மு.க.ஸ்டாலின்

"விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்டவர் ஏழைத்தாயின் மகன்!?” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

“தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மட்டுமே பத்தாண்டுகாலம் அ.தி.மு.க ஆட்சியால் சீரழிக்கப்பட்டுள்ள தமிழகத்தை மீட்க முடியும் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

"விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்டவர் ஏழைத்தாயின் மகன்!?” - மு.க.ஸ்டாலின் விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே பத்தாண்டுகாலம் அ.தி.மு.க ஆட்சியால் சீரழிக்கப்பட்டுள்ள தமிழகத்தை மீட்க முடியும் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (25-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, செஞ்சியில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“உங்களைத் தேடி நாடி உங்களிடத்தில் ஆதரவு கேட்டு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் தேடித்தர வேண்டும்.

செஞ்சி தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் மஸ்தான் அவர்கள், மாவட்டக் கழகத்தின் செயலாளர். அனைத்துச் சமுதாய மக்களின் சிறப்பான அன்பைப் பெற்றிருக்கும் ஒரு சிறப்பான வேட்பாளர். ஏற்கனவே இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தத் தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும் சட்டமன்றத்தில் அழுத்தந்திருத்தமாக ஆணித்தரமாக இந்த தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக எடுத்து பேசிய வாதாடிய துடிப்பு மிக்க செயல் வீரர். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், மைலம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் டாக்டர். மாசிலாமணி அவர்கள், ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக செயலாற்றி அந்த தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுபவர். மருத்துவ சேவையில் ஏழை எளிய மக்களுக்குச் சிறப்பான வகையில் பணியாற்றி கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட சிறந்த வேட்பாளரைத் தான் தேர்ந்தெடுத்து இந்த மைலம் தொகுதியில் நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திண்டிவனம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் திருமதி சீத்தாபதி சொக்கலிங்கம் அவர்கள், இந்த தொகுதியில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருப்பவர். தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அப்படிப்பட்டவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

ஏற்கனவே சட்டமன்றத் தேர்தல் தேர்தல் நடந்தபோது இந்த மூன்று பேரையும் தேர்ந்தெடுத்து இந்த மாவட்டத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறோம். எனவே இப்போது நடைபெறவிருக்கும் தேர்தலிலும் இந்த மூன்று பேரையும் நாம் இந்த மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் இப்போது கேட்க விரும்புவது, கடந்த தேர்தலை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுகோளை வைப்பதற்குத்தான் உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன்.

வீரத்திற்கும் தீரத்திற்கும் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கும் செஞ்சிக் கோட்டைக்கு வந்திருக்கிறேன். மயில் தோகை போல விரிந்திருக்கும் குன்றுகளைக் கொண்ட மைலத்திற்கு வந்திருக்கிறேன். அப்பர் பெருமானால் பாடப்பட்ட திண்டிவனத்திற்கு வந்திருக்கிறேன்.

இப்போது கொரோனா இரண்டாவது அலை வந்திருக்கிறது. முதல் அலை வந்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கச் சட்டமன்றத்திலேயே வலியுறுத்தினோம். ஆனால், அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்தனர்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் நான், ஒரு கோரிக்கை வைத்தேன். இன்றைக்கு மக்கள் வீட்டிற்குள் அடங்கி இருக்கிறார்கள். வேலைக்குப் போக முடியவில்லை. அவர்களுக்கு வருமானம் இல்லை. உணவுக்கும் வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அரசு உடனடியாக 5,000 ரூபாய் உதவித்தொகை நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

ஆனால் நிதி இல்லை. அதனால் கொடுக்க முடியாது என்று ஒரு விளக்கம் கொடுத்தார்கள். இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா நோய் போய் விடும் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு வருடம் ஆகிவிட்டது. குறைந்த நோய் மீண்டும் வர ஆரம்பித்து விட்டது.

அதனால் இங்கு இருப்பவர்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கூட்டத்தில் இருக்கும்போது மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தடுப்பூசி போடுவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இதனை உங்களுடைய அண்ணனாக – தம்பியாக – தாய்மார்களிடத்தில் பிள்ளையாகக் கேட்டுக்கொள்கிறேன்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். நாம் நன்றாக இருந்தால் தான் நம்முடைய சந்ததியினரை நாம் காப்பாற்ற முடியும். எனவே தான் நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

கொரோனா காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் செய்திருக்கும் சாதனையை யாரும் மறக்க முடியாது. நான் பெருமையோடு சொல்கிறேன். அரசு எதுவும் செய்யவில்லை - அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதனால் தி.மு.க.வின் சார்பில் நான் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை அறிவித்து காணொலிக் காட்சி மூலமாக மாவட்டத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இவ்வாறு ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கிறேன். அதற்கு தொலைபேசி நம்பர் கொடுத்து இருக்கிறேன். யாராவது உதவி கேட்டால் அவர்களுக்கு உடனடியாக நேரடியாகச் சென்று உதவி செய்யவேண்டும். அவர்கள் உணவு, மளிகை பொருட்கள், காய்கறிகள், நோயாளிகள் மருந்து மாத்திரைகள் கேட்கிறார்கள். அதை நம்மால் முடிந்த வரைக்கும் செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் சொல்லி அதற்குப்பிறகு இதை விளம்பரம் செய்தோம்.

நம்முடைய கழகத் தோழர்கள் அத்தனை பேரும் களத்தில் இறங்கிப் பாடப்பட்டு பணியாற்றிய உதவி செய்தது தி.மு.க.வின் மிகப்பெரிய வரலாறு என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் அல்ல, இந்தியாவில் அல்ல, உலகத்தில் எந்த கட்சியும் செய்யாத ஒரு சாதனையைத் திராவிட முன்னேற்றக் கழகம் செய்தது என்பதை நெஞ்சை நிமிர்த்தி நம்மால் சொல்ல முடியும்.

அதனால் நம்முடைய சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் - சென்னை மேற்கு மாவட்டத்தின் செயலாளர் அன்பழகன் அவர்களை நாம் இழந்தோம்.

இந்த கொரோனா நோய்த்தொற்று என்பது சில நோய் இருப்பவர்களுக்கு வந்துவிட்டால் மிகவும் ஆபத்தாகிவிடும். அவர் ஏற்கனவே பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்று ஒரு மிகப் பெரிய அறுவை சிகிச்சை செய்து வந்து இருக்கிறார்.

அதனால் நீங்கள் தயவு செய்து வெளியில் வந்து விடாதீர்கள். உங்களுக்கு கொரோனா நோய் தொற்றிக் கொண்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து வந்துவிடும். தயவு செய்து நீங்கள் வெளியே வர வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.

ஆனால் கொஞ்ச நாள் பொறுமையாக இருந்தார். ஆனால் நம்முடைய மாவட்டச் செயலாளர்கள் – எம்.எல்.ஏ.க்கள் – எம்.பி.க்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று உதவிகள் செய்கிற காட்சியை தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் பார்த்துவிட்டு அவரால் சும்மா இருக்க முடியவில்லை.

அதனால் தன்னை மீறி வெளியே வந்து மக்களை நேரில் சந்தித்து உதவிகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஆனால் இரண்டு நாட்களில் தோற்று அவரைப் பற்றிக் கொண்டது. அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றுவதற்குப் போராடினோம். ஆனால் முடியவில்லை.

எதற்காக சொல்கிறேன் என்றால் தி.மு.க.காரன் தன்னுடைய உயிரையே பணயம் வைத்து ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை நடத்திக் காட்டி இருக்கிறான் என்பது வரலாறு.

ஏன், நம்முடைய மஸ்தான் அவர்களுக்கு வந்தது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு உடல் நலம் பெற்று வந்தார். இதுபோன்று பல பேருக்கு வந்திருக்கிறது.

எனவே அந்த ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலமாக அந்த பணியை நிறைவேற்றினோம். முதலில் நான் 5,000 ரூபாய் சொன்னபோது நிதியில்லை என்று சொன்னார்கள்.

அதற்கு பிறகு 1,000 ரூபாய் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பொங்கல் பரிசு என்று சொல்லி 2,500 ரூபாய் கொடுத்தார்கள். மக்கள் கேட்டபோது கொடுக்கவில்லை.

எனவே அரசாங்க பணத்தைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துகிற ஒரு ஆட்சி தான் இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையாக மக்கள் மீது அக்கறை கொண்டு கொடுக்கவில்லை என்பதை நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.

"விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்டவர் ஏழைத்தாயின் மகன்!?” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

இன்றைக்கு நாளுக்கு நாள் விலைவாசி விஷம் போல உயர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்தியில் இருக்கும் ஆட்சியும் - மாநிலத்தில் இருக்கும் ஆட்சியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறி மாறி வரியைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அதைவிடக் கொடுமையானது, இப்போது ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்களை மக்கள் தலையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் 34,000-க்கும் மேற்பட்ட கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர்த்து தேவையில்லாத பொருட்களை மக்கள் தலைகளில் கட்டுமாறு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தியதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட மோசமான ஆட்சி ஒன்று இருக்கவே முடியாது.

இந்த லட்சணத்தில் பழனிசாமி அடிக்கடி, மக்களைக் குழப்பி வெற்றி பெறுவதற்காக ஸ்டாலின் பொய் சொல்லி சதி செய்து கொண்டிருக்கிறார் என்று தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் பேசிக்கொண்டிருக்கிறார்.

மக்களை நான் குழப்பவில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எப்போது ஆறாம் தேதி வரப்போகிறது? எப்போது இந்த ஆட்சியை ஒழிக்கப் போகிறோம்? என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

ஸ்டாலின் கனவு காண்கிறார். அந்தக் கனவு பலிக்காது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நானாவது கனவு காண்கிறேன். உங்களுக்கு இனிமேல் அடுத்து முதலமைச்சர் பதவி வரும் என்பதைக் கனவு கூட காண முடியாது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் உண்மை.

எனவே பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதில் மக்கள் இன்றைக்குத் தெளிவாக இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் பத்தாண்டுகாலம் சீரழிந்து போயிருக்கும் இந்த தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

எனவே அ.தி.மு.க. ஆட்சியை மட்டுமல்ல, பா.ஜ.க.வையும் உள்ளே விடக்கூடாது என்பதில் இன்றைக்கு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதைத் தடுக்கின்ற ஆற்றல் சக்தி தி.மு.க.விற்கு தான் உண்டு என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

எனவே தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கருத்துக்கணிப்புகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. அது நல்லபடியாக வந்தாலும் சரியாக வரவில்லை என்றாலும் கலைஞர் அவர்கள் எப்போதும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை நம்ப மாட்டார்கள்.

ஏற்கனவே புதிய தலைமுறை தொலைக்காட்சியில், இந்து ராம் அவர்கள் பா.ஜ.க. இந்த தேர்தலில் வாஷ் அவுட் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். நேற்றைக்கு டைம்ஸ் நவ் என்ற தொலைக்காட்சியின் மூலமாக ஒரு கருத்துக்கணிப்பு வந்திருக்கிறது. எல்லோரும் இன்றைக்கு தி.மு.க. அணி தான் மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அந்த தேர்தல் அறிக்கையில் உள்ள பொதுவிநியோகத் திட்டம் குறித்த வாக்குறுதிகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

ஏற்கனவே நாம் ஆட்சியில் இருந்தபோது உச்சநீதிமன்றமே பொது விநியோகத்தில் இந்தியாவில் சிறந்த மாநிலம் தி.மு.க.தான் – கலைஞர் ஆட்சி தான் என்று பாராட்டி இருக்கிறது. இதற்கு ஆதாரங்கள் இருக்கிறது.

அதேபோல, குடும்ப அட்டைகள் விண்ணப்பித்த 15-வது நாளுக்குள் வழங்கப்படும். 20 கிலோ இலவச அரிசி திட்டம் தொடரும். தரமான அரிசி வழங்கப்படும். மாதந்தோறும் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும். உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும். பல துறைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நியாயவிலைக் கடைகள் ஒரே துறையின் கீழ் கொண்டுவரப்படும். பழைய குடும்ப அட்டைகள் மாற்றப்பட்டு அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். கடைகளில் இருப்பில் உள்ள பொருள்கள் மின்னணு தகவல் பலகையில் வெளியிடப்படும். அனைத்துப் பொருள்களும் பாக்கெட்டுகளில் வழங்கிட ஆவன செய்யப்படும். மானிய விலையில் எல்.இ.டி. பல்புகள் வழங்கப்படும்.

பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம், மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.

மேலும் இந்த மூன்று தொகுதிகளுக்காக, மரக்காணத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க ஆவன செய்யப்படும். திண்டிவனத்தில் மீண்டும் தொழிற்பேட்டை அமைக்கப்படும். திண்டிவனம், மரக்காணம் மற்றும் செஞ்சி அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். செஞ்சி கோட்டை தேசிய மற்றும் பன்னாட்டுச் சுற்றுலா மையமாகத் தரம் உயர்த்தப்படும். மரக்காணத்தில் அரசு மகளிர் கல்லூரி, அயோடின் கலந்த உப்புத் தொழிற்சாலை. திண்டிவனம் தொகுதி மரக்காணத்தில் மீன் பதப்படுத்தும் குளிரூட்டும் மையம்; நடுக்குப்பம் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்கு சாக்கோ கம்பெனி. திண்டிவனம் நகரம் இந்திரா காந்தி பழைய பேருந்து நிலையம் அருகில் இடங்கல் ஏரி வழியாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். திண்டிவனம் அருகே ஓமந்தூர் பகுதியில் நரசிம்ம ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். செஞ்சி அனந்தபுரத்தில் அரசுப் பேருந்து பணிமனை. செஞ்சி பகுதியில் அரசு வேளாண் கல்லூரி, மூலிகைப் பண்ணை; விதைப் பண்ணை. இது நாம் ஆட்சிக்கு வந்து 5 வருடத்திற்குள் நிறைவேற்றப்பட இருக்கின்ற சில திட்டங்கள்.

ஏற்கனவே கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் மாநில மாநாடு போல ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அந்த பொதுக்கூட்டத்தில் ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் 10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை அறிவித்தேன். அதை அறிவிக்கும்போது இது அண்ணா மீது – தலைவர் கலைஞர் மீது – தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணை என்று தான் அறிவித்தேன்.

அதில் தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மதவெறியைத் தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.

இது திராவிட மண். தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்குப் பலிக்காது.

எனவே இந்த 3 வேட்பாளர்களுக்கும் நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இங்கு இவர்கள் மட்டும் வேட்பாளர்கள் அல்ல, நானும் ஒரு வேட்பாளர் தான். முதலமைச்சர் வேட்பாளர். இந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நன்றி. வணக்கம்."

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

"விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்டவர் ஏழைத்தாயின் மகன்!?” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

பல்லாவரத்தில் தி.மு.க தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

உங்களைத் தேடி நாடி உதயசூரியனுக்கு வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். நம்முடைய கழக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன்.

ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் - மாவட்ட கழகத்தின் செயலாளர் அருமை சகோதரர் தா.மோ.அன்பரசன் அவர்கள், ஏற்கனவே உங்களால் ஆலந்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினராக எப்படியெல்லாம் பணியாற்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும் இந்தத் தொகுதியின் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் அழுத்தந்திருத்தமாக ஆணித்தரமாக எடுத்துச் சொன்னவர். ஏற்கனவே அமைச்சராக இருந்து அவர் ஏற்றுக்கொண்ட தொழிலாளர் நலத்துறையை எந்த அளவிற்கு கட்டிக்காத்தார்? எந்த அளவிற்கு சிறப்புச் செய்தார்? என்பது உங்களுக்குத் தெரியும். அவரைத்தான் மீண்டும் தேர்ந்தெடுத்து ஆலந்தூர் தொகுதியில் வேட்பாளராக உங்களிடத்தில் கொடுத்திருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில், பல்லாவரம் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் இ.கருணாநிதி அவர்கள் ஏற்கனவே அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் குரல் கொடுப்பது அந்த தொகுதி மக்களுடன் இரண்டறக்கலந்து உங்களுக்காக பாடுபட்டவர், பணியாற்றியவர். உங்களுடைய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் ஓடோடி வந்து உங்களுக்கு துணைநின்ற அருமையான வேட்பாளரைத் தான் கழகத்தின் சார்பில் நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

ஏழைகளே இல்லாத நாடாக தமிழ்நாட்டை ஆக்கப்போகிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி இரண்டு நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அதாவது இனிமேல் தான் அதை செய்யப் போகிறாராம்.

நான்கு வருடங்களாக நீங்கள் தான் முதலமைச்சராக இருக்கிறீர்கள். நான்கு வருடங்களாக என்ன செய்து கிழித்தீர்கள்?

முதலமைச்சரானவுடன் உங்களுடைய உறவினர்களுக்கு உங்களுடைய சம்பந்திகளுக்கு டெண்டர் கொடுப்பது, மாநில உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுப்பது - அடகு வைப்பது - அடிமையாக இருப்பது இதைத்தான் செய்தார்.

இப்போது நாற்காலியை விட்டு இறங்க போகின்ற நேரத்தில், சாகின்ற நேரத்தில் சங்கரா சங்கரா என்று சொல்வது போல, கடைசி நேரத்தில் அவருக்கு மக்களுடைய நினைவு வந்துவிட்டது.

பத்தாண்டுகளாக அ.தி.மு.க.தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ஏழைகளுக்கு என்ன செய்தார்கள்? ஒன்றும் செய்யவில்லை. தொழில்துறையை வளர்த்தார்களா? இல்லை. வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? இல்லை. விவசாயிகளை காப்பாற்றினார்களா? இல்லை. இவர்கள் எதுவும் செய்யவில்லை.

அதேபோல மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசும் எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க.வின் டாடி மோடி. மோடி, நான் ஏழைத்தாயின் மகன் என்று சொன்னார். இந்த ஏழைத்தாயின் மகன் என்ன செய்தார்? கோட்டு சூட்டு மாட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றி வருகிறார். ஏழைகளுக்காக என்ன செய்தார் என்று கேட்டால் பெட்ரோல் - டீசல் விலையை ஏற்றி விலைவாசியை ஏற்றினார். இதுதான் அவர் ஏழைகளுக்கு செய்த செயல்.

ஒரு ஏழைத்தாயின் மகன் தான் தமிழக விவசாயிகளை நிர்வாணமாக ஓட விட்டார். 1000 ரூபாய் - 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லி மக்களை ஏ.டி.எம். வாசலில் நிற்க வைத்தார். ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து தொழில்துறையை நசுக்கி தொழிலாளர்களுடைய வேலையை இழக்க செய்தார். இவர்கள் இரண்டு பேரும் அதாவது மோடியும் - பழனிசாமியும் ஏழை இல்லாத நாடாக ஆக்கப் போகிறோம் என்று சொல்லி ஒரு மிகப்பெரிய பொய்யைச் சொல்லிக்கொண்டு இப்போது ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜோடி போட்டுக் கொண்டு வாக்குக் கேட்க வரும் இந்தக் கூட்டத்தை கூண்டோடு அழிக்க வேண்டும் என்றால் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழ்நாடு என்று சொன்னாலே தொழில் நிறுவனங்கள் ஓடுகிறார்கள். அதற்கு காரணம், இங்கு தொழில் செய்ய வருபவர்களிடம் கமிஷன் கேட்பதுதான்.

அந்த கமிஷனை கொடுக்க முடியாது என்று சொல்லி பல மாநிலங்களுக்கு சென்று விட்டார்கள். எனவே முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி கையாலாகாதவர் – உதவாக்கரை.

கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சியில் நான் துணை முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சி துறையும் - தொழில்துறையும் என்னுடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தொழில்துறையை கவனித்துக் கொண்டிருந்தபோது, சென்னை - திருப்பெரும்புதூர், சென்னை - காஞ்சிபுரம், சென்னை – சோழிங்கநல்லூர். இங்கு எல்லாம் எத்தனையோ புதிய தொழிற்சாலைகளை உருவாக்கினேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

இப்போது ஏன் அது வரவில்லை என்று கேட்டால் இந்த ஆட்சி மீதும் முதலமைச்சர் மீதும் தொழில்முனைவோருக்கு துளி அளவும் நம்பிக்கை இல்லை. வேலைவாய்ப்புகள் இல்லாமல் இன்றைய இளைஞர்கள் அவதிப்பட காரணம் இந்த ஆட்சி தான்.

மக்களை ஏய்க்கும் ஆட்சியை - மக்களைச் சுரண்டும் ஆட்சியை - மக்களை வெறுக்கும் ஆட்சியை ஓட ஓட விரட்டுவதற்கு வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும்.

ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. நம்முடைய தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து அப்படியே வெளியிட்டு இருக்கிறது. அதில் சில பொய்யான திட்டங்களையும் - பொய்யான செய்திகளையும் - நினைத்தே பார்க்க முடியாத வாக்குறுதிகளையும் சொல்லி இருக்கிறார்கள்.

மக்களுக்கு எதுவும் தெரியாது. அவர்களை ஏமாற்றி விடலாம் என்ற நினைப்பில் சில அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

நான் கேட்க விரும்புவது, 2011-ஆம் ஆண்டு, அதேபோல 2016-ஆம் ஆண்டும் அவர்கள் தான் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள். அதில் சிலவற்றை மாத்திரம் நான் சொல்ல விரும்புகிறேன்.

அனைவருக்கும் செல்போன் இலவசம் என்று சொன்னார்கள். கொடுத்தார்களா? கேபிள் கட்டணத்தை 70 ரூபாய்க்கு குறைப்போம் என்று சொன்னார்கள். குறைத்தார்களா? பொது இடங்களில் வை-ஃபை வசதி செய்து தருவோம் என்று சொன்னார்கள். செய்தார்களா? அதை இப்போதும் சொல்லி இருக்கிறார்கள். 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னார்கள். கட்டினார்களா? திருச்சி, மதுரை, கோவையில் மோனோ ரயில் விடுவோம் என்று சொன்னார்கள். விட்டார்களா? விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் போடப்படாது என்று சொன்னார்கள். செய்தார்களா? ஆவின் பால் லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுப்போம் என்று சொன்னார்கள். கொடுத்தார்களா? இதுதான் அவர்கள் வாக்குறுதியை காப்பாற்றுகிற லட்சணம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை தடுத்துவிடுவோம் என்று சொன்னார்கள். தடுத்தார்களா? அனிதா உட்பட பல மாணவ - மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் முதலமைச்சர் பழனிசாமி நாங்கள் சொன்னதை செய்து விட்டோம் என்று சொல்லியிருக்கிறார். சொன்னதை எல்லாம் செய்யாத ஆட்சியை தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறாரே தவிர, வேறு ஒன்றுமில்லை.

ஆனால் அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். 1957-இல் தேர்தல் களத்தில் இறங்கியபோது அண்ணா அவர்கள் வெளியிட்டார்.

"விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்டவர் ஏழைத்தாயின் மகன்!?” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

தேர்தல் அறிக்கையை முதன் முதலாக வெளியிட்ட ஒரு கட்சி எது என்றால் அது தி.மு.க. தான். அதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு முறையும் வெளியிடுவோம்.

இந்த ஆண்டும் நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கு தமிழகம் முழுவதும் சுற்றி பல தரப்பு மக்களையும் சந்தித்து, அதற்கு பிறகு தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை நாம் வெளியிட்டு இருக்கிறோம்.

அதில் குறிப்பாக சென்னை நகருக்கு, சென்னையில் புயல் - வெள்ள காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த சென்னை பெருநகர் வெள்ள தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும். சென்னை உள்ளிட்ட மாநகரங்களிலும் நகரங்களிலும் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலமாக அல்லது வங்கிக் கடன் மூலமாக ஆட்டோ வாங்குவதற்கு அரசு தரப்பில் 10,000 ரூபாய் மானியம் வழங்குவோம். மதுரவாயலில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனை. சென்னையில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைத்து எல்லா வகை போட்டிகளும் உயர்தர பயிற்சிகளும் அளிக்கப்படும். சென்னை போன்ற பெருநகரங்களில் நவீன அடுக்குமாடி கார் நிறுத்தும் வசதிகள் செய்து தரப்படும். பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம். மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் வழங்கி இருக்கிறோம்.

இந்த மூன்று தொகுதிகளுக்காக, சென்னை பெருநகரில் மழைக் காலத்தில் வெள்ளமெனக் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னைப் பெருநகரில் சிற்றுந்து சேவை அதிகப்படுத்தப்படும். சென்னைப் பெருநகரில் அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். சென்னைப் பெருநகரில் உள்ள அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு, கழிவுநீர் கலக்காமல் தூய்மைப்படுத்தப்படும். சோழிங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து மழைநீரானது ஒக்கியம் மடுவுவரை செல்ல மிகப்பெரிய அளவில் மழைநீர் கால்வாய் அமைக்கப்படும். சோழிங்கநல்லூர் தொகுதி நன்மங்கலம் ஏரி தூய்மைப்படுத்தப்பட்டு படகுகள் விடப்படும். ஓ.எம்.ஆர். சாலையில் அரசுப் பொது மருத்துவமனை அமைக்கப்படும். கண்ணகி நகரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும். சென்னைப் பெருநகரில் தேவையான இடங்களில் விளையாட்டுத் திடல்கள் உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ளவை தரம் உயர்த்தப்படும். சென்னைப் பெருநகரில் மேலும் பல இடங்களில் நூலகங்கள் அமைக்கப்படும். வடநெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் புனித தோமையர் மலை தெற்கு ஒன்றியத்திற்கு விரிவுபடுத்தப்படும்.

நம்முடைய வேட்பாளர்கள் ஆலந்தூர் தொகுதிக்கு அன்பரசன் அவர்கள், பல்லாவரம் தொகுதிக்கு கருணாநிதி அவர்கள், சோழிங்கநல்லூர் தொகுதியின் வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் அவர்கள் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் ஓய்வில் இருக்கிறார். அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவர் சார்பில் நான் உங்களிடத்தில் அவருக்கும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

எனவே இந்த மூன்று வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு இருக்கிறேன். இப்போது இன்னொரு வேட்பாளருக்கு வாக்கு கேட்கப் போகிறேன். யாருக்கு என்றால் எனக்கு தான்.

கொளத்தூர் தொகுதியில் என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். நான் முதலமைச்சராக வர வேண்டும் என்றால் இவர்களை வெற்றி பெற வையுங்கள். உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.

பத்தாண்டுகளாக எல்லா துறைகளும் பாழடைந்து போய் இருக்கிறது. பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஐம்பது வருடத்திற்கு பின்னோக்கி சென்று விட்டோம்.

கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் மாநில மாநாடு போல ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அந்தப் பொதுக்கூட்டத்தில் ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் 10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை அறிவித்தேன். அதை அறிவிக்கும்போது இது பேரறிஞர் அண்ணா மீது – தலைவர் கலைஞர் மீது – தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணை என்று தான் அறிவித்தேன். அதையும் தற்போது நினைவு படுத்துகிறேன்.

தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, சமஸ்கிருதத்தை திணித்து, மத வெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.

இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது.

இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் என்று மட்டும் நினைக்காதீர்கள். நம்முடைய உரிமைகள் பறிபோய்விட்டது. நம்முடைய சுயமரியாதை பறிபோய்விட்டது. நம்முடைய சுயமரியாதையை காப்பாற்றுவதற்கான தேர்தல் என்பதையும் நீங்கள் மறந்து விடாதீர்கள்.

எனவே நாம் இழந்திருக்கும் உரிமையை மீட்க, பல்லாவரம் - சோழிங்கநல்லூர் – ஆலந்தூர் ஆகிய இந்த மூன்று தொகுதிகளுக்கு பல நன்மைகள் வந்து சேர, விவசாயிகளின் வாழ்க்கை செழிக்க, உதயசூரியனுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி உங்கள் அன்பான உற்சாகமான வரவேற்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories