தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு, தமிழ்நாட்டின் தகைசால் தலைவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (செப்.19) சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரின் இந்நடவடிக்கைக்கு தமிழ்நாட்டளவில் பலரும் நன்றி தெரிவித்து வரும் நிலையில், சிவகங்கை சமஸ்தானம் பரம்பரை அறங்காவலர் DSK.மதுராந்தகி நாச்சியார், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “விடுதலை வீரர்களின் நினைவைப் போற்றுவதைத் தலையாய கடமையாகக் கருதும் நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து, வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகம்;
2023-ஆம் ஆண்டு டெல்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பு ஊர்தியில் வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச்சிலை எனத் தொடர்ந்து அவரது புகழ்பாடி வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய முதல் பெண் போராளி - ஆங்கிலேயர்களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன்.
இந்த மகிழ்ச்சிமிகு நாளில், வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெயர் சூட்டப்படும் எனப் பெருமிதத்துடன் அறிவிக்கிறேன்.
மண் - மானம் காக்கப் புயலெனப் புறப்பட்ட வீரத்தாய் வேலுநாச்சியாரின் வரலாறும் - அவருக்குத் துணை நின்ற மருது சகோதரர்கள் உள்ளிட்ட தீரமிக்க தமிழர்களின் வரலாறும், இந்த மண் யாருக்கும் தலைகுனியாது எனும் வரலாற்றை உரக்கச் சொல்லும்!” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.