மு.க.ஸ்டாலின்

ஸ்டே வாங்கி பதவியில் நீடித்து வரும் பழனிசாமி, ‘ஸ்டேட்’ முதல்வர் அல்ல; ‘ஸ்டே’ முதல்வர்!”: மு.க.ஸ்டாலின்

100 நாட்களுக்குள் யாருடைய பிரச்சினையாவது முடியவில்லை என்றால் இந்த சீட்டை எடுத்துக்கொண்டு துணிச்சலோடு கோட்டைக்கு வருவதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது.

ஸ்டே வாங்கி பதவியில் நீடித்து வரும் பழனிசாமி, ‘ஸ்டேட்’ முதல்வர் அல்ல; ‘ஸ்டே’ முதல்வர்!”: மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கை விசாரிக்க விடாமல் ‘ஸ்டே’ வாங்கியதால் முதலமைச்சர் பதவியில் நீடித்து வரும் பழனிசாமி, ‘ஸ்டேட்’ முதலமைச்சர் அல்ல; ‘ஸ்டே’ முதலமைச்சர்!” என அம்பாசமுத்திரம் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (06-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பேருராட்சி, நெல்லை - அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலை அருகில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியை இப்போது நாம் தொடங்கப் போகிறோம். தொடங்குவதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் இராதாபுரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் அடங்கியிருக்கும் மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். அவரவர் தொகுதிகளில் இருக்கும் குறைபாடுகளை, பிரச்சினைகளை, என்னென்ன தேவைகள் என்பதைப் பற்றி இங்கு வந்து எடுத்துச் சொல்லலாம். மனுக்களாகத் தரலாம் என்று அழைப்பு விடுத்து அந்த அழைப்பை ஏற்று வந்திருக்கும் உங்களுக்கு எல்லாம் முதலில் என்னுடைய நன்றியை வணக்கத்தை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இது ஒரு நிகழ்ச்சியாக மட்டுமல்ல, ஒரு மாநாடுபோல நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மாநாடு போல சிறப்பான வகையில் நடத்துவதற்கு எல்லாவகையிலும் காரணமாக இருக்கும் நம்முடைய மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் அவர்களுக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல நம்முடைய மாநகர் மாவட்ட கழகத்தின் செயலாளர் அப்துல் வகாப் அவர்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இப்போது நிகழ்ச்சியைத் தொடங்கப்போகிறோம். நான் ரெடி, நீங்கள் ரெடியா? இந்த அரங்கத்திற்குள் பல்லாயிரக்கணக்கில் ஆண்கள் - பெண்கள் – இளைஞர்கள் - மாணவர்கள் இவ்வாறு எல்லாத் தரப்பு மக்களும் வந்திருக்கிறீர்கள். நீங்கள் இந்த அரங்கத்திற்குள் வருவதற்கு முன்பு நுழைவாயிலில் உங்கள் பெயர், விவரங்களைப் பதிவு செய்திருப்பார்கள்.

அங்கு உங்களுடைய புகார்களை, பிரச்சினைகளை, உங்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை, நீங்கள் கொண்டுவந்திருக்கும் மனுக்களையும் அங்கு கொடுத்து அவர்கள் அதைப் பதிவு செய்திருப்பார்கள். அப்போது அவர்கள் பதிவு செய்ததற்கு அடையாளமாகப் பதிவு எண் போடப்பட்ட ரசீது கொடுத்திருப்பார்கள்.

இந்த ரசீதை வைத்துக்கொண்டு நீங்கள், தேர்தல் முடிந்து, அந்த தேர்தல் மூலமாக தி.மு.க. கழகம் மற்றும் நம்முடைய கூட்டணிக்கும் ஆதரவு தந்து, மிகப்பெரிய வெற்றியை நம்முடைய அணிக்குத் தந்து, நாம் ஆட்சி கட்டிலில் அமர்ந்து, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அடுத்த நாள் இந்த பெட்டி திறக்கப்படும் என்று நான் சொல்லி இருக்கிறேன். அதிலிருந்து 100 நாட்களுக்குள் உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற உறுதிமொழி கொடுத்திருக்கிறேன்.

100 நாட்களுக்குள் யாருடைய பிரச்சினையாவது முடியவில்லை என்றால் இந்த சீட்டை எடுத்துக்கொண்டு துணிச்சலோடு கோட்டைக்கு வருவதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. கோட்டைக்கு மட்டுமல்ல, முதலமைச்சர் அறைக்கு வந்து, இந்த ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்கலாம். அந்த உரிமை உங்களுக்கு இருக்கிறது.

அடுத்து பல்லாயிரக்கணக்கில் இங்கு வந்திருக்கிறீர்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஊராட்சி சபைக் கூட்டத்தை நாம் நடத்தினோம். இப்போது சமீபத்தில் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்தினோம். அதில் வந்தவர்களில் பாதிப் பேரைப் பேச வைத்தோம். ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருக்கும் இந்தக் கூட்டத்தில் அவ்வாறு பேச வைக்க வாய்ப்பே இல்லை.

ஆனால் 10 பேரைப் பேச வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அவ்வாறு பேசுகிறவர்கள் சுருக்கமாக பேசுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பெட்டியில் இருக்கும் உங்கள் மனுக்களில் ஒவ்வொன்றாக நான் எடுப்பேன். அந்தப் பெயருக்கு உரியவர்கள் உங்கள் பேச்சை சுருக்கமாக அமைத்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதன் விவரம் வருமாறு:

“கூடங்குளம் போராட்டத்தின்போது, எங்களது வேலைவாய்ப்பை, வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம் என்று வேதனையோடு சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 8,856 மேல் வழக்கு போட்டிருக்கிறார்கள். அதுவும் சாதாரண வழக்கல்ல, தேசத்துரோக வழக்கு போட்டார்கள்.

ஜெயலலிதாவின் இந்த சர்வாதிகாரத்தை பார்த்து நாட்டில் இருக்கும் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். எப்படி இவ்வாறு நடந்து கொள்ள முடிகிறது என்று அதிர்ந்து போனார்கள். ஆனால் அது நமக்கு புதிதல்ல. வழக்கு போடுவதாக இருந்தாலும் சரி, சாலைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் இவர்களெல்லாம் வீட்டுக்கு அனுப்பியது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பல வழக்குகளை எல்லாம் போட்டார்கள்.

ஜெயலலிதா ஆட்சி இருந்தபோது இவ்வாறு நடந்திருக்கிறது. இந்தியாவில் தேசத்துரோக வழக்கை சாதாரண மக்கள் மீது போட்டு தொல்லை செய்ததில் இப்போது இருக்கும் முதலமைச்சர் முதல் இடத்தைப் பெறுகிறார். உங்களைப் போலத் தான் ஆசிரியர்கள் மீதும், ஜல்லிக்கட்டு போராளிகள் மீதும் ஆயிரக்கணக்கில் வழக்குகளைப் போட்டு கொடுமைப்படுத்தினார்கள்.

இப்போது தேர்தல் வருகிறது. அதனால் போடப்பட்டிருக்கும் வழக்குகளை எல்லாம் திரும்பப் பெறுகிறோம் என்று ஒரு கண்துடைப்பு நாடகத்தை இப்போது பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறார். அது உண்மையில் நடக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். நாம் ஆட்சிக்கு வந்து அந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இராதாபுரம் தொகுதியில் இப்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் இன்பதுரை, தங்கள் சொந்த பஞ்சாயத்தில் குளங்களை சீரமைக்க வேண்டும் என்று சொல்லி நிதி ஒதுக்கீடு செய்து, அந்த பணிகள் எதையும் செய்யாமல் அந்த பணத்தை கொள்ளை அடித்துவிட்டார் என்று மனுவில் சொல்லியிருக்கிறார்கள்.

எனக்கு இதைக் கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் வரவில்லை. ஏனென்றால் அவர் கோல்மால் வேலை செய்துதான் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். மறு வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவித்திருந்தால் அப்பாவு அவர்கள் தான் எம்.எல்.ஏ.வாக இருந்திருப்பார்.

2ஆம் இடம் பெற்ற ஒருவர் தேர்தலில் 5 வருடத்தை பூர்த்தி செய்யப்போகிறார். இந்த நாட்டில் என்ன அக்கிரமம் நடக்கிறது என்பதைப் பாருங்கள். இதற்கு நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டவில்லை. அதுதான் நமக்கு இருக்கும் வருத்தம். இடையில் கொரோனா வந்துவிட்டது. அதைக் காரணம் காட்டிக் காலத்தைக் கடத்தி விட்டார்கள். எது எப்படியோ விரைவில் 3 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது.

அவ்வாறு வரவிருக்கும் தேர்தலில் இராதாபுரம் தொகுதியில் இருக்கும் மக்கள் ஒரு நல்ல தீர்ப்பை நமக்கு வழங்கயிருக்கிறார்கள். அவ்வாறு வழங்கும் அந்தத் தீர்ப்பை நாம் பயன்படுத்திக் கொண்டு இப்படிப்பட்ட அயோக்கியர்களை நாட்டிற்கு அடையாளம் காட்டி உரிய தண்டனையை நிச்சயம் பெற்றுத் தருவேன் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பாபநாசம் அணையில் இருந்து நீர் திறக்காத காரணத்தினால் கடந்த 10 வருடங்களாக அவர்கள் படும் கஷ்டங்களை பட்டியலிட்டு காட்டியிருக்கிறார்கள். உறுதியாக உங்களுக்கு வேண்டிய பாசன வசதிகளை நாங்கள் செய்வோம். அதில் நம்பிக்கையாக இருங்கள். கவலைப்படாதீர்கள்.

இப்போது முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் ‘சாகப்போகும் நேரத்தில் சங்கரா சங்கரா’ என்று சொல்வதுபோல தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை அறிவிப்புகளை வெளியிடப்போகிறார் என்று தெரியவில்லை.

நேற்று திடீரென்று சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறார்.

2006ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் 7,000 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வேன் என்று அறிவித்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு கோட்டைக்கு கூட செல்லாமல் கோட்டையில் இருக்கும் கோப்புகளை விழா மேடைக்கு வர வைத்து 7,000 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்கிறேன் என்று கையெழுத்து போட்டார்.

அப்போது சில அதிகாரிகள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கலைஞரிடம் 7,000 கோடி ரூபாய் என்று எடுத்துச் சொன்னார்கள். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை என்று சொன்னார் தலைவர் கலைஞர்.

அப்போது நம் கட்சியில் இருந்த சிலர், இதில் அ.தி.மு.க.காரர்கள்தான் அதிகமாக கடன் வாங்கி இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குத்தான் அதிக சலுகை கிடைக்கும். நம்மாட்கள் குறைவாகத்தான் வாங்கி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

அப்போது கலைஞர் அவர்கள், நான் அவர்களை எல்லாம் அ.தி.மு.க.வாகப் பார்க்கவில்லை, பா.ம.க.வாக பார்க்கவில்லை, காங்கிரஸாக பார்க்கவில்லை, கம்யூனிஸ்டாக பார்க்கவில்லை, தி.மு.க. என்று பார்க்கவில்லை. அவர்கள் அத்தனை பேரையும் இந்த நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களாக பார்க்கிறேன். அவர்கள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லி கையெழுத்து போட்டார். இதுதான் கலைஞர்.

அதை நான் நினைவுபடுத்தி, கடந்த மாதம் 13-ஆம் தேதி பொங்கல் முதல் நாள் போகி அன்றைக்கு பொன்னேரி தொகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பேசியபோது, நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். கலைஞர் எவ்வாறு 2006-ஆம் ஆண்டு விவசாயிகளுடைய கடனை தள்ளுபடி செய்தாரோ, அதேபோல நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வேன் என்று அறிவித்தேன்.

இதை நேற்று பழனிச்சாமி அறிவிக்கிறார். இதைத்தான் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் சொன்னோம். அதுமட்டுமில்லாமல் 5 சவரனுக்கு குறைவாக வைத்திருக்கும் நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னோம்.

முதலமைச்சர் சட்டமன்றத்தில் அடிக்கடி, “நீங்கள் பொய்யான, செய்ய முடியாத காரியத்தை சொல்லி தேர்தலில் வெற்றி பெற்று வந்துவிட்டீர்கள். மக்களுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றிவிட்டீர்கள்’ என்று சொல்லுவார். நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றினோம் என்றால் நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றுகிறீர்களா?

