மு.க.ஸ்டாலின்

“விவசாயிகள் படும் துன்பம் இப்போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததா?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!

“விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்து உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கிய முதலமைச்சர் பழனிசாமி, தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் பயனற்ற கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டு நாடகமாடுகிறார்.”

“விவசாயிகள் படும் துன்பம் இப்போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததா?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்து உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கிய துரோகத்தைச் செய்த முதலமைச்சர் பழனிசாமி, தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் பயனற்ற கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டு நாடகமாடுகிறார்.

மக்களின் கவலைகளைப் போக்காமல்; புதிய கவலைகளை உருவாக்கும் அ.தி.மு.க ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, நாம் அனைவரும் இணைந்து நவீனத் தமிழகத்தை நாளை அமைப்போம்!" என சங்கரன்கோவில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

இன்று (07-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் – சுரண்டை, பேரறிஞர் அண்ணா திடலில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துக் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“உங்கள் அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கம். நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா? நான் ரெடி, நீங்கள் ரெடியா?

இப்போது தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் இந்த 5 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து அந்த சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் மக்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். வந்திருக்கும் உங்களை எல்லாம் முதலில் நான் வரவேற்பதை என்னுடைய கடமையாகக் கருதுகிறேன்.

இது ஒரு நிகழ்ச்சி போல இல்லாமல் ஒரு பெரிய மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பான நிகழ்ச்சியை மாநாடு போல நடத்திக் கொண்டிருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் சிவபத்மநாபன் அவர்களுக்கும், துரை அவர்களுக்கும் என்னுடைய வணக்கத்தை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர்களுக்கு மட்டும் இல்லாமல் அவர்களோடு இணைந்து இந்த நிகழ்ச்சி சிறப்போடு அமைவதற்கு காரணமாக இருந்திருக்கும் நம்முடைய கட்சியின் முன்னோடிகள், பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள், மாநில அளவில் பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகள், மாவட்ட கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக் கழக, நகரக் கழக, பேரூர் கழக, கிளைக் கழகச் செயலாளர்கள், வார்டு கழகச் செயலாளர்கள், அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் ஒருமுறை தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

10,000 பேருக்கு மேல் இங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள். இவ்வளவு எழுச்சியாக உணர்ச்சியாக வந்திருந்தாலும், இடமில்லாமல் பந்தலுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தாலும் நீங்கள் காட்டுகிற கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு - பொறுமை இவற்றை எல்லாம் பார்த்து உள்ளபடியே நான் பெருமைப்படுகிறேன். இதுதான் தி.மு.க.

நாடு நன்றாக இல்லை என்பதற்காகத்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம். இப்போது நீங்கள் இந்த அரங்கத்திற்குள் வந்து உட்காருவதற்கு முன்பு, நுழைவாயிலில் நம்முடைய தோழர்கள், தொண்டர்கள், இளைஞர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் உங்கள் பெயர், ஊர், முகவரி, உங்கள் கோரிக்கைகள், உங்கள் பிரச்சினைகள், உங்கள் ஊரில் இருக்கும் குறைபாடுகளை எல்லாம் அங்கே பதிவு செய்து கொண்டிருந்தார்கள். நான் உங்களைச் சந்திக்கும் போது என்னிடமே 1,000-க்கும் மேற்பட்ட மனுக்களை என்னிடமே தந்திருக்கிறீர்கள்.

அவ்வாறு கொடுத்ததற்கான அத்தாட்சியாக ஒரு ரசீது ஒன்று கொடுத்திருப்பார்கள். இதுதான் முக்கியம். இதில் சீரியல் நம்பர் இருக்கிறது. ஏன் இவ்வளவு அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறேன் என்றால் இன்னும் 3 மாதத்திற்குள் சட்டமன்ற பொதுத் தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம்.

அந்த தேர்தலில் இதுவரையில் தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை நம்முடைய அணி பெறப் போகிறது. அந்த வெற்றி பெற்றதற்கு பிறகு, ஆட்சிக்கு வந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அடுத்த நாள் இந்த பெட்டி திறக்கப்படும்.

அவ்வாறு திறக்கப்பட்ட பிறகு உங்களது கோரிக்கைகள் அத்தனையும் நிறைவேற்றுகின்ற சூழலை உருவாக்குவோம். ஏன் இந்த ரசீது முக்கியம் என்றால், ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் - அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை - ஒருவேளை இருந்தால் நீங்கள் அந்த ரசீதோடு தைரியமாக கோட்டைக்குள் வரலாம். கோட்டைக்குள் மட்டுமின்றி, கோட்டைக்குள் இருக்கும் முதலமைச்சர் அறைக்குள்ளும் வரலாம். அந்த உரிமை உங்களுக்கு இருக்கிறது.

இப்போது உங்களை எல்லாம் பேச அழைக்கப் போகிறேன். எல்லோரையும் பேச வைக்க முடியாது. பத்தாயிரத்திற்கு மேல் உட்கார்ந்து இருக்கிறீர்கள். எனவே எல்லாரையும் பேசவைக்க வாய்ப்பில்லை. எல்லா இடங்களிலும் இதே நிலைதான். நீங்கள் பேச வேண்டிய அவசியமில்லை நான் உறுதி தர வேண்டும் அவ்வளவுதான்.

தெருவிளக்கு இல்லை, பேருந்து வசதி இல்லை, பள்ளிகள் இல்லை, மருத்துவமனை இல்லை, பட்டா கிடைக்கவில்லை, குடிநீர் கிடைக்கவில்லை, 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பளம் சரியாக கிடைக்கவில்லை, ஓய்வு ஊதியம் கிடைக்கவில்லை, சுய உதவிக் குழுக்களுக்கு மானியம் கிடைக்கவில்லை, சுழல்நிதி கிடைக்கவில்லை, வங்கிக்கடன் கிடைக்கவில்லை, வேலை இல்லை இது போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் தான் இருக்கப்போகிறது. அதனால் பேச வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் ஒரு அடையாளத்திற்காக 10 பேரை நான் பேச வைக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த 10 பேர் யார் என்பதை இந்தப் பெட்டியில் இருந்து தேர்ந்தெடுப்பேன்.

அந்த சீட்டில் வரும் பெயர்களை நான் அழைப்பேன். இப்போது 10 பேரை தேர்ந்தெடுக்கப் போகிறேன். பேசுகிறவர்கள் சுருக்கமாக பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதன் விவரம் வருமாறு:

“செல்வராஜ் அவர்கள் மனுவில் ஆளுங்கட்சி ஆட்கள் மாமூல் தொல்லை கொடுக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு படத்தில் நடிகர் வடிவேலு ஒரு மார்க்கெட்டில் கடை கடையாக சென்று 1 ரூபாய், 2 ரூபாய் என்று மாமூல் பிச்சை எடுப்பதுபோல, இப்போது அ.தி.மு.க.காரர்கள் பிச்சை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் கொரோனா காலத்தில் இதை செய்திருப்பதாக சொன்னார். கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், வாழ்வாதாரத்தை இழந்து, உயிருக்கு பயந்து வாழ்ந்த மக்களிடம் கொள்ளை அடித்திருக்கிறது.

கொரோனாவிலும் கொள்ளை அடித்த ஆட்சி தான் பழனிசாமியின் ஆட்சி. எனவே சாலையோரத்தில் இருக்கும் மக்கள் கவலைப்படாதீர்கள். தி.மு.க. ஆட்சி வந்தவுடன் நிச்சயமா பாதுகாப்பாக இருப்போம் என்ற அந்த உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

டொமினிக் ராஜா அவர்கள் புள்ளி விவரத்தோடு தகவல்களை மனுவில் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். அதாவது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 11,000க்கும் மேற்பட்ட ஆசிரயர்களை நியமித்த ஆட்சிதான் கலைஞரின் ஆட்சி என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் கலைஞர் அறிவித்த மானியம் மற்றும் அங்கீகாரத்தை நீக்கி பின்னர் வந்த அ.திமு.க. அரசு உத்தரவிட்டது. அனைத்து சமூகத்தினரும் போற்றும் தலைவராக கலைஞர் இருந்தார். ஏனென்றால் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுடைய கல்வி சமூக மேம்பாட்டுக்காக எண்ணற்ற திட்டங்களை அவர் அறிவித்தார். அவர்கள் கேட்டுக் கொண்டபடி கலைஞர் வழியில் வரவிருக்கும் இந்த ஸ்டாலின் அரசும் நிச்சயமாக செய்யும்… செய்யும்… செய்யும்… என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏற்கனவே தி.மு.க ஆட்சியில் இருந்தபோது சுழல் நிதி, வங்கிக்கடன், மானியத்தொகை எல்லாம் கிடைத்தது. இங்கு 2010-ல் தாலுகா அலுவலகம் திறந்து வைக்கும்போது உங்கள் கையால் 50 குழுக்களுக்கு மேல் வாங்கியிருக்கிறோம் என்று சொன்னீர்கள்.

மகளிர் சுய உதவிக்குழு 1989 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் தான் தொடங்கி வைத்தார். பெண்கள் சுயமரியாதை உணர்வோடு வாழ வேண்டும், தன்னம்பிக்கை பெற்றவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும், யாருடைய தயவையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த திட்டத்தை கலைஞர் ஆரம்பித்தார்.

அது இப்போது பரந்து விரிந்திருக்கிறது. அதற்குப் பிறகு, நான் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் - துணை முதலமைச்சராகவும் இருந்த நேரத்தில் எவ்வாறு விரிவடைய வைத்தோம் என்பது உங்களுக்கு தெரியும்.

நான் துணை முதலமைச்சராகவும் - உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தபோது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்குச் செல்வேன். ஆய்வு நடத்துவதற்காக செல்வேன்.

அவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 4 முறை, 5 முறை செல்வேன். அவ்வாறு செல்கின்ற போது அரசு நிகழ்ச்சிகளில் மகளிர் சுய உதவிக் குழுவை சார்ந்த பெண்களுக்கு, வங்கிக்கடனை, மானியத்தொகையை கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிடுவேன்.

5,000 பேருக்கு மேற்பட்டவர்கள் வருவார்கள். அந்த 5,000 பேருக்கும் கடைசிவரையில் மேடையில் நின்று கொடுத்து விட்டுச் சென்றவன் தான் இந்த ஸ்டாலின்.

இப்போது அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு வந்து 10 பேருக்குக் கொடுத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து விட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், சுயஉதவிக்குழு திட்டப் பயன்கள் முறையாக சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பணியை நான் அவ்வாறு செய்தேன்.

பல முறை சில தாய்மார்கள் மேடைக்கு வந்து, “நீ எல்லோருக்கும் கொடுக்கிறாய். கிட்டத்தட்ட 5 மணி நேரம் நின்று கொடுத்து விட்டு செல்கிறாய். உட்கார்ந்து கொடுத்திருக்கலாம். ஆனால் நின்று கொண்டே கொடுக்கிறாய். உனக்கு கால் வலிக்க வில்லையா?” என்று என்னிடத்தில் கேட்பார்கள். அப்போது அவர்களிடம், ‘இதை கொடுக்கின்ற போது உங்கள் முகத்தில் புன்முறுவலையும் சிரிப்பையும் பார்க்கிறேன். அதை பார்த்தவுடன் என் கால் வலி தானாக பறந்து விடுகிறது’ என்று சொல்வேன்.

இதை என்னுடைய பெருமைக்காக சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். கலைஞர் என்ன நினைத்தாரோ, எந்த உணர்வோடு இந்த மகளிர் சுய உதவிக்குழுவை ஆரம்பித்தாரோ அந்தப் பலனை அவர்கள் பெற வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் நான் அந்தப் பணியை அவ்வாறு பொறுப்புடன் மேற்கொண்டேன்.

ஆனால் இன்றைக்கு வங்கிக்குச் சென்று கடன் வாங்க முடியாத நிலை இருக்கிறது. தி.மு.க. ஆட்சி இருந்தபோது வங்கி அதிகாரிகள் உங்களை உபசரித்து கடன் கொடுத்தார்கள். ஆனால் இப்போது உங்களை விரட்டுகிறார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

நிச்சயமாக, உறுதியாக ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு என்ன உதவிகள் செய்தோமோ, அதைவிட பல மடங்கு வசதியை, உதவியை நாங்கள், தி.மு.க. ஆட்சி செய்யும் என்ற அந்த உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏற்கனவே விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத்தை உயர்த்துவது, பள்ளிகளில் இலவச சீருடையாக கைத்தறி துணிகளை வழங்குவது, நெசவாளர்களுக்கு தனி ஆணையம் அமைத்தல், கடனுக்கு வட்டி குறைப்பு போன்ற பல திட்டங்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சொல்லியிருந்தோம். அதற்கு முன்னாள் சட்டமன்ற தேர்தல் வந்தபோதும் சொல்லியிருந்தோம்.

இப்போது வரவிருக்கும் தேர்தலிலும் அந்த வாக்குறுதியை நிச்சயம் கொடுப்போம். எனவே நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

கைத்தறி துணிக்கு தி.மு.க எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது என்பதை குறிப்பிட்டுச் சொன்னார்கள். அண்ணா அவர்கள் கைத்தறித் துணிகள் தேங்கி இருந்தபோது தி.மு.க தொண்டர்கள் ஒவ்வொருவரும் கைத்தறி துணியை விற்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்.

அப்போது அண்ணா, கலைஞர், நாவலர், பேராசிரியர், மதியழகன் போன்ற தலைவர்கள் தங்கள் தோளில் கதர்த் துணியைச் சுமந்து கொண்டு, தலையில் சுமந்து கொண்டு ‘கைத்தறித் துணிகள் வாங்கலயோ’ என்று கூவி விற்ற கட்சிதான் தி.மு.க. என்பது உங்களுக்கு தெரியும்.

சௌரியம்மாள் அவர்கள் பேசும்போது, பெயர்தான் சௌரியம்மாள் என்று இருக்கிறது. வாழ்க்கை அவருக்கு சௌகரியமாக இல்லை என்று வேதனையாக பேசி இருக்கிறார். தி.முக.வால் தான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட முடியும். நீங்கள் தான் ஆட்சிக்கு வரப் போகிறீர்கள் என்ற நம்பிக்கையோடு பேசினார்கள். அந்த நம்பிக்கைதான் உங்களை இங்கே வர வைத்திருக்கிறது.

நீங்கள் மட்டும் இல்லை. அத்தனை பேரும் அந்த நம்பிக்கையில்தான் வந்திருக்கிறார்கள். கவலைப்படாதீர்கள். அதே நேரத்தில் இந்த சங்கரன்கோவில் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கிறார். அவர் அமைச்சராகவும் இருக்கிறார்.

ஆனால் அவர் அமைச்சர் என்று சொன்னால் தான் பலபேருக்கு அடையாளம் தெரியும். இந்த ஆட்சியில் அந்த அம்மாவை ஒரு டம்மியாக வைத்திருக்கிறார்கள். எந்த பணியும் அவர் செய்வதில்லை.

அவர்கள் வீட்டில் ஒரு விழா நடந்தது. அந்த விழாவிற்கு பழனிசாமி, பன்னீர் செல்வம் எல்லாம் வந்து விட்டு சென்றார்கள். அதற்குப்பிறகு தான் அவர் அமைச்சர் என்று எல்லோருக்கும் தெரிந்தது என்று இங்கே இருப்பவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

இவ்வாறு அவர் நாட்டுக்கு தெரியாமல் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருக்கிறார். பட்டியலின மக்கள் நலனுக்காக அவர் என்ன நன்மைகளை செய்திருக்கிறார் என்றால் இதுவரையில் எதுவும் செய்யவில்லை.

பட்டியலின மாணவர்கள் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தியது. அதையாவது கண்டித்து குரல் கொடுத்தாரா? அந்த முடிவை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டாரா? இல்லை.

கடந்த 3 வருடங்களில் மத்திய அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு நியமனங்கள் பாதிகூட நிரப்பப்படவில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் அவருக்கு தெரியுமா? தெரியாதா? என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. அதில் எந்த அக்கறையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை.

சங்கரன்கோவில் பகுதி பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் சங்கரன்கோவில் தொகுதியில் அவர் பல பினாமிகளை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சட்டமன்ற கூட்டத்தில் இருக்கும்போது, இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தான் அவர் உட்கார்ந்து இருப்பார்.

தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்து பேச விரும்பவில்லை. ஆனால் அமைச்சராக இருப்பவர் இப்படி இருக்கலாமா என்பதுதான் என்னுடைய கேள்வி. நிச்சயமாக வரும் காலகட்டத்தில் சவரியம்மாள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அவர்கள் பகுதியை அம்பை தாலுகாவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தற்போது தென்காசி தாலுகாவில் இருக்கின்ற காரணத்தினால் என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என்பதை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். நாம் ஆட்சிக்கு வந்ததும் அதற்குரிய பிரச்சினையை ஆராய்ந்து, ஆய்வு நடத்தி, அதிகாரிகளிடம் கலந்து பேசி, மக்களுடைய கருத்துக்களையும் கேட்டு, நிச்சயமாக நிர்வாக ரீதியாக நீங்கள் கோரிய மாற்றம் ஏற்படும் என்று அந்த நம்பிக்கையைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

செண்பகவல்லி அணை பிரச்சனை பற்றி சொன்னீர்கள். அது ஒரு தொகுதி பிரச்சினை அல்ல என்பதையும் சொன்னீர்கள். இது உள்ளூர் பிரச்சினை அல்ல. 30 ஆண்டுகால சிக்கல் இது. மாவட்டங்கள் – மாநிலங்கள், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தொடர்பான பிரச்சினை இந்த பிரச்சினை.

உங்கள் கருத்துக்களை நான் நிச்சயமாக பரிசீலிப்பேன். வெறும் வார்த்தைகளாக சொல்லுகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். மனப்பூர்வமாக சொல்கிறேன். இதுவரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கும். நிச்சயமாக, உறுதியாக தமிழக அரசு சார்பில் வரவிருக்கும் காலகட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் முழுமூச்சாக நான் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்துவேன் என்ற அந்த நம்பிக்கையை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

முட்டைகளுக்கு உரிய விலை, நல வாரியம், மின் கட்டணம், ஆணையம் இதுபோல பல பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். அது எல்லாம் எங்களுக்கு தேவைப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் இதெல்லாம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறீர்கள்.

உங்கள் நம்பிக்கை வீண் போகாது. நம்பிக்கைக்கு ஏற்றவகையில் எங்களுடைய பணி இருக்கும் என்பதை நான் இந்த நேரத்தில் உறுதியாக எடுத்துச் சொல்லிக் கொள்கிறேன்.

கோரிக்கை மனுக்கள் இருக்கும் பெட்டிக்கு பூட்டு போட்டு, சீல் வைக்கப்பட்டு, அண்ணா அறிவாலயத்தில் கொண்டுபோய் வைக்கப்படும்.

நான் முன்புசொன்னதுபோல தேர்தல் முடிந்து, நாம் ஆட்சிக்கு வந்து பதவியேற்றுக் கொண்ட அடுத்த நாள் இந்த பெட்டியின் சீல் என்னுடைய கையால் உடைக்கப்படும். பூட்டு திறக்கப்படும். உள்ளிருக்கும் மனுக்கள் அனைத்தையும் எடுத்து, இதற்கென்று ஒரு தனித்துறை உருவாக்கப்படும்.

அந்த துறையில் சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அந்த அதிகாரிகள் வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. இந்த வேலையை மட்டும் தான் செய்ய வேண்டும். 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று உறுதி தந்திருக்கிறேன். நான் உறுதி தருகிறேன் என்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. கலைஞருடைய மகன் ஸ்டாலின்.

கலைஞர் சொன்னதைச் செய்வார், செய்வதைத்தான் சொல்வார். அவருக்கு பிறந்த இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான், செய்வதைத்தான் சொல்வான். எனவே நம்பிக்கையோடு இருங்கள்.”

இவ்வாறு பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“இந்த ஸ்டாலினை நம்பியும், தி.மு.கழகத்தை நம்பியும், கையில் மனுக்களோடு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த ஆட்சி எவ்வளவு மோசமான ஆட்சி என்றால், பழனிசாமி எத்தகைய நடிகர் என்றால், கடைசி நேரத்திலும் தனது நாடகங்களை நடத்தி வருகிறார். விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ரத்து செய்வோம் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். உடனே பழனிசாமி, கூட்டுறவுக் கடனை இப்போதே ரத்து செய்யப் போகிறேன் என்று அறிவித்துள்ளார்.

நன்றாக கவனியுங்கள்! அவர் இன்னமும் ரத்து செய்யவில்லை! ரத்து செய்யப் போவதாக அறிவிப்பு தான் செய்துள்ளார்.

பதவியேற்பு விழா மேடையில் உட்கார்ந்து கொண்டு 7,000 கோடி கடனை ரத்து செய்தவர் முதல்வர் கலைஞர். ஆனால் 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 3 மாதங்களில் முடியப் போகிறது. கடைசி நேரத்தில் சங்கரா சங்கரா என்று சொல்வதுபோல, ஆட்சி முடியப் போகும் நேரத்தில் ரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார் பழனிசாமி.

அவருக்கு இந்தக் கடன்கள் பற்றி, விவசாயிகள் படும் வேதனை பற்றி இப்போதுதான் தெரியவந்ததா? அவருக்குத் தெரியும்.

ஆனால் கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்ய மாட்டேன் என்று இருந்தவர் தான் இந்த பழனிசாமி. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்யப் போவதாக 2016 ஆம் ஆண்டும் இதே போல் ஒரு நாடகத்தை நடத்தினார்கள்

5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்றார்கள்.

இதை எதிர்த்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

இதனை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்றுக் கொண்டது. அனைத்து விவசாயிகளுக்கும் சலுகை வழங்கும் வகையில் அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அதற்கான உத்தரவை 3 மாதங்களுக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்த துரோக அரசு தான் பழனிசாமியின் அரசு. அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடனை ரத்து செய்ய மாட்டோம் என்று விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த அரசு தான் பழனிசாமி அரசு.

இப்படி வழக்கு நடக்கும் போதே, விவசாயிகளுக்கு நெருக்கடி தந்து கடனை வசூலித்த அரசு தான் பழனிசாமி அரசு. ஆனால் இன்றைய தினம் கடனை ரத்து செய்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

தேர்தலுக்காக ரத்து செய்கிறாரே தவிர, விவசாயிகளுக்காக ரத்து செய்யவில்லை. தனது சுயநலத்துக்காக ரத்து செய்கிறாரே தவிர, விவசாயிகளுக்காக ரத்து செய்யவில்லை. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ரத்து செய்துவிடும் என்பதற்காக ரத்து செய்கிறார். ஸ்டாலின் சொல்லிவிட்டாரே, நாம் செய்து தான் ஆகவேண்டும் என்று பழனிசாமி நினைத்து செய்வது தான் இது.

இந்த பச்சைத்துரோக நாடகங்களை அறியாதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். பச்சைப்பாம்புக்கும் புடலங்காய்க்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள்!

இன்றைக்கு தினகரன் பத்திரிக்கையில் ஒரு தலையங்கம் வந்திருக்கிறது. விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் ‘யாருக்குப் பயன்’ என்ற தலைப்பில் அந்த தலையங்கம் வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் நான் படிக்கிறேன்.

“கடந்த 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, தமிழகத்தில் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள், கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய நகைக்கடன், பயிர்க்கடன், டிராக்டர் கடன், கிணறு, கேணி வெட்ட வாங்கிய கடன் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் கடனையும் ரத்து செய்தார். இதன்மூலம் தமிழகத்தில் ரூ.7 ஆயிரம் கோடிக்கான கடனை தி.மு.க. அரசு ரத்து செய்தது.

ஆனால், இப்போது முதல்வர் அறிவித்திருப்பது வெறும் பயிர்க்கடன் மட்டுமே. இதுவும், சிறு, குறு விவசாயிகளுக்கான கடனாக உள்ளது. மேலும், கூட்டுறவு வங்கியின் நிர்வாகத்தில் தலைவராகவும், இயக்குநர்களாகவும் அ.தி.மு.க.வினர் இருப்பதால், அவர்களின் உறவினர்கள் பெயரில் பயிர்க்கடன் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளது.

உண்மையான சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பயிர் சாகுபடிக்காக நகைகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்து அந்த பணத்தை செலவிட்டு விவசாயம் செய்துள்ளனர். அந்த கடன் தள்ளுபடி இல்லை.

அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி அ.தி.மு.க.வினருக்கு மட்டுமே மகிழ்ச்சியைத் தரும். உண்மையான சிறு, குறு, பெரிய விவசாயிகளுக்கு பயன் தராது.

கடந்த சில மாதங்களாகவே தி.மு.க. பிரசாரங்களில் விடுக்கப்படும் அறிவிப்பையே, அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது.

ஏற்கனவே கிஷான் திட்டத்தில் போலி விவசாயிகள் பலர் ஊடுருவியதால் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது. தற்போது பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பால் உண்மையான விவசாயிகள் பயனடைவார்களா? அல்லது அ.தி.மு.க.வினர் பலனடைவதற்கான அறிவிப்பா? என்பது போகபோகத்தான் தெரியும்.

ஏற்கனவே குடிமராமத்து பணிகளில் அ.தி.மு.க.வினர் பலர், போலி விவசாய சங்கங்கள் மூலம் டெண்டர் எடுத்து பணிகளை எடுத்து செய்து வந்தனர். இதனால் கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை. குடிமராமத்து பணிகள் மூலம் கோடிக்கணக்கில் அ.தி.மு.க.வினர் சுருட்டியதாக விவசாயிகள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசானது ஒரு அறிவிப்பை வெளியிடும்போது, அதனால் யார், யார் பலனடைகின்றனர். திட்டம் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களை போய் சேர்கிறதா என்பதை ஆராய வேண்டும்.” என்று தெளிவாக குறிப்பிட்டு காட்டியிருக்கிறாகள். இதுதான் உண்மை.

ஓர் ஊடகத்தில் நேற்றைய தினம் என்னுடைய பேட்டி வந்தது. அந்த பேட்டி எடுத்த நிருபர் என்னிடத்தில், எம்.ஜி.ஆர். பெயரை நீங்களும் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்டார்?

அரசியலுக்காக பயன்படுத்தவில்லை என்று நான் சொன்னேன். எம்.ஜி.ஆரை இளம்வயதில் இருந்தே நான் அறிவேன். என்னை அவரும் அறிவார். ஆனால் இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் எம்.ஜி.ஆரை சினிமாவில் தான் பார்த்திருப்பார்கள்.

கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் நடந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவில், எம்.ஜி.ஆர். அவர்கள் கலந்து கொண்டு பேசிய பேச்சு இன்று வரை என்னால் மறக்க முடியாதது.

''காண்பவர்கள் பொறாமைப்படும் வகையில் இளைஞர் தி.மு.க.வைச் சேர்ந்த ஸ்டாலின் இன்று இந்த நிகழ்ச்சியை அண்ணாவின் பெருமைகளை எடுத்துக்காட்டும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்காக ஸ்டாலினைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். இவர் முகத்திலிருந்த ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் பார்த்த போது தியாகம் செய்யும் பரம்பரை என்பது தெரிகிறது. இந்தப் பரம்பரை பாதுகாக்கப்பட்டால் நாட்டின் எதிர்காலம் சிறப்படையும்" என்று பாராட்டியவர் எம்.ஜி.ஆர். அவர்கள். அவரால் பாராட்டப்பட்டவன் இந்த ஸ்டாலின் என்பதை அ.தி.மு.கவினருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இன்று சங்கரன்கோவிலுக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் இது முதல்முறையாக அல்ல. கடந்த 30 ஆண்டு காலத்தில் எத்தனையோ முறை வந்திருக்கிறேன். என்னை தமிழ்ச்சமுதாயத்திற்காக ஒப்படைத்துக் கொண்டவன் நான்.

இளைஞரணிச் செயலாளராக- கழகப் பொருளாளராக- செயல் தலைவராக -தலைவராக எத்தனையோ முறை வந்திருக்கிறேன். உள்ளாட்சி துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக வந்துள்ளேன். அப்படி வந்தபோதெல்லாம் பொது நோக்கத்துக்காக வந்துள்ளேனே தவிர, தனிப்பட்ட பயணமாக வரவில்லை. அதே பொதுநோக்கத்தோடு தான் இந்த சங்கரன்கோவிலுக்கு இப்போதும் வந்துள்ளேன்.

தமிழகத்தைக் காப்பதற்காக - தமிழகத்தை மீட்பதற்காக - இப்போது வந்துள்ளேன். சட்டமன்றத்தை புறக்கணித்துவிட்டு மக்கள் மன்றத்துக்கு நாங்கள் வந்திருக்கிறோம். தொகுதிப் பிரச்சினைகள் பற்றிப் பேசாமல் சட்டசபையை புறக்கணித்துச் சென்று விட்டார்கள் என்று சட்டமன்றத்தில் ஒரு அமைச்சர் கேலி பேசியிருக்கிறார்.

சட்டமன்றத்தில் நாங்கள் இதுவரை பேசிய தொகுதிப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்துவிட்டீர்களா? என்பதுதான் நான் கேட்க விரும்பும் கேள்வி. எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் வென்ற தொகுதிகளில் சுட்டிக்காட்டிய பிரச்சினையைத்தான் தீர்க்க முயற்சிக்கவில்லை என்றாலும் ஆளும்கட்சி உறுப்பினர்களின் தொகுதிப் பிரச்சினையை தீர்த்துவிட்டீர்களா? அதுவும் இல்லை!

அமைச்சர்களின் தொகுதிக்கு நான் சென்றேன். அங்கே கிராமசபை கூட்டங்களை நடத்தினேன். அங்கும் தொகுதிப் பிரச்னைகள் தீரவில்லை. துணை முதலமைச்சர் தொகுதிக்கு போனேன். அங்கும் மக்கள் பிரச்னைகள் தீரவில்லை.

முதலமைச்சரின் தொகுதிக்கே போனேன். அவரும் மக்களது குறைகளைத் தீர்க்கவில்லை. முதல்வரின் மாவட்டமான சேலம் மாவட்டத்திலும் குறைகள் தீர்க்கப்படவில்லை. இதுதான் தமிழ்நாடு. அதாவது குறைகள் சூழ்ந்த நாடாக இருக்கிறது தமிழகம். எந்த தொகுதிக்கு போனாலும் அங்கே மக்கள் கவலைகளோடு இருக்கிறார்கள். கோரிக்கைகளோடு இருக்கிறார்கள். இதனை பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சி தீர்க்கவில்லை. கண்டுகொள்ளவில்லை. ஏன் மக்களைச் சந்தித்து கேட்கவும் இல்லை.

மக்களின் கவலைகளை போக்காத ஆட்சி மட்டுமல்ல, புதிய புதிய கவலைகளை உருவாக்கும் ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்டியாக வேண்டும். அந்த முடிவோடு தான் நானும் வந்திருக்கிறேன். அத்தகைய முடிவோடு தான் நீங்களும் வந்திருக்கிறீர்கள். வாருங்கள் இணைந்து கைகோர்த்து நவீன தமிழகத்தை நாளை அமைப்போம். நன்றி… வணக்கம்…!”

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

மேலும், இன்று சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையில் உள்ள ஏ.வி.கே. கல்விக் குழும வளாகத்தில் மாநில வர்தக அணி துணை தலைவர் அய்யாத்துரைப்பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தி.மு.கழகத்தில் இணைந்தனர்.

banner

Related Stories

Related Stories