தமிழ்நாடு

“கழகத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, 13 முறை சிறை சென்றவர் குளித்தலை அ.சிவராமன்” : முதலமைச்சர் இரங்கல்!

தி.மு.கழக மூத்த தலைவர் குளித்தலை அ.சிவராமன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

“கழகத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, 13 முறை சிறை சென்றவர் குளித்தலை அ.சிவராமன்” : முதலமைச்சர் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தி.மு.கழக மூத்த தலைவர் குளித்தலை அ.சிவராமன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி பின்வருமாறு,

கழகத்தின் மூத்த முன்னோடியும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான குளித்தலை அ. சிவராமன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இளமைக்காலம் முதலே கழகத்தின் மீது ஆர்வம் கொண்ட திரு. அ. சிவராமன் அவர்கள் 1971 முதல் குளித்தலை நகரச் செயலாளராக 18 ஆண்டுகளும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத் தொண்டரணி அமைப்பாளராகவும் பணியாற்றினார்.

குளித்தலையில் தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, அன்றைய திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர் அன்பிலார் அவர்கள் தலைமையில், குளித்தலை காவிரி ஆற்றங்கரையில் வெள்ளி விழா நடத்தி 60 பவுன் தங்க நாணயங்களை நகரச் செயலாளராக வழங்கிய தீவிர கலைஞர் பற்றாளர்தான் சிவராமன் அவர்கள். தலைவர் கலைஞர் மீது கொண்டிருந்த அதே தூய அன்பை என் மீதும் வெளிப்படுத்தி வந்தார்.

மேலும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகவும், கரூர் மாவட்ட விவசாய அணிச் செயலாளராகவும், மாவட்டத் தி.மு.க. பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார்.

“கழகத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, 13 முறை சிறை சென்றவர் குளித்தலை அ.சிவராமன்” : முதலமைச்சர் இரங்கல்!

கழக அரசின் மகளிர் சிறு வணிகக் கடன் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக அரசு சார்பில் சிறந்த கூட்டுறவாளர் பட்டம் பெற்றுப் பாராட்டப்பட்டார். தி.மு.கழகம் அறிவித்த பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு 13 முறை சிறை சென்றுள்ளார்.

இவருடைய கழகப் பணி மற்றும் பொதுப்பணியின் காரணமாக 1989 சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பினையும் பெற்றார்.

கழகத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு குளித்தலை சிவராமன் அவர்கள் நீண்டகாலமாகத் தடம் மாறாமல் பயணித்து வந்ததற்கான அங்கீகாரமாக, இந்த ஆண்டு கரூரில் நடைபெறவுள்ள கழக முப்பெரும் விழாவில், 'பாவேந்தர் பாரதிதாசன்' விருது பெறத் தேர்வாகியிருந்தார்.

நேரில் கண்டு அவருக்கு விருதினை வழங்கி, அவர் கரம் பற்றிக் கொள்ள ஆவலுடன் நான் காத்திருந்த நிலையில், நம்மையெல்லாம் துயரில் ஆழ்த்தி சிவராமன் மறைந்துவிட்டார். அவரது வாழ்க்கையும் பணியும் இன்றைய கழகத்தினர் அனைவரையும் வழிநடத்தும்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories