மு.க.ஸ்டாலின்

“திருச்சியில் 10 லட்சம் உடன்பிறப்புகளுடன் ‘மாநில மாநாடு’ நடத்த இருக்கிறோம்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

திருச்சியில் நடைபெற்ற தி.மு.கழக இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.

“திருச்சியில் 10 லட்சம் உடன்பிறப்புகளுடன் ‘மாநில மாநாடு’ நடத்த இருக்கிறோம்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28-01-2026) திருச்சியில் நடைபெற்ற மறைந்த கழக முன்னோடி பாலகிருஷ்ணன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரணிகுமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம்:

நினைவில் வாழும் நம்முடைய பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தில் நடைபெறும் மணவிழா இது. இந்தப் பகுதியில், திராவிட முன்னேற்றக் கழகம் வளர்வதற்கு - நம்முடைய இரு வண்ணக் கொடி இந்த வட்டாரத்தில் பறப்பதற்கு, காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர் நம்முடைய அருமைப் பெரியவர் பாலகிருஷ்ணன் அவர்கள்.

அவர் இன்றைக்கு இல்லை என்று சொன்னாலும், அவருடைய அருமை மகனாக இருக்கும் நம்முடைய பரணிகுமார் அவர்கள், அவர் விட்டுச் சென்றிருக்கும் பணிகளை எல்லாம் எந்த அளவிற்கு இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியிருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

பாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், அண்ணாவோடு - தலைவர் கலைஞர் அவர்களோடு - நம்முடைய பொதுச் செயலாளராக இருந்து மறைந்த பேராசிரியர் அவர்களோடு, அதேபோல, அன்பிலாரோடு எவ்வாறு நெருக்கமாக இருந்தார் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

அவர் மாவட்டக் கழகத்தின் பொருளாளராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியில் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். கழகத்தின் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராகவும் இருந்து, தன்னுடைய கடமையை நிறைவேற்றி இருக்கிறார்.

திருச்சியில் நகராட்சி மன்றத் தலைவராகப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அவர் இந்த வட்டாரத்தில் - இந்த நகராட்சிக்கு - திருச்சி மாநகரத்திற்கு - பொதுமக்களுக்கு எப்படி எல்லாம் பணியாற்றியிருக்கிறார்; கட்சிக்கு எப்படி எல்லாம் தொண்டாற்றியிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

எனவே, அப்பாவிற்குத் தப்பாத பிள்ளையாக நம்முடைய பரணிகுமார் அவர்கள் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். பரணிகுமார் அவர்கள், முதலில் மாணவர் அணியில் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து கடமையை நிறைவேற்றி இருக்கிறார். தேர்தல் வேலையை எப்படி எல்லாம் ஆற்றியிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

“திருச்சியில் 10 லட்சம் உடன்பிறப்புகளுடன் ‘மாநில மாநாடு’ நடத்த இருக்கிறோம்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

நான் பரணிகுமார் அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், 15 ஆண்டு காலம், 20 ஆண்டு காலம் என்னோடு சுற்றுப்பயணத்தில் ஈடுபடும்போதெல்லாம், திருச்சிக்கு மட்டுமல்ல; தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் அவர் சுற்றுப்பயணத்தில் என்னோடு கலந்து கொண்டிருக்கிறார்.

மறைந்த என்னுடைய ஆருயிர் நண்பன் பொய்யாமொழி அவர்களும், நம்முடைய பரணிகுமார் அவர்களும்தான் எனக்குத் துணையாகச் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து வருவார்கள். சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல; என்னுடைய காரையே அவர்தான் ஓட்டி வருவார். காண்டசா கார். அவருடைய அப்பாவின் காரை எடுத்துக் கொண்டு வந்துவிடுவார்.

அந்தக் காரில்தான், நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை நடத்தியிருக்கிறேன். அவருடன் பயணம் செய்தபோது, எந்தவித அச்சமும் இல்லாமல் நாம் பயணம் செய்ய முடியும். இரவிலே விழித்துக் கொண்டிருப்பார். ஆனால், பகல் எல்லாம் தூங்குவார். அது அனைவருக்கும் தெரியும். அதையும் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இங்கு வந்திருக்கும் அசோகனுக்கும் நன்றாகத் தெரியும். ஏனென்றால், நாங்கள் எல்லாம் அப்போது ஒரு செட். இளைஞர் அணி தொடங்கிய நேரத்தில், அப்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் நடத்துகிற நேரத்தில், அவர்தான் கார் ஓட்டிக் கொண்டு வருவார்.

அதுமட்டுமல்ல, சுற்றுப்பயணம் நடத்துகிறபோது பல நேரங்களில், நாங்கள் இரண்டு மணி, மூன்று மணிக்குத்தான் வந்து தூங்குவது உண்டு. அவ்வாறு தூங்குகிற நேரத்தில், மறுநாள் காலை 7 மணிக்கு செல்ல வேண்டும் என்று நிகழ்ச்சி இருக்கும். அதனால் 7 மணிக்கு எழுப்பிவிடு என்று சொல்லிவிட்டு தூங்குவோம். ஆனால், அவரை யாரும் எழுப்ப முடியாது. நான்தான் அவரை எழுப்ப வேண்டும். அவர் வந்து எழுப்பமாட்டார். அப்படித்தான் எங்களது பயணம் நடந்திருக்கிறது. எனவே, அந்தப் பயணங்களை எல்லாம் மறக்க முடியாது.

எதற்காகச் சொல்கிறேன் என்றால், அந்த அளவிற்கு நட்புடன் இருந்து பழகியவர்கள். திருச்சிக்கு வரும் போதெல்லாம், பரணிகுமார் வீட்டிற்குச் செல்லாமல் இருந்ததில்லை. எனவே, அந்த அளவிற்குப் பாசத்தோடு பழகும் குடும்பம். எனவே, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நம்முடைய மணமக்கள் அனைத்து நன்மைகளையும் பெற்றுச் சிறப்போடு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எப்படிப்பட்ட நேரத்தில் வந்திருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நிச்சயமாக வரப்போகிறது. இதற்கிடையில் நான் உங்களை எல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன் என்று சொன்னால், அந்தக் குடும்பத்தின்மீது நாங்கள் கொண்டிருக்கும் பாசத்தின் காரணமாகத்தான் வந்திருக்கிறோமே தவிர, வேறு அல்ல.

ஏற்கனவே. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான், திருச்சிக்கு வந்து தஞ்சைக்குச் சென்று ஒரு மாநாட்டை நடத்தினோம். அதுவும் உங்களுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல, மகளிர் அணி மாநாடு ஒரு பக்கம்; இளைஞர் அணி மாநாடு ஒரு பக்கம். அடுத்து, நிறைவாக தேர்தலுக்கு முன்பு, இதே திருச்சியில் 10 லட்சம் பேர் திரளும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய மாநாட்டை, நம்முடைய நேரு அவர்கள் நடத்த இருக்கிறார். அதுவும் உங்களுக்குத் தெரியும். அதையும் அறிவித்திருக்கிறோம்.

எனவே, இப்போது தொடர்ந்து பிஸியாக இருக்கும் நேரம். அவ்வாறு பிசியாக இருக்கும் நேரத்திலும் வந்திருக்கிறோம் என்றால், நம்முடைய பரணிகுமார் மீது - பாலகிருஷ்ணன் குடும்பத்தின் மீது, நாங்கள் வைத்திருக்கும் பற்றின் காரணமாகத்தான் - அந்த நட்பின் காரணமாகத்தான் வந்திருக்கிறோம்.

அந்த நட்பின் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கும், பரணிகுமார் அவர்களின் இல்லத்தில் இருக்கும் மணமக்கள், அனைத்து நன்மைகளும் பெற்று, சிறப்போடு வாழ வேண்டும். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய்” மணமக்கள் வாழுங்கள்... வாழுங்கள்... வாழுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories