மு.க.ஸ்டாலின்

"தமிழ்நாட்டை காப்பாற்ற, சுயமரியாதையை காக்க நடக்கின்ற தேர்தல் இது”- தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

"தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது." என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

"தமிழ்நாட்டை காப்பாற்ற, சுயமரியாதையை காக்க நடக்கின்ற தேர்தல் இது”- தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி, சாத்தான்குளத்தில் தந்தையும், மகனும் அடித்தே கொல்லப்பட்ட கொடுமை போன்ற பாவங்களைக் கூட்டுச் சேர்ந்து செய்து விட்டு, இப்போது கூட்டணியாகக் கைகோர்த்து வாக்குக் கேட்டு வலம் வரும் அ.தி.மு.க - பா.ஜ.க.வினருக்கு தக்க பாடம் புகட்டுங்கள்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (22-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, தூத்துக்குடியில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“நீங்கள் தந்திருக்கும் இந்தச் சிறப்பான உற்சாகமான வரவேற்பிற்கு நன்றி. உங்களைத் தேடி நாடி ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். தேர்தலுக்காக வந்து போகிற ஸ்டாலின் நானல்ல. எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு இருப்பவன்தான் இந்த ஸ்டாலின் என்ற உரிமையோடு உங்களிடம் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நீங்கள் எல்லாம் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் அருமை சகோதரி கீதாஜீவன் அவர்கள், ஏற்கனவே இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, அமைச்சராகவும் இருந்து இந்த தொகுதி மக்களுக்கு பல முன்னேற்றங்களை, திட்டங்களைக் கொண்டு வந்து சேர்த்தவர். அனைத்தையும்விட பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய தலைவர் கலைஞருடைய முரட்டு பக்தனாக விளங்கிய அண்ணாச்சி பெரியசாமி அவர்களின் அருமை மகள். அவரைத்தான் மீண்டும் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்து இந்தத் தூத்துக்குடித் தொகுதிக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கழக வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள், 5 முறை அந்த தொகுதியில் களம் கண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் சண்முகைய்யா அவர்கள், அவர் ஏற்கனவே நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று அந்த குறுகிய காலத்தில் சட்டமன்றத்தில் அந்த தொகுதி முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்தவர். அந்தத் தொகுதி மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுபவர். எனவே அவரைத்தான் மீண்டும் வேட்பாளராக தேர்வு செய்திருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் மார்க்கண்டேயன் அவர்கள், அந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களுடைய தொடர்பை மக்களுடைய அன்பை பெற்று அந்த தொகுதிக்கு பல சிறப்புகளைச் சேர்த்தவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் போட்டியிடும் நம்முடைய அமிர்தராஜ் அவர்கள், மாவட்ட அளவில் மட்டுமல்ல, மாநில அளவில் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்து அந்த இயக்கத்திற்கு பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு கை சின்னத்திலும், கோவில்பட்டி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சீனிவாசன் அவர்கள், சென்ற முறை நம்முடைய கழகத்தின் சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட்டு 428 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அந்த தொகுதிக்கு தொடர்ந்து நம்முடைய கழகத்தின் சார்பில் நாம் குரல் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட அந்த தொகுதியில் தான் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், மக்களுக்காக போராடக்கூடிய வாதாடக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும் சீனிவாசன் போட்டியிடுகிறார். அவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அது மட்டுமல்ல, கோவில்பட்டியில் நம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் எந்தக் காலத்திலும் வெற்றி பெறக்கூடாது என்பது மட்டுமல்ல, அவர் டெபாசிட் தொகை பறிபோகும் அளவிற்கு நம்முடைய வெற்றி அமைய வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்றைக்கு உங்களிடத்தில் நான் வாக்கு கேட்டு உரிமையோடு உணர்வோடு உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன். காரணம் ஐம்பது ஆண்டு காலமாக என்னை அரசியலில் ஒப்படைத்துக் கொண்டு பல்வேறு பணிகளை மக்களுக்காக தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்கின்ற அதே நேரத்தில் நானும் உங்களிடத்தில் வேட்பாளராக வாக்கு கேட்க வந்திருக்கிறேன். நான் கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமல்ல, தமிழ் நாட்டிற்கே நான் வேட்பாளர். இவர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர். மறந்துவிடாதீர்கள்.

வீரம் விளைந்த இந்தத் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். விடுதலைக்காக உயிரையே தியாகம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த இந்த மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். பேச்சால், எழுத்தால், எழுச்சியை ஊட்டிய வ.உ.சி பிறந்த மண்ணுக்கு நான் வந்திருக்கிறேன். சுதந்திர எழுச்சியை தன்னுடைய பாடலால் வெளிப்படுத்திக் காட்டிய உணர்ச்சியை ஊட்டிய பாரதியாருடைய மண்ணுக்கு நான் வந்திருக்கிறேன்.

"தமிழ்நாட்டை காப்பாற்ற, சுயமரியாதையை காக்க நடக்கின்ற தேர்தல் இது”- தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்த மண்ணுக்காக குறிப்பாக இந்த தூத்துக்குடி மாவட்டத்திற்காக கலைஞர் அவர்கள் 5 முறை முதலமைச்சராக இருந்த போது நிறைவேற்றிய திட்டங்களில் சிலவற்றை மட்டும் உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மீனவர் நலனுக்காகவே மீன்வளத்துறையை உருவாக்கி கலைஞர் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததெல்லாம் வரலாறு, கடல்சார் பயிற்சிப்பள்ளி தொடங்கப்பட்டது.

நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதுதான் இந்த தூத்துக்குடி மாநகரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது என்பதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம், திரேஸ்புரம், வீரபாண்டியன் பட்டினம் கடற்கரை பகுதிகளில் தூண்டில் வளைவுகள், திருவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம். இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.

இதுபோல திட்டங்களை சொல்லி முதலமைச்சர் பழனிசாமி அவர்களால் மக்களிடத்தில் வாக்குக் கேட்க முடியுமா? அந்த யோக்கியதை அவருக்கு இருக்கிறதா? சாதனைகளை அவர்களால் சொல்ல முடியுமா? முடியாது.

வேதனைகளை தான் சொல்ல முடியும். அதுவும் எப்படிப்பட்ட வேதனைகள். இதே தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை. அதை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சு துடிக்கிறது. கண்களில் இரத்தக் கண்ணீர் வருகிறது. 13 பேரை காக்கை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளினார்கள்.

நச்சு ஆலையாக மாறிவிட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் - காந்திய வழியில் - அறவழியில் அந்த வட்டாரத்தில் இருக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். 100 நாட்கள் அந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். அந்த 100-வது நாளில், 2018 மே மாதம் 22ஆம் தேதி அந்த மக்கள் ஒன்று சேர்ந்து 100-வது நாளை நினைவு படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனுக்களைக் கொடுப்பதற்காக அமைதி வழியில் ஊர்வலம் நடத்தினார்கள். அப்போது ஆட்சித்தலைவர் முறையாக அலுவலகத்தில் இருந்து அவர்களை உள்ளே அனுமதித்து அந்த மனுக்களை வாங்கியிருந்தால் அப்படிப்பட்ட ஒரு கொடுமையான சம்பவம் நடைபெறுவதற்கு வாய்ப்பே இருந்திருக்காது.

ஆனால் ஆட்சியர் வெளியூருக்குச் சென்று விட்டார். அதைப் பயன்படுத்தி திட்டமிட்டு மத்திய பா.ஜ.க. அரசும் - மாநில அரசும் சேர்ந்து ஒரு பயங்கரமான துப்பாக்கிச் சூட்டை நடத்தின. அதனுடைய பின்னணி என்ன? பா.ஜ.க.வும் – அ.தி.மு.க.வும் கூட்டு சேர்ந்து நடத்திய பச்சைப் படுகொலை தான் அது. ஸ்னோலின் என்ற 17 வயது பெண் நடந்து வரும் போது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். காளியப்பன் என்ற 22 வயது இளைஞரை சுட்ட காட்சியை அருகில் இருந்து சுற்றி வேடிக்கை பார்த்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வந்தது. இப்படி எல்லாம் கொடுமை நடந்தது. இதற்கெல்லாம் அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதா? இதுவரையில் இல்லை.

தூத்துக்குடி ரஞ்சித்குமார் - சிலோன் காலனி கந்தையா - மாசிலாமணிபுரம் சண்முகம் - தாமோதரன் நகர் மணிராஜ் - திரேஸ்புரம் ஜான்சி - உசிலம்பட்டி ஜெயராமன் - லூர்தம்மாள்புரம் கிளாஸ்டன் - ஒட்டப்பிடாரம் தமிழரசன் - தூத்துக்குடி அந்தோணிராஜ் - தூத்துக்குடி கார்த்திக் – தூத்துக்குடி செல்வசேகர் என்று 13 பேரை கொலை செய்த கூட்டத்திற்கு இந்த தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டுமா? வேண்டாமா? இப்படிப்பட்ட அக்கிரமத்திற்கு நாம் பதில் தர வேண்டுமா? வேண்டாமா?

இந்தச் செய்தியை சென்னையிலிருந்து நான் கேள்விப்பட்டவுடன் தூத்துக்குடிக்கு நேரடியாக வந்தேன். அப்போது கலவர பூமியாக இருந்தது. அப்படி ஒரு காட்சியை இதுவரை நான் பார்த்ததில்லை. இனிமேலும் பார்க்கக்கூடாது. அதற்குப் பிறகு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டு காயத்தோடு அனுமதிக்கப்பட்டிருந்த அவர்களைப் பார்த்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் சொன்னேன்.

நான் கேட்கிறேன். இவர்கள் என்ன தவறு செய்தார்கள்? ஊர்வலம் சென்றது தவறா? அமைதியாகப் பேரணியை நடத்தியதை தவறா? ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று எண்ணியது தவறா?

எனவே இப்படிப்பட்ட பாவத்தைச் செய்திருக்கும் இந்த ஆட்சிக்கு நாம் பாடம் புகட்ட வேண்டுமா? வேண்டாமா?

"தமிழ்நாட்டை காப்பாற்ற, சுயமரியாதையை காக்க நடக்கின்ற தேர்தல் இது”- தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமியைப் பார்த்து தூத்துக்குடியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது பற்றி நிருபர்கள் கேட்கிறார்கள். அதற்கு ‘அப்படியா… அதை நான் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன்’ என்று சொன்னவர் தான் முதலமைச்சர் பழனிசாமி. இந்த செய்தியைக் கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்த அவர் முதலமைச்சர் பதவியில் நீடிக்கலாமா?

இவ்வாறு துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு வேலைவாய்ப்பு கொடுத்தார்கள். எப்படிப்பட்ட வேலை என்றால் படித்த பட்டதாரிகளாக இருப்பவர்களுக்கு தகுதியற்ற வேலைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது நான் சொல்கிறேன். நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே அவர்களுக்கு தகுதிக்குரிய வேலை நிச்சயமாக நம்முடைய ஆட்சியில் வழங்கப்படும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இதைவிட கொடுமை. இந்த வழக்கை முதலில் ஒரு வாரம் சி.பி.ஐ. விசாரித்தது. போகப்போக சி.பி.ஐ. விசாரணை முறையாக நடக்கவில்லை. அதற்கு என்ன காரணம்? பா.ஜ.க. தனியார் கம்பெனியின் உறவு வைத்துக் கொண்டு இருக்கிறது. எனவே பா.ஜ.க. அரசு, சி.பி.ஐ.யை முடக்கி வைத்து விட்டது. கண்துடைப்புக்காக பழனிசாமி தலைமையிலான அரசு, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை அமைத்தது. அது அமைக்கப்பட்டு மூன்று வருடம் ஆகிவிட்டது. இதுவரையில் அந்த ஆணையம் அறிக்கை கொடுக்கவில்லை.

எனவே 2 ஆட்சியும் கைகோர்த்துக்கொண்டு இந்த தேர்தலில் வலம் வருகிறார்கள். அப்படி வலம் வரும் அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டுமா? வேண்டாமா?

அதற்கு அடுத்த கொடுமை சாத்தான்குளம். சாத்தான்குளம் காவல் நிலைய லாக்கப்பில் ஜெயராஜ், பெனிக்ஸ் என்ற அப்பாவையும் மகனையும் அடித்தே கொன்றிருக்கிறார்கள். அந்த பெனிக்ஸினுடைய சகோதரி பேட்டி கொடுக்கிறார். “என் தம்பிக்கு நெஞ்சில் முடியிருக்கும். ஆனால் இப்போது அந்த முடி முழுவதும் பிடுங்கி இருக்கிறார்கள் “என்று கதறிக்கொண்டு அந்த சகோதரி பேட்டி கொடுத்த காட்சிகள் எல்லாம் சமூகவலைதளங்களில் வந்தது. அப்படி ஒரு கொடுமை நடந்திருக்கிறது. காவல் துறையிலிருந்து லுங்கி, சட்டையை வாங்கி கொடுத்திருக்கிறோம். அதில் அவ்வளவு ரத்தம் என்று ஜெயராஜின் மனைவி கதறும் காட்சிகளை தொலைக்காட்சிகளில், சமூகவலைதளங்களில் பார்த்தோம்.

இந்த செய்தியை நான் அறிந்தவுடன், உடனடியாக மாவட்டச் செயலாளர்களிடம் தொலைபேசியில் பேசி, நேரடியாகச் சென்று விசாரியுங்கள் என்று நான் அவர்களை அனுப்பி வைத்தேன்.

அதற்குப் பிறகு அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று செய்தி நமக்குக் கிடைத்தது. ஆனால் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள், “காவல்துறையினர் தாக்கி, லாக்கப்பில் அடித்து அவர்கள் இறக்கவில்லை. அவர்களுக்கு ஏற்கனவே நோய் இருக்கிறது. மூச்சுத் திணறி இறந்து இருக்கிறார்கள்” என்று சொன்னார்.

அதை விட கொடுமை. காவல்துறையினர் கடையை மூடச் சொன்னார்களாம். அதை மூட முடியாது என்று சொல்லி அப்பாவும், பிள்ளையும் சாலையில் படுத்து உருண்டார்களாம். அதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்று எப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்று சொல்ல, அதற்கு ஏற்றார்போல எஃப்.ஐ.ஆர். தயார் செய்கிறார்கள். சி.பி.ஐ. உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் நான் கோரிக்கை வைத்தேன். பின்பு அந்த விசாரணை நடந்தது.

அதேபோல இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அறிவுக்கொழுந்து, அவர் ஒரு பேட்டி கொடுக்கிறார். அதில் “இது லாக்கப் மரணம் அல்ல” என்று அவர் பேட்டி தருகிறார். அவர்கள் மருத்துவமனையில் தான் இருந்தார்கள் என்று பேசியிருக்கிறார்.

ஜெயலலிதாவும் மருத்துவமனையில்தான் இறந்தார்கள். அதற்கு ஏன் விசாரணை கமிஷன் வைத்தீர்கள். எனவே பழனிசாமியின் இந்த 4 வருட ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இந்த 3 பிரச்சினைகளே போதும் என்று நான் நினைகிறேன்.

10 வருடங்களாக இந்த கோவில்பட்டியில் எம்.எல்.ஏ.வாக – அமைச்சராக இருக்கும் கடம்பூர் ராஜு அவர்கள், இந்த 10 வருடங்களில் இந்தத் தொகுதிக்கு - இந்த மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறாரா?

ஆனால் முதலமைச்சர் பழனிசாமியைத் தூக்கிப் பேசுவதற்கு மட்டும் அவர் தினம் தினம் பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறாரே தவிர, வேறு எதையும் செய்யவில்லை.

கோவில்பட்டிக்கு 1973-ஆம் ஆண்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நம்முடைய ஆட்சியில் கொண்டு வந்தோம். 2007-ஆம் ஆண்டு 2-வது பைப்லைன் திட்டம் கொண்டு வந்ததும் தி.மு.க. ஆட்சிதான். அதற்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் அதைத் துரிதப்படுத்தாமல் மந்தமாக செய்தார்கள். பின்பு ஒரு வழியாகத் திறந்தார்கள். இன்னமும் பல பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்ற செய்திதான் எனக்கு வந்து கொண்டிருக்கிறது.

"தமிழ்நாட்டை காப்பாற்ற, சுயமரியாதையை காக்க நடக்கின்ற தேர்தல் இது”- தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கடம்பூர் ராஜூ தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வருவோம் என்று அறிவித்தார். இதுவரையில் வரவில்லை. இப்போது பதவி முடிகின்ற நேரத்தில் நர்சிங் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். தேர்தல் வருகிறது என்பதை தெரிந்து, மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட அடிக்கல் நாட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்களே, தவிர வேறு ஒன்றுமல்ல. கடம்பூர் ராஜூவிடம் கோவில்பட்டி போல புதிதாக ஒரு ஊரை உருவாக்கும் அளவிற்கு பணம் இருக்கிறது. அவ்வளவு கொள்ளையடித்து வைத்திருக்கிறார்.

கோவில்பட்டி மட்டுமல்ல, தூத்துக்குடி மாவட்டம் வரை நீங்கள் தி.மு.க. கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் உங்களுடைய வாக்குகளை வழங்கிட வேண்டுமென்று நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அவ்வாறு வரும் போது என்னென்ன செய்யப் போகிறோம் என்ற வாக்குறுதிகளை உறுதிமொழிகளை தேர்தல் அறிக்கையில் தந்திருக்கிறோம்.

மீனவ சமுதாயத்தினரை கடல்சார் பழங்குடியின மக்கள் என்று பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு தி.மு.க. ஆட்சி நிச்சயம் முயற்சி செய்யும், மீனவர்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும், மீனவர் நலனை பாதுகாத்திட தேசிய மீனவர் நல ஆணையம் அமைத்திட மத்திய அரசை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும், மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 8000 ரூபாயாகவும், மழைக்கால நிவாரண உதவித் தொகை 5,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும், விசைப்படகிற்கு மானிய விலை டீசல் 2000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும், கட்டுமரம், நாட்டுப்படகு, ஃபைபர் படகு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் அளவு 400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும், தேவைப்படுகின்ற கடற்கரையோர மீனவர் கிராமங்களில் கடல் அரிப்பினைத் தடுத்து தூண்டில் வளைவு தடுப்பு சுவர் அமைத்து தரப்படும், உள்நாட்டு மீனவர்கள் பரிசல் மற்றும் வலைகள் வாங்குவதற்காக 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும், முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எஃப்.ஆர்.பி-ஐ.பி. கட்டுமரம் போன்ற படகுகளில் மீன் பிடிப்பவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட ஐஸ்பெட்டிகள் மீண்டும் வழங்கப்படும், மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கும் ஐஸ்பெட்டிகள் வழங்கப்படும், சிறுபான்மையினர் நலனுக்காக - கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மை சமூகத்தினர் உரிய பங்கினைப் பெறுவதற்கு ஏதுவாக நீதியரசர் சச்சார் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம், மாநிலத்தில் சிறுபான்மையினர் கல்வி அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் பின்தங்கிய பகுதிகளில் குறிப்பாக சிறுபான்மை சமுதாயப் பெண்கள் பயனடையும் வகையில் சிறப்பு கல்வி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும், வக்பு வாரியத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம், அரசு வேலை வாய்ப்புகளை 40 சதவிகித இட ஒதுக்கீடு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும்.

விலைவாசியைக் குறைக்க, பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

மாணவர்கள் இளைஞர்கள் நலனை அடிப்படையாக வைத்து அவர்கள் கல்விக்காக வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன் ரத்து செய்யப்படும், அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்களே நியமிக்கப்படுவார்கள், நீர்நிலைகள், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் கண்காணிக்கவும் 75,000 இளைஞர்கள் அந்த பணிகளில் அமர்த்தப்படுவார்கள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களை பாதுகாக்கும் பணிகளில் 75,000 சாலை பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள், தமிழகம் முழுவதும் அறநிலையங்களைப் பாதுகாக்க 25,000 இளைஞர்கள் திருக்கோயில் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள், மக்கள் நலப் பணியாளர்களாக 25,000 மகளிர் நியமிக்கப்படுவார்கள், கொரோனா காலத்தில் நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் வெறும் 1,000 ரூபாய் வழங்கினார்கள். மீதமிருக்கும் 4,000 ரூபாயை நாம் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஜூன் 3-ஆம் தேதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவோம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். இவையெல்லாம் பொதுவான வாக்குறுதிகள்.

அதேபோல இந்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு என்று வழங்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகளில் சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தூத்துக்குடி மாநகரத்தில் மழை நீரை வெளியேற்ற நிரந்தர திட்டம் வகுக்க ஆவன செய்யப்படும், தூத்துக்குடியில் லாரிகள் நிறுத்தப்படுவதற்கு தனியாக ஒரு முனையம் ஏற்படுத்தப்படும், விளாத்திகுளத்தில் மிளகாய் பாதுகாப்பிற்காக கூடுதலாக குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும், கயத்தாறு, கடம்பூர், ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் புதிதாக குளிர்பதன கிடங்குகள், திருவைகுண்டம், கோவில்பட்டி, உடன்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகள் நவீன மயமாக்கப்படும், கட்டாரங்குளத்திலுள்ள அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் சுற்றுலா மையமாக ஆக்கப்படும், கழுகுமலையில் அரசு கலை - அறிவியல் கல்லூரி உருவாக்கப்படும், ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும், விளாத்திகுளத்தில் மிளகாய் மற்றும் வெங்காய கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்படும், தீப்பெட்டிகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை நியாய விலையில் சிட்கோ மூலம் வழங்கப்படும், மீன்வளக் கல்லூரியில் 50 சதவிகித இடங்களை மீனவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், கோவில்பட்டி, நாசரேத்தில் அரசு செவிலியர் பயிற்சி நிலையம் உருவாக்கப்படும், கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும், தூத்துக்குடி டபிள்யு.ஜி.சி. சாலைக்கு வ.உ.சி. பெயர் சூட்டப்படும், ஒட்டப்பிடாரம் தெய்வச்செயல்புரம் ஆகிய இடங்களில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும், காயல்பட்டினத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள், தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும், கோவில்பட்டி, காயல்பட்டினத்தில் உழைக்கும் மகளிர் விடுதிகள், தாமிரபரணி, கன்னடியன் கால்வாய், நம்பியாறு, வெள்ளநீர், கருமேனியாறு கால்வாய், வைரவ தருவி, புத்தன் தருவி ஆகியன இணைக்கப்பட்டு நீர்ப்பாசன வசதிகள் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர், திரேஸ்புரம் துறைமுகத்தில் நாட்டுப் படகுகள் நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதி, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை, செக்காரக்குடியில் கால்நடை மருத்துவமனை, தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, கயத்தாறில் சிப்காட் தொழிற்பேட்டை, மணப்பாட்டில் மீன்பிடி இறங்குதளம், ஆத்தூரில் வெற்றிலை ஏற்றுமதி மையம், உப்பள தொழிலாளர்கள் தனி நல வாரியம், கோவில்பட்டியில் தொழில் பூங்கா அமைக்கப்படும். இவை எல்லாம் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட விருக்கும் திட்டங்கள்.

கடந்த 7ஆம் தேதி திருச்சியில் ஒரு மாநில மாநாடு போல ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அந்த கூட்டத்தில் ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் 10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை சொல்லியிருக்கிறேன்.

தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.

இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது.

இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய சுய மரியாதையை காப்பாற்றுவதற்காக நடக்கின்ற தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நம்முடைய மாநில உரிமைகள் பறிபோய்க் கொண்டு இருக்கிறது. நம்முடைய தன்மானம் பறி போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி எல்லாவற்றையும் அடமானம் வைத்து விட்டது.

எனவே நம்முடைய தமிழ்நாட்டை காப்பாற்ற, சுயமரியாதையை காப்பாற்ற நடக்கின்ற தேர்தல் என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள்.

மீனவர்கள் வாழ்க்கை தரம் உயர, மாநில உரிமைகளை பாதுகாக்க, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கும், சாத்தான்குளம் படுகொலைக்கும் பாடம் புகட்ட, நாம் இழந்திருக்கும் உரிமைகளை மீட்க, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தாருங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு, உங்கள் அன்பிற்கும் உற்சாகத்திற்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories