மு.க.ஸ்டாலின்

“மகளிர் நலன் காக்கும் திராவிட மாடலின் நீட்சிதான் ‘TNWESAFE’ திட்டம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

சென்னை வர்த்தக மையத்தில் இரு நாட்கள் நடைபெறும் “உலக மகளிர் உச்சி மாநாடு 2026“-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

“மகளிர் நலன் காக்கும் திராவிட மாடலின் நீட்சிதான் ‘TNWESAFE’ திட்டம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27.1.2026) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற “உலக மகளிர் உச்சி மாநாடு 2026“-யை தொடங்கிவைத்து, ஆற்றிய உரை.

இந்த உலக மகளிர் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் உங்கள் எல்லோரையும் பார்க்கும்போது, மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது! இன்றைக்கு இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடுதான் இருக்கிறது!

புதிதாக எந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்தாலும் இது மூலமாக பெண்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? என்று கேட்பதுதான் என்னுடைய முதல் கேள்வியாக இருக்கும். அதுதான் என்னுடைய வழக்கமாக இருந்துகொண்டிருக்கிறது!

இப்போது, பல தனியார் நிறுவனங்களில் இத்தனை பர்செண்ட் பெண் தொழிலாளர்களுக்கு என்று ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்வதிலேயே நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது! ஆண்களுக்கு இணையாக பெண்கள் வெளியே வர வேண்டும்! இன்னும் அதிகமாக வர வேண்டும்.

புதிதாக வளர்ந்து வரும் துறைகளில் பெண்கள் இடம்பெற வேண்டும்! உயர் பொறுப்புகளில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் இருக்க வேண்டும்! அதற்காகத்தான், ஆயிரத்து 185 கோடி ரூபாய் உலக வங்கியின் உதவியுடன், இந்த ‘தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு’ திட்டத்தை தொடங்கியிருக்கிறோம்!

“மகளிர் நலன் காக்கும் திராவிட மாடலின் நீட்சிதான் ‘TNWESAFE’ திட்டம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

இந்த 2 நாள் மாநாட்டில் விவாதிக்கப்படும் கருத்துகளும், அதனால் உருவாகப்போகும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் நம்முடைய இலக்கை அடைய துணை நிற்கும் என்று நான் நம்புகிறேன்!

பெண்கள்தான், இந்தச் சமூகத்தின் முதுகெலும்பு! மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் முன்னேறாமல், எந்த நாடும் வளர முடியாது! தந்தை பெரியார் அவர்கள், நூறாண்டுகளுக்கு முன்பே வலியுறுத்திய கருத்து இது! அவர் வழியைப் பின்பற்றி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார்!

குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சமவுரிமை - காவல்துறையில் பெண் காவலர்கள் - கிராமப்புற பெண்களும் மேன்மை அடைவதற்கு அடித்தளமான மகளிர் சுய உதவிக்குழுக்கள் - அரசியல் பங்கேற்பில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய, உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு! என்று நீண்ட பட்டியலே போட முடியும்!

அடுத்து, இப்போது நம்முடைய திராவிட மாடல் அரசிலும், பெண்களின் சமூக பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று இதுவரை இல்லாத அளவுக்கு பல திட்டங்களை செயல்படுத்திகொண்டு இருக்கிறோம்!

அதில் முதன்மையானது, பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம்! இதன் மூலமாக பெண்களின் பயணங்கள் அதிகரித்திருக்கிறது.

அடுத்து, பெண்கள் டிகிரி பெறுவதை உறுதி செய்யும் புதுமைப்பெண் திட்டம்! படித்து முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால், கல்லூரிக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. அதுவும் குறிப்பாக, BC, MBC, SC, ST சமுதாய மாணவிகள் இந்த திட்டத்தில் அதிகமாக பயனடைகிறார்கள்.

படித்து முடிந்ததும் வேலை கிடைக்க அதற்காக திறன் பயிற்சிகள் வழங்க நான் முதல்வன் திட்டம். அந்த திட்டத்தின் வெற்றியை இங்கு பேசிய முஸ்லீம் மாணவி சொன்னாரே… அவர்கள் பேசும்போது எனக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது.

“மகளிர் நலன் காக்கும் திராவிட மாடலின் நீட்சிதான் ‘TNWESAFE’ திட்டம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

அதேபோல், வேலைக்கு செல்லும் இடத்தில் பாதுகாப்பாக தங்குவதற்கு விடுதிகள் வேண்டுமென பல்வேறு இடங்களில் தோழி விடுதிகள் திறக்கப்படுகிறது.

அதேபோல், என்னதான் பெண்கள் வீட்டிலேயே முடங்கிவிடாமல் வெளியே வரத் தொடங்கினாலும், அவர்களுக்கு இருக்கக் கூடிய பெரிய சிரமம் என்னவென்றால், சமையல்! நம்முடைய அரசின் காலை உணவுத் திட்டத்தால் அந்த பாரமும் இப்போது குறைந்திருக்கிறது! மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே நல்ல தரமான உணவு கிடைப்பதால், மகளிர் நிம்மதியாக காலையில் வேலைக்கு செல்கிறார்கள்.

TN-ரைஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மூலமாக, கிராமப்புற பகுதிகள் வரை பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கி இருக்கிறோம்! அதுவும், பெண்கள் தலைமையேற்று நடத்தும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பலமடங்கு அதிகரித்திருக்கிறது!

இங்கு பேசிய வேலூரைச் சார்ந்த சகோதரி எவ்வளவு கம்பீரமாக சொன்னார்கள். அவர்கள் தன் தொழிலை வெளிநாடுவரை விரிவடைய செய்திருக்கிறார்.

இவையெல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போன்று இந்த அரசின் முத்திரைத் திட்டம்! அதுதான், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்! 1 கோடியே 30 இலட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது, இதுவரை யாரும் செய்யாத வரலாற்றுச் சாதனை!

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களும் நம்மைப் பார்த்து பின்பற்றி வரும் சாதனை! பெண்களின் சுயமரியாதை, பொருளாதார சுதந்திரம், தன்னம்பிக்கை ஆகியவை உரிமைத்தொகையால் கூடியிருக்கிறது!

இப்படி பெண்களின் முன்னேற்றம் ஒரு பக்கம் என்றால், பெண்களின் உடல்நலனுக்காகவும் நிறைய திட்டங்களை செய்துகொண்டு இருக்கிறோம். அதில் சிறப்பான திட்டம் இன்று என்னால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கக்கூடிய கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க, 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசியை அரசே செலுத்துவதுதான்!

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இதை அறிவித்து அதற்காக 36 கோடி ரூபாய் ஒதுக்கினோம். பல பெண் மருத்துவர்கள் சோஷியல் மீடியாவில் இந்த திட்டத்தை வரவேற்றுப் பாராட்டி எழுதியிருந்தார்கள். 3 இலட்சத்து 38 ஆயிரத்தி 649 பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது.

“மகளிர் நலன் காக்கும் திராவிட மாடலின் நீட்சிதான் ‘TNWESAFE’ திட்டம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

முதற்கட்டமாக, 4 மாவட்டங்களில் இருக்கும் 30 ஆயிரத்து 209 மாணவிகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தப் போகிறோம்! மேலும், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை தொடக்கத்திலேயே கண்டறிய தமிழ்நாடு முழுவதும் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை ’வெல்னஸ் ஆன் வீல்ஸ்” என்ற பெயரில் கடந்த நவம்பரில் தொடங்கி வைத்திருக்கிறேன்.

பெண்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் புற்றுநோய்க்கான தரமான சிகிச்சையை வழங்க, காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 120 கோடி ரூபாய் செலவில் பெரிய அளவில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது!

ஊட்டச்சத்தை உறுதிசெய் மூலமாக பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்குகிறோம்.

இப்படி மகளிர் நலன்காக்கும் நம்முடைய அரசின் திட்டங்களின் நீட்சியாகதான் இந்த “TN–WE–SAFE” திட்டம் அமைந்திருக்கிறது! வளர்ந்து வரும் துறைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை மட்டும் இந்த திட்டம் செய்யவில்லை!

அப்படி அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் குழந்தைகள், வயதானவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை யாராவது எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறை சிக்கலை உணர்ந்து, குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, பாதுகாப்பான தங்குமிடங்கள் என்று அதற்கான ஆதரவு சேவைகளையும் இந்த திட்டம் வழங்குவது பாராட்டுக்குரியது!

மேலும், பெண்களுக்கு தேவையான டெக்னாலஜி சப்போர்ட், திறன் பயிற்சி ஆகியவற்றையும் இந்த திட்டத்தில் வழங்குகிறோம்! பெண்களின் பாதுகாப்பிலும் இந்த திட்டம் அக்கறை செலுத்துகிறது! ஏன் என்றால், பாதுகாப்பான சமூகத்தில்தான் பெண்கள் அதிகமாக வெளியே வேலைக்கு வர முடியும்! அதனால்தான், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்கள்.

பெண்களுக்கான காவல் அவசர உதவி எண்: 181 – காவலன் S.O.S. மொபைல் செயலி உள்ளிட்டவை மூலமாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம்! முழுக்க முழுக்க நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களோடு ஒத்துப்போகும் குறிக்கோள்களை இந்த ‘தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம்’ கொண்டிருக்கிறது! அதனால்தான், இந்த உச்சி மாநாட்டுக்கு ஒரு விருந்தினராக வராமல், உங்களில் ஒருவனாக, ஒரு பார்ட்னராக நான் வந்திருக்கிறேன்!

ஆண் – பெண்ணுக்கு இடையிலான பாலின இடைவெளியை குறைத்தால், பொருளாதாரம் வேகமாக வளரும் என்று I.M.F. அமைப்பே சொல்கிறது! நாங்களும், 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட தமிழ்நாடு எனும் எங்கள் இலக்கை அடைய பெண்கள்தான் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம்!

இந்த உலக மகளிர் உச்சி மாநாட்டில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு நான் தரும் ப்ராமிஸ் என்னவென்றால், ‘‘ஒவ்வொரு பெண்ணும் கல்வி கற்கக் கூடிய, ஒவ்வொரு பெண்ணும் சுதந்திரமாக வாழக் கூடிய, பெண்கள் மரியாதையான ஊதியத்தைப் பெற்றிட, பெண்கள் தொழில்முனைவோர்களாக மாற, பெண்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் வாழ, எனது தலைமையிலான உங்கள் திராவிட மாடல் அரசானது உரிய கட்டமைப்பை உருவாக்கும்; அதற்காக தொடர்ந்து உழைக்கும்! உழைக்கும்! என்று சொல்லி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories