மு.க.ஸ்டாலின்

விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்த பழனிசாமி தேர்தலுக்காக பச்சோந்தியாக மாறியுள்ளார் - மு.க.ஸ்டாலின் உரை!

மத்திய அரசோடு இணக்கமாக இருந்து பல திட்டங்களை, காரியங்களை நாங்கள் இந்த ஆட்சியில் சாதித்து இருக்கிறோம் என்று ஒரு அபாண்டமான பொய்யை முதலமைச்சர் பழனிசாமி சொல்லியிருக்கிறார்.

விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்த பழனிசாமி தேர்தலுக்காக பச்சோந்தியாக மாறியுள்ளார் - மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று (21-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் , தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, உத்திரமேரூரில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் என்று உங்களிடத்தில் கேட்க வந்திருக்கிறேன். எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு இருப்பவன்தான் இந்த ஸ்டாலின் என்ற அந்த உரிமையோடு, ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களைப் பற்றிக் கவலைப்படுகிற ஸ்டாலினாக உங்களைத் தேடி, நாடி வந்திருக்கிறேன்.

வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டுமென்று கேட்க வந்திருக்கிறேன். உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய கழகத்தின் சார்பில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடுபவர், நம்முடைய மாவட்டச் செயலாளர், ஏற்கனவே இந்த தொகுதியில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உன்னதமான சட்டமன்ற உறுப்பினர், க.சுந்தர்.

அவருக்கு விளம்பரம் தர வேண்டிய தேவை இல்லை. உங்கள் நம்பிக்கைக்குரியவராக இந்தத் தொகுதியில் இரண்டறக் கலந்தவராக தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் அருமைத் தம்பி எழிலரசன் அவர்கள், அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கி, திராவிட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இந்தச் சமுதாயத்திற்காக பாடுபட்டு பணியாற்றிய, மூத்த தலைவர்களில் ஒருவரான அருமைப் பெரியவர் சி.வி.எம். அண்ணாமலை அவர்களுடைய பேரன், மறைந்த என்னுடைய ஆருயிர் நண்பர் பொன்மொழி அவர்களுடைய அன்புப் புதல்வர், அவரும் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இந்த காஞ்சிபுரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுடைய உள்ளத்தில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றவராக விளங்கிக் கொண்டிருப்பவர்.

அவரைத்தான் மீண்டும் தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் வேட்பாளராக காஞ்சிபுரம் தொகுதியில் நிறுத்தியிருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதுராந்தகம் தொகுதியில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், வைகோ அவர்களுக்கு வலதுகரமாக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் மல்லை சத்யா. அவருடைய அன்பை மட்டுமல்ல, நம்முடைய அன்பையும் பெற்றவராக இன்றைக்கு மதுராந்தகம் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஊடகப்பிரிவுச் செயலாளர் பனையூர் பாபு அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் திருமாவளவன் அவர்கள், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர், அவருடைய தம்பியாக இருக்கும் பனையூர் பாபு அவர்களுக்கு, அவருக்கென்று ஒதுக்கப்படும் சின்னத்திலும் நீங்கள் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன்.

முதன்முதலில் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை ஏற்படுத்திய நேரத்தில், காஞ்சிபுரத்தில் 1971-ஆம் ஆண்டு நம்முடைய கழக மாநாட்டில் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், அன்றைக்கு பொதுச்செயலாளராக இருந்த நாவலர் அவர்கள், பொருளாளராக இருந்த மறைந்த மரியாதைக்குரிய எம்.ஜி.ஆர். அவர்கள் மற்றும் நம்முடைய முன்னோடிகள் அனைவரும் மாநாட்டு மேடையில் இருந்தார்கள்.

அப்போது நான் கோபாலபுரத்தில் இருக்கும் இளைஞர்களை ஒன்று திரட்டிக் கொண்டு சென்னையிலிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் இருந்து தொடர் ஓட்டமாக அண்ணா ஜோதியைத் தாங்கிக்கொண்டு சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வரையில் ஓடிவந்து அந்த ஜோதியை மேடையில் இருக்கும் தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் கொடுத்த ஸ்டாலின்தான் இன்றைக்கு காஞ்சிக்கு வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

இப்போது தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. என்ன ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும். எடுபிடி ஆட்சி. கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி கீழம்பி பகுதியில் நான் தலைமை தாங்க, நம்முடைய கூட்டணிக் கட்சிகள் அத்தனையும் பங்கேற்க ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். கையில் கருப்புக் கொடி ஏந்தி, இதே காஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழம்பி பகுதியில், மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி விவசாயிகளைக் கொடுமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததை எதிர்த்து, அந்தப் போராட்டத்தை காஞ்சியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் நடத்தினோம். அதற்குப் பிறகு பல போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம்.

ஆனால் இப்போது முதலமைச்சர் பழனிசாமி, தேர்தல் அறிக்கையில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து அ.தி.மு.க. குரல் கொடுக்கும் என்று திடீர் ஞானோதயம் வந்தது போல, விவசாயிகளை ஏமாற்றுவதற்காக அந்த அறிவிப்பைச் சொல்லியிருக்கிறார். இதே முதலமைச்சர் பழனிசாமி, இந்தச் சட்டத்திற்கு எதிராக நாம் போராடிய நேரத்தில், “ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியாது” என்று சொன்னார். அவருக்குத்தான் விவசாயம் தெரியுமாம். அவர் அடிக்கடி எங்கு சென்றாலும் நான் ஒரு விவசாயி, நான் ஒரு விவசாயி என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு ரவுடிதான் தன்னை அடிக்கடி ரவுடி, ரவுடி என்று சொல்லுவான்.

அது மட்டுமல்ல; போராடுகின்ற விவசாயிகளைப் பார்த்துக் கொச்சைப் படுத்திப் பேசினார். இன்றைக்கும் டெல்லியில் 120 நாட்களைக் கடந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் குடும்பம் குடும்பமாக, கடும் பனியைக்கூடப் பொருட்படுத்தாமல், வெயிலைப் பற்றிக் கவலைப்படாமல், மழையைச் சிந்தித்துப் பார்க்காமல், டெல்லியில் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்த்து முதலமைச்சர் பழனிசாமி அவர்கள், தரகர்கள், புரோக்கர்கள் என்று வாய் கூசாமல் சொன்னார்.

விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்த பழனிசாமி தேர்தலுக்காக பச்சோந்தியாக மாறியுள்ளார் - மு.க.ஸ்டாலின் உரை!

அவர்களை அழைத்துப் பேசவேண்டும் என்று நாம் தொடர்ந்து பிரதமருக்குக் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே அவர்களை அழைத்துப் பேசினால் சரியாகி விடும் என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். பா.ஜ.க. ஆளும் மாநிலத்தின் முதலமைச்சர்கள் கூட இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி - தரகர்கள், புரோக்கர்கள் என்று போராடும் விவசாயிகளைச் சொல்லி இருக்கிறார். உங்களுக்குத் தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால் டெல்லிக்குச் சென்று அங்கு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைச் சந்தித்துப் பேச நீங்கள் தயாரா?

ஏற்கனவே அறிவித்த அறிவிப்பில் இருந்து உங்களுடைய உணர்வு, சுருதி மாறுவதற்கு என்ன காரணம்? தேர்தல் வருகிறது. அதனால் தான் பச்சைத் துண்டு பழனிசாமி இன்றைக்கு பச்சோந்தி பழனிசாமியாக மாறி மக்களை ஏமாற்றத் தொடங்கியிருக்கிறார். பழனிசாமி முதலமைச்சராகத் தகுதி இருக்கிறது என்று நினைத்து மக்கள் யாரும் அவருக்கு ஓட்டுப் போடவில்லை. அவர் இன்றைக்கு முதலமைச்சராக இருப்பதற்கு என்ன காரணம்? அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்தது காரணம். அதுமட்டுமல்ல, சசிகலா அவர்கள் சிறைக்குப் போனது காரணம். அது மட்டுமல்ல, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கோபித்துக்கொண்டு தனி அணியை உருவாக்கியது காரணம். ஆனால் ஏறி வந்த ஏணியான சசிகலாவை எட்டி உதைக்கும் ஒரு துரோகியாக இன்றைக்கு பழனிசாமி இருக்கிறார்.

இன்னொன்றையும் அவர் பேசியிருக்கிறார். மத்திய அரசோடு இணக்கமாக இருந்து பல திட்டங்களை, காரியங்களை நாங்கள் இந்த ஆட்சியில் சாதித்து இருக்கிறோம் என்று ஒரு அபாண்டமான பொய்யை முதலமைச்சர் பழனிசாமி சொல்லியிருக்கிறார். நான் அதைப் பத்திரிகைகளில் படித்தேன். முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்களே, மத்திய அரசைப் பயன்படுத்தி எல்லாத் திட்டங்களையும் கொண்டு வந்துவிட்டோம் என்று சொல்கிறீர்களே, வர்தா புயல் வந்த போது தமிழக அரசின் சார்பில் கேட்கப்பட்ட நிதி 22,573 கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசிடம் இருந்து வந்த நிதி 766 கோடி ரூபாய் தான். ஒக்கி புயல் வந்தபோது மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிதி 9,302 கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசிடம் இருந்து வந்த தொகை 133 கோடி ரூபாய்.

கஜா புயல் வந்த நேரத்தில் மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட நிதி 17,899 கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசிடம் இருந்து வந்த நிதி 1,145 கோடி ரூபாய். அதேபோல, நிவர் புயலுக்கு நிவாரணத் தொகை கிடைத்ததா? புரெவி புயல் நிவாரணம் வந்ததா? ஜி.எஸ்.டி. மூலம் பிடிக்கப்பட்ட தொகை இதுவரை வந்து சேர்ந்து இருக்கிறதா? 15-ஆவது நிதிக்குழுவில் உள்ள முரண் நீக்கப்பட்டதா? கொரோனா நிதி வந்ததா? எதுவும் வந்து சேரவில்லை. பிறகு மானங்கெட்டு எதற்குக் கூட்டணி வைத்து இருக்கிறீர்கள் என்ற கேள்வியைத்தான் நான் இங்கே கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். மத்திய அரசு - மாநில அரசுகளுக்கு நிதி தராத போதெல்லாம் நான் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தொடர்ந்து குரல் கொடுத்திருக்கிறேன்.

நான் மட்டுமல்ல, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமல்ல, நம்மோடு கூட இருக்கும் எல்லா உறுப்பினர்களும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் என்ன செய்தார்கள்? கையைக் கட்டி, வாயைப் பொத்திக்கொண்டு ஒரு அடிமையைப் போல இருந்தார்கள். தமிழ்நாட்டிற்கு எந்தப் புதிய திட்டமும் வந்து சேரவில்லை. என்ன சலுகையைப் பெற்றுத் தந்தார்கள்? ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மத்திய அரசின் மூலமாக எதுவும் செய்யாத ஒரு ஆட்சியாகத்தான், இங்கிருக்கும் அ.தி.மு.க. ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. எனவே கோட்டையில் உட்கார்ந்து கொண்டு காலை ஆட்டிக் கொண்டு மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள், இங்கிருக்கும் முதலமைச்சரும் அமைச்சரும்.

மக்கள் நிம்மதி இழந்து பல கொடுமைகளுக்கு தொடர்ந்து ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழுக்கும், தமிழனுக்கும், துரோகம் செய்துவிட்டு இன்றைக்கு பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் ஜோடி சேர்ந்து கொண்டு வாக்குக் கேட்க வருகிறார்கள். அவ்வாறு வாக்குக் கேட்டு வருபவர்களை நீங்கள் சும்மா விடுவீர்களா? ஒன்றை மட்டும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். பா.ஜ.க. மட்டுமல்ல, ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது. நான் தொடர்ந்து 200 என்று சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதை மனதில் வைத்துச் சொல்கிறேன், 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம்.

ஒரு இடத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும், வெற்றி பெறுபவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அல்ல, அவர் பாஜக எம்.எல்.ஏ. தான். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு உதாரணம், நாடாளுமன்றத் தேர்தலில் தேனியில் ஒரே ஒரு அ.தி.மு.க. எம்.பி. தான் வெற்றி பெற்றார். அவர் ஓ.பி.எஸ். மகன். அவர் அ.தி.மு.க. எம்.பி.யாக அல்ல, பா.ஜ.க. எம்.பி.யாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் எந்தக் காரணத்தைக் கொண்டும், எந்தச் சூழ்நிலையிலும் பா.ஜ.க.வையும் வரவிடக்கூடாது. அதேபோல அ.தி.மு.க.வும் வந்துவிடக்கூடாது. அதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். அதற்கான தேர்தல் இந்தத் தேர்தல் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பழனிசாமி என்றால் இப்போது நமக்கு நினைவுக்கு வருவது, ஊர்ந்து போனவர்.

அதைச் சொன்னால் பாம்பா? பல்லியா? என்று கேட்பார். பாம்பு, பல்லியை விட துரோகத்திற்குதான் விஷம் அதிகம். பழனிசாமி என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது கமிஷன் - கலெக்ஷன் – கரப்ஷன்தான். பழனிசாமி என்று சொன்னால், கொடநாடு கொலை – கொள்ளை, பழனிச்சாமி என்று சொன்னால் சாத்தான்குளத்தில் நடந்த படுகொலை, பழனிசாமி என்று சொன்னால் நீட்தேர்வு, 14 மாணவ மாணவ, மாணவியர் தற்கொலை. பழனிசாமி என்று சொன்னால், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை, 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுதான் நினைவுக்கு வரும். பா.ஜ.க.வின் கிளைக் கழகம்தான் அ.தி.மு.க. என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. எனவே தமிழக வரலாற்றிலேயே ஒரு கரும்புள்ளியை இன்றைக்கு பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உருவாக்கியிருக்கிறது.

எனவே இந்தக் கொள்ளைக் கூட்டத்தை கோட்டையிலிருந்து விரட்டுவதற்கு, வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் நீங்கள் அத்தனை பேரும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். நான் இங்கு நம்முடைய வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்டேன். இவர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். முதலமைச்சர் வேட்பாளராக உங்களிடத்தில் வந்திருக்கிறேன். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர். மறந்துவிடாதீர்கள்.

தேர்தல் அறிக்கையில் நாம் ஆட்சிக்கு வந்தால் இந்த 5 ஆண்டு காலத்தில் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை உறுதி மொழியாக, வாக்குறுதிகளாக நாம் வழங்கி இருக்கிறோம். அவற்றை எல்லாம் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு நிரம்ப உண்டு. கலைஞர் அவர்கள் 5 முறை முதலமைச்சராக இருந்தபோது, தேர்தலின்போது தந்த உறுதிமொழிகள் அனைத்தையும் எந்த அளவிற்குக் காப்பாற்றினார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதை அடிப்படையாக வைத்துத்தான் நம்முடைய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் சிலவற்றை உங்களுக்கு நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நெசவாளர்கள் நலன் காக்க, நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். அடையாள அட்டை வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 200 யூனிட் என்பது 300 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும். நெசவாளர்களுக்கு தடையின்றி நூல் கிடைக்க அரசே கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்கப்படும். ஜவுளித்துறையை மேம்படுத்திட, தனியாக ஜவுளி ஆணையம் அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை 4 லட்சம் ரூபாய் என உயர்த்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திட்டம் நகர்ப்புற நெசவாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். நெசவாளர்களுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக, கடனுக்கான வட்டி 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்படும். இவ்வாறு நெசவாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை நம்முடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறோம்.

அதேபோல பெண்கள் முன்னேற்றத்தில் எப்போதுமே தலைவர் கலைஞர் அவர்கள் தனிக் கவனம் செலுத்துவார். பெண்களுக்காகப் பல அரிய திட்டங்களை அவருடைய ஆட்சிக்காலத்தில் செய்து தந்திருக்கிறோம். அதையெல்லாம் மனதில் வைத்து, இப்போது நம்முடைய தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தோம். இதை நான் அறிவித்தவுடன் அடுத்த நாள் பழனிசாமி, "1500 வழங்குவோம் என்று அறிவித்தார். ஏதோ இவர்கள்தான் ஆட்சிக்கு வரப் போவது போல, சாகின்ற நேரத்தில் சங்கரா, சங்கரா என்று சொல்வது போலச். சொல்லியிருக்கிறார்.

நிச்சயம் அவர் ஆட்சிக்கு வரப்போவதில்லை. நாளைக்கே ஒவ்வொரு வீட்டிற்கும் ஹெலிகாப்டர், ஏரோபிளேன் கொடுக்கப்படும் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஆனால் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளோம். பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைக்கப்படும், மாணவர்கள் - இளைஞர்கள் நலனைப் பேணிப் பாதுகாக்க மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும், அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள், இன்னும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்காக, நீர்நிலைகள், இயற்கை வளங்களைப் பாதுகாக்க, கண்காணிக்க 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.

விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்த பழனிசாமி தேர்தலுக்காக பச்சோந்தியாக மாறியுள்ளார் - மு.க.ஸ்டாலின் உரை!

சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கும் பணிகளில் 75,000 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள், தமிழகம் முழுவதும் அறநிலையங்கள் பாதுகாப்பில் 25,000 இளைஞர்கள் திருக்கோவில் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள், மக்கள் நலப் பணியாளர்களாக 25,000 மகளிர் நியமிக்கப்படுவார்கள், ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பல்வேறு திட்டங்களை நாங்கள் அறிவித்து இருக்கிறோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் வெறும் 1,000 ரூபாய் கொடுத்தார்கள். மீதமிருக்கும் 4,000 ரூபாய், நாம் ஆட்சிக்கு வந்ததும், ஜூன் 3-ஆம் தேதி தலைவர் பிறந்த நாளன்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். பொதுவாக இருக்கும் அறிவிப்புகளை நான் சொல்லிவிட்டேன். இப்போது இந்த காஞ்சிபுரத்திற்கென்று இருக்கும் அறிவிப்புகளை நான் சொல்லியாக வேண்டும்.

காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரியும், அரசு சட்டக் கல்லூரியும் தொடங்கப்படும். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும். தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் காரப்பேட்டை விபத்து சிகிச்சைப் பிரிவுடன் அரசு மருத்துவமனை கட்டப்படும். காஞ்சிபுரத்தில் காகித ஆலை தொடங்கப்படும். மதுராந்தகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். மதுராந்தகத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். பாலாற்றில் இருந்து மதுராந்தகத்திற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் மற்றும் செய்யூரில் சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். காஞ்சிபுரம் அண்ணா நூற்றாண்டு பட்டுப் பூங்கா மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். உத்திரமேரூர் அரசு மருத்துவமனை நவீனமயமாக்கப்படும், உத்திரமேரூரிலும், காஞ்சிபுரத்திலும் நகரங்களுக்கு வெளியே புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். செய்யூர் ஆலம்பறைக் கோட்டை வீடு சுற்றுலா மையமாக்கப்படும். இவ்வளவு உறுதிமொழிகளையும், தேர்தல் அறிக்கையில் வழங்கி இருக்கிறோம்.

அண்மையில் திருச்சியில் கடந்த 7-ஆம் தேதி பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தினோம். ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில், தொலைநோக்குப் பார்வையோடு பத்தாண்டு காலத்தில் என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை நான் அந்தக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறேன். இந்தத் தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டைக் கொண்டு வந்து, இந்து மத வெறியைத் தூண்ட நினைப்பவர்களுக்கு நான் சொல்வது, அது நடக்கவே நடக்காது. இது திராவிட மண். தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் பிறந்த மண், இந்த மண். எனவே உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகள், தமிழ்நாட்டில் இனிப் பலிக்காது என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

எனவே தமிழக மக்கள் வாக்களிப்பதற்கு முன் நன்றாக யோசித்து, அடிமை ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? மாநில உரிமைகளை தட்டிக் கேட்கும் ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்கு உங்கள் வாக்குகளை எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் சின்னத்திலும் நீங்கள் அத்தனை பேரும் அளிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பைப் பெருக்க, மாநில உரிமைகளைப் பாதுகாக்க, அண்ணா பிறந்த காஞ்சியில் முழுமையான வெற்றி பெற, நம் மாநில உரிமையை மீட்க, தமிழர்களை காப்பாற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் உங்களை அன்போடு, பாசத்தோடு, பணிவோடு, உரிமையோடு, உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, தலைவர் கலைஞருடைய மகனாக உங்கள் பாதம் தொட்டுக் கேட்கிறேன். ஆதரியுங்கள். விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories