
தி.மு.கழக இளைஞரணிச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும் விளங்கும் உதயநிதி ஸ்டாலின், தனது 49ஆவது பிறந்தநாளையொட்டி, நாளின் தொடக்கத்தில் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது, “பெற்றோர்களை சந்திப்பதற்கு முன்பு மூத்தவர்களை சந்திக்க வந்துள்ளேன்” என நெகிழ்ச்சியுடன் மக்களிடையே உரையாற்றினார்.
பிறகு, முத்தமிழறிஞரின் இல்லங்களுக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அம்மையார் துர்கா ஸ்டாலின் அவர்களிடம் சென்னை முகாம் அலுவலகத்தில் வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,
“கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது,
காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக,எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும்.
இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!”






