
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.1.2026) செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தின் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையில் கோவளம் உபவடிநிலப் பகுதியில் “மாமல்லன்” புதிய குடிநீர் நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு :
காற்றும், நீரும் இந்த பூமியில் இருக்கின்ற காரணத்தினால்தான், மனிதர்களும், மற்ற உயிரினங்களும் உருவாகி வாழ்கிறோம்! அதனால்தான், அய்யன் வள்ளுவர் “நீர் இன்றி அமையாது உலகு” என்று உலகப் பொதுமறையில் சொன்னார்.
அதேபோல, புறநானூறிலும் “குளம் தொட்டு வளம் பெருக்கி” என்று சொல்லி, வேளாண்மைக்கு நீர் எவ்வளவு அவசியமானது என்று சொல்லியிருக்கிறார்கள்! அதனால்தான், நீர் நிலைகளைச் சுற்றியே குடியிருப்புகள் அமைவது பழந்தமிழர் மரபு. அனைத்து வகையிலும், இயற்கையோடு இணைந்ததுதான் தமிழர் வாழ்வு. அதன் தொடர்ச்சியாகதான் நம்முடைய திராவிட மாடல் அரசு நடைபெற்று வருகிறது என்பதன் அடையாளம்தான், இந்த மாமல்லன் நீர்த்தேக்கத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சென்னையின் வளர்ந்து வருகின்ற பகுதிகளுக்காக நம்முடைய அரசு செய்த முக்கியமான பணியாக வரலாற்றில், இந்த நிகழ்வு நினைவுகூரப்படும். பொதுவாக, சிலர் உண்மை தெரிந்தும், பலர் உண்மை தெரியாமலும், “நம்முடைய கழக ஆட்சியில், அணைகளை கட்டவில்லை” என்று ஒரு பொய்யை சொல்லுவார்கள். ஆனால், உண்மை நிலை என்ன? நம்முடைய முத்தமிழிலும் கரைகண்ட தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் நீர் நிலைகளைக் காக்கக்கூடிய செயல்பாடுகளையும் அதிகமாக செய்திருக்கிறார்.

1967-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 2011 வரை நம்முடைய தமிழ்நாட்டில், 43 அணைகள் கட்டப்பட்டிருக்கிறது. அதைப் பட்டியலோடு பெயர்களோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால்,
உப்பாறு
சிற்றாறு-1
சிற்றாறு-2
பெருவாரிப்பள்ளம்
சோலையாறு
பொன்னணியாறு
கருப்பாநதி
இராமநதி
பரப்பலாறு
மேல்நீராறு
பிளவக்கல் கோவிலாறு
பிளவக்கல் பெரியாறு
குடகணாறு
பாலாறு பொருந்தலாறு
குண்டேரிப்பள்ளம்
வரதமாநதி
வட்டமலைகரை ஓடை
மருதாநதி
வரட்டுப்பள்ளம்
கீழ்நீராறு
குண்டாறு
குதிரையாறு
ஆணைக்குட்டம்
இராஜாத்தோப்பு
சோத்துப்பாறை
மோர்தானா நீர்த்தேக்கம்
அடவி நயினார்
பொய்கையாறு
வடக்கு பச்சையாறு
சாஸ்தா கோவில்
கடனா நதி
நம்பியாறு
சண்முகா நதி
மிருகண்டா நதி
கமண்டலநதி
வண்டல் ஓடை
ஆண்டியப்பனூர்
நல்லதங்காள்
நங்கஞ்சியாறு
சிறுமலையாறு
இருக்கன்குடி
குப்பநத்தம்
மாம்பழத்துறை ஆறு - இப்படி, 43 நீர்த்தேக்கங்களை உருவாக்கியவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்து, நீர்வளம் பெருக்க பல நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகிறோம்.
கடந்த ஐந்து வருடமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டப்பட்டு, குறித்த நேரத்தில் திறந்து வைத்திருக்கிறோம்.
2021-25 ஆகிய ஐந்து ஆண்டுகளில், காவிரி டெல்டா பகுதிகளில், தூர்வாரக்கூடிய பணிகள் 459 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றிருக்கிறது. 24 ஆயிரத்து 833 கிலோமீட்டர் நீளத்திற்கு சிறந்த முறையில், இவை செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், கடைமடை வரை விவசாயிகள் பயனடைந்தார்கள்.
மாநிலம் முழுவதும் புதிதாக 121 தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
63 அணைகட்டுகள் அமைக்கக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதில், மிக மிக முக்கியமானது
தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டம். கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் நாள் துவங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ஐந்தாண்டுகளில், 9 டி.எம்.சி. நீர் வறட்சிப் பகுதியான திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், 47 ஆயிரத்து 920 ஏரிகள் மற்றும் 1 இலட்சத்து 33 ஆயிரத்து 967 கிலோமீட்டர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த வரிசையில்தான், சென்னை மாநகரத்தில், பெருகிவரும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, மற்றுமொரு புதிய நீர்த்தேக்கமான நம்முடைய திராவிட மாடல் ஆட்சி இதை அமைத்திருக்கிறது.
342 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இது அமைக்கப்பட இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் - திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில், கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் - பழைய மாமல்லபுரம் சாலை எனும் ராஜீவ் காந்தி சாலைக்கும் இடையில் இருக்கின்ற கோவளம் உப வடிநிலத்தில், இந்த புதிய நீர்த்தேக்கம் அமைய இருக்கிறது. இந்தத் திட்டத்தை எப்படிச் செயல்படுத்தப் போகிறோம் என்று ஏற்கனவே நீங்கள் வீடியோவில் பார்த்திருந்தாலும், மீண்டும் இந்த நிகழ்ச்சியில் சொல்ல விரும்புகிறேன்.

மானாமதி குழும 69 ஏரிகளில் இருந்து வரும் உபரி நீர் கடலில் கலக்காமல், இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட இருக்கிறது.
திருவிடந்தை முதல் கோகிலமேடு வரை 5 ஆயிரத்து 161 ஏக்கர் பரப்பளவில் இது அமையப் போகிறது.
மொத்தம் 1.65 டி.எம்.சி. கொள்ளளவில், 34 கிலோமீட்டர் நீளமுள்ள கரை மற்றும் நீர் ஒழுங்கியத்துடன் கூடிய புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் வாயிலாக, நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை நம்மால் மக்களுக்கு வழங்க முடியும்.
சென்னையின் புதிய அடையாளங்களாக, மிக வேகமாக உருவெடுத்திருக்கின்ற பகுதிகளான சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற 13 இலட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இது பயன்படும்.
சுற்று வட்டாரத்தில் இருக்கின்ற திருவிடந்தை, கோகில மேடு, மாமல்லபுரம், திருப்போரூர் தண்டலம், பையனூர் ஆகிய பகுதிகளில், நன்னீரை தேக்கி, கடல் நீர் உட்புகுதலை தடுத்து, நிலத்தடி நீரின் மட்டம் மற்றும் அதன் தரம் மேம்படும்.
இந்த பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் 15 கிலோமீட்டர் நீளம் 311 ஏக்கர் பரப்பளவில் சீரமைப்பதால், உவர் நீர் மீன் வளத்தை நம்பியிருக்கின்ற மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
மேலும், அந்த பகுதியில் வசிக்கின்ற மீனவர்களுக்கு மீன் பிடி உரிமம் வழங்கப்படும்.
தொண்டை மண்டலத்தில், காஞ்சிபுரத்தைத் தலைநகரமாக கொண்டு கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் சிறப்பாக ஆட்சி செய்தார்கள். மகேந்திரவாடி, உத்திரமேரூர், தென்னேரி, தூசி மாமண்டுர் போன்ற 39 ஏரிகளை பல்லவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ஏரி வாரியம் அமைத்து உணவு மற்றும் நீர் பாதுகாப்பை தொண்டை மண்டலத்தில் உறுதி செய்தார்கள்.

பல்லவர்களில், ‘மாமல்லன்’ என்று போற்றப்படுகின்ற முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் உருவாக்கிய மாமல்லபுரம் அருகில், இந்த நீர்த்தேக்கம் அமைவதால், “மாமல்லன் நீர்த்தேக்கம்” என்று இதற்கு பெயர் சூட்டுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்!
சென்னையச் சுற்றி செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஆகியவை இருக்கிறது. இப்போது கூடுதலாக மாமல்லன் நீர்த்தேக்கமும் அமைய இருக்கிறது.
ஒரு நாட்டிற்கு நிதி மேலாண்மையைப் போலவே, இப்போது நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம்! அந்த நீர் மேலாண்மைக்கு மிக மிக அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று உணர்ந்து செயல்படுகின்ற ஆட்சி தான் இந்த ஆட்சி.
நீர் நிலைகளை மாசுபடாமல் காத்து வருகிறோம். நிலத்தடி நீரைப் பெருக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறோம். கடல்நீரை குடிநீராக்கவும் முயற்சி செய்கிறோம்.
அரசு என்னதான் ஒரு பக்கம் நடவடிக்கைகள் எடுத்தாலும், மக்களுக்கும் இதில் கடமை இருக்கிறது. அதனால்தான், சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்ற நோக்கில், சிறப்பாக செயல்படுபவர்களுக்கு விருதுகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
நீர்வளத்துறை மற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்ற கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாரி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்டகால பயன்களைப் பெறும்வகையில், நிலையான நீர்வள மேலாண்மையினை உறுதி செய்யக்கூடிய அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணிகளைப் பாராட்டி இன்றைக்கு ‘சிறந்த நீர் பாதுகாத்தல்’ விருதை வழங்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தலைநகர் சென்னைக்காக எத்தனையோ திட்டங்களை நம்முடைய கழக அரசு செய்து கொடுத்திருக்கிறது!
அண்ணா மேம்பாலம் தொடங்கி, டைடல் பார்க் வரை 100-க்கும் மேலாக என்னால் பட்டியல் போட்டு சொல்ல முடியும்.
கடந்த 5 ஆண்டுகளிலும், சென்னையின் முகமே மாறும் அளவுக்கு அனைத்து வகையான வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்!
அடுத்தடுத்து, நிறைய, தொடர்ந்து வரிசையாக திறப்பு விழா காண காத்துக் கொண்டிருக்கிறது!
இன்றைக்கு நான் தொடங்கிய இந்த நீர்த்தேக்கப் பணி மக்களுக்கு காலந்தோறும் வாழ்வளிக்கப் போகிறது. அந்தப் பெருமை உணர்வோடு என்னுடைய உரையை இந்த அளவோடு நிறைவு செய்கிறேன்.








