
தமிழ்நாட்டில் நடப்பு சம்பா (ரபி) பருவத்தில் பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், உரங்களை உரிய நேரத்தில் வழங்குவதை சம்பந்தப்பட்ட உர நிறுவனங்கள் உறுதி செய்திடத் தேவையான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கோரி ஒன்றிய இரசாயனம், உரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அவர்களை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28-10-2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இந்தியப் பிரதமரிடம் தான் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, தமிழ்நாட்டிற்கு, 2025 குறுவை (காரீஃப்) பருவத்திற்குப் போதுமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அந்த வகையில், 2025 குறுவை (காரீஃப்) பருவத்திற்கு முறையே
4.41 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.75 இலட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 0.95 இலட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 4.58 இலட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு 4.37 இலட்சம் மெட்ரிக் டன் (99%) யூரியா, 1.59 இலட்சம் மெட்ரிக் டன் (91%) டி.ஏ.பி., 0.70 இலட்சம் மெட்ரிக் டன் (74%) எம்.ஓ.பி. மற்றும் 3.70 இலட்சம் மெட்ரிக் டன் (81%) என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களைப் பெற்றுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நெல் விவசாயிகளுக்கு ரூ.215 கோடி செலவில் "குறுவை (காரீஃப்) சிறப்புத் தொகுப்பு" அறிவித்து செயல்படுத்தியது மற்றும் நீர்ப்பாசனத்திற்காக அணைகளை உரிய நேரத்தில் திறந்தது போன்ற மாநில அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், தமிழ்நாடு நெல் உற்பத்தியை சாதனை அளவிற்கு அதிகரிக்க முடிந்ததாகவும் அவர் பெருமிதத்துடன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியுள்ளதாலும், அனைத்து முக்கிய நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் இருப்பதாலும், சம்பா பருவத்தில் அதிகபட்ச நெல் சாகுபடி பரப்பளவில் உற்பத்தி செய்திட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், நவம்பர் மாதத்தில் உரங்கள், குறிப்பாக யூரியாவின் தேவை அதிகரிக்கும் என்று தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சம்பா நெல் பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், கூடுதலாக, மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை மற்றும் கரும்பு போன்ற பிற பயிர்களின் சாகுபடியும் மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, இந்திய அரசின் உரத் துறை, மாநிலத்தால் முன்மொழியப்பட்ட 6.94 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.93 இலட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1.88 இலட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 5.15 இலட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களில், 6.50 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.50 இலட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1.80 இலட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 5.14 இலட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களை ஒதுக்கியுள்ளது என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
நடப்பு சம்பா (ரபி) பருவத்தில் பயிர் சாகுபடி பல்வேறு சாதகமான காரணிகளால் முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், நேரடி உரங்களுக்கான தேவை குறிப்பாக, யூரியாவுக்கான தேவை வரும் நாட்களில் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநிலத்தால் முன்மொழியப்பட்ட 6.94 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.93 இலட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி.;
1.88 இலட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 5.15 இலட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களின் தேவையை, சம்பந்தப்பட்ட உர நிறுவனங்கள் உரிய நேரத்தில் பரிசீலித்து, வரும் மாதங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ஒன்றிய இரசாயனம், உரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.








