மு.க.ஸ்டாலின்

“திராவிட மாடல் 2.Oல் இதுவரை அடையாத புதிய உச்சத்தை தமிழ்நாடு அடையும்!” : திருப்பூரில் முதலமைச்சர் பேருரை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (11.8.2025) திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்.

“திராவிட மாடல் 2.Oல் இதுவரை அடையாத புதிய உச்சத்தை தமிழ்நாடு அடையும்!” : திருப்பூரில் முதலமைச்சர் பேருரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.8.2025) திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் ஆற்றிய உரை.

திருமூர்த்தி மலை, அமராவதி அணை, மறையாறு, சின்னாறு என்று இயற்கை எழில் கொஞ்சும் உடுமலைப்பேட்டையில் இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சி!

இயற்கையின் குளுமை மட்டுமல்ல, சுற்றி இருக்கின்ற மாவட்டங்களுக்கெல்லாம் சர்க்கரையை அள்ளித்தரும் இனிப்பான ஊர்! இந்த ஊர்! பேரறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, நல்லதம்பி, முத்தமிழறிஞர் கலைஞரின் புரட்சிக் காவியங்களான பராசக்தி, மனோகரா உள்ளிட்ட பல படங்களில் சுமார் 10 ஆயிரம் பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவியை தந்து இலக்கியத்திலும் உயர்ந்த ஊர்! இந்த ஊர்!

திராவிட முன்னேற்றக் கழக பொருளாளராக இருந்தவரும், முன்னாள் அமைச்சருமான திரு. சாதிக் பாட்சா அவர்களை ஈன்றெடுத்த ஊர் இந்த ஊர்! இப்படி இயற்கை, வேளாண் உற்பத்தி, கலை - இலக்கியம், கல்வி, அரசியல் என்று அனைத்து துறைகளின் கோட்டைதான் நம்முடைய உடுமலைப்பேட்டை!

தியாகத்தின் திருவுருவமான திருப்பூர் குமரன் தோன்றிய தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் சந்தித்த இந்த திருப்பூர் மாவட்டத்தில், இந்த பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள்!

அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், 1986-ல் தமிழ் காக்க - இந்திக்கு எதிரான சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு, கோவை மத்திய சிறையில் 45 நாட்கள் சிறைவாசம் இருந்தவர். அதிலிருந்து இளைஞரணியில் என் கூட பயணித்தவர்.

தலைவர் கலைஞரின் அமைச்சரவையிலும், இப்போது நம்முடைய திராவிட மாடல் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருக்கிறார். ஒரு வேலையை வழங்கினால், அதை ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியாக, அடக்கமாக சாதித்துக் காட்டக் கூடியவர் சாமிநாதன்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களுக்கு சிலைகளும், மணிமண்படங்களும், நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் பொறுப்பு எடுத்துக் கொண்டு சிறப்பாக செய்து முடித்தவர்! தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்!

அதேபோல், அருமை சகோதரி மாண்புமிகு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முன்பு ஆதி திராவிட நலத்துறை அமைச்சராகவும், இப்போது மனித வள மேலாண்மைத் துறை அமைச்சராகவும் அமைதியாக செயல்படும் அவரது பணி பாராட்டுக்குரியது!

அரசின் சார்பில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள் என்றால், அதை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் அயராத முயற்சியும் ஒன்று. அவருக்கும் எனது பாராட்டுக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கக்கூடிய அமைச்சர்கள் சாமிநாதன் அவர்களுக்கும், கயல்விழி செல்வராஜ் அவர்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளுக்கும், குறிப்பாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மணிஷ் அவர்களுக்கும், மாவட்டத்தின் அரசு அலுவலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்!

கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த திருப்பூர் மாவட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகாலத்தில் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டிருக்கின்ற முக்கியமான திட்டங்களில் சிலவற்றை மட்டும் சுருக்கமாக தலைப்புச் செய்தியாக நான் சொல்ல விரும்புகிறேன்.

சொர்ணபுரி லே-அவுட் சங்கிலிப்பள்ளம் ஓடை குறுக்கேயும் - தந்தை பெரியார் நகர் ஜம்மனை ஓடை குறுக்கேயும் உயர்மட்டப் பாலம்!

558 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆயிரத்து 266 சாலைப் பணிகள்

மடத்துகுளம் புதூர், பூண்டி நகர், ஹைடெக் பார்க் நகர், பெருந்தொழுவு திட்டப்பகுதியில் 1,004 குடியிருப்புகள்!

திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 133 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு!

328 திருக்கோயில்களில் 804 சீரமைப்புப் பணிகள்!

5 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள்!

9 உயர்மட்டப் பாலங்கள் அறிவிக்கப்பட்டு, அதில் 3 பாலங்கள் பயன்பாட்டுக்கே வந்துவிட்டது!

உடுமலைப்பேட்டை வட்டம் கொங்கல் நகரம் கிராமத்தில் முதலாம் கட்ட அகழாய்வு நிறைவு.

இன்றைக்கு திருப்பூரில் நியூ டைடல் பார்க்

வேலம்பாளையம் அரசு மருத்துவமனை

கோவில்வழி பேருந்து நிலையம் திறந்து வைத்திருக்கிறேன்.

அடுத்து, கூடிய விரைவில் வரப்போகின்ற திட்டங்கள் என்னென்ன என்று… லிஸ்ட் சொன்னால்,

 காங்கேயம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட இருக்கிறது.

 தாராபுரம் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப் போகின்றோம்!

 திருமுருகன்பூண்டி நகராட்சிப் பகுதியில் மினி டைடல் பார்க்!

 சிவன்மலை மற்றும் நஞ்சியம்பாளையத்தில் மினி விளையாட்டு அரங்கம்!

 172 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நொய்யல் ஆறு மேம்பாடு.

 ஆயிரத்து 179 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப் பணிகள்.

 கீழக் கோயில் வழிப் பகுதியில் பேருந்து நிலையம்!

 தெக்கலூர் பட்டேல் நகர், பொங்கலூர் அண்ணா நகர், காந்தி நகர் திட்டப்பகுதியில் ஆயிரத்து 160 குடியிருப்புகள்!

 பில்லூர் நீர்த்தேக்கத்தை ஆதாரமாகக் கொண்ட குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் புனரமைப்புத் திட்டம்.

 முத்தூர் - காங்கேயம் 3 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் மற்றும் 86 ஊராட்சிகளை உள்ளடக்கிய, ஆயிரத்து 790 குடியிருப்புகளுக்கான

கூட்டுக் குடிநீர் திட்டப் புனரமைப்புத் திட்டம்.

 காங்கேயம், வெள்ளக்கோயில், தாராபுரம், குண்டடம், பொங்கலூர், பல்லடம், மூலனூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம்!

இப்படி இன்னும் நிறைய இருக்கிறது… மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், 10 ஆயிரத்து 491 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள், நலத் திட்ட உதவிகள், திருப்பூர் மாவட்டத்திற்கு செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வளவு சாதனைகளையும், 4 ஆண்டுகளில் நம்முடைய திருப்பூருக்காக நாம் செய்திருக்கிறோம். ஆனால், அதிமுக ஆட்சியில் திருப்பூரின் வளர்ச்சிக்காக குறிப்பிட்டு சொல்லும்படியாக ஏதாவது செய்திருக்கிறார்களா? அதிமுக ஆட்சிக்காலத்தில் திருப்பூர் எந்தளவுக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.

2006 முதல் 2011 வரையிலான கழக ஆட்சியில், திருப்பூரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் 3 ரயில்வே பாலங்கள் உட்பட, 5 பாலங்களை கட்டுவதற்கு ஆணையிட்டார். ஆனால், 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடனே, அந்தப் பணிகளை எல்லாம் முடக்கிவிட்டார்கள்.

2021-ஆம் ஆண்டு மீண்டும் கழக ஆட்சி மலர்ந்த பிறகுதான் மீண்டும் அந்தப் பணிகளை முழுவீச்சில் இப்போது நாம் செய்து கொண்டு வருகிறோம்.

 எஸ்.ஆர்.சி. மில் அருகே மன்னரை ரயில்வே மேம்பாலம்,

 திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி அமைந்திருக்கின்ற கல்லூரி சாலையில் இருந்து மங்களம் சாலை வரை ரயில்வே மேம்பாலம்,

 திருப்பூர் யூனிவர்சல் தியேட்டர் பகுதியில் இருந்து மாநகராட்சிப் பூங்கா வரை சுரங்க பாலப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது.

“திராவிட மாடல் 2.Oல் இதுவரை அடையாத புதிய உச்சத்தை தமிழ்நாடு அடையும்!” : திருப்பூரில் முதலமைச்சர் பேருரை!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், மக்கள் மன்றத்திலேயும் பேசினோம், சட்டமன்றத்திலேயும் நாம் தொடர்ந்து குரல் கொடுத்தோம். அதற்குப் பிறகு நாம் ஆட்சிக்கு வந்து பணிகளை முடித்து தொடங்கி வைத்திருக்கிறோம்!

அதேபோல, கோவை, திருப்பூர் மாவட்டங்களின் வேளாண்மைக்கு மிக மிக அடிப்படையாக இருப்பது பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம். பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக் காலத்தில் இது உருவாக்கப்பட்டது. இந்த மகத்தான திட்டத்தை உருவாக்கிய பெருமக்களுக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு சிறப்பு செய்கின்ற வகையில், நினைவகம் அமைத்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அடுத்து அங்கேதான் நாங்கள் செல்ல இருக்கின்றோம். 4 இலட்சம் ஏக்கர் பரப்புக்கு பாசனம் தரும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் அமையக் காரணமான

 பெருந்தலைவர் காமராசர் அவர்கள்

 முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள்

 மரியாதைக்குரிய வி.கே.பழனிசாமி அவர்கள்

 பெரியவர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் – இந்த நால்வர் சிலைகளுடன் கூடிய அரங்கத்தை நம்முடைய அரசு அமைத்திருக்கிறது.

இந்தத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தியாகி வி.கே.பழனிசாமி அவர்களும், பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களும் பெரும் முயற்சி எடுத்தார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்த இல்லை என்றால் பதவி விலகிவிடுவேன் என்று பெருந்தலைவர் காமராசர் அவர்களிடமே சொன்னவர்தான் வி.கே.பழனிசாமி கவுண்டர் அவர்கள்.

அதனால்தான் அவர்கள் திருவுருவச் சிலையை அரங்கத்தில் வைத்திருக்கிறோம். இந்தத் திட்டப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கும், ஆழியாறில் அமைக்கப்பட்டிருக்கின்ற அரங்கத்தையும் திறந்து வைக்க இருக்கிறேன்.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக்டோபர் 7- ஆம் தேதியே பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட நாளாக அறிவித்து ஆண்டுதோறும் கொண்டாடி வருவதும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான்.

செய்து முடித்த சாதனைகள், செய்யப்பட்டு வருகின்ற திட்டங்களை பற்றி நான் சொன்னேன். ஆனால், என்னதான் இருந்தாலும் உங்கள் மாவட்டத்துக்கு வந்துவிட்டு, திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் போக முடியுமா? சாமிநாதன் விடமாட்டார் - கயல்விழி செல்வராஜ் விடமாட்டார் - நீங்களும் விடமாட்டீர்கள். அதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சில அறிவிப்புக்களை வெளியிட விரும்புகிறேன்.

முதலாவது அறிவிப்பு

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் அடுத்த கட்டமான, நீராறு-நல்லாறு மற்றும் ஆனைமலையாறு திட்டமானது, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

அதை செயல்படுத்த, கேரள மாநில அரசிடம் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நம்முடைய விவசாயிகளின் இந்த கனவுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

இரண்டாவது அறிவிப்பு

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பாசனப்பகுதியில், பல வாய்க்கால்கள் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருப்பதாக பாசன சங்கத் தலைவர்களும் - விவசாயிகளும் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று, வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்காக இந்த ஆண்டே 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மூன்றாவது அறிவுப்பு

திருப்பூர் மாநகரத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கின்ற வகையில், நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட மைய நூலக கட்டடம் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். திருப்பூர் மாநகராட்சி அமர்ஜோதி கார்டன் பகுதியில், பல்நோக்கு விளையாட்டு அரங்கம் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

நான்காவது அறிவிப்பு

காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்த, பரஞ்சேர்வழி சிவன்மலை, கீரனூர் ஊராட்சிகளில் 11 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு

தாராபுரம் வட்டத்தில் இருக்கின்ற வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில், நஞ்சியம்பாளையம் அருகே உப்பாற்றின் குறுக்கே, 7 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

ஆறாவது அறிவிப்பு

ஊத்துக்குளி வட்டத்தில் ஆறரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.

ஏழாவது அறிவிப்பு

உடுமலைப்பேட்டை பகுதியில் இருந்து சட்டத் துறை அமைச்சராக பதவி ஏற்று, உடுமலைப்பேட்டை அரசு கல்லூரி அமைக்க 25 ஏக்கர் நிலம் வழங்கியவருமான எஸ்.ஜே. சாதிக் பாட்சா அவர்களுடைய பெயரில், தாஜ் தியேட்டர் அருகில் இருக்கக்கூடிய சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்படும்!

இதுமட்டுமல்ல, இன்று காலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, விவசாயிகள் என்னிடத்தில் மனு அளித்தார்கள். அது குறித்து, ஆராய்ந்து, பரிந்துரை வழங்க விரைவில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்றைக்கு பார்க்கிறோம் – எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் இந்த பகுதிக்கு வந்தால் மட்டும் தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் உறுதியோடு சொல்கிறேன் - பழனிசாமி அவர்களின் ஆட்சிக் காலத்தை விட, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில்தான் மேற்கு மண்டலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கு அதிக திட்டங்கள், சாதனைகள் செய்யப்பட்டிருக்கிறது - தொடர்ந்து செய்யப்பட்டும் - தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம் - இன்னும் தொடர்ந்து நாங்கள் தான் செய்து கொண்டு இருப்போம்.

அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதனால் தான் சொல்கிறேன், எந்த தைரியத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இந்த பகுதியில் இருந்து தன்னுடைய பிரசாரத்தை தொடங்குவார் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், நிச்சயமாகச் சொல்கிறேன் - அதிமுக-வின் 2026 தேர்தல் தோல்வி இங்கே இருந்துதான் தொடங்கப் போகிறது. ஏற்கனவே, 2024 தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்களில் இந்த மண்டலத்திலிருந்து தான் அவர் தோல்வியை பார்த்துவிட்டார்.

“திராவிட மாடல் 2.Oல் இதுவரை அடையாத புதிய உச்சத்தை தமிழ்நாடு அடையும்!” : திருப்பூரில் முதலமைச்சர் பேருரை!

அதுதான் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் அது தொடரப் போகின்றது. ஊர் ஊராக சுந்தரம் டிராவல்ஸ் பஸ்ஸில் சென்று, பொய்களை கத்தி கத்தி உரக்கப் பேசினால், தன்னுடைய அலங்கோல ஆட்சியை மக்கள் மறந்துவிட்டு, இவர் பேசுவதை எல்லாம் நம்புவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்! ஆனால், அவர் ஆசையில் மண் விழுகின்ற மாதிரி, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் என்று நம்முடைய அரசின் திட்டங்கள் மக்களிடம் பெரிய ‘ஹிட்’ ஆகிவிட்டது.

அந்த வயிற்றெரிச்சலில் தான், தி.மு.க. அரசு மேலும், மேலும் ஸ்கோர் செய்துவிடக் கூடாது - மக்களுக்கு நன்மை நடந்திடக் கூடாது என்று மக்கள் நலத் திட்டங்களுக்கு தடை விதிக்க நீதிமன்றம் சென்றார்!

ஆனால், நீதிமன்றம் என்ன சொன்னது? அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொள்வதற்கு நீதிமன்றத்தை நாடுவது தவறு என்று சொன்னது மட்டுமல்ல, நம்முடைய அரசுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் - 10 இலட்சம் ரூபாய் நன்கொடை தருவது போல - மாண்பமை உச்சநீதிமன்றம் ‘ஃபைன்’ போட்டு அனுப்பிவிட்டார்கள்.

இது உங்களுக்கு அவமானமாக இல்லையா? அதுமட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே பெஸ்ட் மாநிலம் தமிழ்நாடு தான் என்று, நாங்கள் சொல்லவில்லை - அவர்களின் கூட்டணியில் இருக்கின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசே அறிக்கையை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படி தொடர்ந்து அவருக்கு அடி மேல் அடி விழுகிறது. இதனால், விரக்தியின் உச்சத்துக்கே எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் போய்விட்டார். அதனால்தான், முதலமைச்சர் என்கின்ற மக்கள் அளித்த பொறுப்புக்குக் கூட மரியாதை தராமல், தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசிக் கொண்டு வருகிறார். அதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படவில்லை.

இன்னும் பேசுங்கள்; இன்னும் இறங்கிப் பேசுங்கள். நான் அதைப் பற்றி கவலையேபடவில்லை. எங்கள் பணி, மக்கள் பணி. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லி, என்னுடைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும், பேச்சைக் குறை – செயலில் மட்டுமே காண்பிக்கவேண்டும்.

ஏதோ தன்னை எம்.ஜி.ஆர்., என்று நினைத்துக் கொண்டு, ஜெயலலிதா அம்மையார் மாதிரி நினைத்துக் கொண்டு சவுண்டு விடுகிறார். ஆனால், பாவம் அவருக்குத் தெரியவில்லை. அவருடைய வண்டி கிளம்பியதும், சொந்த கட்சிக்காரங்களே என்ன கமெண்ட் அடிக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை.

அவருடைய எந்த சதித் திட்டமும் நம்முடைய அரசின் சாதனைகள் முன்னால் எடுபடவில்லை, இனியும் எடுபடாது! நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து நாம் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

அனைவருக்குமான நல்லாட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம். இந்த நல்லாட்சி எந்நாளும் தொடரவேண்டும் என்றுதான் மக்களாகிய நீங்கள் விரும்புகிறீர்கள். இந்த நல்லாட்சி எந்நாளும் தொடரும். உங்கள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்! திராவிட மாடல் 2.0-ல் இதுவரை அடையாத புதிய உச்சங்களை தமிழ்நாடு நிச்சயம் அடையும்! இது உறுதி!

உறுதி! உறுதி! இதை உங்களோடு சேர்ந்து முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் உறுதி எடுக்கிறான்!

banner

Related Stories

Related Stories