மு.க.ஸ்டாலின்

திருநெல்வேலியின் மாபெரும் நூலகத்திற்கு கண்ணியத்திற்குரிய ‘காயித மில்லத்’ பெயர்!: முதலமைச்சர் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.5.2025) திருச்சிராப்பள்ளி, எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு தொடக்க விழாவில், ஆற்றிய உரை.

திருநெல்வேலியின் மாபெரும் நூலகத்திற்கு கண்ணியத்திற்குரிய ‘காயித மில்லத்’ பெயர்!: முதலமைச்சர் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் நடைபெறும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டைத் தொடங்கி வைத்து, விருதுகள் வழங்குவதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் நான் அடைகிறேன்! என்னுடைய பெருமைக்கு முக்கிய காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், அய்யா காதர்மொய்தீன் அவர்களுக்கு ‘உமறுப்புலவர் விருதை’ நான் வழங்குகிறேன் என்பதுதான்!

கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் அவர்களுடைய வரிசையில், இன்றைக்குத் தமிழ் சமுதாயத்துக்காக வழிகாட்டிக் கொண்டு இருப்பவர்தான், நம்முடைய அய்யா காதர் மொய்தீன் அவர்கள்! நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர்! சிறந்த பண்பாளர்! ஆழமான கருத்துக்களைச் சொல்லக் கூடியவர்! அதை அப்படியே அன்பாகச் சொல்லக்கூடியவர்! எப்போதும் சமுதாய முன்னேற்றம் – மாநில நலன் என்று மட்டுமே சிந்தித்து செயல்படக் கூடியவர்!

அவருக்கும், இந்த மாநாட்டில் விருதுகள் பெற்றிருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும்போது, அய்யா பேராசிரியர் அவர்கள், “நீங்கள் கட்டாயம் வரவேண்டும்” என்று என்னிடத்தில் சொன்னார்.

அவர், என்னுடைய வழிகாட்டிகளில் ஒருவராக விளங்கக்கூடியவர்; எல்லாவற்றிற்கும் மேலாக தலைவர் கலைஞருடைய உற்ற தோழர் அவர்! அவர் அழைப்புக்கு நான் மறுப்பு சொல்ல முடியுமா? இதோ, அந்த அன்புக் கட்டளையை ஏற்று, இந்த மேடையில் அடியேன் இருக்கிறேன். அதுதான் உண்மை. நானும், திராவிட முன்னேற்றக் கழகமும் எந்தளவுக்கு, சிறுபான்மையின மக்கள் மேல் அக்கறையோடு செயல்படுகிறோம் என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்!

இந்த உறவு இன்றைக்கு, நேற்று இல்லை! இதைப் பற்றி எத்தனையோ மேடைகளில் நான் பதிவு செய்திருக்கிறேன். உங்களுக்கான பாதுகாப்பு அரணாக மட்டுமில்லை, உங்களுக்கான உரிமைகளையும், சலுகைகளையும் வழங்குவதில், திராவிட முன்னேற்றக் கழக அரசுதான், என்றைக்கும் முதன்மையான அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது!

கடந்த நான்காண்டுகளில், சிறுபான்மையின மக்களுடைய சமூக - பொருளாதார, கல்வி நிலைகளை மேம்படுத்துவதற்காக ஏராளமான திட்டங்களை, சாதனைகளை படைத்திருக்கிறோம். அண்மையில்கூட, நங்கநல்லூரில் ‘தமிழ்நாடு ஹஜ் இல்லம்’ கட்டப்படும் என்று அறிவித்தேன். பலரும் என்னிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

இதேபோல், நம்முடைய திராவிட மாடல் அரசில் ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து, இசுலாமிய மக்களின் உரிமைகளை காக்க குரல் கொடுத்து வரக்கூடிய இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

அதே நம்பிக்கையுடன் தான் நீங்களும் சில கோரிக்கைகளை இந்த மாநாட்டு மூலமாக, தீர்மானங்களாக வடித்தெடுத்து சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கிறது.

முதல் அறிவிப்பு - திருநெல்வேலி மாவட்டத்தில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் சட்டமன்றத்தில் நான் அறிவித்திருக்கிறேன். அந்த நூலகத்திற்கு கண்ணியத்திற்குரிய காயித மில்லத் அவர்கள் பெயர் சூட்டப்படும்.

திருநெல்வேலியின் மாபெரும் நூலகத்திற்கு கண்ணியத்திற்குரிய ‘காயித மில்லத்’ பெயர்!: முதலமைச்சர் அறிவிப்பு!

இரண்டாவது அறிவிப்பு - சென்னைப் பல்கலைக் கழகத்தில், இசுலாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இந்த கோரிக்கையை ஏற்று இதை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

1973-ல் இருந்து இதுவரைக்கும் எட்டு மாநாடுகள் நடத்தி, முடித்து, இப்போது ஒன்பதாவது மாநாட்டை நான் தொடங்கி வைத்திருக்கிறேன். தலைவர் கலைஞர்தான் முத்தமிழறிஞர்! முத்தமிழ் வித்தகர்! ஆனால், நான், முத்தமிழின் சுவையையும் ரசிக்கக்கூடியவன் நான், ஒரு ரசிகனாக இருக்கக்கூடியவன் நான்!

நான் பெரிதும் ரசித்த, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பெயரை இந்த அரங்கத்திற்கு சூட்டியிருக்கிறீர்கள். அவர் மறையவில்லை. தன்னுடைய தமிழ்க் கவிதைகளால் என்றைக்கும் நம்மோடு வாழ்ந்துகொண்டு இருப்பார் என்பதற்கு அடையாளம்தான் இது! கவிக்கோ என்றதும் தலைவர் கலைஞர் சொன்னதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது…

“வெகுமானம் எதுவேண்டும் என்று கேட்டால், அப்துல் ரகுமானை தான் கேட்பேன்” என்று தலைவர் கலைஞர் சொன்னார்! இதைவிட பெரிய பாராட்டு நிச்சயமாக இருக்க முடியாது! அப்படிப்பட்ட கவிக்கோ அவர்களுடைய நூல்களைதான், சில நாட்களுக்கு முன்னால், நாட்டுடைமையாக்கி, அவரது குடும்பத்திற்கு, பத்து இலட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறோம்.

அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டிருக்கிறோம்! அதேபோல், தி.மு.க.வினருடைய நெஞ்சிலும் தினமும் ஒலித்துகொண்டு இருக்கும் குரலுக்குச் சொந்தக்காரர், ‘இசைமுரசு’ நாகூர் ஹனிபா அவர்கள்!

அவரது நூற்றாண்டு பிறந்தநாளையும், அறிவியல் தமிழ் அறிஞரான மணவை முஸ்தபா பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டிருக்கிறோம்! இப்படி, “இசுலாம் எங்கள் வழி - இன்பத் தமிழ் எங்கள் மொழி” என்று வாழ்ந்த பெருமக்கள் தமிழ்நாட்டில் அதிகம்!

சிந்தையள்ளும் ‘சீறாபுராணம்’ தந்த உமறுப்புலவர்

புலவர்களுக்கு கொடுப்பதையே கடமையாக கருதிய வள்ளல் சீதக்காதி

செய்குத் தம்பி பாவலர்

குணங்குடி மஸ்தான் சாகிபு

கவி கா.மு.ஷெரீப்

நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் - இப்படி பல்வேறு இசுலாமிய இலக்கியப் பெருமக்கள் தமிழுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள்.

இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு என்று 9 நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது! “இணைப்பே இலக்கியம்” என்பதை இந்த மாநாட்டின் நோக்கமாக வைத்திருக்கிறீர்கள்!

இந்தக் காலத்திற்கு தேவையான இணைப்புதான். இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இதயங்களுக்கும் தேவையான இணைப்புதான்! இப்படிப்பட்ட இணைப்பை, இலக்கியங்களும் இதுபோன்ற இலக்கிய மாநாடுகள் உருவாக்கவேண்டும்! நிச்சயம் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்!

தமிழ் நம்மை இணைக்கும்! இலக்கியம் நம்மை இணைக்கும்! எனவே, தமிழால் நாம் இணைவோம்! தமிழர்களாய் நாம் இணைவோம்! இதயங்களால் இணைவோம்! என்று கூறி, அய்யா காதர்மொய்தீன் உள்ளிட்ட விருதாளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய வாழ்த்துகள்.

banner

Related Stories

Related Stories