மு.க.ஸ்டாலின்

“தமிழ்நாட்டில் படித்து முன்னேறியவர்களை கொச்சைப்படுத்தும் EPS, OPS” : விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

"மக்களுக்கான ஆட்சி தரும் எங்களுக்கு நீங்கள் வாக்குகளைத் தாருங்கள்!” என தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“தமிழ்நாட்டில் படித்து முன்னேறியவர்களை கொச்சைப்படுத்தும் EPS, OPS” : விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக் கருத்தியலை மலர வைப்பதற்கான முயற்சியில், என்னை நானே ஒப்படைத்துக் கொண்டு இருக்கிறேன்! மக்களுக்கான ஆட்சி தரும் எங்களுக்கு நீங்கள் வாக்குகளைத் தாருங்கள்!” என தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (12-02-2022) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மாபெரும் நிகழ்வு எதுவென்று கேட்டால் அது தந்தை பெரியார் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்களும் சந்தித்ததுதான். வரலாற்றையே புரட்டிப் போட்ட அந்த நிகழ்ச்சி நடந்த இடம் இந்த திருப்பூர் நகரம்தான்! பகுத்தறிவை ஊட்டித் தமிழர்களின் இனமான உணர்ச்சியைத் தட்டி எழுப்பியவர் “தென்னாட்டு சாக்ரடீஸ்” பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்! இனமான உணர்ச்சி பெற்ற தமிழர்களை வழிநடத்திய பெருமகனாய்; உணர்வூட்டிய பெரியாரின் உன்னதத் திருமகனாய்; தமிழன்னையின் தலைமகனாய்; நமக்கெல்லாம் அண்ணனாய்; அறிவொளியாய் விளங்கியவர் அறிவுலக மேதை பேரறிஞர் அண்ணா. அவர்கள் இருவரும் சந்தித்த வரலாற்று நிகழ்வுக்கு அடித்தளம் அமைத்த ஊரான இந்தத் திருப்பூரில்‘உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி’ என்ற இந்தத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உங்கள் அனைவரிடமும் உரையாற்றக் கூடிய வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்.

தியாகத்தின் திருவுருவமாகப் போற்றப்படும் திருப்பூர் குமரன் வாழ்ந்த ஊர் இந்தத் திருப்பூர். தேசியக் கொடியைக் காக்க அவர் மட்டுமல்ல; அவரோடு சேர்ந்து ஒன்பது பேர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். எவ்வளவு தாக்கினாலும்; கையில் ஏந்தியுள்ள தேசியக் கொடியை கீழே விடமாட்டோம் என இலட்சிய வேட்கையுடன் நின்றவர்கள் வாழ்ந்த ஊர் இந்தத் திருப்பூர்! அந்தத் திருப்பூர் மண் கொடுத்த தியாகி திருப்பூர் குமரனுக்கு நினைவுத்தூண் அமைத்த ஆட்சிதான் நம்முடைய தி.மு.க ஆட்சி! திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் இறந்தபோது திருப்பூர் குமரனின் நினைவகத்தில் அவரை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த ஆட்சியும் தி.மு.க. ஆட்சிதான்!

அதேபோல் 1965 மொழிப்போராட்டத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் கல்லூரி மாணவர்கள் தமிழ்மொழியைக் காக்கவும்; இந்தித் திணிப்புக்கு எதிராகவும் போராடியபோது திருப்பூரில்தான் பள்ளி மாணவர்களும் எழுச்சியோடு போராடினார்கள். இவை திருப்பூர் நகரத்தின் வரலாற்றில் பதிவாகியிருக்கும் உணர்ச்சிமிக்க நிகழ்ச்சிகள் ஆகும்!

2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் நாள் திருப்பூர் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அது முத்தமிழறிஞர் கலைஞரின் முக்கியமான சாதனையாகும்! அதற்கான விழா நடைபெற்ற நாளில் திருப்பூரை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்திக் காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர்! தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு புது மாவட்டத்தை உருவாக்கியவரும் முத்தமிழறிஞர் கலைஞர்தான்!

இப்போது மாநகராட்சியாகவும் புதிய மாவட்டமாகவும் திருப்பூர் திகழ்வதற்குக் காரணம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான். இந்தச் சாதனைச் சரித்திரத்தின் தொடர்ச்சியாகக் கடந்த நவம்பர் மாதம் இங்கு வந்து மாபெரும் அரசு விழாவில் நான் கலந்துகொண்டேன். மாண்புமிகு அமைச்சர்கள் சாமிநாதன் அவர்களும்; கயல்விழி செல்வராஜ் அவர்களும் அந்த விழாவைச் சிறப்பாகவும் மிகப் பிரம்மாண்டமாகவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இப்போது கூட, கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சியையும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருப்பார்கள்.

அந்த விழா மேடையிலேயே 4,149 பயனாளிகளுக்கு 54 கோடியே 32 இலட்சத்து 51 ஆயிரத்து 232 ரூபாய் மதிப்பிலான நிதி உதவிகள் செய்யப்பட்டது. அதே விழாவில் 660 சுயஉதவிக் குழுக்களுக்கு 25 கோடி ரூபாய் கடனுதவிகள் வழங்கப்பட்டது. அந்த விழாவில் ஏராளமான கட்டடங்களை நான் திறந்து வைத்தேன்.

* திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்

* தாராபுரம் கால்நடை மருத்துவமனை

* சேயூர் கால்நடை மருந்தகம்

* பல்லடம் வட்டம் சாமனாபுரம் நில அளவர் குடியிருப்பு

* தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகள்

* நொய்யல் வீதி மாநகராட்சிப் பள்ளி வகுப்பறைகள்

* திருப்பூர் மாநகராட்சி- தந்தை பெரியார் வீதியில் மழைநீர் வடிகால் கட்டுதல்

* நாய்கள் தகனம் செய்யும் மேடை அமைத்தல்

* ராயர்புரம் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள்

* அவிநாசி வார்டு 12-இல் சாக்கடை நீர் வடிகால் கட்டுதல்

* இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அங்கன்வாடி மையம் பழுது பார்ப்பு

* துணை சுகாதார நிலையங்களுக்கான கட்டடங்கள்.

* தாட்கோ சார்பில் ஏராளமான திட்டங்கள்

இப்படி திருப்பூர் மாவட்டத்தில் 11 அரசுத் துறைகளின் சார்பில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு மக்களோட பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவை எல்லாமே கடந்த எட்டு மாதகாலத்தில் செய்து தரப்பட்ட திட்டப்பணிகள். அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் ஏராளமான திட்டங்கள் வரப் போகின்றன. மார்ச் மாதம் புதிய நிதிநிலை அறிக்கையும் மானியக் கோரிக்கையும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது திருப்பூருக்கு மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களுக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் ஏராளமான புதிய புதிய திட்டங்கள் வரப் போகின்றன. அதற்கான திட்டமிடுதல்களை இப்போதே நாங்கள் தொடங்கிவிட்டோம்! உங்களுக்காக உழைப்பதற்கு உருவாக்கப்பட்டதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

"நான் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன். நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற காரணத்தால் பின்தங்கிய வகுப்பினர் நலனுக்காக என் உயிரையே பணயமாக வைத்துப் போராடுவேன்'' என்று முதன்முதலில் முதலமைச்சர் ஆனபோது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்திலேயே சொன்னார்.

"எனக்கென்று சாதிப்பெருமை கிடையாது. மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கென்று குடும்பப் பாரம்பரியம் கிடையாது. ராவ் பகதூர்- திவான் பகதூர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறும் பெருமை எனக்கில்லை. கல்லூரிப் பட்டம் எனக்கில்லை. நான் புகுந்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியும் காஞ்சிக் கல்லூரியும்தான். நான் பட்டம் பெறாதவன் என்றாலும் பகுத்தறிவுப் பணியாளன்! சாதிப்பெருமை இல்லை என்றாலும் அண்ணாவின் நீதியே என் சாதியென மதிப்பவன் நான்". இப்படியெல்லாம் தன்னைப்பற்றிக் குறிப்பிட்டார் தலைவர் கலைஞர் அவர்கள்.

அப்படிப்பட்ட தலைவர்களால் இந்த திராவிட இனத்துக்காகத் தமிழ்நாட்டு மக்களுக்காக தமிழர்களின் நலனைக் காப்பதற்காக வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்! திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அனைத்துமாக இருக்கிற தமிழ் மக்களின் உரிமையைப் பெற்றுத் தர இந்த இனத்தின் விடிவெள்ளியாக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்!

