மு.க.ஸ்டாலின்

”மீண்டும் பா.ஜ.கவை ஆள அனுமதிப்பது இந்தியாவின் எதிர்காலத்துக்கு கேடு” .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது தமிழ்நாட்டுக்கும் - இந்திய நாட்டுக்கும் - இந்தியாவின் எதிர்காலத்துக்கும் அது கேடாக முடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”மீண்டும் பா.ஜ.கவை ஆள அனுமதிப்பது இந்தியாவின் எதிர்காலத்துக்கு கேடு” .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.06.2023) திருவாரூர் மாவட்டம், காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து ஆற்றிய உரை:-

நெஞ்சில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்திருக்கக்கூடிய நிலையில், உங்கள் முன்பு நான் நின்று கொண்டிருக்கிறேன். வான்புகழ் வள்ளுவருக்குத் தலைநகரில் கோட்டம் கண்ட தலைவர் கலைஞர் அவர்களுக்கு திருவாரூரில் கோட்டம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

"ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் - நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!" - என்று 13 வயதில் எந்தத் திருவாரூர் வீதிகளில் போர்ப் பரணி பாடி வந்தாரோ, அதே திருவாரூரில் கலைஞருக்குக் கோட்டம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.பேரறிஞர் அண்ணா அவர்களைக் கலைஞர் அவர்கள் முதன்முதலாக சந்தித்த ஊர் இந்த திருவாரூர்.

தலைவராகப் பிற்காலத்தில் ஆனவர் அல்ல நம்முடைய தலைவர் கலைஞர். தலைவராகவே பிறந்தவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர். அதற்கு அடித்தளமாக அமைந்த ஊர் தான் இந்த திருவாரூர்.

மன்னர்கள் கூட தாங்கள் ஆளும் போதுதான் கோட்டமும் கோட்டையும் கட்டுவார்கள். ஆனால் கலைஞர் அவர்கள் நிறைவுக்குப் பிறகு கோட்டம் இங்கே எழும்பி இருக்கிறது.

இன்னமும் கலைஞர் வாழ்கிறார் – ஏன் ஆள்கிறார் என்பதன் அடையாளமாக தான் கம்பீரத்தோடு இந்தக் கோட்டம் இங்கே அமைந்திருக்கிறது.

எனது தாயார் - தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் என் தந்தைக்கு - என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாகவே நான் இதை கருதுகிறேன்.

”மீண்டும் பா.ஜ.கவை ஆள அனுமதிப்பது இந்தியாவின் எதிர்காலத்துக்கு கேடு” .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

‘தத்துவமேதை’ டி.கே.சீனிவாசன் அவர்களும் - கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களும் வாழ்த்திப் பேசிட, புரட்சித் தோட்டமான தலைவர் கலைஞரை எனது தாயார் திருமணம் செய்துகொண்டதும் இதே திருவாரூரில்தான்.

தலைவர் கலைஞர் வாழ்க்கையில் எத்தனை மேடு பள்ளங்கள் வெற்றி தோல்விகள் - ஏற்ற இறக்கங்கள் - ஏற்பட்டாலும் அத்தனையையும் சிரித்த முகத்தோடு எதிர்கொண்டு எப்போதும் அதே கருணை உள்ளத்தோடு இருந்தவர் எனது தாயார் தயாளு அம்மா அவர்கள்.

கலைஞர் கோட்டம் என்பது,

கலைஞரின் பன்முக பரிமாணங்களைச் சொல்லும் கருவூலம் –

கலைஞரின் திருவுருவச்சிலை

முத்துவேலர் நூலகம்

இரண்டு அரங்குகள்

இரண்டு தியேட்டர்கள்

பாளையங்கோட்டைச் சிறையில் இருப்பது போன்ற வடிவமைப்பு

செல்ஃபி பாயிண்ட்

கலைஞரோடு படம் எடுத்துக் கொள்ளும் வசதி - என அனைத்தும் அடங்கியதாக இந்தக் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் தேரழகு என்பார்கள். அந்த திருவாரூர்த் தேர், கலைஞர் கோட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்டடக்கலையோடு நவீன வசதிகளையும் இணைத்து இது அமைக்கப்பட்டிருக்கிறது.

2018-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவுற்றபோது நானும் என்னுடைய சகோதரி செல்வியும் இந்த இடத்தை நாங்கள் விலைக்கு வாங்கினோம். அதற்குப் பிறகு ஒரு அறக்கட்டளையின் சார்பில் கலைஞர் கோட்டமாக உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து, நான்கு ஆண்டு காலமாக அதற்காக சிரமங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு இதை கட்டி முடித்திருக்கிறார்கள.

இதனைக் கட்டி முடிப்பதில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு ஆலோசனைகள் வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு முதலில் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பார்த்துப் பார்த்துச் செதுக்கியதைப் போல, கண்ணும் கருத்துமாக இந்தக் கலைஞர் கோட்டத்தை வடிவமைப்பதை, கவனமுடன் மேற்பார்வையிட்டார் நம்முடைய வேலு அவர்கள். அவருக்கு எத்தனை பாராட்டுகள் சொன்னாலும் தகும்.

அதேபோல், இந்தக் கோட்டத்தைச் சிறப்புற உருவாக்கித் தந்திருக்கக்கூடிய தயாளு அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மக்களின் மருத்துவராக விளங்கும் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கும், அறங்காவலர் சம்பத் குமார் அவர்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கட்டுமான நிறுவனம் - இதில் பணியாற்றிய பணியாளர்கள் - கட்டுமானக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

”மீண்டும் பா.ஜ.கவை ஆள அனுமதிப்பது இந்தியாவின் எதிர்காலத்துக்கு கேடு” .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

தலைவர் கலைஞர் அவர்கள் தமிழினத் தலைவராகப் போற்றப்பட்டவர். தலைநகர் சென்னை முதல், கடல்நகர் குமரி வரைக்கும் உள்ள தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும் திட்டங்கள், சேவைகள், சாதனைகள், உதவிகள் செய்தவர். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என வாழ்ந்த புறநானூற்றுப் புலவர் அவர். ஆனாலும் அவரிடம் உங்களுக்குப் பிடித்த ஊர் எது என்று கேட்டபோது, ‘நான் பிறந்த திருக்குவளை’ என்றுதான் அவர் சொல்வார்.

"உருக்குலையா மங்கையவள்

ஒளிமுகத்தை முத்தமிட

கருக்கலிலே கண்விழிக்கும் திருக்குவளை" - என்று உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் எழுதிய வரிதான் தனக்குப் பிடித்த வரி என்று சொல்லி பலமுறை குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். அந்த அளவுக்கு திருக்குவளையை காதலித்தவர் கலைஞர் அவர்கள்.

தான் வாழ்ந்த இல்லத்தில் அன்னை அஞ்சுகம் பெயரால் படிப்பகமும், தந்தை முத்துவேலர் பெயரால் நூலகமும் அமைத்தார்கள்.

பள்ளியில் மேல்படிப்பு படிக்க திருவாரூர் வந்தார் நம்முடைய தலைவர் கலைஞர். அதன்பிறகு திருவாரூரே அவர் கருவாக - திருவாகக் காரணமான ஊர் ஆகியது. கலைஞரை நாடு போற்றும் தலைவராக ஆக்கிய ஊர் இந்த திருவாரூர்.

குளித்தலை, தஞ்சாவூர், சைதாப்பேட்டை, அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் என எத்தனை தொகுதிகளில் தலைவர் கலைஞர் அவர்கள் போட்டியிட்டு இருந்தாலும் இறுதியாய் வந்து நின்ற இடம் திருவாரூர். ஒரு முறையல்ல; இரண்டு முறை வென்ற இடம் இந்த திருவாரூர்.

தேர் எப்போதும் புறப்பட்ட இடத்திற்கே வந்து நிலை கொள்ளும் என்பதைப் போல இருந்தது கலைஞரின் பயணமும். அதனால்தான் திருவாரூரில் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்க்காரர்களுக்கு மட்டுமல்ல, இந்த டெல்டா மாவட்டங்களுக்கே மிகச்சிறந்த - பெரிய - பிரமாண்டமானதாக திருமணம் மற்றும் விழாக்கள் நடத்துவதற்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதனைக் கட்டி எழுப்பியதைப் போலவே கவனமாக - இதனுடைய அழகு குறையாமல் பாதுகாத்து கவனிக்க வேண்டும் என்று இதன் பொறுப்பாளர்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அரங்கம் அமைப்பது கூட எளிது. ஆனால் பராமரிப்பதுதான் சிரமம். சிரமம் பார்க்காமல் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

"எனது கால்கள் கடைக் கோடியில் நிற்கும் மக்களைச் சுற்றியே உலா வருகின்றன. எனது கரங்கள் அவர்களைக் கரையேற்றிவிடவே நீள்கின்றன. என் கண்கள் அவர்களுக்காகவே ஒளி உமிழ்கின்றன" - என்று சொன்னார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

நிறைவுற்ற வாழ்க்கைக்குப் பிறகும் – மருத்துவமனையாக – நூலகமாக - இது போன்ற கோட்டமாக பயனளித்துக் கொண்டு இருக்கக்கூடியவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

இன்று நான் தலைவர் கலைஞர் தலைமையிலான அரசை தான் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த திராவிட மாடல் ஆட்சியை நான் கலைஞருக்கு காணிக்கையாக செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

எந்த சம்பவம் நடந்தாலும் - தலைவர் இருந்தால் என்ன முடிவெடுப்பார் என்று யோசித்து அந்த முடிவையே நான் எடுக்கிறேன். அதனால்தான் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறேன்.

”மீண்டும் பா.ஜ.கவை ஆள அனுமதிப்பது இந்தியாவின் எதிர்காலத்துக்கு கேடு” .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

‘எனது உயரம் எனக்குத் தெரியும்’ என்று சொல்லிக் கொண்டாரே தவிர - இந்தியாவின் ஜனநாயகம் எப்போதெல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகியதோ அப்போதெல்லாம் இந்தியத் தலைவராக தனது எல்லையை விரித்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்கள் வருவதாக இருந்தது. ஆனால், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால், வர இயலவில்லை. எனவே, இன்று காலையில் என்னை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

ஆனாலும், அவர் இன்று நிகழ்த்துவதாக இருந்த உரையை, தமிழாக்கம் செய்து நம்முடைய திருச்சி சிவா அவர்கள் இங்கே வாசித்தார்கள். அந்த உரை மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.

பீகார் மாநில துணை முதலமைச்சர் மாண்புமிகு தேஜஸ்வீ அவர்கள் வந்திருக்கிறார். அவருக்கு இந்த நேரத்திலே என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகஸ்ட் 15 - விடுதலை நாள் அன்று மாநில முதலமைச்சர்கள் எல்லாம் கொடி ஏற்ற வேண்டும் என்று இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் அவர்கள்.

அதேபோல் இந்திய அரசியலில் 1971 முதல் அனைத்து அரசியல் பெரு மாற்றங்களுக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இந்திரா காந்தி அம்மையார் தொடங்கி அத்தனை இந்தியப் பிரதமர்களுடனும் நல்லுறவை வைத்திருந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். ஆட்சி மாற்றத்துக்கும் - பிரதமர்களை உருவாக்குவதிலும் கலைஞரின் பங்கு பெரும் பங்காக இருந்துள்ளது.

சஞ்சீவி ரெட்டி முதல் பிரதீபா பாட்டீல் வரை எல்லா குடியரசுத் தலைவர்களுடனும் நட்பு வைத்திருந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அவரால் உருவாக்கப்பட்ட குடியரசுத் தலைவர்கள் அதிகம்.

கலைஞர் அவர்கள் குடியிருந்த கோபாலபுரம் இல்லத்துக்கு பிரதமர்களும், அகில இந்திய அரசியல் தலைவர்களும், பிற மாநில முதலமைச்சர்களும் அதிகமாக வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்திய அரசியலில் மாபெரும் அரசியல் ஆளுமையாக இருந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

அதனால்தான் அவரது புகழைப் போற்றுவதற்காக பீகாரில் இருந்து மாண்புமிகு தேஜஸ்வீ அவர்கள் வருகை தந்திருக்கிறார்கள். இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கக்கூடிய பொறுப்பை ஏற்று அதற்கு அடித்தளம் அமைக்கும் பணியை பீகார் தொடங்கியிருக்கிறது.

வருகிற 23-ஆம் தேதியன்று பீகார் மாநிலம் - பாட்னாவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடக்க இருக்கிறது. பாட்னா என்பது இந்தியாவின் தொன்மையான நகரங்களில் ஒன்றாகும். பாடலிபுத்திரம் என்று வரலாற்றில் அழைக்கப்படக்கூடிய நகரம்தான் இன்றைய பாட்னா. அறிவு மற்றும் ஞானத்தின் அடையாளமாகச் சொல்லப்பட்ட நகரம் அது.

‘ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு. சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ’- என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்.

பாஜக கடந்த பத்தாண்டு காலமாகப் பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத் தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்றுவதற்கான ஏற்பாட்டை மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். நானும் பாட்னா செல்கிறேன். உங்களுடைய அன்போடு செல்கிறேன். உங்களுடைய நம்பிக்கையோடு செல்கிறேன்.

ஜனநாயகப் போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக நானும் பங்கெடுக்க இருக்கிறேன்.

இந்திய ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதைச் செய்யாவிட்டால் மூவாயிரம் - நான்காயிரம் ஆண்டுப் பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். இன்னும் சொல்கிறேன். கலைஞரின் உயிரினும் உயிரான உடன்பிறப்புகளே, இங்கே அமர்ந்திருக்கிறீர்களே, இந்த கலைஞருடைய உடன்பிறப்புகள் இதனை நீங்கள் செய்யாவிட்டால் வேறு யாராலும் இதனைச் செய்ய முடியாது.

”மீண்டும் பா.ஜ.கவை ஆள அனுமதிப்பது இந்தியாவின் எதிர்காலத்துக்கு கேடு” .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - இந்திய நாட்டுக்கும் - இந்தியாவின் எதிர்காலத்துக்கும் அது கேடாக முடியும்.

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தமிழ்நாட்டில் எப்படி ஒருமுகமாக இருந்து செயல்படுகிறோமோ - செயல்பட்டு வெற்றியைப் பெறுகிறோமோ, அத்தகைய செயல்பாடும் ஒருங்கிணைப்பும் அகில இந்திய அளவில் ஏற்பட்டாக வேண்டும்.

வெற்றி வேண்டும். வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும். அதனுடைய முன்னோட்டமாகத் தான் பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள கூட்டம் அமையவிருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் கலைஞரின் உடன்பிறப்புகளே! நாம் ஒருதாய் மக்கள். அந்த உணர்வோடு பணியாற்றி கலைஞரின் கனவுகளை நிறைவேற்றுவோம்.

கலைஞர் அவர்களுக்கு நான் மட்டும், மகனல்ல. நீங்கள் அனைவரும் கலைஞரின் பிள்ளைகள்தான். கொள்கைவாதிகள் தான், கொள்கை வாரிசுகள்தான்.

அடக்குமுறை ஆதிக்கங்களுக்கு எதிரான திராவிடத்தின் வாரிசுகளான நாம் இந்தியா முழுமைக்குமான அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவோம்!

நாற்பதும் நமதே! நாடும் நமதே!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories