மு.க.ஸ்டாலின்

“தடுப்பூசி விலையேற்றத்தின் சுமையை மாநில அரசுகள் எப்படித் தாங்கும்?” - மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

“அனைத்து மாநிலங்களுக்குமே மத்திய அரசுக்கு விற்பனை செய்யும் விலையான தடுப்பூசி ஒன்றிற்கு 150 ரூபாய் என்ற விலைக்கே சப்ளை செய்திட தடுப்பூசி நிறுவனங்களை அழைத்துப் பேசிட வேண்டும்.”

“தடுப்பூசி விலையேற்றத்தின் சுமையை மாநில அரசுகள் எப்படித் தாங்கும்?” - மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"மத்திய அரசுக்கு வழங்குவதைப் போலவே, தடுப்பூசி ஒன்றின் விலை 150 ரூபாய்க்கு, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் சீரம் நிறுவனம் வழங்கிட வேண்டும்; அதற்குரிய கூடுதல் நிதியையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிட வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் “கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு வழங்கப்படும்” எனக் கூறியுள்ள சீரம் நிறுவனம் “மாநில அரசுகளுக்கான விலையை 400 ரூபாயாக உயர்த்தியிருப்பது” மிகுந்த கவலையளிப்பதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது.

“மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை மாநிலங்களே நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம்” என்று இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்து, மே 1-ஆம் தேதிக்குள் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் “வெளிப்படையான முறையில் விலையை அறிவிக்க வேண்டும்” என்று அறிவுறுத்திய பிறகும், இவ்வாறு கடுமையான விலை உயர்வைத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது மனிதநேயமற்ற செயல் மட்டுமல்ல - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும் ஆபத்து மிகுந்ததாக இருக்கிறது.

“மே 1-ஆம் தேதியிலிருந்து 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்” எனப் பிரதமர் அறிவித்துள்ளார். “தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் 50 விழுக்காடு தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்றும் - மீதியுள்ள 50 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கலாம்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளுக்கு அந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்கூட்டியே 4500 கோடி ரூபாயை மத்திய அரசு இப்போது செலுத்துகிறது. ஆனால் மாநில அரசுகள் உடனடியாக நிதிக்கு எங்கே போகும்? மத்திய அரசு அறிவித்துள்ள “அனைவருக்கும் தடுப்பூசி” என்ற திட்டத்தை எப்படிச் செயல்படுத்த முடியும்? மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு தடுப்பூசியை விற்பனை செய்ய முன்வரும் அந்தத் தயாரிப்பு நிறுவனம் - மாநில அரசுகளுக்கு மட்டும் 400 ரூபாயாக விலையை உயர்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம்?

ஜி.எஸ்.டி வரியில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியே இன்னும் நிலுவையில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு கேட்ட நிதியையும் இதுவரை முழுமையாக மத்திய அரசு வழங்கிடவில்லை. ஏற்கனவே மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் சூழலில் தமிழ்நாடோ அல்லது பிற மாநிலங்களோ தடுப்பூசி விலை ஏற்றத்தின் சுமையை எப்படித் தாங்க இயலும்?

எனவே “அனைவருக்கும் தடுப்பூசி” என்ற அறிவிப்பைத் தமிழகத்தில் செயல்படுத்தி - தமிழக மக்களைப் பாதுகாத்திட, தடுப்பூசியின் விலை ஏற்றத்தை முதலில் உடனடியாகத் தடுத்திட வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு அளிக்கும் விலைக்கே தமிழக அரசுக்கும் தடுப்பூசிகளை விற்பனை செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு மட்டுமின்றி - மற்ற மாநிலங்களும், இந்த விலையேற்றத்தால் பாதிக்கப்படும்.

எனவே, அனைத்து மாநிலங்களுக்குமே மத்திய அரசுக்கு விற்பனை செய்யும் விலையான தடுப்பூசி ஒன்றிற்கு 150 ரூபாய் என்ற விலைக்கே சப்ளை செய்திட தடுப்பூசி நிறுவனங்களை அழைத்துப் பேசிட வேண்டும் எனவும், அதற்குரிய கூடுதல் நிதியையும் மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories