நீட் தேர்வில் நடக்கும் குளறுபடிகள் ஒருபுறம், மாநில கல்வி நிலை, நீட் தேர்வினால் புறக்கணிக்கப்படுவது மறுபுறம் என ஒவ்வொரு மாநிலங்களிலும், நாளுக்கு நாள் நீட் தேர்விற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்த எதிர்ப்புகள், நாடாளுமன்றத்திலும் இந்தியா கூட்டணி எம்.பி.க்களால் முன்வைக்கப்பட்ட நிலையில், தகுந்த விவாதம் மேற்கொள்ளாமல் சாதித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. இந்நடவடிக்கைகளால் மருத்துவக் கல்வியில் மாணவர்கள் அடையும் துயர், மீளா துயராக நீடித்து வருகிறது.
இந்நிலையில், எளிய மக்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வில் வசதி படைத்தவர்கள் செய்யும் முறைகேடுகளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாய், தற்போது பா.ஜ.க ஆளும் மகாராஷ்டிரத்தை சேர்ந்த மருத்துவர் சந்தீப் ஷா, நீட் முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்து, அவர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளப்பத்தில், “தரம், தரம் என்றார்கள்!
NEET தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.
நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!” என கண்டனம் தெரிவித்துள்ளார்.