மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு என்றால் இப்படித்தான் இருக்கும்.. தனது லட்சிய எண்ணத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 'ஏற்றமிகு 7 திட்டங்கள்' என்ற திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாடு என்றால் இப்படித்தான் இருக்கும்.. தனது லட்சிய எண்ணத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.2.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து ஆற்றிய உரை:-

இந்த ஏற்றமிகு ஏழு திட்டங்கள் நடைபெறக்கூடிய இடத்தை நான் எண்ணிப் பார்க்கிறேன். இந்த இடத்தைப் பற்றி நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய வரிகளில் சொல்ல வேண்டுமென்று சொன்னால்,

மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு, முத்தமிழ் மணமுண்டு! மூவேந்தர் முக்கொடி முக்கனியென மும்முரசு ஆர்த்தவர் தமிழர்.

அவர் வாழ்ந்த தமிழ் வாழ்வுக்கு மூன்றெழுத்து.

அந்த வாழ்வுக்கு அடிப்படையாம் அன்புக்கு மூன்றெழுத்து..

அன்புக்குத் துணை நிற்கும் அறிவுக்கு மூன்றெழுத்து

அறிவார்ந்தோர் இடையில் எழும், காதலுக்கு மூன்றெழுத்து..

காதலர்கள் போற்றி நின்ற கடும் வீரமோ மூன்றெழுத்து..

வீரம் விளைக்கின்ற களம் மூன்றெழுத்து…

களம் சென்று காணுகின்ற வெற்றி மூன்றெழுத்து

அந்த வெற்றிக்கு நமையெலாம் ஊக்குவிக்கும்

அமைதிமிகு அண்ணா மூன்றெழுத்து!

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பாடியது இது!

அத்தகைய பெருமைமிகு பேரறிஞர் அண்ணா அவர்களது பெயரால் அமைந்துள்ள இந்த நூலக அரங்கத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதின் மூலமாக நான் உணர்ச்சியையும் எழுச்சியையும் பெறுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு முன்பு, திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினோம். பொதுக்கூட்டம் என்று சொன்னால், அது அரசியல் காரணங்களுக்காகக் கூட்டப்பட்ட, வழக்கமான பொதுக்கூட்டம் அல்ல. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தால், தமிழ்நாட்டில் எத்தகைய மாற்றத்தை நாங்கள் உருவாக்கித் தருவோம் என்பதற்கான மிக முழுமையான திட்டமிடுதலாக அந்தக் கூட்டத்தை கூட்டி இருந்தோம். அதாவது மிகப்பெரிய இலட்சியங்களை விளக்கக் கூடிய மாபெரும் மாநாடாக அது அமைந்திருந்தது. நமது ஆட்சி எத்தகையதாக அமையும் என்பதை நான் சொன்னேன். அடுத்த பத்தாண்டுக்கான செயல்திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே திட்டமிட்டுச் சொன்னேன்.

1. வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு!

2. மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி!

3. குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!

4. அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்!

5. அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு!

6. எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!

7. உயர்தர ஊரகக் கட்டமைப்பு- உயர்ந்த வாழ்க்கைத்தரம் !

- இவை தான் அந்த உறுதிமொழிகள்.

'ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்' என்று அவை திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு என்றால் இப்படித்தான் இருக்கும்.. தனது லட்சிய எண்ணத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

* பொருளாதாரம்

* வேளாண்மை

* குடிநீர்

* கல்வி

* நகர்ப்புர வளர்ச்சி

* சமூக பாதுகாப்பு

* ஊரக வளர்ச்சி

- ஆகிய ஏழு இலக்குகளோடு எங்களது பயணம் அமையும் என்று நான் குறிப்பிட்டேன்.

அந்த இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது, முதன்முதலாக என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினருடன் நான் ஆலோசனை நடத்தினேன். அதில் மிக முக்கியமான ஆலோசனைதான் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து வசதி வழங்குவது!

இப்படி அறிவித்தால், ஏற்கனவே நலிவில் இருக்கக்கூடிய போக்குவரத்துத் துறையின் வருமானம் குறையும் என்று சொன்னார்கள். ஆனால் இதனை அறிவித்தால் இலட்சக்கணக்கான மகளிர் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படும் என்று நான் சொன்னேன்.

தேர்தலில் வென்றோம். பதவி பிராமணம் எடுப்பதற்கு முன்னால், என்னென்ன திட்டம் அறிவிக்கலாம் அதிகாரிகள் என்னிடம் கேட்டார்கள். உடனே நான் சொன்னது மகளிருக்கு இலவச பேருந்து பயணம் தான்!

"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவுடன் கோட்டைக்குச் சென்று நான் கையெழுத்து இட்ட முதல் கோப்பு மகளிருக்கு பேருந்து கட்டணம் ரத்து!

இதுநாள் வரையில், 236 கோடிப் பயணத்தை பெண்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் மூலமாக, பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள். சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இன்றைய தினம் நமது ஆட்சிக்கு மிகப்பெரிய பேரும் புகழும் வாங்கித் தரும் திட்டமாக இது அமைந்திருக்கிறது.

அடுத்து கையெழுத்து ஆவின் பால் விலையை 3 ரூபாய் குறைத்து அதையும் மகளிருக்காக ஏற்படுத்தித் தந்தோம்.

அதற்கு அடுத்த கையெழுத்து எது என்று கேட்டீர்களானால், கொரோனா காலக்கட்டத்தில் பல குடும்பங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதனால்,

5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அன்றைக்கு நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் காது கொடுத்து கேட்கவில்லை. ஆனால், நான் முதமைச்சராக பொறுப்பேற்றவுடன் 4000 ரூபாய் வழங்க இரண்டாவது கையெழுத்து போட்டேன். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய பேருதவியாக அது அமைந்தது.

இந்த வரிசையிலேதான், என்னுடைய கனவுத் திட்டமான இளைஞர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றக்கூடிய திட்டமாக இருப்பது ‘நான் முதல்வன்’ திட்டம்!

கழக அரசு ஆட்சிக்கு வந்ததும் ஏராளமான தொழில் நிறுவனங்களை சார்ந்திருக்கக்கூடிய முதலீடுகள் வந்து சேர்ந்தன. அப்போது பல்வேறு தொழிலதிபர்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்கினாலும் அதில் பணியாற்ற திறமையான இளைஞர்கள் கிடைப்பது இல்லை என்று தொழிலதிபர்கள் சிலர் என்னிடத்தில் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அதைக் கருத்தில் கொண்டு என் மனதில் உருவான திட்டம்தான் நான் முதல்வன் என்ற திட்டம்.

தமிழ்நாட்டு மாணவர்களை – இளைஞர்களை கல்வியில் - அறிவாற்றலில் - சிந்தனைத் திறனிலில் - பன்முக ஆற்றலில் முன்னேறியவர்களாக ஆக்குவதற்காக இந்தத் திட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி வைத்தேன். இந்த ஓராண்டுகாலத்தில் 1300-க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை அறிவியில் கல்லூரிகளைச் சார்ந்திருக்கக்கூடிய 17 இலட்சத்திற்கும் அதிகமான திறமைசாலிகளை பயின்றும், பயிற்றுவிக்கப்பட்டும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களை உலகில் முதன்மையானவர்களாக ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இது தலைமுறை தலைமுறைக்குப் பயன்படும் திட்டம்!

தமிழ்நாடு என்றால் இப்படித்தான் இருக்கும்.. தனது லட்சிய எண்ணத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

* ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறோம். இதுவரையில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 2563 கோடி ரூபாய் மதிப்பிலான ஊரக குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக நீர்வளம் பெருகி உள்ளது. வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத அளவில் வேளாண் பரப்பு அதிகமாகி, விளைச்சலும் அதிகமாகி இருக்கிறது. நாம் செயல்படுத்திவரக்கூடிய திட்டங்களால் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை மிகுந்த ஊக்கத்தை அடைந்து வருகின்றன.

18,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 446 குடிநீர்த் திட்டப் பணிகளும், 4499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 பாதாள சாக்கடைத் திட்டங்களும் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 49,385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற முதல் கையெழுத்தாகட்டும், அடுத்து அறிவிக்க இருக்கின்ற மகளிருக்கான உரிமைத் தொகையாகட்டும், அனைத்துமே சமூகப் பாதுகாப்புத் திட்டங்களாக அமைந்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, ஏழு முக்கியமான திட்டங்களை இன்றைக்கு நான் தொடங்கி வைக்கிறேன்.

நாளை மார்ச் 1, என்னுடைய 70-ஆவது பிறந்தநாள்!

இதில் சுமார் 55 ஆண்டுகாலம் அரசியலையே எனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் எனது குடும்பமாக நினைத்து, மிக மிக இளமைக் காலத்திலேயே அரசியலுக்கு வந்தேன். 'அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?' என்று கேட்டபோது, 'அரசியலில்தான் நிச்சயம் நான் இருந்திருப்பேன்' என்று பதில் சொன்னவன் நான்.

அரசியல் என்பதை அதிகாரம், என்பதாக இல்லாமல், அதனைக் கடமையாகவும் தொண்டாகவும் சேவையாகவும் நினைக்க வைத்தவர்கள் தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும்- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும் - இனமானப் பேராசிரியர் அவர்களும்!

இவர்களது வழித்தடத்தில் வந்திருக்கக்கூடிய நான், கிடைக்கின்ற பொறுப்புகளின் மூலமாக மக்களுக்குச் சேவையாற்றும் இலக்குகளை எல்லாக் காலத்திலும் எனக்கு நானே வைத்துக் கொள்கிறேன். எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை. எனக்கு நானே இலக்கு வைத்துக் கொள்கிறேன். அந்த இலக்கை அடையவே எந்நாளும் உழைக்கிறேன்.

'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்பதுதான் பொதுவான இலக்கு!

அதனால்தான் மக்கள் பயன்பெறக்கூடிய எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து துவக்கி வைக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் 'தினந்தோறும் திட்டங்கள்' என்பதுதான் என் திட்டம்! அதாவது, தினந்தோறும் திட்டங்களைத் தீட்டுவதுதான் என்னுடைய பணி!

அந்த வகையில், இந்த விழாவில் மிகமுக்கியமான ஏழு திட்டங்களைத் தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன்.

தமிழ்நாடு என்றால் இப்படித்தான் இருக்கும்.. தனது லட்சிய எண்ணத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

* முதல் திட்டம்..

மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க D.I.C.C.I அமைப்புடன் ஒப்பந்தம் இன்று கையெழுத்து ஆகியிருக்கிறது.

பல்வேறு துறைகளில் நாட்டிற்கே முன்னோடியாக நமது தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இதுவும் முன்னோடி திட்டமாக அமையப் போகிறது. தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பலர் இந்தப் பணியில் ஈடுபடும்போடு சந்திக்க நேரிடும் ஆபத்துகளால் உயிரிழக்க நேரிடுகிறது. அதை நாம் இன்று பார்க்கிறோம்.

மக்களின் சுகாதாரத்தைப் பேணிட தம் வாழ்வு முழுவதும் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்த பணியாளர்களின் குடும்பங்கள், தமது குடும்பத் தலைவரையோ, வாரிசையோ இழந்து, தமது வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் தொலைத்து நிற்கும் அவலநிலை நம் அனைவரையும் மனம் கலங்க வைக்கிறது. இந்த இன்னல்களைக் களைய பல முயற்சிகளை நமது அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் எடுத்திருக்கிறது. தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வசதிகளை உறுதிசெய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை ஏற்கனவே மதுரையில் நான் தொடங்கி வைத்தேன். இந்தத் திட்டப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக, பாதாளச் சாக்கடைத் திட்டப் பராமரிப்பு மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளை நவீன இயந்திரங்கள் மூலமாக மேற்கொண்டு, உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்க்கத் திட்டமிட்டுள்ளோம்.

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை தொழில் முனைவோர்களாக ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் சென்னை பெருநகர பகுதியில் செயல்படுத்தப்படும்.

தூய்மைப் பணியில் ஈடுபடும்போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கும், தற்போது தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் முன்னுரிமை அளித்து, தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் என்ற நிலையில், அந்த நிலையில் இருந்து அவர்களை உயர்த்தி, இந்தப் பணிகளை அனைத்து நவீன இயந்திரங்களோடு மேற்கொள்ளக்கூடிய தொழில் முனைவோர்களாக அவர்களை மாற்றுவதற்காக, தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (DICCI) அமைப்புடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் தூய்மைப் பணியாளர் குடும்பத்தினருக்கு, நவீனக்கருவிகளும், வாகனங்களும் வழங்கப்படுவதோடு, திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படும்.

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலமாக சென்னை மாநகரப் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம், படிப்படியாக மாநிலத்தின் மற்ற நகர்ப்புற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

* இரண்டாவது திட்டம்...

சத்துக் குறைபாடுகளை அடைந்திருக்கக்கூடிய குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கக்கூடிய ஒரு அருமையான திட்டம்.

குழந்தைகள் பிறக்கும்போதே ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்; வளரும்போதும் ஆரோக்கியமாக வளர வேண்டும். அப்போதுதான் அவர்களது எதிர்காலம் சிறப்பானதாக அமையும்.

கடந்த ஆண்டு மே 7-ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் பேசுகின்றபோது, ஒரு புள்ளிவிவரத்தை மிக மிக மனவேதனையோடு நான் குறிப்பிட்டுச் அளிப்பதாக சொன்னேன். அது என்னவென்றால், தமிழ்நாட்டில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்ததில், பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதும், வயதுக்கு ஏற்ப எடையும் உயரமும் இல்லை என்ற புள்ளிவிவரங்கள் நமக்கு தெரிவிக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் திடமான - ஊட்டச்சத்து குறைபாடில்லாதவர்களாக மாற்றுவதற்கான திட்டம் தீட்டுவதற்கான அந்தத் திட்டத்தை அப்போதே நான் அறிவித்தேன். இதனைக் கண்டறிய, கண்காணிப்பு இயக்ககம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 37 லட்சம் குழந்தைகளைப் பரிசோதனை செய்தோம். அதில் ஊட்டச்சத்து தேவைப்படுவோர் கண்டறியப்பட்டார்கள்.

ஆறு மாதம் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு சிகிச்சை உணவு (RUTF) தரப்படும்.

6 மாதம் வரையுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிலை மேம்படுத்தப்படும்.

இந்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களும் வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை என்பதை, 3 முட்டையாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. பிஸ்கெட்டும் வழங்கப்படுகிறது. அந்தக் குழந்தைகள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருவார்கள்.

இதன் மூலமாக அனைத்துக் குழந்தைகளும் சத்துள்ள குழந்தைகளாக வளர்வார்கள்.

தமிழ்நாடு என்றால் இப்படித்தான் இருக்கும்.. தனது லட்சிய எண்ணத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

* மூன்றாவது திட்டம்..

மாற்றுத் திறனாளிகளுக்கு ஏராளமான திட்டங்களை நமது அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க இருக்கிறோம்.

வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைத்துத் தருவதற்கு ஏதுவாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.

* நான்காவது திட்டம்..

திருநங்கையர்க்கும் ஏராளமான திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய வழியில் நமது அரசு செயல்படுத்தி வருகிறது. திருநங்கைகள் நலவாரியத்தை 2008-ஆம் ஆண்டு உருவாக்கியதே கழக அரசுதான்.

திருநங்கைகளுக்கு மாதம்தோறும் வழங்கக்கூடிய உதவித்தொகை தொகை ஆயிரத்தில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.

* ஐந்தாவது திட்டமாக, பல்வேறு துறைகளில் உள்ள அரசுப் பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பணி ஆணை வழங்கப்படுகிறது.

* ஆறாவது திட்டமாக,

இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமாக இருக்கக்கூடிய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்தநாளில் மதுரையில் வைத்துதான் நான் துவக்கி வைத்தேன். தற்போது, 15 மாநகராட்சிகள் மற்றும் 23 நகராட்சிகள் உள்ளடக்கிய 38 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமைந்துள்ள 539 பள்ளிகளில் பயிலும் 50 ஆயிரத்து 306 மாணவர்கள் இப்போது இந்தத் திட்டத்தின்கீழ் காலை உணவு உண்டு வருகிறார்கள். இந்தத் திட்டத்திற்காகச் சிறப்பாக அமைக்கப்பட்ட 46 ஒருங்கிணைப்பு சமையற்கூடங்களில் நாள்தோறும் உணவு சமைக்கப்பட்டு, அந்த உணவு சூடாக Hotbox-ல் நிரப்பப்பட்டு, சிறப்பு வாகனங்கள் மூலமாக ஒவ்வொரு பள்ளிக்கும் உரியநேரத்தில் கொண்டுபோய் சேர்த்து, மாணவர்களுக்கு காலை உணவு ஒவ்வொரு நாளும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு மாணவர்கள், பெற்றோர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. எனவே இதனை விரிவுபடுத்துவதற்காகத் திட்டமிட்டு, அடுத்த கட்டமாக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 36 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளுக்கு நாளை முதல் விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் 56 ஆயிரத்து 98 மாணவர்கள் கூடுதலாகப் பயனடைவார்கள். இதன்படி, நாளை முதல் காலை உணவு சாப்பிடக்கூடிய மாணவச் செல்வங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 404 ஆகும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் திட்டமாக இது உயரப் போகிறது.

* ஏழாவது திட்டமாக,

1,136.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 44 இடங்களில் புதிய மருத்துவமனைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இப்படி ஏழு திட்டங்களைப் பார்த்தால்,

கல்வி -

சுகாதாரம் -

விளிம்பு நிலை மக்கள் -

குழந்தைகள் -

சமூக மேம்பாடு -

சமூகநீதி -

ஆகிய அனைத்துக் கருத்தியல்களும் உள்ளடக்கிய திட்டங்களாக தீட்டப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் இன்னும் பல திட்டங்கள் வர இருக்கின்றன. இந்தத் திட்டங்களை துறையினுடைய அமைச்சர்கள், துறையினுடைய செயலாளர்கள், அரசுச் செயலாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்களை வரை இதனுடைய நோக்கம் சிதைந்துவிடாமல் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்று அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன்.

கோட்டையில் இருந்து நிறைவேற்றும் திட்டமானது, கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும். அவர்களது நன்மைக்காகவே இந்தத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

தமிழ்நாடு என்றால் இப்படித்தான் இருக்கும்.. தனது லட்சிய எண்ணத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எனது லட்சியம் என்பது,

வளமான தமிழ்நாடு!

வலிமையான தமிழ்நாடு!

வறுமை ஒழிந்த தமிழ்நாடு!

சமத்துவத் தமிழ்நாடு!

சுயமரியாதைத் தமிழ்நாடு!

மாநிலம் என்பது எல்லைகளால் உருவானது அல்ல, எண்ணங்களால் கருவாகி உருவானது!

எனவே தமிழ்நாடு என்றால் இப்படித்தான் இருக்கும்!

எங்களை உருவாக்கிய தமிழ்நாட்டின் உயர்வுக்காகப் பணியாற்றி வருகிறோம்.

'ஏ ! தாழ்ந்த தமிழகமே!" – என்று

பேரறிஞர் அண்ணா அவர்கள் அவர் காலத்தில் சொன்னார்..

அந்த நிலைமையை மாற்றி

"எனது ஏற்றமிகு தமிழ்நாடே!"

என்று ஒவ்வொருவரும் பெருமையோடு அழைக்கும் நிலையை உருவாக்க நமது திராவிட ஆட்சியில் அனைவரும் எந்நாளும் உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்! என்று கூறி விடைபெறுகிறேன்

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories