரிவுபடுத்தப்படும்.

மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் ஷேர் ஆட்டோ வாங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற்றுத் தரப்படும்.

கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

முக்கியமான அனைத்து அரசு சேவைகளையும் ஒரே செயலியில், அதாவது ஒரு ‘Super App’-இல் பெற வழிவகை செய்யப்படும். இப்படி இன்னும் பல வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை நான் வெளியிட்டிருக்கிறேன்.

நான் ஏற்கெனவே சொன்னது போன்று இந்த அறிக்கைதான் 2026 தேர்தல் களத்தின் சூப்பர் ஸ்டார்! நாங்கள் சொன்னால் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். கலைஞரின் மகனான நான் சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன். நாங்கள் ஒரு பிராமிஸ் பண்ணால், கண்டிப்பாக அதை டெலிவர் செய்திடுவோம்!

“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

கோவை மக்களான நீங்கள் இந்த முறை பத்துக்குப் பத்து வெற்றியை தி.மு.க.வுக்கும் - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கும் வழங்க வேண்டும்! நீங்கள் வழங்கும் வாக்கு என்பது, ஒரு கூட்டணிக்காக வழங்கும் வாக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வழங்கும் வாக்கு!

பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன்! ஆடைகள், காலணிகள், மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் நம்பர் ஒன்! இப்படி இந்திய அளவில் சாதித்துவிட்டு நாங்கள் வாக்கு கேட்க வந்திருக்கிறோம்!

ஆனால், கலவரம் செய்தாலே வென்றுவிடலாம் என்று நினைக்கும் கட்சிக்கு தமிழ்நாடு தக்க பதிலடியை தந்தாக வேண்டும்! தருவீர்கள்தானே? உறுதியாக? நிச்சயமாக? சத்தியமாக? நன்றி!

மீண்டும் சொல்கிறேன்... தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, கோவையில் உள்ள எல்லோரும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குk கூட்டணியைத்தான் ஆதரிக்க வேண்டும்!

அதற்கு, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வேட்பாளர் சகோதரர் செந்தில்பாலாஜிக்கும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வேட்பாளர் செந்தமிழ்ச் செல்வனுக்கும், சூலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தளபதி முருகேசனுக்கும், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வேட்பாளர் சபரி கார்த்திகேயனுக்கும்;

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர் நித்தியானந்தம் அவர்களுக்கும், வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வேட்பாளர் சுதாகருக்கும், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயனுக்கும், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 8 வேட்பாளர்களுக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்க இருக்கும் வேட்பாளர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!

அன்பிற்கும், பண்பிற்கும், பாசத்திற்கும், உழைப்பிற்கும், புதுமைக்கும் புகழ்பெற்ற கோவை மக்கள் நீங்கள். உங்களின் பேராதரவுடன் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டும்! கோவையே தயாரா? கோவை மென்மேலும் வளர நீங்கள் துணை நிற்க வேண்டும். தமிழ்நாடும் மென்மேலும் வளரும்! அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை நாங்கள் நடத்தப் போகிறோம். நாடு வளம் பெற, இந்த நல்லாட்சி தொடர்ந்திட ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!

banner

Related Stories

Related Stories