அதுமட்டுமில்லாமல் விவசாய பெருங்குடி மக்கள் இப்போது இருக்கும் ஆட்சியில், பலமுறை போராட்டம் நடத்தினார்கள். டெல்லிக்கு சென்று, பிச்சை எடுப்பு போராட்டம் நடத்தினார்கள். அரைநிர்வாண போராட்டம் நடத்தினார்கள். ஏன் முழு நிர்வாண போராட்டமே நடத்தினார்கள். அப்போது நிதி இல்லை, பணம் இல்லை என்று சொன்னார்கள்.

அப்போது விவசாயிகளைப் அழைத்து பேசவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள். அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் கொடுத்தது உண்டா? அவர்களுக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை.

இப்போது 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. அந்த 3 வேளாண் சட்டங்கள் காரணமாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் இருக்கும் விவசாயிகள் எல்லாம் விவசாய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி உடனே இந்த அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டது. அதை எதிர்த்து இப்போது இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள். ஆனால் இப்போது தேர்தல் வரும் காரணத்தினால், நாம் ஏற்கனவே அறிவித்த காரணத்தினால் இவ்வாறு அறிவித்திருக்கிறார். இதை நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.

அதாவது நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்த செல்வி அவர்கள் வாழை விவசாயிகள் சந்திக்கும் குறைகளை சொன்னது மட்டுமின்றி, வாழைக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், சரியான முறையில் சந்தைப்படுத்த வேண்டும் என்பதைச் சிறப்பாக எடுத்து சொல்லி இருக்கிறார்.

அதன் மூலமாக தொழில் வாய்ப்புகளும் தி.மு.க. ஆட்சியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்ற யோசனையை சொல்லி இருக்கிறார். நிச்சயமாக உங்கள் யோசனைகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதை நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளிலும் உறுதியாக நாங்கள் ஈடுபடுவோம்.

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம் 2009-இல் கலைஞரால் தான் தொடங்கி வைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சி வந்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சி வந்தபிறகு இதை தொடர்ந்து செய்திருந்தால் முடித்திருக்க முடியும். ஆனால் இதற்காக பல போராட்டங்களை நாம் நடத்தியிருக்கிறோம்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு அவர்கள் இந்தத் திட்டத்திற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அது நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நிச்சயமாக திரவியம் பொன்ராஜ் சொன்னதுபோல தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்தத் திட்டத்தை விரைவாக முடிப்போம் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கொரோனா காலத்திலும் அரிசியைக் கொள்ளையடித்த ஆட்சிதான் இந்த ஆட்சி. அதுவும் அப்பாவு அவர்கள்தான் கண்டுபிடித்து ஒரு போராட்டத்தை நடத்தி, நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறோம். மத்திய அரசு ஒதுக்கிய கொரோனா காலத்திலும் அரிசியைக் கொள்ளை அடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலைதான் இருக்கிறது. கவலைப்படாதீர்கள். உங்களைப் போன்ற மக்கள் தினக்கூலி மக்கள் ரேஷன் கடைகளைத் தான் நம்பியிருக்கிறார்கள். அரிசி தரமாக இல்லையென்றால் அன்றாட வாழ்க்கை சிரமமாகிப் போய்விடுகிறது என்று சொன்னீர்கள். உங்கள் குறைகள் அனைத்தையும் தீர்ப்பான் இந்த ஸ்டாலின் என்பதை உறுதியோடு சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்த 2 தரப்பினர், திருநங்கைகள் – மாற்றுத்திறனாளிகள். சமூகத்தில் அவர்களுக்கு உரிய பெயர் கொடுத்து சுயமரியாதையோடு வாழ வைக்க காரணமாக இருந்தவர் தலைவர் கலைஞர் தான் என்பது நாட்டுக்குத் தெரியும்.

அது மட்டுமின்றி அந்த துறையை முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

அதேபோலதான் எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒருங்கிணைந்து வாழவேண்டும். ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இருக்கக் கூடாது. சாதி சமய வேறுபாடற்ற முறையில் வாழ வேண்டும். உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று வேறுபாடு இருக்கக்கூடாது. பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் என எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டுமென்று உருவாக்கப்பட்ட திட்டம் தான், தந்தை பெரியார் பெயரில் அமைந்த சமத்துவபுரம் திட்டம்.

அதிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி இட ஒதுக்கீடு அளித்து அவர்கள் கோரும் பல்வேறு சலுகைகளை கலைஞர் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார். எனவே இன்றைக்கு கேட்கும் தேசிய அடையாள அட்டை, கடன் தள்ளுபடி செய்தல், வீட்டுமனை வழங்குதல் ஆகியவற்றுக்கான முயற்சிகளை நிச்சயமாக கலைஞர் எந்த உணர்வோடு இந்த சமுதாய மக்களை முன்னேற்ற வேண்டும் செய்தாரோ அதே உணர்வோடு அவர் மகனான இந்த ஸ்டாலினும் செய்வான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சகோதரி ஸ்ரேயா அவர்கள் குத்துச் சண்டையில் முத்திரை பதித்து இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சின்ன சின்ன ஊர்களில் இருந்து, சின்ன சின்ன மாவட்டங்களிலிருந்து சாதித்த கிரிக்கெட் வீரர் சேலம் நடராஜனைப் போலப் பல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்.

குத்துச்சண்டை உள்விளையாட்டு அரங்கத்தில் எல்லா வசதிகளும் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதற்காக பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே அந்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படும்.

இப்போது உங்களுடைய கருத்தை நான் கேட்டு முடித்து விட்டேன். உங்களுடைய மனுக்கள் அடங்கிய பெட்டியை இப்போது இந்த பூட்டு போட்டு, அதற்கு ஒரு சீல் வைக்கப் போகிறேன். அந்த காட்சியை உங்கள் முன்னால் செய்யப்போகிறேன். அதற்கு பிறகு இது சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரமாக வைக்கப்படும்.

முன்பு சொன்னது போல தேர்தல் முடிந்து நாம் ஆட்சிக்கு வந்து பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அடுத்த நாள் இந்த பெட்டியின் சீல் உடைக்கப்பட்டு, பெட்டி திறக்கப்பட்டு, இதில் இருக்கும் மனுக்களை ஆய்வு செய்வதற்கு அதற்கென்று தனி துறை அமைக்கப்படுகிறது.

அந்த இலாகாவில் பணிபுரியும் அதிகாரிகள் 100 நாட்கள் வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. இந்த வேலையை மட்டும் தான் செய்யவேண்டும் என உத்தரவிடப்படும். இவ்வாறு அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றி முடிப்போம்.

கலைஞர் அவர்கள் செய்வதைத்தான் சொல்வார், சொல்வதைத்தான் செய்வார். அதேபோல அவருடைய மகன் இந்த ஸ்டாலினும் செய்வதைத்தான் சொல்வான், சொல்வதைத்தான் செய்வான்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து தி.மு.க தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“ஒவ்வொருவர் மகிழ்ச்சியிலும் உனக்கு பங்கு இருப்பதாக எண்ணிக் கொண்டால் - உனக்குள் பொறாமை தலை தூக்காது. ஒவ்வொருவர் துன்பத்திலும் நீயும் இணைந்திருப்பதான உணர்வைப் பெற்றால் - தன்னலம் தலை தூக்காது" - என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

உங்கள் ஒவ்வொருவர் துன்பத்தையும் போக்கி- மகிழ்ச்சியை உருவாக்கும் மகத்தான திட்டம் தான் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற இந்த திட்டமாகும். இன்னும் மூன்றே மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. அப்போது உங்களது துன்ப துயரங்களை நீக்கியாக வேண்டும் என்ற பெருங்கவலை என்னைச் சூழ்ந்துள்ளது.

அரசியல் என்பது பெரிய பெரிய கொள்கைகளைப் பேசுவது, அதற்காகப் போராடுவது, வாதாடுவது மட்டுமல்ல. அப்பாவி மக்களின் அன்றாடப் பிரச்னைகளைத் தீர்ப்பதும் அரசியலில் அடிப்படையானது தான். அடிப்படை பிரச்னைகள் தீராத மக்களிடத்தில் மிகப் பெரிய விஷயங்களைப் பேசினாலும் எடுபடாது. அந்த வகையில் அடிப்படை பிரச்னைகளை பேசுவது, அதனைக் கவனிப்பது, உடனடியாக அதனைத் தீர்ப்பதை நான் மிக முக்கியமானதாக நினைக்கிறேன்.

மேயராக இருந்தாலும், உள்ளாட்சி அமைச்சராக இருந்தாலும், துணை முதலமைச்சராக இருந்தாலும் - மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தருபவனாக நான் இருந்துள்ளேன். சென்னையின் மிக முக்கியமான பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் பத்துப் பாலங்களைச் சென்னையில் கட்டியதால்தான் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

மழைக்காலங்கள் தண்ணீர் தேங்குவதை தடுக்க தனித்திட்டங்கள் தீட்டினேன். குப்பைகளை அகற்றுவதற்கு தனியார் நிறுவனங்களை அனுமதித்தோம். உள்ளாட்சித் துறையைக் கவனித்த போது குடிநீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். உதாரணத்திற்கு ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்த் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டங்களைச் சொல்லலாம்.

மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி அவர்களது மேன்மைக்காக உதவிகள் புரிந்தேன். பெண்கள் சுயமரியாதையோடும், தன்னம்பிக்கையோடும் வாழவேண்டும், சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதற்காக 1989ல் தருமபுரியில் தலைவர் கலைஞர் தொடங்கிய அந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய ஸ்டாலினாகத்தான் உங்கள் முன் நிற்கிறேன். நமக்கு நாமே திட்டமாக இருந்தாலும்- அண்ணா மறுமலர்ச்சி திட்டமாக இருந்தாலும்- சமத்துவபுரமாக இருந்தாலும் - பொதுமக்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் உருவாக்கிச் செயல்படுத்திக் கொடுத்தவன் நான். இப்பணிகளைச் செய்யும் போது நம் மீது எந்தக் குற்றச்சாட்டும் வந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பேன்.

சென்னை மாநகரத்தின் மேயராக நான் இருந்தபோது திடீரென்று என் மீது ஒருவர் புகார் கூறினார். வழக்கு தாக்கல் செய்தார். அவரை யாரென்று எனக்குத் தெரியாது. அ.தி.மு.கவைச் சேர்ந்த அவர், தங்கள் கட்சியைப் போன்றே நினைத்து அந்த புகாரைக் கூறினார்.

பத்திரிகையில் இந்த செய்தியைப் பார்த்தேன். அப்போது தூத்துக்குடியில் இருந்த நான் உடனடியாகச் சென்னைக்கு விரைந்தேன். விமான நிலையத்தில் இருந்து நேராக டிஜிபி அலுவலகத்திற்குச் சென்றேன். டிஜிபி அங்கு இல்லை. கீழே பணியாற்றும் அதிகாரிகள் இருந்தார்கள். “என் மீது புகார் வந்திருக்கிறது. அது நிரூபிக்கப்பட்டால் என்னை இப்போதே கைது செய்யுங்கள். இல்லையென்றால் என்மீது புகார் செய்தவர் மீது நடவடிக்கை எடுங்கள்” என்று கூறி கலைஞரின் மகனாகப் போய் நின்றேன்.

2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி நீதியரசர் அசோக்குமார் அவர்கள் முன்னால் நான் ஆஜரானேன். எனக்கு நீதிமன்றத்தில் இருந்து எந்த சம்மனும் வரவில்லை. நானாகவே ஆஜரானேன். ''இந்த நீதிமன்றம் உங்களுக்கு சம்மன் அனுப்பாத போது, நீங்கள் ஏன் ஆஜரானீர்கள்?" என்று நீதியரசர் அவர்கள் கேட்டார்கள்.

அப்போது நான் சொன்னேன், “நீதியரசர் அவர்களே! எனக்கு சம்மன் வராவிட்டாலும் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி நான் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது புகார் சொல்லப்பட்டுள்ளது. இதன் விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். எனது சம்பாத்தியத்துக்கும் செலவுக்கும் முறையான கணக்கு வைத்துள்ளேன். பொதுவாழ்வில் தூய்மையைக் கடைப்பிடிக்கும் எண்ணம் கொண்டவனாக இருக்கிறேன். தமிழக மக்களுக்கு பொறுப்பு உள்ளவனாக இருக்க விரும்புகிறேன். இந்த புகார் மீது நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்." என்று நானே பகிரங்கமாக நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டேன்.

காவல்துறையின் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதியரசர் உத்தரவிட்டார். அந்த அ.தி.மு.க பிரமுகர் சொன்ன ஒவ்வொரு குற்றச்சாட்டையும் காவல்துறையினர் விசாரித்து, அவை அனைத்தும் பொய், உண்மைக்கு மாறானது என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்கள். இதை வாசித்த நீதியரசர் அவர்கள், என் மீதான புகாரை தள்ளுபடி செய்தார். 19.3.2001 அன்று அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. பொதுவாழ்க்கையின் இலக்கணத்தை கடைப்பிடிக்கிறேன் என்று நீதிமன்றம் என்னைப் பாராட்டியது.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், தங்கள் மீது எந்தப் பழியும் குற்றச் சாட்டும் ஏற்படாமல் செயல்பட வேண்டும். அப்படி குற்றச்சாட்டு வருமானால், அதனை எதிர்கொள்ளும் துணிச்சல் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் நம்மை மதிப்பார்கள் அப்படித்தான் நான் செயல்பட்டேன். இனியும் செயல்படுவேன்.

ஆனால் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிற பழனிசாமிக்கு அப்படி ஏதாவது துணிச்சல் உண்டா என்றால் இல்லை. அவர் பொதுப்பணித்துறையை கையில் வைத்திருக்கிறார். அதன் மூலமாக அறிவிக்கப்படும் டெண்டர்களை தனது சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் தருகிறார். கேட்டால், அவர்கள் டெண்டர் போட்டது எனக்குத் தெரியாது என்கிறார்.

எனது உறவினர்கள் தொழில் செய்யக் கூடாதா என்று கேட்கிறார். எனக்கு தமிழ்நாடு முழுவதும் உறவினர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார். உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதே என்று கேட்டால், யார் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று நிருபர்களையே வெட்கமில்லாமல் திருப்பி கேட்கிறார் பழனிசாமி. இவரெல்லாம் தமிழ்நாட்டு முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கமாக இருக்கிறது. நாடே வெட்கித் தலைகுனிகிறது.

பழனிசாமி மீதான புகாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. இதனைக் கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐக்கு ஒப்படைத்தது. யோக்கியர் பழனிசாமி என்ன செய்தார்? டெல்லிக்கு போய், உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கினார். அவர் தடை வாங்காவிட்டால், இப்போது பதவியிலும் இருந்திருக்க மாட்டார். வெளியில் இருப்பாரா என்பதே சந்தேகம் தான்.

ஒரு ஸ்டே வாங்கி வைத்துக் கொண்டு ஸ்டேட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார். ஸ்டேட் முதலமைச்சர் அல்ல அவர். ஸ்டே முதலமைச்சர்!

பச்சைத் துண்டு பழனிசாமி அல்ல. பச்சைத் துரோக பழனிசாமி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மண்புழுவாக மாறியதால் முதலமைச்சர் ஆனவர். கலைஞரைப் பற்றி விமர்சிக்கிறார். மண்புழுபோல ஊர்ந்து பதவியைப் பெற்றது உண்மையா இல்லாயா? அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். மிகத் தேர்ந்த அடிமை என்று காட்டிக் கொண்டதால் பதவியைப் பெற்றவர்.

யாருடைய காலில் ஊர்ந்து போய் பதவியைப் பெற்றாரோ அவரது காலையே வாரியவர். இன்னும் இரண்டு நாட்களில் என்னென்ன செய்திகள் வரப்போகிறது பாருங்கள். ஊர்வலம் என்கிறார்கள், தடை என்கிறார்கள். நினைவிடத்திற்குப் பூட்டுப் போட்டுவிட்டார்கள். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை வேடிக்கை பார்ப்போம். இப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகத்தை சசிகலாவுக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் செய்தவர், செய்து கொண்டு இருப்பவர் தான் பழனிசாமி. இந்த பச்சைத் துரோக பழனிசாமி கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல்.

இராவண சமுத்திரம் - தளபதி சமுத்திரம் - வடமலை சமுத்திரம் - வால சமுத்திரம் - அரங்க சமுத்திரம் - கோபால சமுத்திரம் என்ற வரிசையில் அம்மை சமுத்திரமான இந்த அம்பாசமுத்திரத்தில் கூடியுள்ள மக்கள் சமுத்திரத்தின் மூலமாக நாட்டு மக்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, “கழக ஆட்சி மலர்ந்தால் உங்கள் கவலைகள் யாவும் தீரும்!”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories