மு.க.ஸ்டாலின்

"மக்களை கவரக்கூடிய வகையில் உங்கள் பணிகள் இருக்க வேண்டும்" : புதிய ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாடினார்.

"மக்களை கவரக்கூடிய வகையில் உங்கள் பணிகள் இருக்க வேண்டும்" : புதிய ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.02.2023) தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரை:-

புதிதாக மாவட்டங்களில் பொறுப்பேற்கவுள்ள ஆட்சித்தலைவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை தலைமைச் செயலாளர் அவர்கள் சுருக்கமாக எடுத்துக் கூறினார்.

ஆட்சிப் பொறுப்பேற்று இந்த குறுகிய காலத்திற்குள்ளாக நம்முடைய அரசு சிறப்பான பெயரை பெற்றிருக்கிறது, இதற்கு எந்தவித மறுப்பும் யாரும் சொல்ல முடியாது. அந்த பெயரைப் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள், ஏதோ தனிப்பட்ட முதலமைச்சரோ, தனிப்பட்ட தலைமைச் செயலாளரோ, தனிப்பட்ட அரசு அதிகாரிகளோ மட்டும் அல்ல, உங்களைப் போன்ற அதிகாரிகளும், அரசு அலுவலர்களும் தான் அதற்கு முழுமையான காரணமாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

"மக்களை கவரக்கூடிய வகையில் உங்கள் பணிகள் இருக்க வேண்டும்" : புதிய ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறோம். அவைகள் எல்லாம் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்ற வகையில் காண்காணித்து, அதை நிறைவேற்றித் தருவதற்கான முழு பணியிலும் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று நான் உங்களை எல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது புதிதாக, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு பணியை மேற்கொண்டு, அந்தப் பணி மிக சிறப்பான வகையில், நான் திருப்தி அடையக்கூடிய வகையில், நாங்கள் மட்டுமல்ல அந்த செய்தியை கேள்விப்பட்ட அனைவருமே பாராட்டக்கூடிய அளவிற்கு அந்தப் பணிகள் நடந்திருக்கிறது.

இது தொடரப் போகிறது. அப்படிப்பட்ட பயணத்தை மேற்கொள்கிறபோது, புதிதாக பொறுப்பேற்றிருக்கக்கூடிய நீங்கள் மாவட்டத்தில் பொறுப்பேற்றவுடன், என்னென்ன பணி நடைபெறாமல் இருக்கிறது? என்னென்ன பணி எந்த நிலையில் இருக்கிறது? எந்த எந்த பணிகள் இன்னும் தொடங்க இயலாத நிலையில் இருக்கிறது? அதற்கு என்னென்ன இடையூறுகள் இருக்கின்றன? நீதிமன்றங்களில் என்னென்ன வழக்கு இருக்கிறது? என்பதைப் பற்றியெல்லாம் நீங்கள் கலந்தாய்வு நடத்தி அதையெல்லாம் விரைவாக, அந்தப் பணிகளை நிறைவேற்றக்கூடிய காரியத்தில் ஈடுபட வேண்டும். மிக விரைவில் நீங்கள் பொறுப்பேற்க கூடிய மாவட்டத்திற்கு நாங்கள் ஆய்விற்கு வருகிறபோது அது உங்களால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, அது உங்களால் சரிசெய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியை நீங்கள் சொல்லக்கூடிய அளவிற்கு, உங்களுடைய கடமையை நிறைவேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.

"மக்களை கவரக்கூடிய வகையில் உங்கள் பணிகள் இருக்க வேண்டும்" : புதிய ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

இன்றைக்கு ஆட்சித்தலைவர்களாக பொறுப்பேற்கவுள்ள நீங்கள், நம்முடைய தலைமைச் செயலாளர் சொன்னதுபோல மகாத்மா காந்தி அவர்கள் “களத்திற்கு செல்” என்று சொன்னதுபோல, அண்ணா அவர்கள் “மக்களிடத்தில் செல்” என்று அடிக்கடி சொல்வார்கள், அதைப்போல நீங்கள் மக்கள் நலப் பணிகளை செயல்படுத்தி மக்களை கவரக்கூடிய வகையில், ஆங்காங்கு பணியாற்றக்கூடிய அதிகாரிகளை அவர்களுக்கு உரிய பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும்.

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய வகையில் உங்கள் மாவட்டங்களில் அதை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். எந்தவித அரசியல் மாச்சரியங்களுக்கு நீங்கள் இடம் கொடுக்காமல், அரசியல் பார்க்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அந்த உணர்வோடு மட்டுமே உங்களது பணி அமைய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஏதோ உங்களிடத்திலே பணிகளை விட்டுவிட்டு நாங்கள் அமைதியாக இருந்துவிடுவோம் என்று நீங்கள் எண்ண வேண்டாம். உங்களிடத்தில் உள்ள பணிகளில், என்னென்ன பணிகளை முடித்திருக்கிறீர்கள் என்பதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்யப்போகிறார், அதேபோல முதலமைச்சராக இருக்கக்கூடிய நானும் ஆய்வு செய்யப்போகிறேன். விரைவில், மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்போகிறோம். அப்படி தாக்கல் செய்யப்படுகிற நேரத்தில், என்னென்ன புதிய திட்டங்களை நாம் அறிவிக்க இருக்கிறோம். ஏற்கனவே அறிவித்திருக்கக்கூடிய திட்டங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அந்த நிதிநிலை அறிக்கையில் பேசப்படக்கூடிய ஒரு சூழ்நிலை வரும்.

அதையும் மனதில் வைத்துக்கொண்டு அதற்கும் நீங்கள் தகுந்த பதிலை நம்முடைய அரசுக்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு, புதிதாக பொறுப்பேற்கவுள்ள நீங்கள், சிறப்பான முறையில் கடமையாற்றி இந்த அரசுக்கு ஒரு நற்பெயரை தேடித்தாருங்கள் என்று அன்போடு கேட்டு, உங்கள் அத்தனை பேரையும் வாழ்த்தி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories