மு.க.ஸ்டாலின்

”தேர்தல் களம் நம் வெற்றிக்கு முரசு கொட்டி அழைக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

கழக உடன்பிறப்புகளைப் பொதுக்குழுவில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். பொதுக்குழுவில் கூடிடுவோம்! பொதுத்தேர்தலில் வென்றிடுவோம்!

”தேர்தல் களம் நம் வெற்றிக்கு முரசு கொட்டி அழைக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

”கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு” என நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

கூடிக் கலைவதல்ல கழகத்தின் நிகழ்வுகள். திசைவழியைத் தீர்மானிக்கும் செயல்பாடுகளைத் திட்டமிடும் களமாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அமைகின்றது. இதுதான் இந்த இயக்கத்தின் முக்கால் நூற்றாண்டு கால வரலாறு. கழகம் என்ன முடிவெடுக்கும் என்பதை உடன்பிறப்புகள் மட்டுமல்ல, மாற்று இயக்கத்தினரும் உற்று நோக்குகின்ற சூழலில்தான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த கூடல் மாநகராம் மதுரையில் கழகப் பொதுக்குழு கூடுகிறது.

பேரறிஞர் அண்ணா தலைமையில் உருவாகி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையில் இரும்புக் கோட்டையாகக் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் இன்று இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மாநிலக் கட்சி என்ற நிலையை அடைந்திருப்பதற்குக் காரணம், பொதுக்குழு - செயற்குழு - மாநாடு என எதுவாக இருந்தாலும் அது கொள்கை சார்ந்த நோக்கத்துடன் நடத்தப்பட்டு, அதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, செயல்வடிவம் பெறுவதால்தான்.

கட்சியைத் தொடங்கிய நாளிலேயே “களத்திற்கு வா போராடலாம் - சிறையை நிரப்பலாம்” என்று கழகத் தொண்டர்களை அழைத்தார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. பதவி சுகத்திற்காகவே கட்சி தொடங்குபவர்கள், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கட்சியையே அடமானம் வைத்தவர்கள் நிறைந்த இன்றைய அரசியல் சூழலில், சிறைவாசத்தைச் சிரித்த முகத்துடன் ஏற்று, நெருக்கடி நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டுக் கடந்த வெற்றிகரமான இயக்கமாகச் செம்மாந்து நிற்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த மகத்தான இயக்கத்தைக் கட்டிக்காத்த உடன்பிறப்புகளாம் உங்களை வழிநடத்தும் தலைவனாக எனக்கு நீங்கள் அளித்திருக்கும் வாய்ப்பை, மக்கள் நலன் காக்கவும் - மாநில உரிமைகளை மீட்கவும் பயன்படுத்தி வருகிறேன்.

உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், தஞ்சையில் கழகத்தின் விவசாய அணி சார்பில், காவிரி டெல்டா மாவட்டங்களின் அனைத்து விவசாயச் சங்கங்களையும் இணைத்து, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக்கடன் நிபந்தனைகளை உடனே கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக உள்ள கழக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில் வேளாண் பெருங்குடி மக்கள் அணி அணியாய்த் திரண்டு ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுடன் கண்டனக் குரலை எழுப்புகிறார்கள்.

ஏழை - எளிய மக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு, தங்க நகையை அடமானம் வைத்தே கடன் பெற்று வருகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகளால் வங்கிகளில் நகைக் கடன் பெறுவதில் மிகப் பெரும் நெருக்கடியை ஏழை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தனியார் கடன் நிறுவனங்களை அவர்கள் நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதிக வட்டி, வட்டிக்கு வட்டி என்ற நிலைக்கு ஏழைகள் ஆளாவதும், அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்த தங்க நகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் அடமானம் பெற்று, தங்களை வளர்த்துக் கொள்ளவுமான நிலையை இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள நிலையில், மக்களை வாட்டி வதைக்கும் இந்த நிபந்தனைகளைக் கைவிட வேண்டுமெனத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தியிருக்கிறேன். கடிதத்தில் நான் வைத்துள்ள கோரிக்கைக் குரலுடன், கழகத்தின் சார்பில் கண்டனக் குரலையும் விவசாயிகள் ஒருங்கிணைந்து எழுப்புகிறார்கள்.

மக்கள் நலனே நமது நோக்கம். ஒன்றிய பா.ஜ.க. அரசு நாட்டு மக்களின் நிலை பற்றிச் சிந்திக்காமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் நகைக்கடன் நிபந்தனைகள் வரை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தாக்குதல் தொடுத்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களை அந்தத் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள், “ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகள் கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது” என அறிவித்திருக்கிறார். ஒன்றிய அரசு வஞ்சித்தாலும், ஏழை - எளிய மக்களை மாநில அரசின் கூட்டுறவு வங்கிகள் அரவணைக்கும்.

முந்தைய ஆட்சியாளர்கள்போல பதவிக்காக, மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைக்கும் வழக்கம் திராவிட மாடல் அரசுக்கு இல்லை. கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு தர மறுத்தாலும், அண்ணா தந்த இருமொழிக் கொள்கையே இங்கே நிலைத்திருக்கும் என்ற உறுதியுடன் மாநில அரசின் நிதியில் கல்விக்குச் செலவிடுகிறோம். நகைக்கடன் நிபந்தனைகளால் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளை மக்கள் நாட முடியாத நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் மக்களுக்கு உதவுகிறோம். இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசின் செயல்பாடு. மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத உறுதிப்பாடு.

இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது. அவர்களின் மனம் நம் பக்கம் உள்ள நிலையில், தேர்தல் களம் நம் வெற்றிக்கு முரசு கொட்டி அழைக்கிறது. உடன்பிறப்புகளால் தலைவர் பொறுப்பை ஏற்றது முதல், எதிர்கொண்ட தேர்தல் களங்கள் அனைத்திலும் கழகம் தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறது. சளைக்காத உழைப்பும், சரியான வியூகமும்தான் நம் வெற்றிக்கு அடிப்படை.

”தேர்தல் களம் நம் வெற்றிக்கு முரசு கொட்டி அழைக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மடல்!

திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும், இரகசியமாக ஆலோசனைகள் நடத்தியும் எதிரணியினர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நமக்கு எதிரான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான கடமை என்ன? நம் இலட்சியப் பயணத்தின் இலக்கு எது? என்பதையெல்லாம் உடன்பிறப்புகளாம் உங்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் 1-ஆம் நாள் கூடுகிறது. கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனாகவும் பொதுக்குழு உறுப்பினர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் அன்புடன் அழைக்கின்றேன்.

வீரமும் பாசமும் நிறைந்த மதுரை மண்ணில் பொதுக்குழுவா, மாநாடா என வியக்கின்ற வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார் மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி அவர்கள். மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.சேடப்பட்டி மு.மணிமாறன் ஆகியோர் உடனிருந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். தென்மாவட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பொதுக்குழு பணிகளில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். பொதுக்குழு நடைபெறும் அரங்கம், அதற்கான பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவருந்தும் இடம், தங்குமிடங்கள் என ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் அமைத்துள்ளதை நாள்தோறும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறார்கள். காட்சிகளையும் படங்களையும் வாட்ஸ்அப் மூலம் பார்த்து உரிய திருத்தங்களையும் தெரிவித்துள்ளேன். கழகத்தின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியதுடன், எனக்கும் அது பற்றிய விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

ஜூன் 1 காலை 9 மணிக்குப் பொதுக்குழு தொடங்குகிறது. அதற்கேற்ப பொதுக்குழு உறுப்பினர்களான உடன்பிறப்புகள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உரிமை மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காலை 8 மணிக்கே அரங்கத்திற்கு வருகை தந்து, கழகப் பொதுச்செயலாளர் தங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தைக் காட்டி, பதிவு செய்துகொண்டு, அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து, சரியான நேரத்தில் பொதுக்குழு தொடங்கிட உடன்பிறப்புகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.

பொதுக்குழு உறுப்பினர்களின் மனம் திறந்த கருத்துகள், கழக முன்னோடிகளின் உணர்ச்சிமிகு உரைகள், இந்திய அரசியலையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கவிருக்கும் தீர்மானங்கள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய உரை என மதுரை பொதுக்குழு செறிவான நிகழ்ச்சி நிரலுடன் நடைபெறவிருக்கிறது.

2026 சட்டமன்றப் பொதுத்தேர்தல் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு, மக்கள் நலன் காக்கும் ஆட்சி தொடர்ந்திட ஆற்ற வேண்டிய களப்பணிகளைத் தீர்மானித்திடவும், அதனை ஒவ்வொரு தொகுதியிலும் செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்திடவும் கழக உடன்பிறப்புகளைப் பொதுக்குழுவில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். பொதுக்குழுவில் கூடிடுவோம்! பொதுத்தேர்தலில் வென்றிடுவோம்!

banner

Related Stories

Related Stories

live tv