
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உலக மனித உரிமைகள் நாள் செய்தி:-
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி, “சர்வதேச மனித உரிமைகள் நாள்” கொண்டாடப்படுகிறது. சாதி, மதம், இனம், நிறம், பாலினம், வயது அல்லது சமூகப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமான உலகளாவிய உரிமைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது. இந்த உரிமைகளில் கருத்துச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம், தடையற்ற கல்வி வாய்ப்புகள் மற்றும் மிக முக்கியமாக, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான உரிமை ஆகியவை அடங்கும்.
தனி மனித ஒழுக்கத்தைப் போற்றும் ஒரு நாட்டில் ஜனநாயகம் மேம்படவும், நீதியை சமமாக நிறுவவும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியம். அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் மதித்து, பிறப்பாலும், தொழிலாலும் எழும் வேறுபாடுகளைக் களைந்து, ஏற்றத்தாழ்வு இன்றி, கல்வி முதல் அனைத்து அடிப்படை வசதிகளையும் அனைவரும் பெற்று மகிழும் நாள் என்று வருகிறதோ, அன்றுதான் இதுபோன்ற நாட்களின் பெருமையும் உயரும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை எல்லாத் தரப்பினரிடமும் வலியுறுத்துவதே, மனித உரிமை நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம். உலகில் உள்ள எல்லா மனிதர்களும் சமமானவர்களே. எல்லாருக்கும் சம உரிமை உண்டு. மற்றவர்களிடம் இருந்து நாம் என்ன உரிமையை எதிர்பார்க்கிறோமோ, அதே உரிமையை அவர்களுக்கும் நாம் தர வேண்டும்.

1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது. மனிதனின் கௌரவத்தையும், அவனின் பிரிக்க முடியாத உரிமைகளையும் அறிந்து, ஏற்றுக்கொள்வதே அவனுக்கு அளிக்கும் சுதந்திரம், நீதி, சமாதானத்தின் அடித்தளம் என்று அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மக்கள் சுதந்திரத்தை முழு அளவில் அனுபவிப்பதைத் தடுக்கும் பல தடைகள் அகற்றப்பட்டுள்ளன; பல நாடுகளில் இனவெறிச் சட்டங்கள் அகற்றப்பட்டுவிட்டன; பெண்களை இரண்டாம் தர நிலைக்குத் தள்ளும் சட்டங்கள் மற்றும் சமூக நடைமுறைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன; சிறுபான்மையினர் தங்கள் மத நம்பிக்கையை எந்தவித அச்ச உணர்வுமின்றி கடைபிடிக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.
மனிதர்களால் மனிதர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயல்படுகின்றன. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 17-4-1997 அன்று தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. 1997 ஏப்ரல் திங்கள் முதல், 2025 செப்டம்பர் திங்கள் வரை இவ்வாணையத்திற்கு 2,84,687 புகார்கள் வரப்பெற்று, அவற்றில் 2,52,573 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டிற்கான மனித உரிமைகள் நாள் கருப்பொருளாக (Theme) ஐக்கிய நாடுகள் சபையானது “மனித உரிமைகள், நமது அன்றாட அத்தியாவசியங்கள்” (Human Rights, Our Everyday Essentials) என்பதை அறிவித்துள்ளது. “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற அடிப்படையில், அனைத்துத் தரப்பினருக்குமான உன்னதமான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வரும் நமது திராவிட மாடல் அரசு, மதம், இனம், மொழி, நிறம், அரசியல் பாகுபாடின்றி அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்திடுவதில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிட, சுயமரியாதையைப் பாதுகாத்திட இந்த மனித உரிமைகள் நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.






