பா.ஜ.க.வின் பாசிச செயல்பாடுகளாலும், அவர்களிடம் இருக்கும் ஊழல் பணம் உள்ளிட்ட பரிவாரங்களை கொண்டும் பல மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டு வருகிற நிலையில், அசைக்க முடியாத ஆற்றலாக விளங்குகிறது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் முன்னெடுத்த தமிழ் உணர்வு, சமூகநீதி, சமத்துவம், பெண் உரிமை, கல்வி, மாநில தன்னாட்சி என அனைத்து கொள்கைகளையும் தன் நெஞ்சில் ஏந்தி ஆட்சி செய்து வரும் திராவிட மாடல் முதலமைச்சர், மக்களுக்கு ஆற்றி வரும் ஆக்கப்பணிகள் ஏராளம்.
’எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கோட்பாடே திராவிட மாடல் என்பதன் அடிப்படையில்,
இன்னுயிர் காப்போம் திட்டம், ஊட்டச்சத்து உதவித்தொகை திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பெண் குழந்தையை காப்போம் - கற்பிப்போம் திட்டம், புதுமை பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மணற்கேணி திட்டம், தோழி பெண்கள் தங்கும் விடுதி திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் என அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் எல்லோருக்குமானவராய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.
இந்த திட்டங்கள் எல்லாம் மதுரை AIIMS மருத்துவமனை போல, வெறும் அறிவிப்போடு நிறுத்தப்பட்ட திட்டம் அல்ல. தகுந்த அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு, பல இலட்சம் மக்கள் பயன்பெற்று வருகிற திட்டங்கள்.
இந்த திட்டங்களால் பயன்பெற்று வரும் தமிழ் நாட்டு இளைஞர்கள் திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தி.மு.க.வில் அதிகளவில் இணைந்து வருகின்றனர். இந்த எழுச்சி தற்போது வட மாநிலங்களிலும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. இந்த அச்சத்தின் காரணமாய் காங்கிரஸ் கட்சியை விட தி.மு.க.வை முதன்மை எதிரியாக கருத தொடங்கியுள்ளது பா.ஜ.க.
அதன் காரணமாகவே, கடந்த 10 ஆண்டுகளில் விரலளவில் எண்ணிவிடக்கூடிய அளவு தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, தற்போது மாதம் ஒருமுறை வரத்தொடங்கியுள்ளார்.
என்ன தான் நாட்டின் பிரதமராக இருந்தாலும், வட மாநிலத்தில் பெரிய கட்சியாக பா.ஜ.க வலம் வந்தாலும், சமூக நீதி நிறைந்த தமிழ்நாட்டில் எவ்வித மத அழுக்கையும் செலுத்த இயலாது என்பதை அறிந்த மோடி, முற்காலங்களில் விமர்சித்த அ.தி.மு.க தலைவர்களை தலைமேல் வைத்து புகழ்ந்து வருகிறார்.
அதற்கு ஈடாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றியும், மக்கள் வளம் பற்றியும் அறிந்திடாத மக்களிடம், இவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் .
இது போன்ற அரசியல் விளையாட்டுகளுக்கு சற்றும் செவி சாய்க்காமல் தனக்கென தனி பாதை உருவாக்கி, வரலாறு படைத்து வருகிறார் திராவிட தலைவர் மு.க.ஸ்டாலின்.
அவரின் எண்ணம், இந்துத்துவ வாதிகளை விரட்டுவது மட்டுமல்ல. தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்து செல்லுவதும் தான். அதன் காரணமாகவே, அவர் தனக்கு வகுத்துக்கொண்ட இலக்குகள் “தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்றுவது மற்றும் உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை உருவெடுப்பது” ஆகியவை அமைந்துள்ளன.