மு.க.ஸ்டாலின்

“இருளை விரட்டிய 2 ஆண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது..” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சரின் மடல் !

“இருளை விரட்டிய  2 ஆண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது..” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சரின் மடல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இரண்டாண்டு சாதனைகளை மக்களின் இதயங்களில் பதித்திடுவோம்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

பத்தாண்டுகால இருண்ட ஆட்சியை விரட்டி, நாம் விடியல் தருவோம் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாட்டு மக்கள் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை தந்து, ஆட்சி செய்வதற்கான அனுமதியை வழங்கினார்கள். ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே 7-ஆம் நாள் முதல் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

மக்களுக்கான திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. அந்தத் திட்டங்களின் பலன்களை மக்கள் உணரும்படி எடுத்துரைக்க வேண்டியது கழக உடன்பிறப்புகளின் கடமை. உங்களில் ஒருவனாக - உங்களின் உடன்பிறப்பாக அந்தக் கடமையை அடிக்கடி காணொளி வாயிலாக நிறைவேற்றி வருகிறேன். மே 2-ஆம் நாள்கூட, ‘உங்களில் ஒருவன்’ காணொளியை வெளியிட்டு, அதில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளையும், அரசியல் எதிரிகள் வைக்கின்ற ஆதாரமற்ற விமர்சனத்திற்கான பதில்களையும் அளித்து, கழக உடன்பிறப்புகள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.

“இருளை விரட்டிய  2 ஆண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது..” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சரின் மடல் !

காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சியும், புதிய தொழில்நுட்பமும் அடிக்கடி காணொளி வாயிலாக உங்களிடம் உரையாற்றச் செய்திருக்கிறது. அதேநேரத்தில், நமது திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திரிபு வேலைகளைச் செய்யக்கூடிய அரசியல் கட்சியினர், நம் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், உண்மையை உரக்கச் சொல்லவும், அரசியல் காழ்ப்புணர்வாளர்களின் வதந்திகளையும் அவதூறுகளையும் முறியடிக்கவும் நாமும் காணொளி வாயிலாகப் பதில் தர வேண்டியுள்ளது.

கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து காலம் காலமாக அதன் மீது அவதூறுகளைப் பரப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருப்போர் இருக்கிறார்கள். கழகத்தைத் திட்டியே வயிறு வளர்க்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். கழகத்தை விமர்சித்தால்தான் தங்களுக்கு அடையாளமும் முகவரியும் கிடைக்கும் என்று அவதூறு பரப்புவோர் இருக்கிறார்கள்.

இன்று, நேற்றா இதைப் பார்க்கிறோம்?

என்றுதான் இந்த வீண்பழிகளைக் கண்டு நாம் அஞ்சியிருக்கிறோம்?

“இருளை விரட்டிய  2 ஆண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது..” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சரின் மடல் !

தி.மு.கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கு பேரறிஞர் அண்ணா தனது திராவிட நாடு இதழில் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் பதிலளித்தார். அவரது காலத்திற்குப் பிறகு பரப்பப்பட்ட அவதூறுகளுக்கும் வதந்திகளுக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் முரசொலியில் உடன்பிறப்பு கடிதங்களில் பதிலளித்தார். கழகத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதற்கும், கழகத்தின் சாதனைகளை எடுத்துச் சொல்வதற்கும் கடிதங்கள்தான் பயன்பட்டன. கால வளர்ச்சியின் காரணமாக இன்று காணொளிகள் வெளியிடப்பட்டாலும், கடிதத்தின் வாயிலாக கழகத் தொண்டர்களாம் - கலைஞரின் உடன்பிறப்புகளாம் உங்களுடன் உரையாடும்போது நெருக்கமான அன்பும் பாசமும் வெளிப்படுவது இயற்கைதானே! தி.மு.கழகம் எனும் கொள்கைக் குடும்பத்தின் உடன்பிறப்புகளல்லவா நாம்! அதனால்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நம்மை நம்பி தமிழ்நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு நாம் செய்திருக்கும் பணிகளை, நிறைவேற்றியிருக்கும் திட்டங்களை, இரண்டாண்டு காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களின் இதயத்தில் அவற்றைப் பதியச் செய்திடும் கடமை, உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது. அதனால்தான், திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மே 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

“இருளை விரட்டிய  2 ஆண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது..” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சரின் மடல் !

மே 7-ஆம் நாள் சென்னை பல்லாவரம் கன்டோண்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றுகிறேன். என்னுடன் கழகப் பொருளாளர் திரு.டி.ஆர்.பாலு எம்.பி., பங்கேற்கிறார். கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோயில் கிழக்குப் பகுதியிலும், கழகத்தின் முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சேலம் மேற்கு மாவட்டம் தாரமங்கலம் நகரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் மாண்புமிகு அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரத்திலும், மாண்புமிகு அமைச்சர் க.பொன்முடி அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலும், திரு.ஆ.ராசா எம்.பி., அவர்கள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலும், திரு.அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., அவர்கள் ஈரோடு தெற்கு மாவட்டம் கொடுமுடி வடக்கு ஒன்றியத்திலும், கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்கள் தூத்துக்குடியிலும், இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் உரையற்ற இருக்கிறார்கள்.

அதே நாளில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அதுபோலவே மே 8, 9 ஆகிய நாட்களிலும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தொடர்கின்றன. இந்தச் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில், யார் யார் எங்கு உரையாற்றுகிறார்கள் என்ற விவரங்கள் முரசொலியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒரு கூட்டம் நடத்தினோம் என்றில்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியம் - நகரம் - பகுதி - பேரூர் என அனைத்து இடங்களிலும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

மாண்புமிகு அமைச்சர்கள், கழகத்தின் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் மட்டுமின்றி கழகத்தின் பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்களும், கழகத்தின் கொள்கைகளை எடுத்துரைக்கும் ஆற்றல்மிக்க உடன்பிறப்புகளும் இந்தப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். எண்ணற்ற சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் சொற்பொழிவாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

“இருளை விரட்டிய  2 ஆண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது..” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சரின் மடல் !

75 ஆண்டுகளை நெருங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் அலையலையாய் மக்கள் திரண்ட பிரம்மாண்டமான மாநாடுகளும் உண்டு. தெருமுனைப் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம் என ஒவ்வொரு மனிதரையும் தேடிப் போய் மேற்கொண்ட பரப்புரைகளும் உண்டு. அந்த வகையில், மக்களைத் தேடி நாம் பயணிக்கிறோம். அவர்களுக்காக நம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களை எடுத்துரைக்க இருக்கிறோம்.

இளைஞரணிச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் இளைஞரணியினர் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருப்பதுடன், இளைஞரணி சார்பில் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். இதுபோலவே ஒவ்வொரு அணியினரும் கழகத்தின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று, திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உங்களில் ஒருவனான எனக்கு நிறையவே இருக்கிறது.

இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக்கூடிய கழகச் சொற்பொழிவாளர்கள் உரிய தயாரிப்புகளுடனும், புள்ளிவிவரங்களுடனும் கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும். கடந்த இரண்டாண்டுகளில் எண்ணற்ற சாதனைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையிலும், பொறுப்பான முறையிலும் எடுத்துரைக்க வேண்டும். உங்களது பேச்சை நாடே உற்று நோக்குகிறது என்பதை உணர்ந்து நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஒவ்வொருவரிடமும் நீங்கள் கொண்டு சேர்த்திட வேண்டும்.

அதேநேரம் உங்களது பேச்சுகளை எதிர்க்கட்சியினரும், திருகு வேலைகளில் ஈடுபடும் சில ஊடகங்களும், வெட்டியும் ஒட்டியும் தவறாகப் பொருள்படும்படி மாற்றி பரப்பிட காத்திருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு கண்ணியம் குன்றிடாமல் கருத்துகளை மக்களிடம் முன்வையுங்கள். 'உங்களில் ஒருவன்' காணொளியில் நான் குறிப்பிட்டத்தைப் போல, நாம் மக்களை நம்புபவர்கள்; எதிர்க்கட்சியினரைப் போல பொய்களை அல்ல என்பதால் மக்களிடம் நம் சாதனைகளைக் கொண்டு சேருங்கள்.

“இருளை விரட்டிய  2 ஆண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது..” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சரின் மடல் !

மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, காலைச் சிற்றுண்டித் திட்டம், நம்மைக் காக்கும் 48, புதிய முதலீடுகள், அதிகத் தொழிலகங்கள், நிறைய வேலைவாய்ப்புகள் என அனைத்து மக்களுக்குமான - அனைத்துப் பகுதிகளுக்குமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் குடும்பத்தலைவியருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது. இவை அனைத்தையும் மக்களின் இதயத்தில் பதிந்திடும் வகையில் எடுத்துரைக்க வேண்டியது சொற்பொழிவாளர்களின் கடமை.

“இருளை விரட்டிய  2 ஆண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது..” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சரின் மடல் !

திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது.

இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது. ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும். அடுத்தடுத்த தேர்தல் களங்களிலும் வெற்றி நீடிக்கும். திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்கான நற்சான்றிதழைத் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து வழங்கிடும் வகையில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் வரலாறு படைக்கட்டும்.

banner

Related Stories

Related Stories