மு.க.ஸ்டாலின்

“தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்!” : முதலமைச்சர் உத்தரவு!

தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

“தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்!” : முதலமைச்சர் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (2.5.2025) தலைமைச் செயலகத்தில், பொது இடங்களில் குறிப்பாக நகரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு பாதிப்புகளும் அச்சுறுத்தலான சூழலும் நிலவுவதை கருத்தில்கொண்டு, இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள், கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இக்கூட்டத்தில் பேசும்போது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய, குறிப்பாக நகரப் பகுதிகளில், நாய்கள் இனப்பெருக்க கட்டுபாடு நடவடிக்கைகளை தீவிரமான முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு நல்லதொரு மாற்றத்தை விரைவில் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிப்பதற்கும், நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை அதிகளவில் மேற்கொள்ளவும், பின்வரும் நடவடிக்கைகள் எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 500 மருத்துவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கிடவும், உள்ளாட்சி அமைப்புகளில் 500 நபர்களுக்கு நாய்களை பிடிப்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும்.

கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்கு 72 காப்பகங்கள் அமைக்கப்படும். காப்பகங்கள் அமைக்க இடம் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும். தொண்டு நிறுவனங்கள் இக்காப்பகங்களை பராமரிக்கும் பணியை மேற்கொள்ளும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்.

மேலும், விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக அறுவை சிகிச்சை மையங்கள் மற்றும் அத்துடன் இணைந்த நாய் காப்பகங்கள் கால்நடை மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படும்.

மாவட்ட அளவில் நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு/ வெறிநோய் தடுப்பூசி பணிகள் துறை மற்றும் தனியார் மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ள கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

“தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்!” : முதலமைச்சர் உத்தரவு!

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் 11.4.2025ம் அறிவிக்கையின் படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் மாநில அளவிலான விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு கண்காணிப்பு குழு அமைத்து சமீபத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ளூர் கண்காணிப்பு குழு அமைத்து நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதை கண்காணிக்க ஏதுவாக தலைமையிடம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அலுவலர்களை நியமித்து இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் (AWB) உறுதி செய்ய வேண்டும். இப்பணிகளுக்கு தேவையான நிதி வழங்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 5 மையங்கள் செயல்படும் நிலையில், புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்கள் உருவாக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், இத்துடன் இணைந்து 10 புதிய கால்நடை மருத்துவமனைகள் தொடங்கவும் இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

அதிகரித்துவரும் நாய்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை பணிகளை துரிதமாக மேற்கொள்ள கூடுதலாக நாய் பிடி வாகனங்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், அதற்கு தேவையான பணியாளர்களை நியமிக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்காணும் நடவடிக்கைகளுக்காக உட்கட்டமைப்பு வசதிகளை விரைந்து முடித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வந்து நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories