
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.11.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னை, மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் தெ.ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் இரா. காமராசு (ஆய்வுத் தமிழ்), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த க.சோமசுந்தரம் (எ) கலாப்ரியா (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார்.
பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு விளங்கிவரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி 3.06.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் 2021-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பன்னிரெண்டு அறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், 2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட சென்னை, மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் தெ.ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் இரா.காமராசு (ஆய்வுத் தமிழ்). தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த க.சோமசுந்தரம் (எ) கலாப்ரியா (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று இலக்கிய மாமணி விருதுகளையும்,
விருதிற்கான 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்தார்கள்.








