மு.க.ஸ்டாலின்

"பள்ளியில் என் பெயரையே மாற்ற வேண்டும் என்றார்கள்" - ருசிகர சம்பவத்தை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

அட்மிஷன் கிடைத்து ஸ்கூலில் கொண்டு போய் சேர்க்கின்றநேரத்தில், என்னுடைய பெயரை மாற்ற வேண்டும் என்று பள்ளியில் சொல்லிவிட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

"பள்ளியில் என் பெயரையே மாற்ற வேண்டும் என்றார்கள்" - ருசிகர சம்பவத்தை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17.12.2022) சேத்துப்பட்டு, சென்னை கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அப்பள்ளியின் 'முன்னாள் மாணவர்கள் சங்கக் கூடுகை - 2022' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் "இங்கே நம்முடைய தமிழாசிரியர் அய்யா ஜெயராமன் அவர்கள் பேசுகிறபோதுகூட சொன்னார். என்னுடைய அண்ணன் முத்து இங்கு தான் படித்தார். என்னுடைய அண்ணன் அழகிரியும் இங்குதான் படித்தார். அவர்களைத் தொடர்ந்து நானும் இங்கு தான் படித்தேன். அவர்கள் படித்துக் கொண்டிருப்பதால் என்னையும் இங்கே சேர்க்க வேண்டுமென்று, எங்களையெல்லாம் கண்காணித்துக்கொண்டு, குடும்ப பொறுப்பேற்றுக்கொண்டு இருந்தவர் மறைந்த திரு. முரசொலி மாறன் அவர்கள். என்னுடைய மாமா அவர். அவர்தான் பொறுப்பேற்று இருந்தார். பொறுப்பேற்றுக்கொண்டு எங்களையெல்லாம் படிக்க வைத்தார்.

என்னை இந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தார். ஏற்கனவே நான் ஒன்றாவதிலிருந்து ஆறாவது வரை படிப்பதற்கு சர்ச் பார்க் கான்வென்டில் சேர்ப்பதற்கான முயற்சியில் என்னையும் என்னுடைய தங்கை செல்வியை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று முயற்சித்தார். அட்மிஷன் கிடைத்தது.

"பள்ளியில் என் பெயரையே மாற்ற வேண்டும் என்றார்கள்" - ருசிகர சம்பவத்தை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

அட்மிஷன் கிடைத்து ஸ்கூலில் கொண்டு போய் சேர்க்கின்றநேரத்தில், என்னுடைய பெயரை மாற்ற வேண்டும் என்று பள்ளியில் சொல்லிவிட்டார்கள். ஸ்டாலின் என்கிற பெயர் இருக்கக்கூடாது. ரஷ்யாவில் ஒரு மிகப்பெரிய புரட்சி நடந்து கொண்டு இருக்கிறது. சிலையெல்லாம் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த சூழ்நிலையில் இந்தப் பெயரை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெயரை மாற்றுங்கள். மாறன்தான் எங்களை ஸ்கூலுக்கு அழைத்துக் கொண்டு சென்றார். சர்ச் பார்க் கான்வென்டில் இடம் கிடைப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இப்போது சுலபமாக கிடைத்துவிடும் அதுவேறு.

அப்பொதெல்லாம் ஸ்கூலை பொறுத்தவரைக்கும் ஒன்றாவதிலிருந்து ஆறாவது வரை படிக்கிற பள்ளியைப் பொறுத்தவரைக்கும் சர்ச் பார்க்கில் இடம் கிடைப்பது என்பது அவ்வளவு அபூர்வம். அதுமாதிரி, ஆறாவதிலிருந்து 11-ஆவது வரை ஒரு பள்ளியில் சேரவேண்டுமென்றால், இந்த கிறிஸ்டியன் காலேஜ் மேல்நிலைப்பள்ளியில் இடம் கிடைக்கிறது என்றால் மிகவும் அபூர்வம். கிடைப்பது கஷ்டம். அப்போது திரு. முரசொலி மாறன் அவர்கள் என்னுடைய தந்தையிடத்தில் சென்று பெயரை மாற்றச் சொல்கிறார்கள் அப்போது தான் அட்மிஷன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள் என்றார். பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர பெயரை மாற்ற மாட்டேன் என்று சொன்னார் கலைஞர் அவர்கள்.

அதற்குப்பிறகு பக்கத்தில் இருக்கின்ற மான்டேசெரி ஸ்கூலில் கொண்டு போய் சேர்த்தார்கள். என்னால் என்னுடைய தங்கையும் அங்கு படிக்க முடியாமல் போய்விட்டது. அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். அதே மாதிரிதான் இந்த பள்ளியில் சேருகிறபோது என்னுடைய இரண்டு சகோதரர்கள் படிக்கிறார்களே எனக்கு அட்மிஷன் சுலபமாக கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இங்கு நுழைவுத் தேர்வு இருக்கிறது. நான் பரீட்சையில் தேறவில்லை. பெயிலாகிவிட்டேன். சேர்க்க முடியாது என்று சொன்னார்கள். அப்போது சென்னையில் யார் மேயர் என்றால் குசேலர். அப்போதெல்லாம் மேயர் என்றால் செவர்லட் கார், அங்கி, 100 பவுன் செயின், செங்கோல், அப்போது எல்லாம் ஒரு வருடம் தான் மேயருக்கு காலம். அவர்களுக்கு வரவேற்பு, வெளிநாடு நிகழ்ச்சி, வெளிமாநில நிகழ்ச்சி, அதற்கே ஒரு வருடம் முடிந்துவிடும். அப்போது இதுதான் மேயருடைய வேலை. ஆனால் இப்போது மேயர் வேலையெல்லாம் அப்படியில்லை. ஐந்து வருடம், மக்களோடு மக்களாக இருந்து பணி செய்தால்தான் அரசியலிலே முன்னேற முடியும். மேயராக நிலைத்திருக்க முடியும்.

"பள்ளியில் என் பெயரையே மாற்ற வேண்டும் என்றார்கள்" - ருசிகர சம்பவத்தை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

திரு. குசேலர் அவர்களை நீங்கள் சிபாரிசு செய்யுங்கள், நீங்கள் மேயர், அதனால் இந்த பள்ளியில் சிபாரிசு செய்தால் சீட் கிடைக்கும் என்று திரு. முரசொலி மாறன் அவர்கள் அழைத்துக் கொண்டு வருகிறார். செவர்லெட் காரில் நான், மேயர், திரு. முரசொலி மாறன் வருகிறோம். அந்த காரை இந்த ஸ்கூலில் ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் தான் அனுமதிப்பார்கள். உள்ளே காரே வரமுடியாது. ஆனால் மேயர் காரில் உள்ளே வந்தேன். அப்போது சௌரிராயன் அவர்கள் தலைமையாசிரியராக இருக்கிறார். அவருடைய அறையின் பக்கத்தில் கார் நிற்கிறது. மேயரை அவர் வரவேற்று, என்னையும் அழைத்துக் கொண்டு போகிறார். எனக்கு அதற்குப்பிறகு சீட் கிடைக்கிறது. பின்னர் இந்த பள்ளியில் படித்து இன்றைக்கு இவ்வளவு பெரிய பொறுப்புக்கு வரக்கூடிய சூழ்நிலையை நினைத்து நீங்கள் எப்படி பெருமைப்படுகிறீர்களோ, அதைவிட அதிகமான அளவுக்கு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

நான் நினைத்துப்பார்க்கிறேன், நாம் அனைவரும் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் சந்தித்துக் கொள்கிறோம். மலரும் நினைவு என்று சொல்வார்களே, அதுபோல பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது. நான் மேயராக இருந்தபோது பங்கேற்றிருக்கிறேன், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பழைய மாணவன் என்கிற முறையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்.

இன்றைக்கு முதலமைச்சர் என்கின்ற முறையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். எங்கே படித்தோம். எந்த வாத்தியாரிடம் அடி வாங்கினோம். பென்சில் வாங்க எங்கே போனோம். எங்கெங்கெல்லாம் விளையாடினோம் என்பதையெல்லாம் அன்றைக்கு நாம் பகிர்ந்துகொண்டோம். 6-ஆம் வகுப்பில் நான் முதன்முதலில் சேர்ந்தேன். போனமுறை வந்திருந்தபோது அந்த அறைக்கு அழைத்துக் கொண்டு சென்று அங்கே இருக்கக்கூடிய நாற்காலியில் உட்கார வைத்து நம்முடைய இப்போது இருக்கின்ற தலைமையாசிரியர் அவர்கள் அழகு பார்த்தார். அதற்குப் பிறகு 7-ஆம் வகுப்பையும் பார்த்தேன். இப்போது அந்த இடமெல்லாம் கிண்டர் கார்டனாக மாறியிருக்கிறது. ஓரளவுக்குத்தான் மாறியிருக்கிறதே தவிர மற்றபடி முன்னால் இருந்தபடி தான் பராமரித்துக்கொண்டு வருகிறீர்கள். என் மனசுக்குள்ளே என் வகுப்பறை எப்படி இருக்கிறதோ அதுபோலதான் இப்போதும் இருக்கிறது. இங்கே பழைய நண்பர்களையெல்லாம் நான் பார்க்கிறேன். நம்முடைய முன்னாள் தமிழாசிரியர் அய்யா ஜெயராமன் அவர்கள் மிகப் பெருமையோடு அனைத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது எல்லாம் இந்தப் பள்ளியின் சார்பில் சில நிகழ்ச்சிகள் நடத்துவதுண்டு. கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்துவதுண்டு. அப்போது நன்கொடை வசூல் செய்வார்கள். என்னிடத்தில் தான் புக்கை கொடுத்துவிடுவார்கள். அப்போது பள்ளிக்கு எனக்கு லீவு கிடைத்துவிடும். அந்த நன்கொடை சீட் எடுத்துக் கொண்டு பல பெரிய தொழிலதிபர்கள், குறிப்பாக அன்றைக்கு பிரபலமாக சினிமாவில் மின்னிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஆகியோரிடத்தில் சென்று நான் நன்கொடை வாங்கி கொடுத்திருக்கிறேன். அதனால் அதற்காகவே எனக்கு லீவு கிடைக்கும் என்பதற்காக நான் வசூலில் அதிகம் ஈடுபடுவதுண்டு.

"பள்ளியில் என் பெயரையே மாற்ற வேண்டும் என்றார்கள்" - ருசிகர சம்பவத்தை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இப்படிப்பட்ட நிலையில், பல அனுபவங்கள் அதை எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். முன்னாள் மாணவர்கள் இணைந்து பல சேவைகள் இந்தப் பள்ளிக்கு செய்து கொண்டிருக்கக்கூடிய அந்த நிகழ்ச்சியைப் பற்றி கூட முன்னாள் மாணவர் அழகோடு எடுத்துச் சொன்னார். இந்தப்பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை எல்லாம் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட பரந்த உள்ளத்துக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இதேபோல ஒவ்வொரு பள்ளிக்கும் அந்தப் பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு உதவிகளை செய்யவேண்டும். இதேபோல ஒரு முன்னெடுப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் நாங்கள் வைக்க இருக்கிறோம். அதற்கான அமைப்பை வருகிற 19-ஆம் தேதி நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். தமிழகம் முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புக்கள் வழங்கக்கூடிய நிதியின் மூலமாக அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தையும் நாம் செய்ய இருக்கிறோம். இதனை செய்து தருவது அரசாங்கத்தினுடைய கடமை என்று மட்டும் நீங்கள் நினைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் அரசாங்கமே செய்துவிட முடியாது. அதையும் புரிந்துகொண்டு மக்களும் சேர்ந்தால்தான் அதை நிறைவேற்றமுடியும். வெற்றிபெற முடியும்.

தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் 19-ஆம் தேதி தொடங்குவதற்கு முன்னதாகவே நான் படித்த பள்ளியிலே, எனது பள்ளியிலே முன்னெடுப்பாக நடந்திருப்பதைப் பார்த்து நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்; பெருமைப்படுகிறேன். தமிழகத்தில், இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக ஆக்குவது என்னுடைய இலட்சியம். அது உங்களுக்குத் தெரியும்.

இந்த ஆட்சி பொறுப்பேற்று, முதலமைச்சராகப் பொறுப்பேற்று, எத்தனையோ அரசு நிகழ்ச்சிகள், எத்தனையோ பொது நிகழ்ச்சிகள், எத்தனையோ கட்சி நிகழ்ச்சிகள் என்று எத்தனை நிகழ்ச்சிக்கு போனாலும், இந்த நிகழ்ச்சிக்கு எந்த நிகழ்ச்சியும் ஈடாகாது என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, அதுதான் என்னுடைய நினைவில் பசுமையாக இருக்கிறது என்பதையும் பெருமையோடு சுட்டிக்காட்டி, உங்கள் அத்தனைப் பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்" எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories