தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.4.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் 143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவைகளை துவக்கி வைத்து, அம்மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டார்.
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துவக்க விழாவின்போது, நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
பின்னர், நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்கள் மற்றும் செவிலியர் சங்கத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
=> நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் :
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 25 ஏக்கர் பரப்பளவில் 143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கைகளுடன்
8 தனித்துவமான கட்டடங்களை ஒன்றாக இணைக்கும் மையக் கட்டடம், அவசர மருத்துவ பிரிவிற்கு (Emergency Block) தனிக் கட்டடம், வெளிநோயாளிகள் மருத்துவ சேவைகளுக்கான Block A மற்றும் B கட்டடங்கள், நான்கு மின் தூக்கிகள் ஆகியவை அமைக்கப்பட்டு, அதில் ECHO, Treadmill மற்றும் ஆய்வக சேவைகள் வழங்கப்படும்.
இப்புதிய கட்டமைப்பின், Block C-யில் 10 நவீன அறுவை சிகிச்சை அறைகளில் 4 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அறைகளும், மருத்துவ வாயு குழாய் அமைப்பு (Medical Gas Pipeline System) மற்றும் 10KL LMO டேங்க் மூலம் மைய ஆக்சிஜன் விநியோகிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதோடு, இவ்வளாகத்தில் இரண்டு மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தீவிர சிகிச்சைப் பிரிவு Block D-யில் தீவிர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள் (ICU), 15 படுக்கைகள் கொண்ட ECRC – IIம் கட்டம்
மற்றும் ஒரு மின் தூக்கியும் அமைக்கப்பட்டுள்ளது.
உள்நோயாளி சேவைகள் பிரிவு (Blocks E, F, G & H) - உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் வகையில் இந்த நான்கு பிரிவுகளும் அமைக்கப்பட்டு, இதில் நான்கு மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு மருத்துவப் பிரிவு (Block F) – மலைவாழ் மக்களிடையே காணப்படும் இரத்தசோகை, சிக்கில்செல் அனீமியா மற்றும் தலசீமியா ஆகிய நிலைப்பாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் Block-Fல் சிறப்பு மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவசர மருத்துவப் பிரிவு (Emergency Block) - இந்த மருத்துவமனையில், 20 படுக்கைகளுடன் 24 மணி நேரமும் விபத்து மற்றும் அவசர மருத்துவ சேவைகளான TAEI (Tamil Nadu Accident & Emergency Care Initiative), PREM (Paediatric Resuscitation & Emergency Management) ஆகியவை வழங்கப்படுகின்றன.
இப்புதிய மருத்துவமனை வளாகத்தில் அவசர மற்றும் திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளுக்குத் துணையாக அனைத்து வசதிகளும் கொண்ட இரத்த வங்கி, நோயாளிகளுக்கு சத்துள்ள உணவு வழங்குவதற்காக தனியொரு சமையலறை, அதிநவீன வசதிகளுடன் தானியங்கி சலவை இயந்திரம், உலர்த்தும் இயந்திரம் மற்றும் இஸ்த்ரி இயந்திரங்கள், தனியான பிரேதக் கூடம் (Mortuary Block) ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவக் கழிவுகளை திறம்படச் சேகரித்து, உடனடி செயலாக்கம் செய்து, பாதுகாப்பான முறையில் அகற்றும் பணிகளை உறுதி செய்யும் வகையில் சிறப்பான மருத்துவ கழிவு மேலாண்மை மையம் (Biomedical Waste Management Block) மற்றும் மருத்துவமனை வளாகத்திற்குள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (Sewage & Effluent Treatment Plant) ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில், மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கும் வகையில் 230 மருத்துவர்கள், 330 செவிலியர்கள், 5 முதன்மை மருந்தாளுநர்கள், 13 மருந்தாளுநர்கள், 13 ஆய்வக நுட்புநர்கள், 13 கதிர்வீச்சு நுட்புநர்கள் மற்றும் 5 மருத்துவ பதிவேடு நுட்புநர்கள் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
=> நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களின் விவரங்கள் :
7.52 கோடி ரூபாய் மதிப்பிலான MRI - 1.5 Tesla, 2.18 கோடி ரூபாய் மதிப்பிலான CT Scan - 16 Slice, 56 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 800 MA Digital X-Ray உள்ளிட்ட உயர்தர கதிரியக்க கருவிகள் மற்றும் 1.74 கோடி ரூபாய் மதிப்பிலான இதர மருத்துவ உபகரணங்கள் இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர்
ப. செந்தில்குமார், இ.ஆ.ப., நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர்
லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.ஜெ. சங்குமணி, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.எம். கீதாஞ்சலி, இந்து குழுமத்தின் தலைவர் என். ராம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.