மு.க.ஸ்டாலின்

”திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நட்பை எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது”: முதல்வரின் அனல் பேச்சு!

தி.மு.க-வுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நட்பை எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நட்பை எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது”: முதல்வரின் அனல் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (10.3.2023) சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பவள விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:

உங்களின் ஒருவனாக உங்கள் மாநாட்டிற்கு நான் வந்திருக்கிறேன். மன்னிக்கவும், நம் மாநாட்டிற்கு வந்திருக்கிறேன்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் நடைபெறக்கூடிய இந்த பவள விழா நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெறக் கூடிய இந்த அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்டு உங்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் தந்திருக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகிகளுக்கு குறிப்பாக பேராசிரியர் அய்யா காதர்மொய்தீன் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஈ பரிபாடியில் பங்கெடுக்கான் வேண்டி கேரளத்திலிருந்து வந்துட்டுள்ள என்ட ப்ரியப்பட்ட மலையாள பந்துக்களுக்கும் எண்டே வணக்கம்.

நம்முடைய பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் எப்போது என்னை அழைத்தாலும் அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர் அழைத்தால் நான் வராமல் இருந்தது இல்லை. விரைவில் டெல்லியில் நடைபெறவிருக்கக்கூடிய மாநாட்டிற்கு வந்திட வேண்டும் என்று இந்த மாநாட்டில் நம்முடைய பேராசிரியர் அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். உறுதியோடு சொல்கிறேன், வருவேன், வருவேன்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைப்பு, 1948-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் நாளன்று கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்டது. அதனுடைய 75-ஆவது ஆண்டு பவளவிழாவை இப்போது நாம் எழுச்சியோடு, ஏற்றத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சிறுபான்மையாக இருக்கக்கூடிய இசுலாமியர்களுக்கான அமைப்பாக மட்டுமில்லாமல் பிற்படுத்தப்பட்டோர், விளிம்பு நிலை மக்களுக்கான அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது என்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று.

இத்தகைய சமூகநீதிக் கோட்பாடுதான் நான் இங்கு வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது. பவள விழா கொண்டாடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை, நன்றியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

”திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நட்பை எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது”: முதல்வரின் அனல் பேச்சு!

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இசுலாமிய சமூகத்திற்குமான தொடர்பு என்பது, இன்று - நேற்று ஏற்பட்டதல்ல. தலைவர் கலைஞர் அவர்களை உருவாக்கியதில், தந்தை பெரியார் நடத்திய குடிஅரசு இதழைப் போலவே, 'தாருல் இஸ்லாம்' என்ற இதழுக்கும் பங்குண்டு. மிகச் சிறுவயதிலேயே 'தாருல் இஸ்லாம்' இதழைப் படித்து, தான் விழிப்புணர்வு பெற்றதாக தலைவர் கலைஞர் அவர்களே எழுதி இருக்கிறார் நெஞ்சுக்கு நீதியில்.

'என்னுள் சிந்தனை மாற்றம் ஏற்படுத்தியவர்களில் தாவூத் ஷாவுக்கும் பங்குண்டு' என்று தலைவர் கலைஞர் சொல்லி இருக்கிறார். இன்னும் சொன்னால், பேரறிஞர் அண்ணா அவர்களையும் தலைவர் கலைஞர் அவர்களையும் இணைக்கப் பாலமாக இருந்ததே இஸ்லாமிய சமுதாயம்தான்.

திருவாரூரில் நடந்த மிலாதுநபி விழாவிற்குப் பேச வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘இந்த ஊரில் கருணாநிதி என்றால் யார்? அவரை அழைத்து வாருங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். சிறு பையனாக தன் முன்னால் நின்ற கலைஞரைப் பார்த்தார், ‘கட்டுரை எழுதுவதிலே கவனம் செலுத்தாமல் படி’ என்று சொல்லியிருக்கிறார் பேரறிஞர் அண்ணா அவர்கள். ஆனால், “அதன் பிறகுதான் எனக்கு அரசியல் ஆர்வமே வந்தது' என்று கலைஞர் அவர்கள் எழுதியிருக்கிறார், இது ஒரு இனிமையான முரண்.

இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், பள்ளிக் காலத்தில் கலைஞருக்கு உற்ற தோழனாக இருந்து உதவி செய்தவர் அசன் அப்துல்காதர் என்ற இசுலாமியர்.

கையெழுத்து இதழாக இருந்த முரசொலியை அச்சில் வெளியிட கலைஞர் திட்டமிட்டபோது அதனை அச்சிட்டுக் கொடுத்தவர் கருணை ஜமால் என்கிற இசுலாமியர். உள்ளூரில் உட்கார்ந்து எழுதிக் கொண்டு இருந்த தலைவர் கலைஞர் அவர்களை சேலம் மார்டன் தியேட்டர்க்கு அழைத்துச் சென்று மாபெரும் கதை வசன கர்த்தாவாக ஆக அடித்தளம் இட்டவர் யாரென்றால் கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள்.

இப்படி ஒரு தலைவன் உருவாகி வருகிறார் என்பதை தமிழ்நாட்டுக்குச் சொல்லும் வகையில் ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’என்று தனது கம்பீரக் காந்தக் குரலால் ஒலித்தவர் மறைந்தும் மறையாமல் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கக் கூடிய நாகூர் அனிபா அவர்கள்.

”திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நட்பை எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது”: முதல்வரின் அனல் பேச்சு!

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்க பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடன் யாரை இணைத்துக் கொண்டார் என்றால் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களைத்தான்.

இப்படி இசுலாமியர்க்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், இசுலாமியர்க்கும் கலைஞருக்கும் நட்பானது யாராலும், எவனாலும், எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாதது.

கடந்த 5-ஆம் தேதி, முரசொலி நாளிதழில், “கலைஞரும் நானும்” என்ற தலைப்பில் நம்முடைய பேராசிரியர் அவர்கள் எழுதிய கட்டுரை இடம்பெற்றிருக்கிறது, முரசொலியினுடைய கடைசி பக்கத்தில் பாசறை பக்கத்தில் அது வெளியாகி இருந்தது. கலைஞர் அவர்களுக்கும் தனக்கும் இருக்கக்கூடிய நட்பை நம்முடைய பேராசிரியர் அவர்கள் அதிலே விவரித்து இருக்கிறார்.

“ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் கலைஞர் அவர்களை நான் சந்தித்துப் பேசுவதிலே அளவுகடந்த மகிழ்ச்சி அடைவதுண்டு. அவர் சொல்கிறார், கலைஞர் அவர்கள் முஸ்லீமாகப் பிறக்கவில்லையே தவிர, எல்லாக் காலங்களிலும் முஸ்லீமாகவே வாழ்ந்தவர் அவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் என் இதயத்தில் கலந்த எங்களில் ஒருவர்" என்று நம்முடைய அய்யா காதர்மொய்தீன் மிகமிக உருக்கமாகச் சொல்லி இருக்கிறார். இதைவிடப் பெரிய பாராட்டு இருக்கவே முடியாது.

ஒடுக்கப்பட்ட மக்கள் - பட்டியலின மக்கள் - பிற்படுத்தப்பட்ட மக்கள் - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் - விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்கள் - சிறுபான்மையின மக்கள் அனைவரும் 'எங்கள் கலைஞர்' - 'எங்கள் கலைஞர்' என்று உரிமையோடு, உச்சிமுகர்ந்து சொல்லக்கூடிய அளவுக்கு அவர்களில் ஒருவராகச் சிந்தித்துச் செயல்பட்டவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அந்த அன்புதான் நம்முடைய பேராசிரியர் அய்யா காதர் மொய்தீன் அவர்களின் கட்டுரையில் மிகத் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.

“முஸ்லீமாக வாழ்ந்தார்” என்று காதர்மொய்தீன் அவர்கள் சொல்கிறார் என்றால், அது அரசியலுக்காகவோ முகஸ்துதிக்காகவோ சொன்னது கிடையாது. அந்தளவுக்கு முஸ்லீம் சமுதாயத்துக்குப் பல பங்களிப்புகளைக் கலைஞர் அவர்கள் செய்திருக்கிறார். இங்கே பேசிய அனைவரும் அதை சுட்டிக்காட்டி எடுத்துச் சொன்னார்கள். அதனால்தான் அய்யா அவர்கள் அப்படி சொல்லி இருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினத்தினுடைய இசுலாமிய சமுதாயத்தவர்களுக்கு செய்து தரப்பட்ட திட்டங்களில் ஒரு சிலவற்றை மட்டும் நான் உங்களுக்கு பட்டியலிட விரும்புகிறேன்.

முதல்முறை ஆட்சிக்கு வந்ததுமே மிலாதுநபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதனை இரத்து செய்தது அ.தி.மு.க. ஆட்சி. மீண்டும் ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் அவர்கள் மீண்டும் அரசாணை வெளியிட்டு மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தார்.

உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கலைஞர் அவர்கள்.சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கியவர் கலைஞர் அவர்கள்.வக்பு வாரிய சொத்துக்களைப் பராமரிக்க முதன்முதலில் மானியம் வழங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள். உருது அகாடமியைத் தொடங்கியவர் கலைஞர் அவர்கள்.

”திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நட்பை எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது”: முதல்வரின் அனல் பேச்சு!

காயிதே மில்லத் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி இடம் ஒதுக்கியவர் கலைஞர் அவர்கள்.பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொடுத்தவரும் கலைஞர் அவர்கள்தான்.காயிதேமில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கியவர் கலைஞர்.காயிதேமில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் கொடுத்தவர் கலைஞர் - இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.

இசுலாமியர்கள் வேறு, தான் வேறு என்று கலைஞர் அவர்கள் நினைத்தது இல்லை. இங்கே குறிப்பிட்டார்களே இசுலாமிய சமூகத்தவர் நன்றி தெரிவிக்கக்கூடிய விழா நடத்திய போது, ‘எனக்கு நன்றி சொல்லி உங்களிடம் இருந்து என்னைப் பிரித்துவிடாதீர்கள்’ என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

அதே வழித்தடத்தில்தான் நமது திராவிட மாடல் அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.கழக அரசு அமைந்ததும் சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. சிறுபான்மையினர் விடுதியில் பண்டிகைகளுக்குச் சிறப்பு உணவு தரப்படுகிறது. உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் கட்டப்பட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேனி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் முஸ்லீம் உதவி சங்கம் துவங்க ஆணையிடப்பட்டுள்ளது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. உலமாக்கள் மற்றும் பணியாளர் வாரிய உறுப்பினர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கான நிர்வாக மானியம் அதிகரிக்கப்பட்டு 4 வக்பு சரக அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி வாசல்கள், தர்க்காக்கள், வக்பு நிறுவனங்களை பழுது பார்ப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வக்பு சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - இவை அனைத்தும் 20 மாதங்களில் செய்து தரப்பட்டிருக்கக்கூடிய திட்டங்கள்!

இவை அனைத்தும் நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே செய்து தரப்பட்ட புதிய திட்டங்கள்!இந்த மாநாட்டை ஒட்டியும் சில தீர்மானங்களை நீங்கள் எனக்கு போட்டிருக்கிறீர்கள். முதலமைச்சர் வருகிறார் என்றால் கோரிக்கை இல்லாமல் இருக்காது. அதற்கான உரிமை உங்களுக்கும் இருக்கிறது; செய்து தரக்கூடிய கடமை எனக்கும் இருக்கிறது. அதை நான் மறக்க மாட்டேன், மறுக்கவும் மாட்டேன்.

பிறப்பு, இறப்பு, திருமணங்களை பதிவு செய்யும் அதிகாரத்தை கேரள மாநிலத்தில் உள்ளதுபோல உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்பது, அது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்திருக்கிறீர்கள். உங்கள் கோரிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்படும். நியாயமான, சாத்தியமுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று நான் உறுதியோடு இந்த மேடையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

உங்களது மிக முக்கியமான ஒரு கோரிக்கை. நீண்டகாலமாக சிறையில் இருக்கும் முஸ்லீம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது. 14 ஆண்டு முதல் 28 ஆண்டுகள் வரை சிறைவாசத்தை முழு தண்டனை காலமாகக் கருதி கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள்.

நம்முடைய கழக ஆட்சி அமைந்ததும் சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் அவர்களது தலைமையில் ஆறுபேர் கொண்ட குழுவை அமைத்தோம். மிக அதிக ஆண்டுகள் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்வது குறித்து ஆராய்வதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இந்தக் குழுவினுடைய பரிந்துரைகள் அரசிடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்குக்கூட இது குறித்து கோப்புக்களை பார்த்துவிட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். விரைவில் அவை ஆளுநருடைய ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பவளவிழா நாளன்று ஒரு உறுதிமொழியை ஏற்றுக்கொள்வதாக நீங்கள் அறிவித்திருக்கிறீர்கள். காலையில் ராஜாஜி ஹாலில் உறுதிமொழி நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.

“இந்தியக் குடிமக்களாகிய நாங்கள் - சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையையும் - விசுவாசமும் கொண்டிருப்போம்.

சமூகநீதி - சமத்துவம் மற்றும் உண்மையான அரசியல் ஜனநாயகத்தை மேம்படுத்துவோம்.இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலை நிறுத்துவோம்.சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் - இதயங்களின் இணைப்பை வலுப்படுத்தவும் பாடுபடுவோம்.இந்நாட்டு மக்களின் அமைதி, சமாதானம் மற்றும் செழிப்புக்காக உழைப்போம்" என உறுதிமொழியை வடிவமைத்திருக்கிறீர்கள்.

இதனை வாசித்தபோது, இது நான் எழுதிய உறுதிமொழியைப் போலவே இருந்தது. நாம் இயக்கத்தால் வேறுபட்டு இருந்தாலும் - இதயத்தால் ஒன்றுபட்டவர்கள் என்பதை இந்த உறுதிமொழி உணர்த்துகிறது.

இன்றைய திராவிட மாடல் ஆட்சியானது இத்தகைய சமூக விழுமியங்களைக் கொண்டதாகச் செயல்பட்டு வருகிறது. இதே சமூக விழுமியங்கள் இந்தியா முழுமைக்கும் பரவ வேண்டும்.இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல், சமூகநீதி - சகோதரத்துவம் - சமதர்மம் ஆகிய மூன்று கருத்தியல்களுக்குத்தான் உண்டு.

எல்லைகளைக் காப்பாற்றுவது முப்படைகள் என்றால் - எண்ணங்களால் நாட்டைக் காப்பாற்றுவது இந்த மூன்று கருத்தியல்கள்தான்.

ஒரே மதம் -

ஒரே மொழி-

ஒரே பண்பாடு -

ஒரே உணவு-

ஒரே தேர்தல் -

ஒரே தேர்வு - இப்படி ஒற்றைத்தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்ற நினைப்பவர்கள், சமூகநீதிக்கு எதிரானவர்கள்.சகோதரத்துக்கு விரோதமானவர்கள்.சமதர்மத்தை ஏற்காமல் இருக்கக்கூடியவர்கள்.

”திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நட்பை எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது”: முதல்வரின் அனல் பேச்சு!

சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்துக்குக் கூட ஒப்புதல் தர மறுக்கிறது. நான்கு மாதங்கள் கழித்து, மாநில அரசுக்கு இது போன்ற சட்டத்தை நிறைவேற்ற உரிமை இல்லை என்று சொல்கிறார்.

இந்த ஒரு சாதாரண சட்டத்தைக் கூட நிறைவேற்றுவதற்கு உரிமை இல்லாத மாநிலத்துக்குத்தான் அவர் ஆளுநராக இருக்கிறாரா? நான் கேட்கிறேன். நீட் விலக்குக் கேட்டு அவசர சட்டம் போட்டு அனுப்பினால் அதை நீண்டநாள் கிடப்பில் போட்டுத்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார். பல்கலைக்கழகங்களின் வேந்தர் சட்டம் முடக்கப்பட்டு கிடக்கிறது.இதுதான் ஆளுநர்கள் செயல்படக்கூடிய இலட்சணமா?உழவர்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டம் உடனடியாக நிறைவேறும்.சிறுபான்மையினர்க்கு எதிரான குடியுரிமைச் சட்டம் வேகமாக நிறைவேறும்.நீட் தேர்வைக் கொண்டு வந்து ஏழை எளிய மக்களின் மருத்துவக் கனவை தகர்ப்பார்கள்.இந்தியைத் திணிப்பார்கள். மாற்று மதத்தவர் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை செய்வார்கள். ஆனால் சூதாட்டத்தாலும், நுழைவுத்தேர்வாலும் உயிர்கள் பலியாவதைத் தடுக்க நாம் சட்டம் இயற்றினால் அதை நிறைவேற்றாமல் தடுக்கிறார்கள்.

இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தலாக 2024 நடைபெறவிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் அமையப் போகிறது. அந்த வெற்றிக்கு அடிப்படை ஒற்றுமை, அதைத்தான் தொடர்ந்து நான் மட்டுமல்ல, எல்லோரும் வலியுறுத்துகிறோம்.

அப்படி இணையும் கரங்களில் ஒன்று நம்முடைய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகவும் அமைந்திருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். மதம் கொண்டு நமக்கிடையே வெறுப்பு புலர்த்தான் நோக்குந்நோர் உண்டு. 2024 எலெக்‌ஷன் அவரை பாடம் படிப்புகுவானுள்ள அவசரமானு. 2024 ஜெயிக்கான் நம்மள் ஒருமிச்சு நிக்கணம். அதானு நமக்கு விஜையிக்கானுள்ள மார்க்கம். இதனை இந்தியா முழுவண் எத்திக்கணம். நமக்கு ஒருமிச்சு நில்காம், நமக்கு ஜெய்க்காம். ஒன்றிணைவோம்.வெற்றி பெறுவோம்.திராவிட மாடல் ஆட்சியின் தத்துவங்களை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories