தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவு விழாவில் ஆற்றிய உரை:-
கம்பனுக்கு சடையப்ப வள்ளல் போல், கம்பன் கழகத்திற்கு நம்முடைய திராவிட ஆழ்வார் அருமைச் சகோதரர் ஜெகத்ரட்சகன் அவர்கள். அவர் இந்த விழாவிற்கான அழைப்பிதழை என்னிடம் வழங்கியபோது, என்னுடைய பெயருக்கு முன்னால், 'நடையில் நின்றுயர் நாயகன்' என்று அச்சிடப்பட்டிருந்தது.
“நடந்து நடந்து மக்களைச் சந்திப்பதால் இந்தப் பட்டம் கொடுக்கிறீர்களா” என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, “இது கம்பராமாயண வரி” என்று சொன்னார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் காட்டிய வழியில் தமிழ்நாட்டின் உயர்வுக்கான பாதையில் நடக்கும் எனக்கு கம்பரின் வரிகளை கொடுத்த திராவிட ஆழ்வாரை, நானும் கம்பரின் வரிகளாலேயே வாழ்த்த விரும்புகிறேன்.
“சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவரல்ல, ஆயிரத்தில் ஒருவர்' என்று சொல்கிறார் கம்பர். அப்படி, நம்முடைய ஜெகத்ரட்சகன் அவர்களும் குணத்தில் ஆயிரத்தில் ஒருவர்தான்! என்ன இது? ஸ்டாலினுக்கும் கம்பன் விழாவிற்கும் என்ன தொடர்பு? என்று யாரும் வியக்க வேண்டாம்.
1999-இல் இதே அரங்கில், நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் முன்னின்று நடத்திய கம்பன் விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் பங்கேற்றார். அந்த மேடையில் ஜெகத்ரட்சகனும் இருந்தார். அதற்கும் முன்னால், 1969-இல் பெரியவர் சா.கணேசன் காரைக்குடியில் நடத்திய கம்பன் விழாவிலும் முத்தமிழறிஞர் கலைஞர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் என்ன சொன்னார் என்றால், “இந்த விழாவிற்கு வந்த என்னை ஆச்சரியத்தோடு பார்க்காதீர்கள், என்னை அழைத்து வந்தவர்களை ஆச்சரியத்தோடு பாருங்கள்” என்று நகைச்சுவையாக சொன்னார்.
நானும் அப்படித்தான், கம்பரின் தமிழுக்காகவும் - ஜெகத்ரட்சகனின் அன்புக்காகவும் இங்கு வந்திருக்கிறேன். இந்தச் சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவாக, அறிஞர்கள் பலரும் விருதுகள் பெற்றிருக்கிறார்கள். ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் ‘கவிச்சக்கரவர்த்தி கம்பர்’ விருதை நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து பெற்றிருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!
கம்பன் கழகம் வழங்கும் ‘இயற்றமிழ் அறிஞர்’ விருதைப் பெற்றிருக்கும் பேராசிரியர் ஞானசுந்தரம் அவர்களையும், கம்பன் அடிசூடி பழ.பழநியப்பன் அவர்களையும், முனைவர் சாரதா நம்பி ஆரூரன் அவர்களையும், சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களையும், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களையும் வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்! 3 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற விழாக்கள் இலக்கியச் சுவையை பேசுவது மட்டுமல்லாமல், இன்றைய இளைய தலைமுறைக்கும் இலக்கியச் சுவையை ஊட்டும் வகையில் அமைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
திராவிட இயக்கம், கம்ப இராமாயணத்தை மாறுபட்ட கோணத்தில் பார்த்த இயக்கம். சில கருத்துகளுக்காக விமர்சிக்கப்பட்டாலும், கவிதைக்காக, அதில் இருக்கும் தமிழுக்காக பாராட்டப்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரான காலத்தில்தான் சென்னை கடற்கரையில் கவிச்சக்ரவர்த்தி கம்பருக்குச் சிலை வைக்கப்பட்டது. வடபுலத்தைச் சேர்ந்த வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழ் மண்ணின் மணம் மணக்க கம்பர் எழுதியது நமக்கு தெரியும்.
அயோத்தியின் பெருமையை சொல்லும்போது கூட, காவிரி நாட்டுடன் ஒப்பிட்டவர் கம்பர். இராமனை அவதாரமாக காட்டுவது வால்மீகியின் பார்வை. ஆனால், சக்ரவர்த்தியின் மகனாக தொடங்கி, கோசலை நாட்டு சக்ரவர்த்தியாக முடிப்பது கம்பரின் பார்வை. கதையில் வரும் அரசர்கள் பெயரை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் கம்பர்.
‘கம்பன் கண்ட சமரசம்’ என்ற புத்தகத்தை எழுதிய நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் கம்பன் கழக விழாக்களைத் தொடர்ந்து நடத்தி, கம்பனின் தமிழில் சமூக ஒற்றுமையைக் கண்டார்.
“நதிகள் பலவாக ஓடி வந்தாலும் அது வந்து சேருவது கடல்தான், அதுபோல், வேறு வேறு கடவுள்கள் இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்” என்ற பொருளில் கம்பர் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
1989-ஆம் ஆண்டு இதே கம்பன் கழக விழாவில் உரையாற்றிய தலைவர் கலைஞர் அவர்கள், “கம்பனின் கவிதைகளில் தீட்டிய கனவாம் வளம் கொழிக்கும் திருநாட்டை உருவாக்க உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டார்.
“வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்” என்று கம்பர் சொன்னார். அப்படி வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருக்கிறது. இதுதான் கம்பர் கண்ட கனவு.
இத்தகைய மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதும் கம்பருக்கு ஆற்றும் தொண்டுதான் என்று இங்கு கூடியிருக்கும் இலக்கிய ஆளுமைகள் எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
விருதுகள் பெற்ற எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் சொல்லி, கம்பன் கழக விழாக்களை மிகச்சிறப்பாக நடத்தி வரும் திராவிட ஆழ்வார் ஜெகத்ரட்சகன் அவர்களையும் மனதார பாராட்டி விடைபெறுகிறேன்.