மு.க.ஸ்டாலின்

சென்னையில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி... தொடங்கி வைத்த முதலமைச்சர் - முழு விவரம்!

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தால் நடத்தப்பட்ட மாபெரும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கிவைத்து, விருதுகளை வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி... தொடங்கி வைத்த முதலமைச்சர் - முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.02.2026) சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைஞர்களின் திறனை உலக அளவில் பிரபலப்படுத்தும் விதமாக மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை (Mega Handicrafts Exhibition-cum-Conference) தொடங்கி வைத்தார். மேலும், கைவினைத் தொழிலுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்.

=> மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் :

இந்த மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில், தஞ்சாவூர் ஓவியம், சுடு களிமண், களிமண் பானை வகைகள், கலம்காரி, மூங்கில் வேலைப்பாடுகள், நார் பொருட்கள், தஞ்சாவூர் ஓவியம், தோடா சித்திர தையல் பொருட்கள், வாழைநார் பொருட்கள், குறும்பா ஓவியம், மர சிற்பங்கள், கற்சிற்பம் போன்ற பல்வேறு கலைப் பொருட்களின் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.     

மேலும், இக்கண்காட்சியில் கைவினைப் பொருட்கள் துறையில் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு சந்தைப்படுத்துதலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல், கைவினைப் பொருட்கள் துறையில் புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துதல், கைவினைஞர்களின் குழுமங்கள் நிதி உதவி பெற அணுகு முறைக்கான வழிகாட்டுதல், கைவினைப் பொருட்களின் புவிசார் குறியீடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும்,  கைவினைஞர்களின் தொழில் மேம்பாட்டிற்கான பல்வேறு கருத்தரங்கங்களும் நடைபெறுகின்றன.   

சென்னையில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி... தொடங்கி வைத்த முதலமைச்சர் - முழு விவரம்!

=> வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது :

கைவினைத் தொழிலில்  தங்களின் வாழ்நாள் முழுவதும் பங்காற்றிய 65 வயதுக்கு மேற்பட்ட சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் ”வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருது வழங்கப்படுகிறது. கைவினைஞர்களை பாராட்டுவதற்கும், அவர்களின் திறனை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தால் இவ்விருது ஆண்டுதோறும் 15 இலட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்காக ஒவ்வொரு கைத்திறத்தொழில்களின் பிரிவில் உள்ள கைவினைஞர்களுக்கு தலா 8 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப்பட்டயம், சான்றிதழுடன், ஒரு இலட்சம்  ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது. 

அதன்படி 2025-26-ஆம் ஆண்டிற்கான ”வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருதுகளை – நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சி.குளுந்தான் (பித்தளை கலைப் பொருட்கள்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ந.ராஜேந்திரன் (இசைக்கருவி- வீணை) மற்றும் கோ.ரெத்தினம் (தஞ்சாவூர் கலைத்தட்டு), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சோ.கோபால் (இசைக்கருவி –சீர்யாழ்) மற்றும் சி.இந்திரா (தஞ்சாவூர் ஓவியம்), செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கோ.சுப்ரமணியம் (கற்சிற்பம்) மற்றும் தி.திருமூர்த்தி (மரச்சிற்பம்), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த க.பால்ராஜ் (மரச்சிற்ப உட்பதிப்பு), கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ். சங்கீதம் (மரச்சிற்பம்), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கி.சுப்பிரமணியன் (கோயில் நகைகள்) ஆகிய 10 விருதாளர்களுக்கு முதலமைச்சர் அவர்கள், வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப்பட்டயம் மற்றும் தகுதிச்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். 

சென்னையில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி... தொடங்கி வைத்த முதலமைச்சர் - முழு விவரம்!

=> பூம்புகார் மாநில விருது :

“பூம்புகார் மாநில விருது” தமிழ்நாட்டின் 10 சிறந்த கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் ரூ.50,000/-  பரிசுத் தொகை, 4 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப்பட்டயம் மற்றும் தகுதிச்சான்றிதழும் கொண்டதாகும்.

அதன்படி, 2025-26-ஆம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை – தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த க.வெங்கடேஷ் (பஞ்சலோக சிற்பம்), சி.சங்கீதா (தஞ்சாவூர் ஓவியம்) மற்றும் அ. பாபு (தஞ்சாவூர் கலைத்தட்டு), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கு.ரீடா (உலோக தகட்டு வேலை) மற்றும் மு.ஷபானா (சுடுகளிமண் சிற்பம்), மயிலாடுதுறை  மாவட்டத்தைச் சேர்ந்த சே.முருகன் (மரச்சிற்பம்), செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அ.ராஜ் (கற்சிற்பம்),  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அ.கவ்வாபீவி (பாய் நெசவு) கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தே.செலின் மேரி (சித்திரத்தையல்) மற்றும் சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மு.குமார் (காகித கூழ் பொம்மைகள்) ஆகிய 10 விருதாளர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப்பட்டயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். 

banner

Related Stories

Related Stories