ஆறாவது முறையாகத் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் நாம் அமர்ந்திருக்கிறோம். நம்முடைய ஆட்சிக்கால சாதனைகளைச் சொல்வதாக இருந்தால் இன்றைக்கு முழுவதும் என்னால் பட்டியல் போட முடியும். அவ்வளவு ஏராளமான சாதனைகள் கொட்டிக் கிடக்கின்றன. எதைச் சொல்வது எதை விடுவது எனத் தெரியாமல் திக்குமுக்காடிப் போகிற அளவுக்கு ஏராளமான சாதனைகள் மலை எனக் கொட்டிக் கிடக்கின்றன!

ஆறாவது முறையாக கழக ஆட்சி அமைந்து தமிழ்நாட்டு மக்களாகிய உங்களோட மேலான உத்தரவால் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற இந்த ஒன்பது மாதகாலத்துல செய்திருக்கிற சாதனைகளை மட்டும் சொல்ல வேண்டும் என்றால் கூட பல மணிநேரம் ஆகும்! இந்தத் துறை - அந்தத் துறை என்று முக்கியத்துவம் தராமல்; இந்த மாவட்டம் - அந்த மாவட்டம் என்ற வித்தியாசம் இல்லாமல்; சாதி-மதப் பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்குமான அரசாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.

திராவிட இயக்கம் இந்த நாட்டுக்கு வழங்கிய மாபெரும் கருத்தியல்கள்தான் சமூகநீதியும் மாநில சுயாட்சியும்! இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக் கருத்தியலை மலர வைப்பதற்கான முயற்சியில்- என்னை நானே ஒப்படைத்துக் கொண்டு இருக்கிறேன்! கடந்த சில நாட்களாகச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அகில இந்தியா முழுமைக்குமான சமூகநீதிக் கூட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன். இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி, பொதுவுடைமை இயக்கங்கள் மட்டுமல்ல; பல்வேறு மாநிலக் கட்சிகளும் - அமைப்புகளும் இதில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து எனக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடப்பதால் அது முடிந்த பிறகு, எங்களுடைய அடுத்தக்கட்ட செயல்பாடுகளைத் தொடங்க இருக்கிறோம். இந்தியா என்பது சட்டநீதி நாடாக மட்டுமில்லாமல் சமூகநீதி நாடாக ஆக்கப்படவேண்டும் என்பதுதான் நம் அனைவரின் முக்கியக் குறிக்கோள்!

அதேபோல- இந்தியா என்பது பல்வேறு இனம்- மொழி- மதம்- பண்பாடுகளைச் சேர்ந்த மக்களைக் கொண்ட நாடு! வேற்றுமையில் ஒற்றுமை வேண்டும். அதுதான் நமது பலம்! அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் ஆட்சியைத் துரத்துவதற்கு இந்த ஒற்றுமைதான் உந்துசக்தியாக இருந்தது. இதை அங்கீகரிக்கின்ற வகையில்தான் அனைத்து மொழி, இன, மத மக்களுக்கும்; அவர்களுக்கான உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியது. இந்தியாவின் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டன. இந்த மொழிவாரி மாநிலங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் பரந்து விரிந்திருக்கும் அழகிய இந்த இந்தியத் துணைக்கண்டம். மாநிலங்களின் கூட்டுச் சேர்க்கைதான் ஒன்றிய அரசாகும். அந்த ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவத்துடன் செயல்பட வேண்டும். அதற்கு மாநிலங்கள் எல்லாம் அதிக அதிகாரம் கொண்டதாகச் செயல்பட- வழிவகை செய்யப்பட வேண்டும். இந்த மாநில சுயாட்சியைத்தான் தன்னோட கடைசிக் கட்டுரையாகப் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதினார். ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி' என்ற தத்துவமாக ஒற்றை வரியில் இதனை வடித்துக் கொடுத்தார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.

அந்தக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு இன்றைக்கு ஆபத்து வந்திருக்கிறது. அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசே வைத்துக் கொள்ளும் சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்குகிறது. ‘ஒரே நாடு - ஒரே தேசம்’என்கிற முழக்கத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். உண்மையில், இந்த நாட்டில் வாழும் அனைத்து இன- மொழி- மத- மாநில மக்களுக்கும் அவரவர்களுக்கான உரிமையும் சலுகையும் தரப்பட வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இசுலாமிய சகோதரர்களின் குடியுரிமையைப் பறிப்பதாக இருக்கிறது. தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை தருவதற்கு எதிராக அமைந்திருக்கிறது. “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யாருக்கு பாதிப்பு என்று?” கேள்வி கேட்டுச் சிறுபான்மை மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியது அதிமுக. ஆனால், அந்தச் சட்டம் வரக்கூடாது என்று வாக்களித்து எதிர்த்தது தி.மு.க. அதேபோல, ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து உழவர்களையும் ஒரே நேரத்தில் கோபம் அடைய வைத்தது.

ஆனால், மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் அதே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக. அதை விவசாயிகளோடு தோளோடு தோள் நின்று எதிர்த்தது திமுக. ஆட்சிக்கு வந்ததும் முதலில் இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து சட்டமன்றத்திலேயே நிறைவேற்றினது திமுக. உழவர்களும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கொடுத்த அழுத்தம்; நடத்திய போராட்டம் காரணமாக அந்த மூன்று வேளாண் சட்டங்களையே ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது ஒன்றிய பா.ஜ.க. அரசு. வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி! சர்வாதிகார மனப்பான்மை கொண்ட ஒன்றிய பா.ஜ.க. அரசை - ‘முடியவே முடியாது’என்று சொல்லிக்கொண்டு இருந்த பிரதமர் மோடியை அறவழிப் போராட்டம் மூலம் பணிய வைத்தவர்கள் விவசாயிகள். அடக்குமுறையை எதிர்த்து உழவர்கள் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல! அந்த வெற்றியை இரண்டாவது சுதந்திரப் போர் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். மாநிலங்களுக்கு இருந்த உரிமை அனைத்தையும் சரக்கு மற்றும் சேவை வரியில்; ஒன்றிய அரசுக்கு மாற்றிக்கொண்டு போய்விட்டார்கள். அதனால் மாநிலங்களின் நிதி ஆதாரம், நிர்க்கதியாக நிற்கிறது!

நீட் என்ற பெயரால் ஏழை - எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி பெறுவதற்குத் தடையை ஏற்படுத்தி; மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைக்கிறார்கள். இந்த நீட் தேர்வைத் திணித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசுதான். நீட் தேர்வு தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பே, அந்தத் தேர்வை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்தது. நீட் தேர்வு செல்லும் என்று தீர்ப்பு வருவதற்கு முன்பே மெடிக்கல் கவுன்சிலை விட்டு - மக்கள் நல்வாழ்வுத்துறைக்குக் கடிதம் எழுதச் சொன்னது பா.ஜ.க.தான். இது அப்போது முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதாவுக்குத் தெரிந்ததும்-‘உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்- ஏன் இப்படி அவசர அவசரமாகச் செயல்படுகிறீர்கள்’ என்று கேள்வியெழுப்பி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். அம்மையார் ஜெயலலிதாவே நீட் தேர்வை கொண்டுவர பா.ஜ.க.தான் முயற்சிக்கிறது என்று சொன்ன பிறகும்; பா.ஜ.க.வுக்குப் பல்லக்குத் தூக்க நீட் தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதித்த தனது மலிவான செயலை மறைக்க வழக்கம்போல கூச்சமேபடாமல் பொய் சொல்கிறார் திருவாளர் ‘பச்சைப் பொய்’பழனிசாமி.

நீட் தேர்வானது ஏழை - எளிய, கிராமப்புற மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைக்கிறது; தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைக் குலைக்கப் பார்க்கிறது; சமூகநீதிக்கு எதிராக இருக்கிறது; நூற்றாண்டாக நாம் போராடிப் பெற்ற கல்வி உரிமைக்கு ஆபத்தாக வருகிறது என்று நீட் தேர்வை நாம் எதிர்க்கிறோம். ஆனால், பழனிசாமி-பன்னீர்செல்வம் நாடகக் கம்பெனி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளில் தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருப்பதாகவும்; அதுதான் ஏழை - கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கிறதாகவும்; பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படும் வரைக்கும் விலக்கு கேட்போம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பாடதிட்டத் தரம் குறைவானது என்று சொல்லுவதன் மூலமாக இங்கே படித்து முன்னேறியவர்களை இவர்கள் கொச்சைப்படுத்துகிறார்களா? ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்து தமிழ்நாட்டு மக்களைக் கல்விச்சாலைகள் நோக்கி அழைத்து வந்த - நீதிக்கட்சித் தலைவர்கள் தொடங்கிப் பெருந்தலைவர் காமராஜர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டவர்களின் பங்களிப்பை மறைக்கப் பார்க்கிறார்களா?

2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இப்படிச் சொன்ன பழனிசாமி-பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனி; 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு 163 அறிவிப்புகள் அடங்கிய தேர்தல் வாக்குறுதிப் புத்தகத்தை வெளியிட்டார்கள். அதில் 14-ஆவது வாக்குறுதியில் நீட் தேர்வுக்குப் பயிற்சி மையம் என்று சொன்னவர்கள் நீட் எதிர்ப்பைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை! நீட் தேர்வைத் திணிக்காதீர்கள் என்று அம்மையார் ஜெயலலிதாவே சொன்ன பிறகும் - ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாதம் தாங்கிகளாக- பல்லக்குத் தூக்கிகளாக இருப்பதற்கு உடல் கூசவில்லையா? மனச்சாட்சி உறுத்தவில்லையா? மாநில சுயாட்சியைக் கம்பீரமாகச் சொன்ன பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் கொள்கைகளில் இருந்து நழுவிவிட்டீர்கள். சுயமரியாதை உணர்வை ஊட்டிய திராவிடக் கொள்கைகளுக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது எம்.ஜி.ஆரையும் - அம்மையார் ஜெயலலிதாவையும் கூட மறந்துவிட்டு- ‘மோடி எங்கள் டாடி’-என்று இப்படி சரணாகதி அடைந்துவிட்டீர்களே! இதையெல்லாம் பார்த்தால் ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவும் பார்த்திபனும்- "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" என்று நடித்த காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது. அந்தக் காட்சி முடியும்போது வெறும் பலகைதான் இருக்கும். அதுபோல, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாவை இழந்து- திராவிடத்தை இழந்து- முன்னேற்றத்தை இழந்து- கழகத்தையும் பா.ஜ.க.விடம் அடகு வைத்து- உங்கள் கட்சியோட தொண்டர்களோட கோபத்துக்கும் ஆளாகி- வெற்றுப் பலகையாக நிற்கிறீர்களே!

புதிய கல்விக் கொள்கை மூலமாவும் பல ஆபத்துகள் வரப்போகின்றன. அதையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அடுத்ததாக- ‘ஒரே நாடு - ஒரே பத்திரப் பதிவு’என்று கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இவர்கள்- ‘ஒரே… ஒரே…’என்று முன்வைக்கும் முழக்கம் எல்லாமே இந்த நாட்டை ஒற்றையாட்சித்தன்மை கொண்ட நாடாக மாற்றுவதற்கான முயற்சிதானே தவிர வேறல்ல! இது மக்களின் நன்மைக்கும் வளர்ச்சிக்கும் பயன்படாது! எனவேதான் இந்தியா முழுமைக்கும் மாநில சுயாட்சித் தத்துவத்தை மலர வைக்கப் போராடியும், வாதாடியும் வருகிறோம்! ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ என்ற முழக்கத்தை அகில இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வைப்போம். தமிழ்நாட்டில் காலூன்றியபடியே இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் பாடுபடும் இயக்கமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருகிறது.

திருப்பூர் என்பது சிறு, குறு, நடுத்தரத் தொழில் மையம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் திருப்பூர் மாவட்டத்தின் பங்களிப்பு என்பது மிக அதிகம். ‘வந்தாரை வாழவைக்கும் திருப்பூர்’ என்று பெயரெடுத்த ஊர். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் எல்லாம் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்கான ஏராளமான திட்டங்களைச் செய்து கொடுத்தோம். கொரோனா தீவிரமாகப் பரவியபோது அதிகமாக பாதிக்கப்பட்டது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்தான். கடந்த அதிமுக ஆட்சியானது இந்தத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக- மேம்பாட்டுக்காக எதுவும் செய்யவில்லை. கழக அரசு மலர்ந்ததும் இதுகுறித்து அதிக முக்கியத்துவம் கொடுத்துத் திட்டங்களைத் தீட்டினோம். திருப்பூர் மாவட்டம் என்பது சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நிறைந்த மாவட்டம் என்பதால் அது தொடர்பாக இந்த ஒன்பது மாதகாலத்தில் செய்து தரப்பட்ட நன்மைகள மட்டும் நான் இங்குப் பட்டியலிட விரும்புகிறேன்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டு நிறுவனங்களுக்கு மானியமாக 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 168 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது.

* இத்தொழில் நடத்துவோர் பெறவேண்டிய சட்டரீதியான உரிமங்கள் பெற ஆறுமாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

* சிறு, குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்க வல்லுநர் குழுவை அமைத்தோம்.

* மானியம் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கினோம்.

* சிட்கோ நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகை, வாடகைக்கு ஆறுமாத கால அவகாசம் கொடுத்தோம்.

*தொழில் துறை மூலமாக வழங்கப்படும் மூலதன மானியத்தை ஒரே தவணையாகக் கொடுத்தோம்.

* தொழிலாளர்களுக்குக் குறைந்த வாடகைக் குடியிருப்பு வளாகங்கள் சென்னை, கோவையில் அமைக்கப்பட இருக்கிறது.

* இளைஞர்களுக்குத் தொழில் தொடங்க மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 2,387 பேருக்கு தலா இரண்டரை லட்சம் ரூபாய் தரப்பட்டுள்ளது.

* கடந்த நிதியாண்டில் 3,432 தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

* புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் முதலீட்டு மானியம் ரூ.50 இலட்சத்திலிருந்து ரூ.75 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* பத்து தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் இயந்திரங்களை புதுப்பித்து நவீனமயமாக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சிட்கோ) தற்போது 5 மாவட்டங்களில் 76 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கி வருகிறது.

* சிட்கோ தொழிற்பேட்டைகளில் மனை விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

* புத்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் தரப்பட்டுள்ளது.

* பருத்தி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீது விதிக்கப்படும் 1 விழுக்காடு சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டும் என நெசவாளர்கள், தொழில் முனைவோர், நூற்பாலைகள், பஞ்சு உற்பத்தியாளர்கள், வணிகர்கள் ஆகியோர் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த 1 விழுக்காடு சந்தை நுழைவு வரியை நாங்கள் தற்போது நீக்கி உள்ளோம். இதன் விளைவாக, இந்திய பருத்தி கார்ப்பரேஷன், தற்போது சேலம், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் பஞ்சுக் கிடங்குகள் அமைத்திட முன்வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சந்தைவரி மட்டுமில்ல சென்வாட் வரியை நீக்க நடவடிக்கை எடுத்ததும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

இப்படி நாள் முழுக்க என்னால் சொல்லிக்கொண்டே போக முடியும். நேற்று "தி இந்து பத்திரிக்கையில்"- ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. ‘Tamil Nadu in Focus’- என்கிற அந்தக் கட்டுரையில், தொழில் வளர்ச்சி குறித்து வந்திருக்கிறது. “முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகு பஞ்சுக்கு உள்ள மார்க்கெட் கமிட்டி வரியை நீக்கினார். அதனால் ஜவுளித் தொழில் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும்"- என்று போட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் சொல்லியிருக்கிறது. அந்தச் சுய உதவிக்குழுக்களை முதலில் உருவாக்கியது முத்தமிழறிஞர் கலைஞர். இந்த இயக்கம் எத்தகைய தொலைநோக்குத் திட்டங்களைக் கொண்டுவந்து தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறது என்பதற்கு இதுவே சாட்சி! இப்படி ஒன்றிய அரசும் பல்வேறு திட்டங்களைத் தீட்டினால்தான் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் செழிக்கும்! இந்தத் தொழில்ல இருக்கிற தொழில் முனைவோரும் முன்னேறுவார்கள். வேலைபார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் மலர்ச்சி அடையும். ஆனால் அண்மையில், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வெளியாகி இருக்கிறது. அது சிறு, குறு, நடுத்தரத் தொழிலில் இருக்கிறவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை. வைரத்துக்கு வரி குறைத்திருக்கிறார்கள். ஆனால் சிறு தொழில்களுக்கு அதில் சலுகை இல்லை. இதைக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் நாடாளுமன்றத்திலேயே சுட்டிக் காட்டிப் பேசி இருக்கிறார். "குஜராத் வைர வியாபாரிகளுக்கு 5 விழுக்காடு வரியைக் குறைத்துள்ளீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள- திருப்பூர் பின்னலாடை வணிகர்களுக்கு எந்தவிதச் சலுகையும் வழங்கவில்லை'' என்று தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு அரசு உங்களுக்கு முழுமையாக உதவத் தயாராக இருக்கிறது! அதேநேரத்தில் ஒன்றிய அரசிடமும் வாதாடும் கட்சியாவும் தி.மு.க. இருக்கிறது.

ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு சாட்சி வேண்டுமானால் திருப்பூர் ஒன்றே போதும்! 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் ஒன்றிய பா.ஜ.க. அரசு பொருளாதாரக் கொள்கையில் தவறுக்கு மேல் தவறு செய்து இந்திய நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டது! திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தங்களோட ஏற்றுமதி இலக்கை எட்டமுடியாம போனதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்தே தொழில் நிறுவனங்கள் இன்னும் மீளவில்லை. ஜி.எஸ்.டி. வரிக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு திருப்பூரின் மொத்த வர்த்தகம் 24 விழுக்காடு குறைந்துவிட்டதாக வர்த்தகர்கள் சொல்கிறார்கள். ஏற்றுமதி நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. கச்சாப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. கூடுதலாக முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் பலரும் சிறு குறு நிறுவனங்களை மூடிவிட்டுச் சென்றுவிட்டார்கள். பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது! இதை இப்படியே விட்டுவிட முடியாது. எனவேதான், சிறு-குறு நடுத்தரத் தொழில்களை முன்னேற்ற முனைப்போடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

* மகளிருக்கு பேருந்துகளில் அளிக்கப்பட்ட இலவசப் பயணம் நல்ல பலனைத் தந்துள்ளது. 40 விழுக்காடாக இருந்த மகளிர் பயணிகள் எண்ணிக்கை இன்று 61 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.

* கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், 27 ஆயிரத்து 432 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

* முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட 543 கோடி ரூபாயில்- கோவிட் தடுப்பு நிவாரணப் பணிகளுக்கு 541 கோடியே 64 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது.

* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

* நகர்ப்புற ஏழை மக்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு- 18 ஆயிரத்து 526 பேருக்கு வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

* இந்த நிதியாண்டில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 829 பேர் கொண்ட 29 ஆயிரத்து 425 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 1,628 கோடி ரூபாய் மதிப்புள்ள 432 ஏக்கர் பரப்பளவு திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

* 5 பவுனுக்கு குறைவான நகைக் கடன் பெற்றவர்கள் 13 லட்சம் பேருக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

* 11 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தரப்பட்டுள்ளது.

இப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் நன்மை தரும் ஆட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அனைத்து மக்களின் ஆட்சியாக எப்போதும் இருக்கும்!

உழவர்கள்- நெசவாளர்கள்- தொழிலாளர்கள்- அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள்- சிறு குறு தொழில் செய்வோர்- ஏழைகள் - ஒடுக்கப்பட்டோர் - பட்டியலினத்தவர்- பழங்குடியினத்தவர் - பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் - ஆதரவற்றோர் - முதியோர் - பெண்கள் - மாற்றுத்திறனாளிகள்- திருநங்கையர் - சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள்- புறம்தள்ளப்பட்டவர்கள் என எல்லோரின் மேம்பாட்டுக்கும் முன்னுரிமை தரும் ஆட்சியாக என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சித் தொடரும்.

அப்படிப்பட்ட நம்முடைய ஆட்சி மலர்ந்தால்தான் தங்களுடைய வாழ்க்கை மேன்மை அடையும் என்று நம் மக்கள் நினைத்தார்கள். அந்த நம்பிக்கையுடன் நமக்கு வாக்களித்தார்கள். அவர்களது நம்பிக்கையை கடந்த ஒன்பது மாதகாலத்தில் இன்னும் கூடுதலாக நாம் பெற்றிருக்கோம். இந்த ஒன்பது மாதச் செயல்பாடுகளைப் பார்த்த மக்கள்- இனி, எந்நாளும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். ‘மக்களிடம் செல்’ என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. மக்களிடம் சென்றோம்! ‘மக்களுக்காக வாழ்’ என்று சொன்னார் அவர். மக்களுக்காக வாழ்கிறோம்! அதனால்தான், ‘மக்களுக்காக ஆட்சி செய்’என்று மக்களாகிய நீங்கள் எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறீர்கள்! உங்களது நம்பிக்கையை எந்நாளும் காப்போம். மக்களுக்கான ஆட்சி தரும் எங்களுக்கு நீங்கள் வாக்குகளைத் தாருங்கள்! திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கும் முழு வெற்றியைத் தாரீர்! முழுமையான இடங்களைத் தாரீர்! எனக் கேட்டு உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி எனச் சொல்லி விடை பெறுகிறேன்! நன்றி! வணக்கம்!”

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories