முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.8.2025) சென்னையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோ அவர்களின் மகள் இராகவி - சச்சிந்தர் ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, ஆற்றிய உரை.
நம்முடைய கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ அவர்கள் இல்லத்தில், அவருடைய அன்பு மகளுக்கு நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சி என்பது அவரே இங்கு குறிப்பிட்டு சொன்னார்.
இது என்னுடைய இல்லத்திருமணம் மட்டுமல்ல. கழக குடும்பத்தின் திருமணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பெருமையோடு எடுத்துச் சொன்னார். அப்படிப்பட்ட இந்த குடும்ப திருமணவிழாவில் நானும் பங்கேற்று இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பையேற்று மணவிழாவை நடத்திவைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பை பெற்றமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன்.
என்.ஆர். இளங்கோ அவர்களைப் பற்றி நான் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றுசொன்னால், அவர் தனது தந்தையின் அடியொற்றி, கழகத்தில் கொள்கைப் பிடிப்போடு தன்னுடைய கடமையை நிறைவேற்றிக்கொண்டிருப்பவர்.
அவருடைய தந்தை மரியாதைக்குரிய ஆர்.என். அரங்கநாதன் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்பைப் பெற்று, சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்காக பணியாற்றி கழகத்தின் பெருமையை சேர்த்தவர் அவர்.
தந்தையைப் போன்றே, தனையனாக கழகக் கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு நம்முடைய தலைவர் கலைஞர் மீது, அதேபோல் என் மீது, இந்த கழகத்தின் மீது பற்று கொண்டு நம்முடைய என்.ஆர். இளங்கோ அவர்கள் தொடர்ந்து கழகத்திற்காக பணியாற்றிக்கொண்டிருக்கக் கூடியவர். அவர் திருச்சி சட்டக் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே கழகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மறைந்த நம்முடைய மூத்த வழக்கறிஞர் திரு. என். நடராஜன் அவர்களின் பட்டறையில் பயிற்சிப் பெற்றவர் நம்முடைய என்.ஆர். இளங்கோ அவர்கள். அனைத்து நீதிமன்றங்களிலும் தனது வாதத் திறமையால் சிறப்பாகச் செய்துகாட்டியவர்.
அவருடைய கொள்கைப் பிடிப்புமிக்க வாழ்வையும் - வழக்கறிஞர் தொழிலில் சிறப்பாகப் பணியாற்றுவதையும் பார்த்துதான், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் 1996-ம், 2006-ம் கழக ஆட்சி அமைந்தபோது, அவருக்கு அரசு வழக்கறிஞராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கினார்கள்.
அவருடைய வழக்கறிஞர் பணியை பாராட்டி நான் மட்டுமல்ல. இங்கிருக்கக்கூடிய நாம் மட்டுமல்ல, பல்வேறு நீதிபதிகளும் அவரை மனம்திறந்து பாராட்டி இருக்கிறார்கள். மூத்த வழக்கறிஞர்களும் அவருடைய திறமையை வியந்து பாராட்டி இருக்கிறார்கள்.
நீதியை நிலைநாட்டும் அவருடைய திறமையை, கழகம் இன்னும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்துதான் அவருக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அனுப்பி வைத்தோம். அவரும் தமிழ்நாட்டின் உரிமைக்காக அந்த அவைக்கு சென்று ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
இதைவிட, முக்கியமான ஒரு பணியை அவருக்கு நாம் கொடுத்திருக்கிறோம். அதைத்தான் தம்பி உதயநிதி அவர்களும் சொன்னார். மற்றவர்களும் பேசும்போது குறிப்பிட்டு சொன்னார்கள். நம்முடைய என்.ஆர். இளங்கோ அவர்கள்தான் இன்சார்ஜ். என்ன இன்சார்ஜ் என்றால் அதுதான், வார் ரூம் பணி!
தேர்தல் நேரத்தில் வழக்கறிஞர்கள் அணியைத் தயாராக வைத்திருப்பார். அதோடு, வாக்குச்சாவடி முகவர்களுக்கு முறையாக அமைத்து அதற்கு பயிற்சியும் வழங்கிக் கொண்டிருக்கிறார். தேர்தல் களத்தில் முன்கள வீரர்களாக செயலாற்ற கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு நாடு என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் SIR என்ற சிறப்பு வாக்காளர் திருத்தம் - என்ன மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நான் அதிகம் இங்கு விளக்கும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அதற்காகதான், நம்முடைய அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் ஒரு நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, நானும் பீகார் சென்று, வாக்காளர் உரிமைப் பயணம் என்று சகோதரர் ராகுல் காந்தி நடத்தி வரும் அந்த விழிப்புணர்வு பயணத்தில் நான் பங்கேற்றேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
இந்த நிலை தமிழ்நாட்டில் ஏற்படக் கூடாது என்பதற்காக, இப்போதே நம்முடைய விழிப்புணர்வைப்பெற்று நாம் அதற்காக தயாராக வேண்டும் என்பதற்காகதான் அதை தடுத்து நிறுத்துவதற்கான அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பவர்தான் நம்முடைய என்.ஆர். இளங்கோ அவர்கள். அதற்காக இந்த நேரத்தில் நான் தலைமைக் கழகத்தின் சார்பில் மனதார அவரை பாராட்ட, வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன்.
நம்முடைய உரிமை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி, அதில் நீதியரசர்களை பங்கேற்க வைத்து பல ஆன்றோர்கள், சான்றோர்களையெல்லாம் அதில் பங்கேற்க வைத்து அதையும் நடத்திக் கொண்டு இருக்கிறார்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதில் நம்முடைய என்.ஆர். இளங்கோ அவர்கள் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறார் என்று, நான் சொல்ல வேண்டும் என்றால், இங்கு மணமக்களுக்கு மாலைகளை மாற்றுவதற்கும், மாங்கல்யத்தை எடுத்துக்கொடுக்கக்கூடிய தாம்பலத்தட்டில் அவர் என்ன வைத்திருந்தார் என்றால், தலைவர் கலைஞர் எழுதிய திருக்குறள் உரை, அரசியலமைப்புச் சட்டம் அதை வைத்துதான் அந்த மாங்கல்யத்தையும், மாலையையும் வைத்து தட்டை காண்பித்தார். அதைதான் எடுத்துவந்து கொடுத்தேன்.
இப்படிப்பட்ட என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமணத்தில் - அதுவும் சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் இந்த திருமணத்தில், நானும் உங்களோடு சேர்ந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.
நாளையதினம் நான் ஜெர்மனி - இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வார கால பயணமாக மேற்கொள்ள இருக்கிறேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டிற்கு இதுவரை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களை நாம் ஈர்த்திருக்கிறோம்.
இதற்கான என்னுடைய வெளிநாட்டு பயணங்களின்போது, முதலீட்டாளர்களும் தொழில்நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய மனப்பூர்வமாக ஆர்வம் காட்டுவதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
இப்போது இந்தப் பயணத்தில் என்ன திட்டமிட்டிருக்கிறோம் என்றால், அதைப்பற்றி நாளைய தினம் நான் விமானத்தில் ஏறி புறப்படுவதற்கு முன்பு நிச்சயமாக பத்திரிகையாளர்களை சந்தித்து அந்த விவரங்களையெல்லாம் சொல்லப்போகிறேன்.
ஆனால், அதற்கு முன்பு நடைபெறக்கூடிய இந்த திருமண விழாவில், ஒரு முக்கியமான நிகழ்வை அறிவிக்க விரும்புகிறேன். நம்முடைய தமிழ்ச்சமூகம் சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து நடைபோடுவதற்கு காரணம், தந்தை பெரியார் அவர்கள்!
அதனால்தான், தந்தை பெரியாரைப் பற்றி எழுதிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் சொன்னார்கள்,
“தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்!” என்று எழுதினார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனையை உலகு தொழும் காட்சியை நாம் இந்தப் பயணத்தில் பார்க்கப்போகிறோம்.
உலகின் மிகப்பெரிய அறிஞர்களைத் தந்த, புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாகப் போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படம் திறக்கப்பட இருக்கிறது! அதை என்னுடைய திருக்கரங்களால் திறந்துவைக்க இருக்கிறேன் என்று எண்ணிப்பார்க்கும்போது நான் இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதந்துக்கொண்டு இருக்கிறேன்.
தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி - எழுதியிருந்தாலும், அவருடைய சிந்தனைகள் இந்த உலகத்திற்கானது; அனைவருக்கும் பொதுவானது!
அவர் வலியுறுத்திய, சுயமரியாதை - பகுத்தறிவு - பெண் விடுதலை - ஏற்றத்தாழ்வு மறுப்பு - தன்னம்பிக்கை - அனைவரும் சமம் ஆகிய கருத்துகளுக்கு எல்லைகள் கிடையாது. இவை உலக மக்கள் அனைவரும் பொதுவான வகையில் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அறிவுமேதை உலகளவில் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவது நம்முடைய தமிழ்நாட்டிற்கு பெருமை!
அதற்கு முன்பு, நம்முடைய என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டுதான் அந்த பயணத்தை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்டி;
இந்த நேரத்தில் நான் மணமக்களை அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்... சூட்டுங்கள்... என்று என்னுடைய அன்பான வேண்டுகோளை வைத்து, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய்” மணமக்கள் வாழுங்கள்... வாழுங்கள்... வாழுங்கள்... என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.