
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (07.12.2025) மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை:-
எங்களின் அன்பான அழைப்பை ஏற்று, இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருகை தந்திருக்கக்கூடிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், முதலீட்டாளர்கள் அனைவரையும் வருக! வருக! என நானும் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே நலிவடைந்திருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து, அவசியம், அவசரம் என்பதை அறிந்து, புரிந்து, அதற்காக பல்வேறு ஆலோசனைகளை எல்லாம் நாங்கள் நடத்தினோம். அதன்பிறகு, வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிட்டு நான் பயணங்களை மேற்கொண்டேன். ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை எல்லாம் சந்தித்துப் பேசி, அவர்களைத் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைத்தோம்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு தான் என்ற நிலையை உருவாக்கினோம். அதனை உறுதிப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், TN Rising என்ற மாநாடுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம். அதன்படி தூத்துக்குடி, ஓசூர், கோவை, நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம்.
அதன் தொடர்ச்சியாகதான், இன்று மதுரையில் இந்த முதலீட்டாளர் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்! இந்த மாநாட்டில், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 56 ஆயிரத்து 766 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில், உங்கள் ஒவ்வொருவருடைய பங்கும் மிக அவசியம்! ‘மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி - மாவட்டங்கள் தோறும் பரவலான வளர்ச்சி’ என்று சொன்னதை எங்களுடைய செயல்கள் மூலமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்!
ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 11 இலட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறோம்.
34 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம். இதற்காக ஒப்பந்தங்களிட்டதோடு நம்முடைய வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கின்றவன் இல்லை நான்! அனைத்துத் துறைகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்வதை வழக்கமாக நான் வைத்திருக்கிறேன்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில், 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு ‘அவுட்புட்’ காண்பித்தது இல்லை. நானும் சரி; இங்கே அமைச்சராக இருக்கின்ற திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களும் சரி; ஒப்பந்தங்கள் எல்லாம் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்பதில், கண்ணுங்கருத்துமாக இருப்போம். அப்படிதான், நேற்று முன்தினம் வியட்நாமுக்கு சென்று தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்கள் மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் மின்சாரப் பேருந்துகள் தயாரிக்கின்ற வின்பாஸ் தொழிற்சாலையை நம்முடைய தூத்துக்குடிக்கே கொண்டு வந்திருக்கிறார்.
முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது. முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக மட்டும், யாரும் முதலீடு செய்ய முன் வரமாட்டார்கள். முதலீடுகள் செய்வதற்கு முன்பு, அந்த மாநிலத்தின் கொள்கைகள் என்ன? மனிதவள திறன், உட்கட்டமைப்புகள், சட்டம் ஒழுங்கு, நிர்வாகத் திறன் மற்றும் நீண்டகால நிலைத்தன்மை போன்ற அனைத்தையும் நுணுக்கமாக ஆய்வு செய்து, தங்கள் வணிக நோக்கங்களுக்கு மிகவும் பொருத்தமான இடத்தைத்தான் முதலீட்டாளர்களான நீங்கள் தேர்வு செய்வீர்கள். அப்படி தேர்வு செய்யும்போது. தமிழ்நாடுதான் உங்கள் மனதுக்குள் இருக்கின்றது என்று அதை நான் கேட்கின்ற அளவிற்கு முதல் பெயராக நம்முடைய தமிழ்நாடு தான் இருக்கிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கின்ற இந்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கு முதலில் நான் நன்றி சொல்கிறேன்!
மதுரைக்கு மற்றொரு பெயர் இருக்கிறது... அது என்ன என்று தெரியுமா? தூங்கா நகரம். ஆனால், அதை அப்படிச் சொல்வதைவிட எப்போதும் விழிப்புடன் இருக்கக்கூடிய நகரம் என்று தான் சொல்ல வேண்டும். வைகை நதி பாயும் மண்; மீனாட்சியம்மன் கோயிலின் கலை அழகுக்கு நிகரானது எதுவுமில்லை; இங்கே, மல்லிகை மணக்கும்; நள்ளிரவிலும் இட்லியில் ஆவி பறக்கும்! சுங்குடி சேலைகள், கைவினைப் பொருட்கள் எல்லோரையும் ஈர்க்கும். மதுரையை ஒட்டி வைகை ஆற்றங்கரையில் அமைந்த கீழடியில், தமிழர்களின் நாகரிகம் எந்தளவுக்கு தொன்மையானது என்று உலகத்துக்கு எடுத்துக்காட்டக்கூடிய வகையில் சான்றுகள் எல்லாம் நமக்கு கிடைத்திருக்கிறது. இந்தியாவின் வரலாற்றையே அந்தச் சான்றுகள் மாற்றி எழுத வைத்திருக்கிறது. நம்முடைய அறிவார்ந்த, மதச்சார்பற்ற வாழ்க்கை முறையையும் உலகுக்கு மீண்டும் நினைவூட்டி இருக்கிறது. அதனால்தான் இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி எழுதவேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்.
மதுரை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம், கோயில் நகரம் என்று பெயர் மட்டும் வைத்துக் கொண்டால் போதுமா? எனக்கு இந்த மதுரை தொழில் நகரமாகவும் புகழ் பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, இலட்சியம்!
பழைய மதுரையின் மரபு, பண்பாடு, வரலாற்றுச் சின்னங்கள் போன்றவற்றை பாதுகாக்கின்ற அதேவேளையில், தற்காலத் தேவைகளுக்கும் எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப தானாகவே வளர்ந்து வருகின்ற மதுரை, தொழில் நகரமாக மிளிர அனைத்துத் தகுதியும் கொண்ட நகரம்!
புதுப்புது மாற்றங்களை தக்க வைத்திருக்கின்ற நகரம் என்கிற வகையில், தென் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாகவும் மதுரை உயர்ந்து வருகிறது. TVS ஸ்ரீசக்ரா, டாஃபே, JK ஃபென்னர், இன்ஃபினிக்ஸ், தியாகராஜர் மில்ஸ், மதுரா கோட்ஸ், ஹனிவெல், HCL என்று பல்வேறு நிறுவனங்கள் தங்களின் தொழில் திட்டங்களை மதுரையில் நிறுவி இருக்கிறார்கள். வேலம்மாள் மருத்துவமனை, மீனாட்சிமிஷன் மற்றும் அப்பல்லோ போன்ற தலைசிறந்த மருத்துவமனைகள், மருத்துவத் துறையில் தனி சாதனைகள் படைத்துக் கொண்டு வருகிறது. பெரும் முதலீடுகளை செய்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தினார்கள்.
மதுரையின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள். இங்கே சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. தூத்துக்குடி துறைமுகம் அருகாமையில் அமைந்திருக்கிறது.
இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைப்பதற்கான நெடுஞ்சாலை வசதிகள் இங்கே இருக்கிறது. இப்படி சிறப்பான இணைப்பு வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட வலிமைமிக்க நகரம் தான் இது.
சிட்கோ தொழிற் பேட்டைகள்,
வடபழஞ்சி மற்றும் இலந்தைக்குளம் எல்காட் தொழில் நுட்ப பூங்காக்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளால், எதிர்காலத்தில் ஒரு பெரிய தொழில்துறை மையமாக உருவெடுக்கக்கூடிய திறன் மதுரைக்கு இருக்கிறது.
மதுரையில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களும், ஏற்கெனவே செயல்பட்டு வருகின்ற தொழில் நிறுவனங்களும், உயர்திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்கின்ற வலுவான அடித்தளமாக செயல்படுகிறது.
இங்குள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வலுவான அடித்தளத்தால், பெரிய தொழிற்சாலைகளும் நன்கு பயனடைந்து வருகிறது. நம்முடைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தென் மாவட்டங்களில், தொழில் முன்னேற்றத்தைப் பெருக்கி, மற்ற மாவட்டங்களுக்கு இணையாக, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புக்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுடன் இணைந்து, விருதுநகர் மாவட்டத்தில், ஆயிரத்து 894 கோடி ரூபாய் முதலீட்டில், ஆயிரத்து 52 ஏக்கர் பரப்பளவில், PM மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவை உருவாக்கி வருகிறது.
இந்த பூங்கா முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, கிட்டத்தட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் இந்தப் பூங்காவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த முன்னெடுப்பு, மாநிலத்தின் ஜவுளி உற்பத்தித் துறையை, அதிநவீன மயமாக்கி, மேம்படுத்தும்!
விருதுநகரின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு பெரிய உந்து சக்தியாக விளங்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்!
தேனி மாவட்டத்தில், 424 ஏக்கர் பரப்பளவில், ஒரு பொதுப் பொறியியல் பூங்கா மற்றும் மெகா உணவுப் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில், இலுப்பைக்குடி பகுதியில் 108 ஏக்கரும், கழனிவாசல் பகுதியில் 102 ஏக்கரும் தொழிற்பூங்கா உருவாக்குவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை, கோயம்புத்தூரில் நிறுவப்பட்ட டைடல் பூங்காக்களின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, தகவல் தொழில் நுட்ப சூழலை விரிவுபடுத்துகின்ற வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மாநகரங்களிலும் டைடல் பூங்காக்களை நிறுவ முடிவெடுத்தோம்!
மதுரை மாவட்டத்தில், 314 கோடி ரூபாய் மதிப்பிலான டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் மட்டுமல்ல, சிவகங்கை மாவட்டத்திலும் டைடல் நியோ பூங்கா நிறுவப்பட்டு வருகிறது.
விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும், டைடல் நியோ பூங்காக்கள் நிறுவ திட்டமிட்டிருக்கிறோம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், புதிய விமான நிலையத்தை அமைக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தூத்துக்குடி, ஓசூர், கோயம்புத்தூர் நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகளில் மட்டுமே, கிட்டத்தட்ட 1 இலட்சம் கோடி ரூபாய் உறுதி செய்யப்பட்ட முதலீடு கிடைத்திருக்கிறது. 2 இலட்சம் நபர்களுக்கு உறுதி செய்யப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு வர இருக்கிறது. அந்த வகையில், 186 திட்டங்களை ஈர்த்திருக்கிறோம்.

இன்று உறுதியாகியுள்ள முதலீடுகள் - கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மிக மிக முக்கியமாக, மதுரை மேலூரில் 278.26 ஏக்கர் பரப்பளவில், பிரம்மாண்டமான சிப்காட் தொழிற்பூங்காவுக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன்.
மகளிர் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் எண்ணற்ற முன்னெடுப்புகளை நம்முடைய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற மாநிலமாக தமிழ்நாடு யாரும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. அதற்கு வலுசேர்ப்பது போல, தைவான் நாட்டைச் சேர்ந்த ‘Pei Hai’ குழுமம், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் திட்டத்தை மதுரையில் நிறுவ முன் வந்திருக்கிறது. இதன்மூலம் 15 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப் போகிறது அதிலும் பெரும்பாலனவை பெண்களுக்கு!
சிறிய அளவிலான ‘Chip’-ல இருந்து பெரிய அளவிலான ‘Ship’ வரை அனைத்துத் துறைகளிலும், தமிழ்நாடு, தன்னம்பிக்கையோடு, தன்னிறைவு பெற்று, தலைநிமிர்ந்து நிற்கின்ற காலமாக, திராவிட மாடல் ஆட்சிக்காலம் அமைந்திருக்கிறது!
இன்றைய தினம், ஹுண்டாய் நிறுவனமும், தன்னுடைய கப்பல் கட்டுமான திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது. கப்பல் கட்டுமானத் துறையில், தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்துகின்ற இந்த முதலீடு, மற்ற நிறுவனங்களை ஊக்குவிப்பதோடு, உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் வாகனத்துறையில் எத்தகைய வளர்ச்சியை ஏற்படுத்தியதோ, அதே போல, ஹுண்டாய் நிறுவனத்தின் கப்பல் கட்டுமான நிறுவனமும், பெரும் வளர்ச்சியை உறுதியாக ஏற்படுத்தும்! SFO டெக்னாலஜிஸ் நிறுவனம், பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப தீர்வுகளில், முன்னணி நிறுனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிறுவனம், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான விரிவாக்கத் திட்டத்தை தேனியில் மேற்கொள்ள இருக்கிறார்கள். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மேற்கொள்ளப்படுகிறது.
இப்படிப்பட்ட உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தென் மாவட்டங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ‘பயோ எனர்ஜி’ துறையில், 11 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கீழடியின் பாரம்பரியத்திலிருந்து இன்றைய நாகரிகம் வரை தன்னை தகவமைத்துக் கொண்டுள்ள இந்த மண், மனித நாகரிகத்தின் தளராத வளர்ச்சியை தன்னகத்தே தாங்கி நிற்கிறது. இந்த அனுபவங்களின் அடித்தளத்தில், 42 இலட்சம் மக்கள் தொகையை எதிர்நோக்கி நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) தயாரித்துள்ள ‘மதுரை மாஸ்டர் பிளான் 2044’- புதிய நகர்ப்புற வடிவமைப்பை கொண்டிருக்கிறது.
விளையாட்டு பொம்மைகள் உற்பத்தியில் தமிழ்நாட்டை முன்னணி மையமாக மேம்படுத்தவும், விளாச்சேரி, அம்பாசமுத்திரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களின் பாரம்பரிய பொம்மை தயாரிப்பு திறனை உயர்த்தவும், அவர்களுக்கு புதிய சந்தை, வடிவமைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குகின்ற வகையிலும் இன்றைய தினம் தமிழ்நாடு ’பொம்மை உற்பத்திக் கொள்கை’-யை வெளியிடுவதில் நான் பெருமை அடைகிறேன்.
தொழில் மற்றும் கல்வித்துறை சேர்ந்து அறிவுப் பொருளாதாரம் உருவாக வேண்டும் என்று தான், தமிழ்நாடு பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பூங்கா அறக்கட்டளை என்கிற புதிய நிறுவனத்தை அமைத்திருக்கிறோம். புதுமையை ஆரத்தழுவி வரவேற்கும் மதுரை மண்டலத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் அந்த பகுதியிலுள்ள முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து, 13 கோடி ரூபாய் தொடக்க முதலீட்டில், பல்கலைக்கழக ஆராய்ச்சி பூங்காவிற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிறுவனம் 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் மானியத்துடன் பயன்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. இந்தத் திட்டங்களுக்கான முதல் தவணையாக 75 இலட்சம் ரூபாய் ஆராய்ச்சியாளர்களிடம் இந்த நிகழ்ச்சியில் நான் வழங்கி இருக்கிறேன்.
தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் குறிக்கோளோடு நாங்கள் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் பயணத்தில், முதலீட்டாளர்களின் பங்கு மிக மிக அவசியம்; மிக மிக முக்கியமானது.
இந்த தருணத்தில், தமிழ்நாட்டில் முதலீடுகள், விரிவாக்கத் திட்டங்கள் மேற்கொண்ட அனைத்து முதலீட்டாளர்களுக்கும் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் இந்த மேடையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் ஆதரவு தொடர வேண்டும்! உங்கள் வருங்காலத் திட்டங்கள் எல்லாவற்றையும் தமிழ்நாட்டிலேயே மேற்கொள்ள வேண்டும்!
இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்! இணைந்து வளர்வோம்! இணையற்ற வளர்ச்சியை பெறுவோம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.








